பேராசிரியர் திஸ்ஸ விதாரண

பேராசிரியர் திஸ்ஸ விதாரண

தமிழர்களுக்கு சட்ட ரீதியாகவும் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளது ! எல் எஸ் எஸ் பி தலைவர் திஸ்ஸ விதாரண

தமிழர்களுக்கு சட்ட ரீதியாகவும் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளது ! எல் எஸ் எஸ் பி தலைவர் திஸ்ஸ விதாரண..!

வெவ்வேறு கூட்டு முன்னணிகளில் இணைந்து கொண்டாலும், தமிழர்களின் உரிமைகள் விடயத்தில் அழுத்தம் கொடுத்துவரும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, தமிழர்களுக்கு சட்ட ரீதியாகவும் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் புதிய அரசியலமைப்பினூடாக தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க புதிய அரசியலமைப்பை உருவாக்கும் திட்டங்களை துரிதப்படுத்துவதாக தெரிவித்திருப்பதை வரவேற்றுள்ள திஸ்ஸ விதாரண, இப்புதிய அரசியலமைப்பினூடாக தமிழர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தான் வலியுறுத்தி இருப்தாகவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகள் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர முயற்சிகள் எடுத்த போதும் அவர்களிடம் இதுபற்றிய புரிதல் இருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார் திஸ்ஸ விதாரண. “மஹிந்த ராஜபக்சவைச் சுற்றி இருந்தவர்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அதற்கு எதிராகச் செயற்பட்டனர். கோட்டபாயா ராஜபக்ச அரசியலமைப்புப் பற்றிச் சிந்திக்கவேயில்லை. ரணில் புதிய அரசியலமைப்புத் தொடர்பில் முயற்சி எடுத்தார் ஆனால் அவர் சம்ஸ்டியை ஏற்கவில்லை” எனபதையும் சுட்டிக்காட்டினார் அவர்.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் திஸ்ஸ விதாரண தலைமையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் வரையப்பட்டது. அதன்போது புலம்பெயர்ந்த நாடுகளுக்கு விஜயம் செய்த திஸ்ஸ விதாரண, புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களைச் சந்தித்தார். குறிப்பாக எழுபதுக்களில் தன்னோடு பயணித்த இடதுசாரிச் செயற்பாட்டாளர்களையும் சந்தித்து அத்தீர்வுத் திட்டத்திற்கு வலுச்சேர்க்க முற்பட்டிருந்தார். ஆனால் அத்திட்டத்தில் இருந்த சிறுபான்மையினருக்கான குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் கூட பின்னர் தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் அழுத்தங்களினால் நீக்கப்பட்டு மிகப் பலவீனமான நிலையை எட்டியது.

இப்போது, தமிழ் மக்களையும் இணைத்து பயணிக்கும் ஒரு பொதுத் தலைமைத்துவமாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது. அனைவருக்குமான இலங்கை, அதில் எல்லோரும் சரி சமானமாக நடத்தப்படுவார்கள் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்துள்ளது. அதனால் இப்புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் இந்த அரசியல் அமைப்பில் சிறுபான்மையினங்களுடைய பாதுகாப்பு, அவர்களுடைய அரசியல் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பது பற்றிய தீர்மானங்கள், அனைத்து சமூகங்களுடனும் கலந்தாலோசித்தே எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரா தெரிவித்துள்ளார். அதே கருத்தையே ஜேவிபி இன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியவாதக் கட்சிகளைப் பொறுத்த வரை, தமிழரசுக் கட்சி சமஸ்டித் தீர்வைக் கோருகின்றது, தீர்வின் பெயரில் சர்ச்சைப்படவில்லை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வு சாத்தியமில்லை என்கிறது. ஜனநாயகத் தமிழ் தேசிய முன்னணிக்கு அரசியல் கொள்கை என்று ஏதும் இல்லை. இந்தியாவின் 13வது திருத்தம், மாகாணசபையோடு அவர்கள் திருப்திப்பட்டுள்ளனர். முன்னாள் முதலமைசசர் வரதராஜப் பெருமாளும் இதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் அமோக ஆதரவோடும் ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் அவர்களுக்கு தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேச வேண்டிய தேவை இருப்பதாக அவர்கள் கருதவில்லை.