நெடுந்தீவு

நெடுந்தீவு

நெடுந்தீவை உலுக்கிய கொடூர படுகொலைகள் – குற்றவாளி வழங்கிய பகீர் வாக்குமூலம் !

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்று புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (22) சனிக்கிழமை ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

நெடுந்தீவில் கொலை செய்யப்பட்டோரின் விபரங்கள். - Malayagam.lk

லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82), பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76), கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83), மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

 

காவல்துறைக் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவாளி நெடுந்தீவில் நடமாடிவிட்டு நேற்றுக் காலை அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

பின்னர், நேற்றிரவு புங்குடுதீவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 51 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 26 பவுண் தங்கநகைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போதே சந்தேக நபர் குறித்த கொலையை தானே செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

“நான் நெடுந்தீவு வந்தால் குறித்த வயோதிபர்களின் வீட்டில்தான் தங்கிச் செல்வேன், அதுபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் வந்து தங்கியிருந்தேன்.

அங்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நகைகள் அணிந்திருந்தனர்.

அனைவரது நகைகளையும் அபகரித்து விற்பனை செய்து வரும் பணத்தில் கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன்.

அதனால் நேற்று அதிகாலை 4.30 பின்னர் நித்திரையிலிருந்த அனைவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க எண்ணினேன்.

நகைகளை மட்டும் அபகரித்துச் சென்றால் காவல்துறையினர் எளிதில் பிடித்துவிடுவார்கள், அதனால் காவல்துறை விசாரணையை திசை திருப்ப அனைவரையும் கொலை செய்தேன்” என சந்தேக நபர் காவல்துறை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று ஏனைய சான்றுப்பொருட்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேக நபர் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.

 

யாழ்.நெடுந்தீவில் ஐவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் – கைது செய்யப்பட்டுள்ள ஜேர்மனியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சந்தேகநபர் !

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82) , பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76) , கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83) , மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி  ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , உடற்கூற்று பரிசோதனைக்காக சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டு நீதவான் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிய வேளை, நெடுந்தீவு மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் போது, குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

இதே நேரம் படுகொலை  சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர் எனவும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை ஊர்காவற்துறை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்தவர் எனவும் அவர் புங்குடுதீவினை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் !

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நெடுந்தீவு இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் தங்கியிருந்த ஐவர் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வட மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் களைய வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார்.

நெடுந்தீவு பகுதியில் 3 பெண்கள் உட்பட ஐவர் வெட்டிப் படுகொலை! அதிகாலையில் பயங்கரம்

நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

நெடுந்தீவு இறங்கு துறை மற்றும் கடற்படை முகாம் என்பவற்றிற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் போது, வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்துள்ளனர். இதன்போதே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் எனவும், 1 நபர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் இது வரை வெளியாகவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை குழுவாகவோ அல்லது தனி நபரால் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த இடத்தில் கடற்படையினரும் காவல்துறையினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து – நெடுந்தீவில் போராட்டம்!

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம்(புதன்கிழமை)  போராட்டத்தில் ஈடுபட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையை அடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.

தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை கண்டித்தும், வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பௌத்தமயமாக்கப்படும் நெடுந்தீவு – பின்னணியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..?

இலங்கை தொல்பொருள் திணைக்களம், யாழ்ப்பாணம் நெடுந்தீவிலுள்ள வெடியரசன் கோட்டையை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளுக்கு, இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றதா..?  என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது அனுமதியின்றி சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பதாதை ஒன்று வைக்கப்பட்டுள்ளது அதனை உடனடியாக அகற்றுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை அகற்றப்படாமையே இருக்கின்றது.

ஆகவே தொல்பொருள் திணைக்களத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பௌத்த மயமாக்கல் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கயான் விக்ரமசூரியவை தொடர்பு கொண்டு வினவிய போது,  இந்த அறிவித்தல் பலகை தொல்பொருளியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே இலங்கை கடற்படையினரால் வைக்கப்பட்டது என உறுதிப்படுத்தியுள்ளார்.