பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதுதொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. என்றாலும் அதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
நுவரெலியாவில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமார் 200 வருட காலமாக பெருந்தோட்ட மக்கள் வழங்கிய ஒத்துழைப்பை நாங்கள் மதிக்க வேண்டும்.
நாட்டில் எவ்வாறன பிரச்சினை இடம்பெற்றாலும் தோட்ட மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் மதிக்கிறோம்.
மேலும் உலகில் இருக்கும் பிரச்சினைகளில் நூற்றுக்கு 80 வீதம், தகுதி இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதே காரணமாகும்.
நாங்கள் 30 வருட யுத்தத்தில் அனுபவத்தை கண்டோம். 88, 89 மக்கள் விடுதலை முன்னணியின் பயங்கரவாத்தை கண்டோம்.
மீண்டும் அவ்வாறான யுகத்துக்கு நாங்கள் சொல்லத் தேவையில்லை. நாங்கள் மக்களுக்காகவே அரசியல் செய்ய வேண்டும்.
மலையக மக்களுக்கு காணிப்பிரச்சினை இருக்கிறது. சம்பள பிரச்சினை இருக்கிறது. பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் பிரேரித்திருக்கிறது.
அதுதொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.அதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம். கடந்த ஜனவரி மாதத்தில் நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் நடமாடும் சேவை ஒன்றை செயற்படுத்தினோம்.
இதன்போது தேசிய அடையாள அட்டை இல்லாமல் இருந்த சுமார் 2 ஆயிரம் பேருக்கும் அடையாள அட்டை பெற்றுக்கொடுதோம். பிறப்புச்சான்றிதழ் இல்லாமல் இருந்த 10 ஆயிரம் பேருக்கு பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொடுத்தோம்.
வட மாகாணத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையின்போது 12 ஆயிரம் பேர் வரையானவர்கள் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொண்டார்கள். நாடொன்றின் சட்டம் ஆட்சியாளருக்கும் மக்களுக்கும் ஒரே மாதிரி அமைய வேண்டும்
அரசியல்வாதிகள் இலஞ்சம் பெறுகிறார்கள். மோசடி மிக்கவர்கள் என பாரியளவில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காரணமாக கடந்த காலங்களில் மக்களுக்கு அரசியல் விரக்தி ஏற்பட்டது. எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாடொன்றை ஏற்படுத்திக்கொடுப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்.
திருட்டு, ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்வதற்கா புதிய சட்டங்களை ஏற்படுத்தி இருக்கிறோம். சிறந்த சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு தேவையான சட்ட ரீதியிலான சூழலை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம்.
எமது நாட்டில் கிராம மட்டத்தில் வாழும் மக்கள் இனவாதம் மதவாதம் இல்லை. அவர்களுக்கு இன.மத ஐக்கியமே தேவையாகும்.
ஒரு சில அரசியல்வாதிகள் எமது மக்களை குழுக்களாக பிரித்தார்கள். அவ்வாறான நிலைமையை இல்லாதொழிக்க மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார்.