நீதி அமைச்சர் அலி சப்ரி

நீதி அமைச்சர் அலி சப்ரி

“கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம்.” – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் அலி சப்ரி !

கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை தாம் அங்கீகரிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நேற்று (8) பாராளுமன்ற விவாதத்தின் போதே இதை தெரிவித்தார்.

மேலும், கூட்டு பலாத்காரத்தின் விளைவாக உருவாகும் கர்ப்பத்தை கலைப்பதற்கு சில நாடுகள் ஏற்கனவே சட்டப்பூர்வமாக்கியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார,“கூட்டு வன்புணர்வுக்கு உள்ளான சிறுமிகளின் கருவில் உள்ள சிசுவை (கருவை) அகற்றும் நடைமுறை இல்லாத காரணத்தினால் சிலர் தற்கொலை செய்து கொண்ட சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் கருக்கலைப்புக்கான சட்ட ஏற்பாடுகளை வழங்குவது முக்கியம்” எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர்,

கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான சிறுமிகளுக்கு சில நிபந்தனைகளின் கீழ் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவதற்கான முன்மொழிவுகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளில் அரசியல் தலையீடு எதுவுமில்லை.” – நீதி அமைச்சர் அலி சப்ரி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள், எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

தாக்குதல் நடந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவல்களை கவனத்தில் எடுத்திருந்தால், இந்தத் தாக்குதலை தடுத்திருக்கலாம். தற்போது இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதேநேரம் தாக்குதல் தொடர்பாக ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்வது விடுதலை செய்வது உள்ளிட்டவை தொடர்பாக சட்டமா அதிபரே தீர்மானிக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த அமைச்சருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.? – சபையில் சாணக்கியன் கேள்வி !

தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த அமைச்சருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.?  என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சபையில் வைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக மேலும் உரையாற்ற அவர்,

“இன்று கொலை செய்து, கற்பழித்து, களவெடுத்த குற்றத்தில் சிறைத்தண்டனைப் பெறும் கைதிகளுக்காக சபையில், இன்று பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக போராடி, தன்னுடைய இனத்தின் அரசியல் உரிமைக்காகப் போராடி, 20 – 30 வருடங்களாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும்.

அண்மையில், அநுராதபுர சிறைச்சாலையில் துரதிஷ்டவசமானதொரு சம்பவம் இடம்பெற்றது. அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த குறித்த அமைச்சர் பதவி விலகியதாகக் கூறப்பட்டது. ஆனால், அவருக்கு எதிராக கட்சி என்ற ரீதியில் என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது?
சிறைச்சாலைக்குள் சவர்க்காரம் மற்றும் நீர் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இரவில் உறங்கக்கூட முடியாத நிலைமைக் காணப்படுகிறது.

இதுதொடர்பாக நீதி அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? நாம் அவர்களுக்கு சவர்க்காரம் வேண்டும், நீர் வேண்டும் என்றுக் கூறவில்லை.

மாறாக அவர்களை நிம்மதியாக உறங்கவேனும் விட வேண்டும் என்று தான் கோருகிறோம்.
அவர்களின் வழங்குகளைத் தான் விரைவில் முடிக்க முடியாதுள்ளது. குறைந்தது இந்த நடவடிக்கையையேனும் செய்ய வேண்டும் என்று தான் அரசாங்கத்திடம் கேட்கிறோம்.

அதேநேரம், பதுளை சிறைச்சாலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளும் தாக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பாக நீதி அமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன? நிம்மதியாக சிறையிலேனும் அவர்களை இருக்க விட வேண்டும்.

மேலும், முகநூலில் கருத்துக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்ட குற்றத்திற்காக பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிணை வழங்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

ஒருசிலருக்கு அரசாங்கம் பிணை வழங்கியிருக்கலாம். இவை ஐ.நா. மனித உரிமை பேரவையை ஏமாற்ற செய்த செயற்பாடுகளாகும். எனவே, அநுராதபுரம் மற்றும் பதுளை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளுக்கு நடந்த தாக்குதலுக்கான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும்.

அவர்களை நிம்மதியாக சிறைகளில் உறங்கவேனும் அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்” – எனத் தெரிவித்தார்.

“வடக்கு மக்களின் மக்களின் காலடிக்கு சேவைகளை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.” – யாழில் நீதியமைச்சர் !

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு, காலடியில் அரச சேவையை வழங்குவதற்கு நீதி அமைச்சு தயாராக உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

வடக்கில் 5 நாட்கள் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெற்றது. 2,850 பேர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.  இவர்களில் அரைவாசி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 1,525 பேருக்கான முடிவுகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

41 பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண முடியாது. அவை எமது அமைச்சுக்கள் வரவில்லை. வடக்கில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடமாடும் சேவையை நாம் முன்னெடுத்துள்ளோம். அடுத்து கிழக்கு மாகாணத்திலும் அதன் பின்னர் தெற்கு மாகாணத்திலும் இந்த சேவையை முன்னெடுக்கவுள்ளோம். சுமார் 500 அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மக்கள் பிரச்சினைகளை அவர்கள் அறிய கூடியதாக இருக்கும். போரால் பாதிக்கப்பட்ட மாகாண என்ற அடிப்படையில் மக்களின் காலடிக்கு சேவைகளை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.- என்றார்.

இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத் தருமாறு கூறினால் அதை பெற்றுக் கொடுக்க முடியாது – நீதி அமைச்சர் அலி சப்ரி

“இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத் தருமாறு கூறினால் அதை பெற்றுக் கொடுக்க முடியாது.”  என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமலாக்கப்பட்டோர் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் எமது நிகழ்வு நடக்கும் இடத்திற்கு முன்பும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். நேற்றைய தினம் நான் முல்லைத்தீவில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போதும் நான் கலந்துகொண்ட நிகழ்வு முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அவர்களை நான் சந்திக்க அழைத்தேன் ஆனால் அவர்கள் சந்திக்க விரும்பவில்லை என்று கூறினார்கள்.

எனவே அதிலிருந்து ஒன்றை நான் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அவர்கள் போராட்டம் செய்யவே வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பிரச்சனைக்குரிய தீர்வு தேவையில்லை. அவர்களுக்கு போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்காது.

கடந்த 13 வருடங்களாக போராட்டங்களை மேற்கொண்டு அவர்களுக்கு என்ன தான் கிடைத்தது. போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் எதையும் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத் தருமாறு கூறினால் அதை பெற்றுக் கொடுக்க முடியாது தானே? அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த காணாமலாக்கப்பட்டோருக்கான பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும். அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

ஆனால் நான் ஒன்றை கூறிவைக்க விரும்புகின்றேன் நீதி அமைச்சர் என்ற ரீதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமானால் அது அரசுடன் பேசித்தான் அதற்குரிய தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர போராட்டங்களை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாது

போராட்டங்களை மேற்கொள்வது அவர்களுடைய ஜனநாயக உரிமை அதனை மதிக்கின்றேன் அதனை தடுக்க மாட்டேன் ஆனால் போராட்டங்களை நடத்தி எதனையும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

“அலிசப்ரி பதவியிலிருக்கும் வரை சஹ்ரானின் குற்றங்களுக்கு நியாயம் கிடைக்காது.” – ஞானசார தேர

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செய லணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலை மைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்குப் பதில் தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி உருவாக் கத்தின் போதும், அதில் என்னைத் தலைவராக நியமித் துள்ளதற்கும் பல்வேறு விமர்சனங்கள், அவதூறு கருத்துக்கள் எழுவதை அவதானித்தே வருகின்றேன். ஆனால், இவற்றை நாம் கருத்தில்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

“சிறையில் உள்ள தமிழ் கைதிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன” – நீதி அமைச்சர் அலி சப்ரி

தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை. அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது, அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்ததை தொடர்ந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 12,843 பேர் அரசாங்கத்திடம் சரணடைந்தனர்.

இவ்வாறு சரணடைந்தவர்களும் 600 சிறுவர் போராளிகளும் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டனர்.

பிரதமர் தெரிவித்ததன் அடிப்படையில் இலங்கையில் எந்த அரசியல் கைதிகளும் இல்லையென்றும் தங்களின் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஏராளமானோர் தடுப்புக் காவலிலுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், அவர்களின் வழக்குகளை எவ்வாறு விரைவுபடுத்தலாம் என்பதை அறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், சட்ட மாஅதிபர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினேன்.

அரசாங்கம் அவர்களை வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை. அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆகவே அவர்களுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகளை தனித்தனியாக விசாரிக்குமாறு சட்ட மாஅதிபரிடம் வினவப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

“முஸ்லிம் சட்டத்தை சீர்த்திருத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது” – நீதி அமைச்சர் அலிசப்ரி

“முஸ்லிம் சட்டத்தை சீர்த்திருத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது” என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தில் நேற்று (30.01.2021) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

பல துறைகளிலும் சட்ட மறுசீரமைப்பு மற்றும் திருத்தத்திற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

சிவில் சீர்திருத்தத்தில் இளைஞர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில் நாம் 11 குழுக்களை நியமித்து சட்டம் தொடர்பான திருத்தத்தை மேற்கொண்டு வருகிறோம்.

எனக்கு தேவையான மாதிரி அப்பம் இறக்குவது போல் ஒரே நாளில் இதனை செய்ய முடியாது. முஸ்லிம் சட்டத்தை திருத்துவதற்கும் குழுவொன்றை நியமித்துள்ளோம். அது எனக்கு மறக்கவில்லை. என்றார்.

“அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளனர்” – நீதி அமைச்சர் அலி சப்ரி

“அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளனர். எனினும் எந்தவித வழக்கும் தொடராது நீண்டகாலமாக இவர்களுக்கு பிணை வழங்காது தடுத்து வைக்கவும் முடியாது  என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் தெரிவித்தார்.

எனினும் இவர்களை விடுவிப்பது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க வேண்டும், இன்னமும் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் சுரேன் ராகவன் சபையில் கேள்வி எழுப்பியதற்கே நீதி அமைச்சர் அலி சப்ரி  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதே நேரம் , தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொலைபேசியூடாகத் மாவை.சேனாதிராஜாவிடம் தெரிவித்திருந்தாக மாவை.சேனாதிராஜா ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது.

” கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் அது முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்த வைக்கும் ” – நீதியமைச்சர் அலி சப்ரி எச்சரிக்கை! 

” கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் அது முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்த வைக்கும் ” என நீதி அமைச்சர் அலி சப்ரி எச்சரிக்கை விடுத்துள்ளாார்.

சமூகலைத்தளமொன்றில் இயங்கிவரும் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறும் போது,

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் புதைக்க முடியும் என்றால் , அவற்றை ஏன் இலங்கையில் புதைக்க முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வதன் ஊடாகத் தொற்று பரவாது என்பதை தொற்று நோய் மற்றும் வைரஸ் குறித்த பிரபல்யம் வாய்ந்த பேராசிரியர் மலித் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார் என்றும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் .

இலங்கையில் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் , அவை முஸ்லிம் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க உரிய முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் இதன்போது அவர் வலியறுக்தியள்ளார் .

மேலும் எமது இந்த தீர்மானத்தால் முஸ்லிம் இளைஞர்களில் சிலர் அடிப்படைவாதத்தினபால் தள்ளப்படுவார்களோ என்ற அச்சம் எனக்கு இருக்கின்றது எனவும் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக்கூட உரிமை இல்லை என்ற மன அழுத்தத்துக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டு , அடிப்படைவாதிகளுடன் இணைந்துகொண்டால் அது பாரிய விபரீதத்திலேயே முடிவடையும். இதற்கு இடமளிக்கக்கூடாது என நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாலைதீவுக்கு கொண்டுசெல்வது தொடர்பாகவும் பேசப்பட்டு வருகின்றது . இதற்கு அனுமதிப்பது சர்வதேச ரீதியில் எமக்கு மேலும் பிரச்சினையை ஏற்படுத்தும் . மாலைதீவில் அடக்க அனுமதிக்க முடியுமானால் ஏன் எமது நாட்டில் முடியாது என்றே நாங்கள் கேட்கின்றோம் என்றார் .