தொல்பொருள் திணைக்களம்

தொல்பொருள் திணைக்களம்

“எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா “ என கேட்ட ஜனாதிபதி ரணில் – பதவியை இராஜினாமா செய்த தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் !

தொல்பொருள் இடமொன்றுக்கு காணி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார்.

ஜனாதிபதி தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் “நீங்கள் எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறீர்களா?”

அண்மையில் ஜனாதிபதி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த தொல்பொருள் இடத்திற்காக சுமார் 270 ஏக்கர் காணியை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவித்த போது, ​​அது மகா விகாரையை விட பெரியதா என ஜனாதிபதி அவரிடம் கேட்டுள்ளார்.

“உங்களுக்கு ஏன் 275 ஏக்கர் தேவை? இது மகாவிகாரையை விடப் பெரியதா? மகா விகாரை, ஜேதவனாராமயம் மற்றும் அபயகிரி மூன்றுமே 100 ஏக்கரை எடுக்காது,” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்ததாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

“தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், கடிதத்தின் பிரதியும் எனக்குக் கிடைத்துள்ளது. பதவி விலகலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

“சோறுக்கும் தண்ணிக்கும் வழியில்லாமல் இருக்கும் போதும் கூட தொல்பொருள் திணைக்களத்திற்கு பணம் ஒதுக்கி இனவாதத்தை வளர்க்கிறீர்கள்”- நாடாளுமன்றில் இரா.சாணக்கியன்

தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு இனவாதி. நீங்கள் கடந்த காலத்திலே மட்டக்களப்பிற்கு வந்தபோதும் குசலான மலையில் வைத்து உங்களை தடுத்து அனுப்பியமை காரணமாகவே இன்றும் குசலான மலையில் சைவ சமய வழிபாடுகளை செய்ய முடிகின்றது.

இந்த தொல்பொருள் திணைக்களத்தினை வைத்துக்கொண்டு நீங்கள் இந்த நாட்டுக்குள்ளே மீண்டும் ஒரு குழப்பத்தினை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றீர்கள்.

வெடுக்குநாரி மலையிலே ஒரு குழப்பம், குருந்தூர் மலையிலே ஒரு குழப்பம், குசலான மலையிலே ஒரு குழப்பம், அரிசி மலையிலே ஒரு குழப்பம், தற்போது திருகோணமலை புல்மோட்டையிலே ஒரு குழப்பம்.

இந்த நாட்டினுல் ஐ.எம்.எப் ஒப்பந்தம் வந்தாலும் சரி உங்களைப் போன்ற இனவாதிகள், உங்களைப் போன்ற இனவாத அமைச்சர்கள், இந்த தொல்பொருள் திணைக்களத்தினை வைத்துக்கொண்டு, வடக்கு கிழக்கில் எங்களுடைய காணிகளை சுவீகரிக்கின்றீர்கள்.

தொல்பொருள் செயலணி என்பது தொல்பொருளை பாதுகாக்க வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் தொல்பொருள் என்ற போர்வையில் ஏன் பௌத்த பிக்குகள் வர வேண்டும். ஏன் அதிகாரிகள் இல்லையா?

சோறுக்கும் தண்ணிக்கும் வழியில்லாமல் இருக்கும் போதும் கூட தொல்பொருள் திணைக்களத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இவ்வாறான இனவாத செயற்பாடுகள் தொடருமாக இருந்தால், ஐ.எம்.எப் மட்டும் இல்லை எவறாலும் இந்த நாட்டை காப்பாத்த முடியாது.

இந்த தொல்பொருள் செயலணியும், தொல்பொருள் திணைக்களமும், நீங்களும், இந்த அரசாங்கமும் இனவாதத்திற்காகவே இதனை பயன்படுத்துகின்றீர்கள்.

இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கினை நாங்கள் முடக்குவோம். உங்களைப்போன்ற இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதவாறு முடக்குவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயல் அரங்கேற்றி வருகின்றது.” – எம்.ஏ.சுமந்திரன்

“தொல்பொருள் திணைக்களம் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயல் அரங்கேற்றி வருகின்றது.” என ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி , திரியாய் போன்ற பகுதிகளில் தமிழ் விவசாயிகளின் பூர்வீக காணிகளில் விவசாயத்தில் ஈடுபட தொல் பொருள் திணைக்களம் தடுப்பதற்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்ற வழக்கிலே ஆஜராகிய பின் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து குறித்த விடயம் தெர்டரபாக கருத்து தெரிவிக்கும் போது

தொல்பொருள் திணைக்களம் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயல் அரங்கேற்றி வருகின்றது. அதன் ஒரு பிரதிபலிப்புத் தான் திருகோணமலை மாவட்டம் திரியாய் மற்றும் தென்னமரவாடி கிராமத்தில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளில் அவர்கள் விவசாயம் செய்வதற்கு தடுத்த ஒரு சம்பவம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம் பெற்றது.

அந்த வேளையில் நிலத்திற்கு உரித்தான விவசாயிகள் மேல் நீதி மன்றத்திலே வழக்கு தாக்கல் செய்து ஒரு இடைக்கால தடை உத்தரவினைப் பெற்றிருந்தார்கள். அந்த வழக்கை ஆதரித்து வாதாடியவர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் இடைக்கால உத்தரவை மேல் நீதி மன்றம் வழங்கி தொல் பொருள் திணைக்களம் விவாயிகளுக்கு இடையூறு கொடுக்க கூடாது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய உரித்துடையவர்கள் என கட்டளை பிறப்பித்திருந்தது.

அந்த வருடம் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் செய்கையை மேற்கொண்டு அறுவடை செய்யக் கூடியதாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு தொடர்ச்சியாக விவசாயிகள் தடுக்கபட்டனர். வேறு பல அச்ருத்தல்களுக்கும் விவசாயம் செய்வதற்கான தடுப்புக்களும் மேற் கொள்ளப்பட்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை இவ்வருடமும் மேற் கொள்ள முடியாதவர்களாக காணப்படுகின்றனர்.

இந்த பின்னனியிலே இறுதி விவாதத்திற்கு இன்று 30ம் திகதி மேல் நீதி மன்றத்திலே இந்த வழக்கு எடுக்கப்பட்டது. சட்டத்தரணி கேசவன் சயந்தனுடன் நானும் இந்த வழக்கிலே ஆஜராகி வாதாடி இருக்கின்றோம். மிக முக்கியமாக மாகாண மேல் நீதி மன்றுக்கு நிலம் சம்மந்தமான எழுத்தாணைகளை வழங்குகின்ற அதிகாரம் இல்லை என்ற வாதத்தை அரச தரப்பு முன் வைத்திருந்தது.

அரசியலமைப்பின் படி ஒன்பதாவது நிரலின் கீழ் காணி அதிகாரம் மாகாணத்திற்கென  வழங்கப்பட்டிருக்கின்றது. மாகாண நீதி மன்றம் எழுத்தாணை  வழங்குகின்ற போது எந்த ஒரு நபருக்கு எதிராகவும் மாகாண நிரலில் உள்ள விடயம் சம்மந்தமாக எழுத்தாணை வழங்க முடியும் என்று சொல்லபட்டிருக்கின்றது. அரசியல் அமைப்பில் உள்ள குறித்த விடயத்தை மன்றுக்கு நாம் சுற்றிக் காட்டியுள்ளோம்.

100 வருடங்களுக்கு முற்பட்ட காணி உறுதிகளை குறித்த காணி உரிமையாளர்கள் வசம் உள்ளது. அவற்றை நாம் வழக்கிலே காட்சிப் படுத்தி இருக்கின்றோம்.

ஆகையால் இது அரச காணி அல்ல தனியார் காணி இந்த காணியிலே தங்களுடைய விவசாயத்தை செய்வதற்கு அவர்களுக்கு உரித்துண்டு அதை தடுப்பதற்கு எவருக்கும் உரிதில்லை என்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

வழக்கினுடைய இறுதித் தீர்ப்பு எதிர்வரும் மார்கழி 02ம் திகதி என திகதியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நவம்பர் மாதத்திலே இரு தரப்பினரும் எங்களுடைய வாதங்களுக்கு சார்பான எழுத்து மூல சமர்ப்பணங்களை செய்யலாம் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலங்கள் சம்மந்தமாக தொல்லியல் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு முக்கியமான தீர்பாக அமையும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.