இலங்கையின் பரீட்சை ஆணையாளராக முதல் தமிழ் பெண் நியமனம் !
இலங்கையின் பரீட்சை ஆணையாளராக மைக்கல் திலகராஜா ஜீவராணி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முதல் தமிழ் பேசும் பரீட்சை ஆணையாளரும் இவரேயாவார். இலங்கையின் பிரதி பரீட்சை ஆணையாளராக பதவி வகித்த திருமதி.மைக்கல் திலகராஜா ஜீவராணி தற்போது இலங்கையின் பரீட்சை ஆணையாளராக பதவி உயர்வு பெற்றுள்ளமை ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களுக்கும் முக்கியமாக பெண்களுக்கும் பெருமைக்குரிய விடயமாகும். இவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் தமிழ் பெண்களை தமிழ் தேசியம் ஓரம்கட்டி அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்திருக்கின்றனர். கட்சி வேறுபாடில்லாமல் தமிழ் தேசியம் பெண்களை, சைவ வெள்ளாள ஆண்களை வெல்ல வைப்பதற்காப் பயன்படுத்தும் போக்கே நிலவி வந்தது. போராட்ட காலங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் பெண்களை ஆயதங்களாகப் பயன்படுத்தினரே அல்லாமல், அவர்களுக்கான தலைமைத்துவப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. மகளீரணிக்கு மட்டும் பெண்கள் தலைமை தாங்கினர். ஏனைய துறைசார் விடயங்களில் பெண்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படவில்லை.
தற்போது தேசிய மக்கள் சக்தி முன்னைய அரசுகள் கடைப்பிடித்த தமிழர் புறக்கணிப்பை முற்றாகக் கைவிட்டு, தகுதியுடையவர்கள் தமிழ் மக்கள் மத்தியிலிருக்கும் போது, அவர்களை தகுதிவாய்ந்த பொறுப்புக்களில் நியமித்து வருகின்றது. தற்போது பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் தமிழ் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். பொறுப்பான பதவிகளிலும் தகுதியானவர்களை, பெண்களை தேசிய மக்கள் சக்தி அரசு நியமித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
