ஜேர்மனி பொதுத்தேர்தல்

ஜேர்மனி பொதுத்தேர்தல்

ஜேர்மனியும் வலதுசாரிகளின் பிடியில் !

ஜேர்மனியும் வலதுசாரிகளின் பிடியில் !

 

நேற்று ஞாயிற்றுக்கிழமை 23 பெப்ரவரி ஜேர்மனியில் நடந்த பொதுத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த மாதிரியே வந்துள்ளன. இச்செய்தி எழுதப்படும் வரை முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை. இருந்த போதும் மிதவாத வலதுசாரி கட்சியான சிடியு மற்றும் சிஎஸ்யு இணைந்த ஒன்றியும் தனது தேர்தல் வெற்றியை உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது. அந்த வகையில் சிடியுவின் பிரதம வேட்பாளரான கடும்போக்குடைய பிறீட்றிஜ் மெர்ட்ஸ் ஜேர்மனியின் அடுத்த கன்சிலர் ஆகிறார். சிடியு மற்றும் சிஎஸ்யு இணைந்த ஒன்றியம் இணைந்து 28 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.

ஆளும் கட்சியான ஒலாப் சொல்ஸ் தலைமையிலான எஸ்பிடி இத் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. 9 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை இழந்து எஸ்பிடி கட்சி 16 வீதம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது.

எதிர்வு கூறிய மாதிரியே கடும்போக்கு தீவிர தேசியவாத வலதுசாரிக் கட்சியான ஏஎப்டி 20 வீத த்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஜேர்மனியின் இரண்டாவது பலம் பொருந்திய கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் இம்முறை பசுமைக்கட்சி குறிப்பிடத்தக்களவு சரிவைச் சந்தித்துள்ளது. 2.4 வீத வாக்கு வீதச் சரிவை இழந்துள்ள பசுமைக் கட்சி 12.3 வீத வாக்குகளை பெற்றுள்ளது. இடதுசாரிகளைப் பொறுத்தவரை தி லிங்க என்ற இடதுசாரிக்கட்சி கடந்த முறையை விட அதிகளவு வாக்கு வீதத்தை எடுத்து முன்னேறியுள்ளது. குறிப்பாக கடந்த முறையை விட 3.6 வீத வாக்குகளை கூடுதலாக பெற்று 8.5 வீத வாக்குகளை பெற்றுள்ளது. இம் முறை நடந்தேறிய தேர்தலில் பெரும்பாலான வெளிநாட்டவர்களின் தெரிவாக தி லிங்க கட்சியே அமைந்திருந்ததாக ஜேர்மனியில் புலம்பெயர்ந்த மக்களுடன் வேலை சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த எப்டிபி ஐந்து வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் செல்வதே கேள்விக்குறியாகியுள்ளது. அதைவிட ஏனைய சிறிய கட்சிகளில் ஒன்றும் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை எடுக்க வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்படுகிறது.

ஆக ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் வலதுசாரிகள் கோலோச்சப் போகிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனி இணைந்த பின்னர் நடந்த பொதுத்தேர்தல்களில் இம்முறை வாக்களிப்பு வீதமானது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 2021, 76.4 வீதமும் இம்முறை 83.5 சதவிகிதமும் பதிவாகியுள்ளது.

எவ்வாறெனினும் ஜேர்மனியை பொறுத்தவரை பல கட்சிகள் இணைந்தே அரசாங்கத்தை அமைத்து வந்துள்ளன. இம்முறை சிடியு மற்றும் சிஎஸ்யு ஒன்றியம் அதி கூடிய பெரும்பான்மையை பெற்றுள்ளது. ஏற்கனவே சிடியு பிரதம வேட்பாளர் மஎர்ட்ஸ் (Merz) கடும்போக்கு ஏஎப்டியுடன் கூட்டு இல்லை என அறிவித்திருக்கிறார்.

அவரின் இக்கருத்தினை ஏஎப்டி கட்சியின் பிரதம வேட்பாளர் அலிஸ் வைடல் கண்டித்துள்ளார். அதேநேரம் அரசாங்கத்தில் கூட்டமைக்க எஸ்பிடி பேச்சுவார்த்தைகளுக்காக தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன் பசுமைக் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சியான தி லிங்க என்பனவும் அரசாங்கத்தில் பங்கேற்க தயாராக இருப்பதாகவே கூறப்படுகிறது. ஆகவே வரும் நாட்களில் கூட்டணிப் பேச்சுக்கள் சூடு பிடிக்கும் என அரசியல் விஞ்ஞான ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.