கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பு மருந்து

உலக சந்தையில் இருந்து தங்களது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுகிறது அஸ்ட்ராஜெனெகா !

உலக சந்தையில் இருந்து தங்களது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம். வர்த்தக ரீதியான காரணங்களால் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடியின்போது அஸ்ட்ராஜெனகா மற்றும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 பாதிப்புக்கு தடுப்பூசியை உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கொரோனாவுக்கானதடுப்பூசியாக ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலக நாடுகளை சேர்ந்த பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்த சூழலில் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சொல்லி பிரிட்டன் நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குக தொடரப்பட்டது. இது அந்த நாட்டில் தற்போது விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில் அண்மையில் இது தொடர்பான வழக்கில் பதிலளித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தது. இது அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தடுப்பூசியை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இனி அந்நிறுவனம் கோவிட் தடுப்பூசியை தயாரிப்பதையும் விநியோகம் செய்வதையும் நிறுத்திக் கொள்கிறது. இதனை பிரிட்டன் நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இந்த முடிவு முற்றிலும் தற்செயலானது என்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காக இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல். கடந்த மார்ச் மாதம் தடுப்பூசியை திரும்பப் பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை ஐரோப்பிய ஆணையத்தின் வசம் அஸ்ட்ராஜெனெகா சமர்ப்பித்துள்ளது. இது நேற்று (மே 7) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

“கொரோனா வைரஸ் மருந்தினை நன்கொடையாக வழங்கும் நாடுகளிடமிருந்து பெறுவதே அரசின் நோக்கம்” – இராஜாங்க அமைசசர் சன்ன ஜயசுமன

“கொரோனா வைரஸ் மருந்தினை நன்கொடையாக வழங்கும் நாடுகளிடமிருந்தும் உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்தும் ஆகக்கூடியளவிற்கு பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம்” என இராஜாங்க அமைசசர் சன்ன ஜயசுமன தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.

அஸ்டிராஜெனேகா நிறுவனம் ஐந்து இலட்சம் மருந்துகளை வழங்குவதற்கு இணங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அதன் பின்னர் இன்னொரு தொகுதி மருந்துகள் நன்கொடையாக கிடைக்கவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து மருந்தினை நன்கொடையாக பெறுவதற்கு சீனாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவிடமிருந்தும் கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமான மருந்தினை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்தை மூக்கினுள் ஸ்பிரே செய்தால் வைரஸை 99.9 சதவீதம் அழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு !

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
சில மருந்துகள் இறுதிக்கட்ட  மருத்துவ பரிசோதனையில் இருக்கும்போதே சில நிபந்தனைகளுடன், அவசர கால பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதேபோல் மூக்குவழியாக செலுத்தி கொரோனாவை அழிக்கக்கூடிய சில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில், கனடாவின் வான்கூவரைச் சேர்ந்த சானோடைஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ள நைட்ரிக் ஆக்சைட் நேசல் ஸ்பிரே மருந்தானது (என்ஓஎன்எஸ்), 99.9 சதவீதம் செயல்திறன் மிக்கது என நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உட்டா மாநில பல்கலைக்கழகத்தின் ஆன்டிவைரல் ஆராய்ச்சி மையத்தில் நடந்த பரிசோதனையில் செயல்திறன் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை 2ம் கட்டத்தில் உள்ளது. இது நல்ல பலனை தருவதால், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
பிரிட்டனில் உள்ள ஆஷ்போர்ட் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனைகள் என்எச்எஸ் அறக்கட்டளை மூலம் இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் பணி வேகமாக நடைபெறுகிறது. எனவே, பிரிட்டனில் விரைவில் இந்த மருந்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நைட்ரிக் ஆக்சைடை அடிப்படையாகக் கொண்ட இந்த மருந்தை மூக்கினுள் ஸ்பிரே செய்தால், கொரோனா வைரசானது நுரையீரலுக்குள் செல்வதற்கு முன்பாக அவற்றை அழித்துவிடுகிறது. மக்கள் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இந்த மருந்தை மூக்கினுள் ஸ்பிரே செய்துகொள்ள வேண்டும். இப்படி செய்வதால், கொரோனா வைரஸ் உள்ளே நுழையாமல் தடுக்கப்படும். இதேபோல் தொண்டையில் மருந்து படும்படி வாய் கொப்பளித்தல், மூக்கு துவாரங்களில் மருந்தை செலுத்தி சுத்தம் செய்தல் போன்ற சிகிச்சையும் செய்ய முடியும்.
மனித உடலுக்குள் நைட்ரிக் ஆக்சைடின் முக்கியத்துவம் மற்றும் அதன் குணப்படுத்தும் பண்புகளை முதன்முதலில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபெரிட் முராத் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புக்காக அவர் உள்பட 3 பேராசிரியர்களுக்கு 1998 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது. பேராசிரியர் முராத், சானோடைஸ் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வகை கொரோனா வைரஸையும் அழிக்கும் திறன் கொண்ட பைசர் தடுப்பூசி – ஆய்வில் கண்டுபிடிப்பு !

சீனாவின் வுகானில் பரவ ஆரமபித்து உலகம் முழுவதும் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கி உள்ளன.

அந்த வைரசின் அச்சுறுத்தல் முடிவுக்கு வருவதற்குள் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ்கள் பரவுவது கண்டறியப்பட்டது.

இதில் இங்கிலாந்து வைரஸ் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் வேலை செய்யுமா? என்ற சந்தேகம் மருத்துவ நிபுணர்களிடம் இருந்து வந்தது. எனவே அதற்கான ஆய்வுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள பைசர் தடுப்பூசி, இந்த உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி போடப்பட்ட 20 பேரின் ரத்த மாதிரிகளைக்கொண்டு மேற்படி வைரசுக்கு எதிராக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்த ரத்த மாதிரிகள் உருமாறிய புதிய வைரசை வெற்றிகரமாக தடுப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக பைசர் நிறுவன தலைமை விஞ்ஞானி டாக்டர் பிலிப் டோர்மிட்சர் தெரிவித்தார்.

அதேநேரம் இந்த ஆய்வு முடிவுகள் முதற்கட்டமாக கிடைத்த தகவல்கள்தான் எனவும், இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு தெரியவரும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி !

கொவக்ஸ் சர்வதேச திட்டத்தின் ஊடாக கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது.

கொவக்ஸ் சர்வதேச திட்டத்தின் ஊடாக மருந்தினை பெறுவதற்கு மருந்து உற்பத்தியாளர்களுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அனுமதிவழங்கப்பட்ட கொரோனா மருந்தினை உலகநாடுகள் மத்தியில் சமமாக விநியோகிப்பதற்காக உருவாக்கப்பட்டதே கொவக்ஸ் சர்வதேச திட்டம். இந்த திட்டத்தின் மூலம் மருந்தினை பெறுவதற்கு தகுதிவாய்ந்த நாடு இலங்கை என உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதிவழங்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் திடீர் மரணம் !

கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை பல்வேறு நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு முதல் கட்டமாக 2 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்குகிறது. மொத்தம் 30 லட்சம் டோஸ் மருந்தை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

ஜனவரி 4-ந்திகதி முதல் சுவிசர்லாந்து முழுவதும் தேவைப்படுவோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதன் முன்னோடியாக சுவிட்சர்லாந்தின் லூசரன் மண்டலத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு முதியவர், ஊசி போட்ட சிலமணி நேரத்தில் மரணம் அடைந்தார். தடுப்பூசி போட்ட பிறகு அடிவயிற்றிலும், சிறுநீர் குழாய் பகுதியிலும் வலி இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென்று மரணம் அடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் முதியவர் மரணத்துக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று சுவிட்சர்லாந்து நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

91 வயதான அந்த முதியவர் ஏற்கனவே மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார் அவர் இயற்கையாகவே மரணம் அடைந்து இருக்கிறார். கொரோனா தடுப்பு மருந்துக்கும் அவரது மரணத்துக்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“இலங்கை கொரோனா தடுப்பூசியினை பெறுவதற்கான உதவிகளை நாம் செய்வோம் ” – ஐ.நா பிரதமருக்கு உறுதி !

உலக நாடுகள் அனைத்திலும் இன்றைய திகதிக்கு மிகப்பெரிய பேசுபொருளாகியிருப்பது கொரோனாவுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பானதாகவேயுள்ளது. இந்தநிலையில் இலங்கை அரசும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுதல், விநியோகம் மற்றும் பாதுகாப்பான நிர்வாகத்திற்காக இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே, ஐ.நா தூதுக்குழு குறித்த உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரசியா பெண்ட்சே மற்றும் யுனிசெப் அமைப்பிற்கான இலங்கை பிரதிநிதி ஆகியோர் பிரதமரை இன்று சந்தித்தனர்.

ரஸ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்கை  ( Sputnik V ) இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து தீர்மானிப்பதற்காக அடுத்த வாரம் ரஸ்ய தூதுவருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி சோதனையில் நரம்பியல் பாதிப்பு – நிறுத்தப்பட்டது சீன தடுப்பூசி பரிசோதனை !

தென் அமெரிக்க நாடான பெருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு சீனாவின் சினோபார்ம் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை பரிசோதனை செய்து வருகிறார்கள். அந்த தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பெரு நாட்டில், சீனாவின் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு நரம்பியல் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு கைகளை அசைக்க முடியாத அளவுக்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 நாடுகளில் பரிசோதிக்கப்படும் சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி !

கடந்த வருடம் சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் எல்லா பகுதிகளிலும் பரவ ஆரம்பித்து பாரிய இடரினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கொரோனா வைரஸை சீனா வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டதாக கூறியிருந்தது.

இந்நிலையில் உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன.  தடுப்பூசி தயாரித்து சந்தையிடுவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

மருந்து என்ற விடயத்துக்கப்பால் நாடுகள் தம்முடைய பலத்தை பரிசீலிக்கும் களமாக கொரோனா மருந்து கண்டுபிடிப்பு மாறியுள்ளது.

இந்த போட்டிக்களத்தில் சீனா உத்வேகமாக களமிறங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது அங்கு 4 நிறுவனங்கள் சார்பில் 5 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை ரஷியா, எகிப்து, மெக்சிகோ உள்பட 12-க்கு மேற்பட்ட நாடுகளில் பரிசோதிக்கப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளை விரைவில் வெளியிட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. மாகாண அரசாங்கங்கள் தடுப்பூசிகளுக்காக ஆர்டர்களை குவித்து வருகின்றன.

இருப்பினும் சுகாதார அதிகாரிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றோ, நாட்டின் 140 கோடி மக்களை எவ்வாறு சென்று அடையப்போகிறார்கள் என்றோ கூறப்படவில்லை. இதற்கிடையே ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி, கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை உருவாக்கியவர்கள் சோதனைகளை விரைவுபடுத்துகின்றனர் என்று கூறினார்.

சீனாவின் கொரோனா தடுப்பூசி பாவனையால் பிரேசிலில் மோசமான பாதிப்புக்கள் –

உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பில் 3ஆவது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 56.75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் கூறுகிறது. பிரேசில், உலகளவில் இரண்டாவது அதிக உயிரிழப்பையும் கொரோனாவால் சந்தித்துள்ளது. அங்கு 1.62 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கான தடுப்பூசி உருவாக்க முயற்சிகளில் உலகின்  பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் சீன மருந்து நிறுவனமான சைனோவேக், ‘கொரோனாவேக்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி பிரேசில் நாட்டில் 7 மாகாணங்களில் பொதுமக்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசியின் 60 லட்சம் ‘டோஸ்’களை இறக்குமதி செய்வதற்கு பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் ‘அன்விசா’ அனுமதி அளித்தது.இந்த நிலையில் ‘கொரோனாவேக்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் பரிசோதனையின்போது மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக இந்த தடுப்பூசியின் பரிசோதனையை பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் ‘அன்விசா’ அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் அந்த தடுப்பூசியை பிரேசிலில் தயாரித்து வந்த சாவ் பாவ்லோ மாகாண அரசு நிறுவனமான புட்டான்டன் நிறுவனம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதையொட்டி சாவ் பாவ்லோ மாகாண அரசு வெளியிட்ட அறிக்கையில், “தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் பொதுவாக இத்தகைய பாதிப்பு நிகழ்கிறது. இது குறித்த தகவல், அன்விசா மூலம் வராமல் ஊடகங்கள் மூலம் வந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தி வைக்கும் அன்விசாவின் முடிவு ஆச்சரியம் அளிக்கிறது” என கூறி உள்ளது.

ஏற்கனவே இந்த தடுப்பூசி பிரேசிலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெயிர் போல்சொனரோ சந்தேகங்களை எழுப்பி இருந்தார். இந்த தடுப்பூசியை பகிரங்கமாக நிராகரித்த அவர், பிரேசில் மக்கள் கினிப்பன்றிகளாக தடுப்பூசி பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் என அவர் கூறி இருந்தார்.

இந்த தடுப்பூசியை சோதனையின்போது போட்டுக்கொண்ட ஒருவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது இறப்புக்கு தடுப்பூசிதான் காரணமா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் அங்கு 10 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு சோதிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அமெரிக்காவின் பைஸர் மற்றும் அதன் கூட்டாளியான ஜெர்மனியின் பயோஎன்டெக், தங்களது தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைக்காக 44 ஆயிரம் பேரை பதிவு செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது தடுப்பூசியில் பாதுகாப்பு கவலைகள் எதுவும் எழவில்லை என்று பைஸர் கூறி உள்ளது. ஆனால் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ., தங்களை மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி ஆய்வுக்காக நாடுவதற்கு முன் குறைந்தபட்சம் அதை போட்டுக்கொண்ட பாதி எண்ணிக்கையிலான தன்னார்வலர்களையாவது தொடர்ந்து 2 மாதங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. இந்த நிலையை இம்மாத இறுதியில் பைஸர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் அடைந்து விடும் என தகவல்கள் கூறுகின்றன.

மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளின் இறுதிக்கட்ட பரிசோதனைக்கு தொலைவில் இல்லை என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.