கொக்குத்தொடுவாய்

கொக்குத்தொடுவாய்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுகள் – பின்னிப் பிணைந்த நிலையில் பல உடல்கள் !

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது ஏழாவது நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

குறித்த அகழ்வாய்வின் போது ஆறு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று ஏழாவது நாள் தொடர்சியாக அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், ஏழாவது நாள் அகழ்வாய்வுகள் இன்று (13) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் காவல்துறையினர், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதுவரை துப்பாக்கிச் சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்கத் தகடு, உடைகள், கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று (13) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், தடயவியல் காவல்துறையினர், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அகழ்வுப் பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா “ஒரு உடற்பாகம் முழுமையாகவும் இன்னொரு உடற்பாகம் பகுதியளவில் மீட்கப்பட்டதாகவும் ஏற்கனவே மீட்கப்பட்ட ஐந்து உடற்பாகங்களுடன் ஆறு உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பகுதியில் துப்பாக்கிச் சன்னம் ஒன்றும், கழிவு நீரை சுத்திகரிக்கும் உபகரணம் ஒன்றும் தடயப்பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அகழ்வுப் பணியில் உடலங்களை அடையாளப்படுத்துவதில் கடினத்தன்மை காணப்படுவதாகவும் ஒன்றன் மேல் ஒன்றாக பல உடல்கள் பின்னிப் பிணைந்து இருப்பதாலும் இந்தநிலை தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்னி இராணுவ முகாம்களிலுள்ள விகாரைகளின் கீழ் காணாமலாக்கப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளார்கள் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினர் நிலைகொண்டுள்ள காணிகள் மற்றும் இராணுவ முகாம்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளின் கீழ் மனித புதைகுழிகள் காணப்படலாம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கொக்குத்தொடுவாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற மனித எச்சங்களை அகழும் பணிகளை பார்வையிட்ட பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஆராய்ச்சிகளில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இங்கு வந்திருக்கின்றதா? என்று எங்களுக்கு தெரியவில்லை. இதனால், சரியான முறையில் இந்த அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கை வருமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஏனென்றால், இதில் சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்களும் கலந்துகொள்ள வேண்டும். அல்லது இந்தக் குழாமில் இருக்க வேண்டும் என்று மக்களும் நாங்களும் விரும்புகிறோம்.

இவர்கள் சரணடைந்தவர்களை மன்னிப்பு வழங்காமல் தமது எண்ணத்திற்கு கொண்டு வந்து இங்கே புதைத்திருக்கலாம் என்று மக்கள் குமுறுகின்றார்கள்.வட்டுவாகல், கேப்பாபிலவு போன்ற இடங்களில் உள்ள இராணுவ முகாம்களில் புத்த விகாரைகளை பெரிதாக கட்டி இருக்கிறார்கள். இந்த விகாரைகளுக்கு கீழே கூட இவ்வாறாக உடலங்கள் கிடக்கிறதோ என்ற ஊகங்கள் கூட எமது மக்களிடம் உள்ளது.

என்னிடம் இது தொடர்பில் மக்களும் பல தடவைகள் கதைத்திருக்கிறார்கள். இதனை சர்வதேச குழு சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு உரிய நியாயமான தீர்வுகளை வழங்க வேண்டும்.

இவ்வாறான விகாரைகளின் அடிப்பகுதிகளையும் தோண்டிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தர வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.