“ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரைப் பற்றி இராஜாங்க அமைச்சர் ஒருவர் அண்மையில் வெளியிட்ட கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல.” என அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரைப் போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பாகும். அவர் அவ்வாறு செயற்படாமையின் காரணமாகவே அவர் மீது குற்றஞ்சுமத்தப்படுகிறது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையிலேயே மேற்குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் ,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஹிட்லர் ஆகியோரைப் பற்றி தெரிவிக்கப்பட்டது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார். இந்த கருத்து அரசாங்கத்தின் கூட்டு நிலைப்பாடு அல்ல என்றும் அரசாங்கத்தின் முன்னோக்கு என்று கருதக்கூடாது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில் அவை தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் கருத்து இலங்கையில் உள்ள ஜேர்மன் தூதுவருடன் முரண்பாட்டை ஏற்படுத்தாது என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.