காடழிப்பு

காடழிப்பு

சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் முல்லைத்தீவில் கைது !

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் நட்டாங்கண்டல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காடழிப்புக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவரே நட்டாங்கண்டப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

 

குற்றத்தடுப்பு பொலிசார் மற்றும் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார், காடழிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்ததுடன் காடழிப்பிற்கு பயன்படுத்திய மரம் வெட்டும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

 

சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த 68 மற்றும் 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நட்டாங்கண்டல் பொலிசார், இருவர் மீதும் அரச காணியை அத்துமீறி பிடித்தல் மற்றும், பெறுமதிமிக்க மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கைளை முன் வைத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

 

இதேவேளை இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்த பொலிசார், குறித்த வழக்கை வரும் 08ம் மாதம் 09ம் திகதி மாங்குளம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

வவுனியாவில் 12 ஏக்கர் காடு சட்டவிரோதமாக அழிப்பு – கண்டுகொள்ளாத வன இலாகா !

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் 12 ஏக்கர் காடு சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ள போதும் இது தொடர்பில் பொலிஸாரும், வன இலாகாவும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா, ஈச்சங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கட்டையர்குளம் பகுதியில் வனஇலாகாவுக்கு சொந்தமான காட்டுப்பகுதி 12 ஏக்கர் கடந்த சில நாட்களாக அழிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து அரச அதிகாரிகள் பலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே மக்கள் முறையிட்டும் குறித்த காடழிப்பு தடுத்து நிறுத்தப்படவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (23) குறித்த பகுதியில் காடழிப்பு மற்றும் அதனுடன் இணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது அங்கு சென்ற கிராம மக்கள் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்திருந்தனர். இருப்பினும் பொலிஸார் தமது முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காடழிப்பு இடம்பெற்ற போது குறித்த பகுதிக்கு தமது பகுதியில் இல்லாத வாகனங்கள் சில வந்து சென்றதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த பகுதியானது வரைபடத்தில் காட்டுப் பகுதியாக காணப்படுகின்ற போதும் எவருடைய அனுமதியும் பெறப்படாது. சில அதிகாரிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி காடழிப்பில் ஈடுபடுகின்றார்களா அல்லது காடழிப்புக்கு துணை போகின்றார்களா என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது தொடர்பில் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட செயலாளர், வனஇலாகா ஆகியோருக்கும் கிராம மக்களால் நேற்று திங்கட்கிழமை (24) எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சமூகவிரோத சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!! இதுவொரு மிக மோசமான சமூகசூழலை வெளிப்படுத்துகின்றது!!!

இன்றையதினம் முல்லைத்தீவில் நடைபெறும் மரக்கடத்தல்இ மண்கடத்தல் தொடர்பில் செய்திகளை வெளிக் கொண்டுவரும் முல்லைத்தீவு ஊடகவியலாளர்களான குமணன் மற்றும் தவசீலன் ஆகியோர் மீது மரக்கடத்தல்காரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களை தாக்கிய கடத்தல்காரர்கள் அவர்களை மிரட்டி “தாங்கள் திருடுவதற்கு தான் இங்கு வந்தோம்” என்று ஊடகவியலாளர்களை பேசவைத்து அதனை தமது கைத்தொலைபேசியில் காணொளியாக்கி இருக்கிறார்கள்.

ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்களையும் மரகடத்தல்காரர்கள் ஊடகவியலாளர்களிடமிருந்து அழித்துள்ளார்கள். ஏற்கனவே பல தடவை இவ்வாறான அச்சுறுத்தல்களை குறித்த இரு ஊடகவியலாளர்களுக்கும் மரகடத்தல்காரர்களால் விடுக்கப்பட்ட நிலையில் பொலிசாரும்இ அங்குள்ள அரசியல்வாதிகளும் இது தொடர்பாக விரைந்து கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் காடழிப்பு, மண்கடத்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதுதொடர்பாக கவனமெடுக்க வேண்டிய உரிய தரப்பினர் பெரிய அளவிற்கு அக்கறை காட்டாத சூழலே நீடிக்கின்றது.

இது சமூகத்தை சீரழிப்பதன் மிக மோசமான செயற்பாடாகக் கருதப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கம் தேசம்நெற் தெரிவித்துள்ளது. இதுவரை அரச இயந்திரத்தின் செயற்பாடுகளே ஊடகங்களின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு தடையாக இருந்துவந்தது. ஆனால் இன்று சமூகவிரோத சக்திகளே ஊடகவியலாளர்களைத் தாக்கி அவர்களை குற்றவாளிகளாகக் காட்சிப்படுத்தும் மோசமான நிலையேற்பட்டு உள்ளது.

இவ்வாறான சமூகவிரோத சக்திகளின் செயற்பாடுகளை மௌனமாகக் கடந்து செல்வது மிக மோசமான விளைவுகளை பின்நாட்களில் ஏற்படுத்தும். ஆகவே பாதிக்கப்பட்ட இந்த ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் சம்பந்தப்பட்ட சமூகவிரோத சக்திகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதும் ஊடகங்களின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு மிகவும் அடிப்படையானது.