காகுஸ்தன் அரியரத்தினம்

காகுஸ்தன் அரியரத்தினம்

“பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)

தேசம்குரல் யூரியூப் தளத்தில், இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா) தன்னுடைய போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பதிவு வெளியிடப்பட்டு இருந்தது. (இணையத்தின் கீழே இப்பதிவுக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.) இது தொடர்பில் பல விமர்சனங்கள் வெளியாகி இருந்தது. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காகுஸ்தன் அரியரத்தினம் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து தேசம்நெற்க்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை இங்கு வாசிக்கலாம்:

._._._._._._.

அனைவருக்கும் வணக்கம்! எனது பெயர் காகுஸ்தன் அரியரத்தினம். எனது இயக்கப் பெயர் ஒப்பிலாமணி (ஒப்பிலான்). நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் என்னைப் பற்றி அடியும் நுனியும் உங்களில் பலருக்குத் தெரியாது. நான் ஒரு இம்பாசிபிள் ஸ்பை (Impossible Spy) என்றது இஸ்ரேலினுடைய உளவாளி எலி கோகன் (Eli Cohen) போன்வர்களை போல உளவு வேலை செய்தவன். அவன் தான் ஒப்பிலாமணி. நான் இயக்கத்தில் இணைந்தது 1990 யூன். நான் இயக்கத்திலிருந்து வெளியேறியது 1995 யூன். ஆக மொத்தம் இந்த ஐந்து வருடத்தில் புலனாய்வு பிரிவில் பணியாற்றியது நாலு வருடங்கள் மட்டும்.

மேலும், நான் ஒரு சிறுவர் போராளியாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் மூன்று மாதம் அடிப்படை பயிற்சி எடுத்து, மேலும் மூன்று மாதம் விசேட ராணுவ பயிற்சி பெற்று, அதன் பின்னர் Military Office என்று சொல்லப்படும் MO வில் சேர்ந்தேன். நான் அங்கு இருந்தபோது, தினேஷ் மாஸ்டர் என்னிடம் இராணுவ புலனாய்வு பிரிவில் உள்ள கடல் புலி மற்றும் வான் புலி தகவல் சேகரிப்புப் பிரிவுகளுக்கு என்னை தகவல் சேகரிக்குமாறு கூறி என்னை அதற்கு நியமித்தார்.

இதன் போதே நான் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புலனாய்வு பிரிவின் அதிவிசேட பயிற்சியான “உளவு முகவர்” பயிற்சி பெற்றேன். இந்த சந்தர்பத்தில் “நளா” என்று அழைக்கப்பட்ட ஒரு பெண் புலி என் மீது காதல் கொண்டாள். அந்த காதலின் மூலம் நான் புலிகளுக்கு துரோகம் செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்ப்பட்டது. அதனால் பல்வேறுபட்ட புலனாய்வு தகவல்களை நான் இந்திய புலனாய்வு பிரிவினருக்கு வழங்கினேன். இதை நான் செய்யும் போது எனக்கு அடிமனதில் தோன்றியவை எல்லாம் நானும் எனது குடும்பத்தினரும் உயிரோடு இருக்க வேண்டும் என்பது மட்டுமே.

ஏனெனில் நான் புலிகளுடன் பலாத்காரமாக சேர்த்துக் கொள்ளப்பட்டவன். நான் இயக்கத்திலிருந்து திருடியது என்னவெனில்; வரைபடங்கள், ஒலிநாடா, ஒளிநாடா, மற்றும் புலிகளின் எதிர்கால புலனாய்வு நடவடிக்கைகள். இவற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்னவெனில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது புலனாய்வு பிரிவினரின் உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாடிய போது, புலிகள் எப்படி ராஜீவ் காந்தியை கொலை செய்ய திட்டமிட்டனர் என்பதை விவரித்திருந்தார். இந்த ஒலிநாடாவை நான் எனது வேலை திட்டத்துக்காக பதிவு செய்தேன். இதுதான் நான் “ரோ” (RAW) வுக்கு வழங்கிய மிக முக்கியமான, பிரபாகரனுக்கு எதிரான சாட்சி. இந்த ஆதாரம் தான் எனது உயிரை கடைசி மட்டும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்து காப்பாற்றியது.

புலிகளுக்கு எதிராக இந்திய உளவு நிறுவனம் “ரோ” மேற்கொண்ட தங்களது ரகசிய உளவு நடவடிக்கைகளை பி.ராமன் என்று அழைக்கப்படும் உயர்மட்ட உளவு நிறுவனர் முன்னின்று பணியாற்றினார். இந்திய உளவுத்துறை இவர் மூலம் 1997 ஆம் ஆண்டு ஜூலாய் மாதம் என்னை தொடர்பு கொண்டனர். பி.ராமன் என்னை கொழும்பில் வந்து சந்திக்க வேண்டும் என்று கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் எனக்கு ஒரு தகவல் அனுப்பியது.

இதன் பின்னர் நான் முதன்முதலாக பி. ராமனை 1997 ஓகஸ்ட் மாதம் சந்தித்தேன். இந்த சந்திப்பின் போது, பி.ராமன் எனக்கு செய்த உதவி ஒரு கடவுள் ஒரு மனிதனுக்கு செய்த அருள் போன்றது. இது தான் மனிதநேயம்.

பிரபாகரனுக்கு இவ்வாறான ஒரு மனித நேயம் கிடையாது. உங்களது தலைவர் பிரபாகரன் ஒரு முட்டாள். உலக அறிவு குறைந்த ஒரு மொக்கன். ஐந்தாம் வகுப்பு படித்த ஒரு சிறுவன் கூட மிகவும் சிந்திக்க தெரிந்தவன். ஆனால் பிரபாகரனுக்கு ஒருவரை எப்படி மண்டையில் போடுவது என்பது தவிர வேற ஒன்றும் தெரியாது.

சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன். இந்த மூடர்களால் தான் இன்று தமிழினம் இவ்வளவு துன்பங்களுக்கு உள்ளானது. அரைகுறையாகத் தெரிந்துகொண்டு யூடியூப் இல் உளறுவது சமூக வலைத்தளங்களில் எழுதுவது தலைவர் பிரபாகரனை போன்றவர்கள் தான். எனவே மனிதனாக பிறந்த நாங்கள் சிந்திக்க வேண்டும். சிந்தனை செய் மனமே!

https://www.youtube.com/watch?v=Xjx4EORuMDM