“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி

“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி

“பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் ஞானசார தேரர்.” – மனோகணேசன் குற்றச்சாட்டு !

“வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் ஞானசார தேரருக்கும் பங்கு இருக்கின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் மீது சட்டம் பாயாது என்றும் ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் இளைஞர்களைத் தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“அமைச்சர் அலி சப்ரியை பதவி விலகுமாறுக் கூறும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்ரியையும் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். இந்நிலையில் ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து?

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு. ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசு. அமைச்சர்கள் அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது.

இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும்கூட தட்டி பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகிறார். கிறிஸ்மஸ் பிறக்கிறது. அதற்கும் இவர் எதையாவது திருவாய் மலருவார். முஸ்லிம்களுக்கு எதிராக பலமுறை பலதையும் பேசியுள்ளார். இந்துக்களை அரவணைப்பது போல் பம்மாத்து காட்டுகிறார்.

ஆனால், வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் இவரும் இருக்கிறார். இதுபற்றி இவருக்கும் எனக்கும் ஒருமுறை வாக்குவாதமே நடந்தது. இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் தானே இவர்?
இவர் மீது சட்டம் பாயாது. ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களை தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது.

இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறது. ஆகவே, இவரது செயலணியின் பெயரை ‘ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்’ என நான் பிரேரிக்கிறேன்.

அதேபோல், இவரது இந்த வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக கோருகிறேன். இல்லா விட்டால் இந்த பாவம் இவர்களையும் சேரும் எனவும் கூறுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

“அலிசப்ரி பதவியிலிருக்கும் வரை சஹ்ரானின் குற்றங்களுக்கு நியாயம் கிடைக்காது.” – ஞானசார தேர

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செய லணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலை மைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்குப் பதில் தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி உருவாக் கத்தின் போதும், அதில் என்னைத் தலைவராக நியமித் துள்ளதற்கும் பல்வேறு விமர்சனங்கள், அவதூறு கருத்துக்கள் எழுவதை அவதானித்தே வருகின்றேன். ஆனால், இவற்றை நாம் கருத்தில்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

“உலகில் வேறு எந்த காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத்தையும் விட பயங்கரமானது இஸ்லாமிய தீவிரவாதம்.” – ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தலைவர் ஞானசாரதேரர் காட்டம் !

வேறு எந்த தீவிரவாதத்தையும் விட இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சியால்கோட்டில் பிரியந்த குமார எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் பேசியுள்ள அவர் ,

உலகில் வேறு எந்த தீவிரவாதத்தையும் விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானதாக காட்டுமிராண்டித்தனமானதாக மாறியுள்ளது . சியால்கோட்டில் பிரியந்த குமார ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதை பயன்படுத்தி இலங்கையிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும்.

உலகில் மததீவிரவாதம் உட்பட பல வகையான தீவிரவாதங்கள் காணப்படுகின்ற போதிலும் இஸ்லாமிய தீவிரவாதம் மிகவும் பயங்கரமானதாக காட்டுமிராண்டித்தனமானதாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.எந்த தீவிரவாதத்தின் விளைவுகளும்- பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடியவை ஆனால் இஸ்லாமிய தீவிரவாதமே மிகவும் பயங்கரமானது காட்டுமிராண்டித்தனமானது ஏனைய தீவிரவாதங்கள் இதற்கு அருகில் நெருங்ககூட முடியாது மனிதர்கள் நூற்றாண்டுகளாக சாதித்த விழுமியங்களை அது தொடர்ச்சியாக அலட்சியப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

“நாட்டில் சாப்பாடு இல்லை. தண்ணீர் இல்லை.வீடு இல்லை. இவற்றைப்பற்றி பார்ப்போம். விடுதலைப்புலிகளை மறந்து விடுங்கள்.” – வவுனியாவில் ஞானசாரதேரர் !

“நாட்டில் சாப்பாடு இல்லை. தண்ணீர் இல்லை.வீடு இல்லை. இவற்றைப்பற்றி பார்ப்போம். விடுதலைப்புலிகளை மறந்து விடுங்கள்.” என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியினால் மக்கள் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நேற்றுமுன்தினம்  வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சட்டத்தரணிகள், மதத்தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தார்கள். செயலணியின் தலைவர் ஞானசார தேரர் ஒருநாடு ஒருசட்டம் தொடர்பில் இங்கு தெளிவுபடுத்தினார்.

வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் செயணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவிக்கையில்,

இந்தக் கலந்துரையாடலில் அரசியல் கைதிகளின் விடுதலை, தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கை, பௌத்த விகாரரைகளை அமைப்பது, எமது மத வழிபாடுகள் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்சினை, மாவீரர் தினம் தொடர்பில் எமது உரிமை  கள் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்சினை தொடர்பில் பேசியிருந்தேன்.

அப்போது அவரிடம் இருந்து வந்த பதிலில் அரசியல் கைதிகள் தொடர்பாக உள்ளே இருப்பவர்கள் தொடர்பில் ஜனாதிபதி சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பேசியுள்ளார். மிக விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தன்னிடமும் தெரிவித்ததாகவும் தெரிவித்தார். இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் இருந்துள்ளார்கள். மகாவம்சத்தில் தமிழ் பௌத்த துறவிகள் இருந்தமைக்கான ஆதாரம் உண்டு. தமிழ் மக்களின் வழிபாட்டுக்கான உரிமை மறுக்கப்படும் இடங்களை பார்வையிடுவதாக தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் கதிர்காமம் போன்று இரு மதத்தினரும் வழிபடக் கூடிய நிலை வருவதனை தான் விருப்புவதாக தெரிவித்தார். நாம் இணைந்து வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மாவீரர் தினம் தொடர்பில் கேட்டிருந்தேன். பல்வேறு காலங்களிலும் மரணித்த மாவீரர்களை நினைவு கூர உரிமை உள்ளது எனத் தெரிவித்தேன். இந்த விடயம் தொடர்பில் தான் முழுமையாக பதில் செல்ல முடியாது எனவும், இருந்தாலும் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக மேற்கொண்ட விடயம் தவறு. அதற்கு அனுமதிக்க முடியாது. உங்களுடைய வலிகள், பிரச்சினைகளை புரிந்திருந்தாலும் இதற்கான பதிலை வழங்கக் கூடிய நிலையில் இல்லை. எங்களுடன் சேர்ந்து இவற்றை மறந்து நீங்கள் பயணிக்க வேண்டும் எனக் கூறினார்.

இதைவிட பிரச்சினையான பல விடயங்கள் இருக்கின்றன. சாப்பாடு இல்லை, வீடு இல்லை, தண்ணீர் இல்லை இவை பற்றி நாம் பார்ப்போம் எனத் தெரிவித்தார்.

“தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும்.” – யாழில் ஞானசாரதேரர் !

“கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும்.” என  ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் நேற்று வவுனியா மாவட்டத்தில்  ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இந்த பணி இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஒன்றுபட எந்த அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. ஆகவே ஒரே நாடு ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை. போதைப் பொருளால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். விளக்கேற்றுவதற்காக கேட்கும் அரசியல்வாதிகள் போதைப்பொருள் தடுப்பு மத்திய நிலையத்தை உருவாக்க தயாரில்லை. தமிழர்களது பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறார்கள். கடந்த 19ஆம் திகதி அன்று கார்த்திகை விளக்கீடு நிகழ்விலே பாதுகாப்பு தரப்பினர் தலையீடு செய்தமை தொடர்பில் அது சம்பந்தமான விளக்கத்தை நாம் பெறுவோம்.

ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியில் தமிழர்களை முதலில் சேர்க்காமல் எதிர்ப்புக்கள் வந்த பின்னர் சேர்த்தமை தொடர்பாக கேள்வியெழுப்பிய பொழுது, இந்த செயலணியை ஆரம்பித்த பொழுது பிரச்சனை ஒன்றாகவே இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களை நியமிக்கவேண்டிய தேவையிருக்கவில்லை. பொதுவாகவே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒரே பிரச்சினையே காணப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களை தெரிவு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. முஸ்லிம்களுக்கு பல சட்டங்கள் இருப்பதால் அந்த சட்டத்தை பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டுவர விரும்பினோம். பல்வேறு சட்டங்கள் இருப்பதால் அதனை ஒரு சட்டமாக்க விரும்புகிறோம்.

தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும். கண்டியச் சட்டம் முஸ்லீம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம். எல்லா சட்டங்களிலும் இருக்கின்ற நல்ல விடயங்களை சேர்த்து ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார். இதன்போது ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் உறுப்பினர்களான யோகேஸ்வரி பற்குணராஜா, ஜயம்பிள்ளை தயானந்தராஜா உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

“ஒரு குற்றவாளியை ஜனாதிபதி செயலணியின் தலைவராக்கியுள்ளார்கள்.” – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கவலை !

“இனங்களுக்கு இடையேயான இன ஒற்றுமையை ஒழிக்கவா “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி..? என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

பல தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தத்தை சந்தித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாடு அமைதிக்கு திரும்பிய பின்னர் ஸஹ்ரான் எனும் கொடியவனின் மிலேச்சதத்தனமான தாக்குதலினால் பல பாதிப்புக்கள் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் பாதுகாப்புக்கு சம்பந்தமில்லாத சில சட்டங்களை பாதுகாப்புக்கு தொடர்பில்லாமல் நூற்றாண்டு காலமாக சில சமூகங்கள் பின்பற்றிவரும் தனியார் சட்டங்களை மாற்றவேண்டும் அல்லது இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி செயலணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

தனியார் சட்டங்களுக்கும் பாதுகாப்புக்கும் எந்த அடிப்படையில் தொடர்பிருக்கிறது என்று கேட்க விரும்புகிறேன். இன ரீதியாக சமூகங்களை பிளவுபடுத்தி சமூகங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்ற நிலையை இந்த செயலணி ஏற்படுத்திவிடுமா என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

செயலணிக்குழுவுக்கு தலைமை தாங்கும் மதகுருவான கலகட அத்தே ஞானசார இந்த நாட்டின் பல நீதிமன்றங்களை அவமதித்து, சட்டத்தை கையிலெடுத்ததனால் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவர். அப்படிப்பட்டவர் இந்த செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுடன் இந்த செயலணி மீது நம்பிக்கையீனத்தையும் உண்டாக்கியுள்ளது.

இது சம்பந்தமாக நீதியமைச்சரே தனக்கு தெரியாமல் நடந்ததாகவும் இவ்விடயம் தொடர்பில் தான் அதிருப்தியுற்று இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நியமன விடயம் தொடர்பில் எமது நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் விரும்புகின்ற சகல இன மக்களும் ஒற்றுமையாக, சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவரும் எங்களை இந்த செயலணியின் செயற்பாடுகளினால் அமைதியின்மையும், பிளவையும் உண்டாக்கிவிடுமா எனும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நாட்டை நேசிக்கும் இலங்கையன் என்ற ரீதியில் செயலணி சகல விடயங்களுக்கும் ஆப்பாக அமைந்துவிடும் எனும் கவலை என்னுள் உருவாகியுள்ளது. இந்த நாட்டில் நிம்மதியான, ஒற்றுமையான, நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த அரசிலுள்ள சில தலைவர்கள் முயற்சிக்கும் இந்த தருணத்தில் நாங்கள் வேண்டிக்கொள்வது “ஒரே நாடு ஒரே சட்ட செயலணி”யை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும். நாட்டின் பொருளாதாரம் பாரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் பொருளாதார உயர்வுக்கான திட்டங்களை வகுத்து மக்களின் வாழ்வுக்கு உதவும் நல்ல திட்டங்களை முன்வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.