எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

“எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களுக்கு காரணமான அனைவரையும் தண்டிப்பேன்.” – சஜித் பிரேமதாச சூளுரை !

எதிர்வரும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் , சர்ச்சைக்குரிய எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களுக்கு காரணமான அனைவரையும் தண்டிப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மாறாக பொருளாதார மந்தநிலையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த குற்றங்களுக்கு காரணமானவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் சலுகை விலையில் பொருட்களை வழங்குவதாக பல அரசாங்கம் உறுதியளித்த போதிலும், பெரும்பாலான விற்பனை நிலையங்களில் போதிய கையிருப்பு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சலுகைகளை வழங்குவதற்குப் பதிலாக, பிரச்சினைகளைப் பெருக்கும் அரசாங்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் விஞ்ஞான முறைகள் மூலம் நடைமுறை தீர்வுகள் தேடப்படும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

“ராஜபக்ஷ அரசை விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.” – விஜித ஹேரத்

“இந்த அரசை விரட்டியடித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஆட்சியை உருவாக்குவதற்கு தமிழ், சிங்கம், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர்.” என மக்கள் விடுதலை முன்ணணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“நாட்டில் தற்போது எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறி வருகின்றன. இதற்கான காரணங்களை கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு துரிதம் காட்டவில்லை. மாறாக எரிவாயு அடுப்பு வெடிப்புக்கும் எரிவாயு சிலிண்டருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லையென ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். தனது இயலாமையையும் பலவீனத்தையும் மறைப்பதற்காகவே இப்படியான கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட மின் விநியோக துண்டிப்புக்கும் இதே பாணியில்தான் முட்டாள்தனமான கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். கேஸ் சிலிண்டர்களின் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலேயே வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை, சமையலறைக்கு சமைக்கு செல்லும் பெண்களுக்கு இன்று உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எந்நேரத்தில் வெடிப்பு சம்பவம் இடம்பெறும் என்ற அச்சம் உள்ளது. இந்த அரசை விரட்டியடித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஆட்சியை உருவாக்குவதற்கு தமிழ், சிங்கம், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர். நாளை வேண்டுமானாலும் அவர்கள் இதனை செய்வார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“தேசத்தை பாதுகாக்க வந்தவர்களால் சமயலறையை கூட பாதுகாக்க முடியவில்லை.” – எஸ்.எம்.மரிக்கார்

தேசத்தை பாதுகாக்கவென வந்த அரசுக்கு வீட்டின் சமையலறையைப் பாது காக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

முட்டாள் தனமான பேச்சுக்களை நிறுத்தி விட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த நிறுவனங்களுக்கு இதனை விட்டு விட்டுச் செல்ல முடியாது. இரண்டு காரணங்கள் உள்ளன.

எரிவாயு சிலிண்டர் வெடிக்காவிட்டாலும் எரிவாயு கசிவின் மூலமாகத் தான் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

எரிவாயு வெடிப்புகள் காரணமாக உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கணிசமான இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தவிர நுகர்வோர் அதிகார சபை சிஐடி மூலம் முறையான பரி சோதனை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்  தெரிவித்தார்.

இதன் பின்புறம் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய தொழில்நுட்பம் மூலமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையை மாற்றியதற்கான காரணம் என்ன? யார் மாற்றினார்? அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“இலங்கையில் எந்த எரிவாயு சிலிண்டரும் வெடிக்கவில்லை.” – திஸ்ஸ குட்டியாராச்சி

அண்மையில் நாடாளுமன்ற அமர்வின் போது எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற பல இடங்களை பட்டியலிட்டு கடந்த 48 நாட்களில் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த சம்பவங்கள் அசாதாரணமானது என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நாட்டில் இதுவரை எந்தவொரு எரிவாயு சிலிண்டர்களும் வெடிக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எரிவாயு அடுப்பைத் தவிர வேறு எரிவாயு  சிலிண்டர்கள் வெடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.

மேலும், எரிவாயு கலவையில் பிரச்சனை இல்லை. ஆனால் எரிவாயு அடுப்பில்தான் பிரச்சினை இருக்கின்றது.

ஆகவே, எரிவாயு சிலிண்டர்களில் கவனம் செலுத்துவது போன்று எரிவாயு அடுப்புகளிலும் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“போர்க்காலங்களில் கூட நிம்மதியாக இருந்த மக்கள் ராஜபக்ஷக்களின் காலத்தில் படும்பாடு – எதிர்க்கட்சி கவலை !

“போர்க்காலத்தில் குண்டுகள் வெடிக்கும் என்று வெளியில் செல்வதற்கு அச்சமடைந்ததைப் போன்று, இப்போது வீட்டுக்குள் எப்போது எரிவாயு சிலிண்டர் வெடிக்குமோ என்று அச்சத்துடன் மக்கள் வாழ வேண்டியேற்பட்டுள்ளது.” என  எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு இந்த அரசால் தள்ளப்பட்டுள்ளது. போர் நிலவிய காலத்தில்கூட இந்தளவுக்கு வாழ முடியாத நிலைமைக்கு மக்கள் முகம்கொடுக்கவில்லை.

போர்க்காலத்தில் வீதிகளிலும், பஸ்கள் மற்றும் ரயில்களிலும் பயணிப்பதற்கு மக்களுக்கு எங்கே குண்டு வெடிக்குமோ என்று அச்சம் இருந்தது. அதேபோன்று இப்போது வீடுகளில் இருப்பதற்கும் அச்சமாக இருக்கின்றது. எப்போது எரிவாயு வெடிக்குமோ என்ற அச்சம் காணப்படுகின்றது. சமையல் எரிவாயு விலையைப் பாரியளவில் அதிகரித்து எரிவாயு குண்டையும் மக்கள் பக்கத்தில் அரச தரப்பினர் வீசியுள்ளனர்.

இதேவேளை, சகல பொருட்களின் விலைகள் தொடர்பாக கறுப்புச் சந்தை வியாபாரிகளுக்குத் தீர்மானம் எடுக்க அனுமதியளித்துவிட்டு தினசரி விலைகளைப் பாரியளவில் அதிகரிக்கின்றனர்.  இந்த அரசு வந்த நாள் முதல்  மக்களின் சமையல் அறைகளின் மீதே தாக்குதல் நடத்தியது. சம்பளத்தையும் வருமான வழிகளையும் தவிர மற்றைய அனைத்தினதும் விலைகளை அதிகரித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டில் 1,493 ரூபாவுக்குப் பெற்ற சமையல் எரிவாயு இப்போது 2 ஆயிரத்து 675 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிவாயு எந்த நேரத்தில் வெடிக்குமோ என்ற பயத்தில் இருக்க வேண்டியுள்ளது. போர்க் காலத்தில் வீடு திரும்பும் வரையில் வீதிகளில் ஏதாவது வெடிக்குமோ என்ற நிலைமை இருந்தது. இப்போதே வீட்டுக்குள் வெடித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒன்று எரிவாயு சிலிண்டனை வெளியில் வைக்க வேண்டும் இல்லாவிட்டால் வீட்டார் வெளியில் இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையின் பாரதூரத் தன்மையை சிறிதாக எடுக்க வேண்டாம் என்று கேட்கின்றோம்.

எரிவாயு சிலிண்டர்களின் பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்கின்றோம்” என்றார்.

“ராஜபக்ஷக்களின் ஆட்சியால் ஒவ்வொருவர் வீட்டிலும் வெடிகுண்டுகளை வைத்துக்கொண்டிருக்கிறோம்.” – முஜிபூர் ரஃமான்

சமையல் எரிவாயு கொள்கலன் எப்போது வெடிக்கும் என்ற அச்சத்தில் இலங்கை மக்கள் வாழ்ந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஃமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர், இந்த ஆபத்தான சூழலை ராஜபக்ச அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு கொள்கலன் எப்போது வெடித்துச் சிதறும் என்ற அச்சத்துடன் மக்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர். இன்று நாட்டில் ஐந்து எரிவாயு கொள்கலன்கள் வெடித்துச் சிதறியுள்ளன. இது எவ்வாறு வெடித்தது. இவ்வளவு காலமும் இத்தகைய அனர்த்தத்தினை மக்கள் எதிர்கொள்ளவில்லை.

இந்த ராஜபக்ஸ அரசாங்கம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடி வருகின்றது. இன்று சகல வீடுகளிலும் எப்போது வெடிக்கும் என்ற நிலை தெரியாத அளவிற்கு, எரிவாயு கொள்கலன் என்னும் வெடி குண்டை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.

இதற்கான முழுப்பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். ஆகவே இந்த ஆபத்தான சூழ்நிலையை நிறுத்துவதற்கு அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதாக கூறியுள்ளார்.