ஈரான் – பாகிஸ்தான்

ஈரான் – பாகிஸ்தான்

ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் !

பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

 

ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை இலக்கு வைத்து துல்லியத் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

ஈரான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயற்பட்டு வரும் சன்னி பிரிவு ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) பயங்கரவாத அமைப்பின் இரண்டு நிலைகள் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

 

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில் 2 சிறுவா்கள் உயிரிழந்ததுடன், சிறுமிகள் மூவர் காயமடைந்தனா்.

 

இந்த நிலையில், தென்மேற்கு ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் பகுதியில் இன்று (18) அதிகாலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 7 பேர் பலியானதாக மாகாணத்தின் துணை ஆளுநர் அலிரேசா தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாகிஸ்தான் – ஈரான் இடையிலான மோதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

 

பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தூதரை பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – இரண்டு சிறுவர்கள் பலி – அதிகரிக்கும் பதற்றம் !

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவுக்குச் சொந்தமான இரண்டு தளங்களைத் தாக்கி அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) செவ்வாயன்று தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குஹே சப்ஸ் பகுதியில் குறிவைக்கப்பட்ட ஜெய்ஷ் உல்-அட்லின் தளங்கள் பயங்கரவாதக் குழுவின் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாகும் என்று அரசு நடத்தும் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன” என்று ஈரானிய அரசு ஊடகம் விரிவாகக் கூறாமல் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதேவேளை ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான், இந்த தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கண்டனத்தில்

“பாகிஸ்தானின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து இரண்டு அப்பாவி குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானதுடன் மூன்று சிறுமிகளை காயப்படுத்தியதை கடுமையாக கண்டிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இந்த சம்பவம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

“ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் எப்போதும் கூறியுள்ளது. இத்தகைய ஒருதலைப்பட்சமான செயல்கள் அண்டை நாடுகளின் உறவுகளுக்கு எதிரான செயற்பாடாகும்.அத்துடன் இருதரப்பு நம்பிக்கையையும் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.