இலங்கை மின்சார கட்டணம்

இலங்கை மின்சார கட்டணம்

தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் நாடு இலங்கை என கூறுவது நியாயமில்லை – அமைச்சர் காஞ்சன கவலை !

ஒன்பது வருடங்களாக ஒரே மாதிரியான மின்சாரக் கட்டணத்தை வசூலித்த ஒரே நாடு இலங்கை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில் தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் நாடு இலங்கை என கூறுவது நியாயமில்லை என்றார்.

மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறு பாராளுமன்றத்தில் கூச்சலிட்ட போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் எந்தவொரு யோசனையையும் முன்வைக்கவில்லை.

வழங்கப்படக்கூடிய குறைந்த கட்டண விளிம்புகள் தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கட்டண திருத்தம் தொடர்பான இறுதிப் பொறுப்பு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினுடையது என்றும், அவர்கள் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று பரிந்துரைகளை வழங்கியதன் பின்னர், மின்சார சபை மீண்டும் கட்டண முறை தொடர்பான முன்மொழிவுகளைத் தயாரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

இலங்கையில் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிப்பு !

மின்கட்டணம் செலுத்தாதமையினால் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் மேற்பார்வை குழுவில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான வசதிகளை வழங்குவதற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை தமது பொறுப்பைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அந்த குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய மின் கட்டணத்தை, செலவுக்கு ஏற்ற வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.