இலங்கை மருத்துவர்கள்

இலங்கை மருத்துவர்கள்

ஒரு மாணவர் மருத்துவ படிப்பை இலவசமாக படிக்க 60 லட்சம் ரூபாயை அரசு செலவிடுகிறது – வெளிநாடு செல்லும் மருத்துவர்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விசனம் !

இலங்கையில் பல இலட்சங்களை செலவழித்து படித்து வெளிநாடு செல்லும் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் குறித்து ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு மாணவர்கள் வெளிநாடு செல்லும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி ஏதாவது விடை காண வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் தங்கியிருந்து மருத்துவ படிப்பை முடிக்கவே மாணவன் ஒருவருக்கு இலங்கை அரசாங்கம் அறுபது இலட்சம் ரூபாய் செலவழிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு பயிற்சி பெற்று வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த நாடுகள் எமக்கு வழங்கும் உதவிகளை விட அந்த நாடுகளுக்கு நாம் செய்யும் உதவிகளே அதிகம் என தெரிவித்தார்.

எனவே எவ்வாறான அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இந்த பிரச்சினை பாதிக்கும் எனவும் இந்த பிரச்சினைக்கான பதிலை நாம் காண வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையை விட்டு வெளியேறிய மருத்துவர்களை கறுப்புப்பட்டியலில் சேர்க்க தீர்மானம் !

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சுமார் 300 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இதனால் இலங்கையின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடையும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சுகாதார அமைச்சின் அனுமதி பெறாவிட்டால் வைத்தியர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

“வெளிநாட்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

“வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு விடுப்பு அனுமதி உள்ளதா..? என்பதைச் சரிபார்க்க விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகளுக்கும் நாங்கள் தெரிவித்துள்ளோம். அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதுடன், இலங்கை மருத்துவ சபையினால் வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும். அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டால் அவர்கள் வெளிநாடுகளில் கூட பயிற்சி செய்ய முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.

கறுப்புப் பட்டியலில் உள்ள மருத்துவர்களின் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, அரச மருந்தக சங்க விற்பனை நிலையங்களில் காலாவதியான மருந்துகள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

“காலாவதியான மருந்துகளின் இருப்புக்களை வழங்க சப்ளையர்கள் மறுத்துவிட்டதாக இந்த விற்பனை நிலையங்கள் எங்களுக்குத் தெரிவித்துள்ளன,” என்று அவர் கூறினார்.

சவாலான பணியாக இருந்தாலும் அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.