இலங்கை இந்திய மீனவர்களை மனிதாபிமானமாக நடத்த வெளியுறவுமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை!
தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறும் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு கடந்த 1974 மற்றும் 1976 ல் எடுக்கப்பட்ட முடிவுகளே மூலகாரணம் ” என இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
கடற்றொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக இந்திய பாராளுமன்றில் கருத்து தெரிவித்துள்ள கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை சிறைகளில் 97 இந்திய கடற்றொழிலாளர்கள்உள்ளனர்.
இதனை கையாள்வது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. 1974 ல் அப்போது மத்தியில் இருந்த அரசு, மாநில அரசுடன் ஆலோசித்து சர்வதேச கடல் எல்லையை வரையறுத்த போது தான் இந்த பிரச்னை தொடங்கியது. பிறகு 1976 ல் மீன்பிடிப்பது தொடர்பாக எல்லை வரையறை தொடர்பான கடித பரிமாற்றம் நடந்தது. எனவே 1974 மற்றும் 1976 ல் எடுக்கப்பட்ட முடிவுகளே தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக உள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் திகதி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 வரையான இந்திய மீனவர்களை இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் பார்வையட்டு கலந்துரையாடினர்.
இதேவேளை அத்துமீறும் மீனவர்களின் கைது மற்றும் வடக்கின் கடல் வளம் அழிக்கப்படுவது தொடர்பாக தமிழக – இலங்கை வடமாகாண மீனவர்கள் இடையான சந்திப்பு ஒன்று வவுனியாவில் நடைபெற்றிருந்தததும் குறிப்பிடத்தக்கது.


