அலி சப்ரி ரஹீம்

அலி சப்ரி ரஹீம்

தங்கம் மற்றும் கைபேசிகளை கடத்திய நாடாளுமன்ற உறுப்பினரின் வி.ஐ.பி வசதியை இரத்து !

தங்கம் மற்றும் கைபேசிகளை கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வி.வி.ஐ.பி வசதியை இரத்து செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயங்களை ஆராய்ந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,அவரின் சிறப்புரிமைகளை இரத்து செய்வது தொடர்பான சட்டங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை பெற்று சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் கருத்தை பெற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேவையான பணிப்புரைகளை தாம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீண்டும் டுபாய் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடத்தலில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வி.ஐ.பி விமானத்தில் வெளிநாடு பறந்தார் !

தங்கம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வியாழக்கிழமை (25) இரவு டுபாய் சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன .

நாடாளுமன்ற உறுப்பினர் இரவு 8 மணியளவில் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் வி.ஐ.பி பிரமுகருக்கான வழியாக நாட்டை விட்டு வெளியேறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (23) டுபாய் விமானத்தில் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினரை சுங்க அதிகாரிகள் பிரமுகர் ஓய்வறையில் வைத்து சோதனையிட்டவேளை 3.5 கிலோ தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட்போன்கள் அடங்கிய ரூபா 70 மில்லியன் பொருட்களுடன் பிடிபட்டார். பின்னர் அதே நாளில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.அத்துடன் 7.5 மில்லியன் பெறுமதியான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் கொண்டுவர முற்பட்ட வேளையில் நேற்று (24) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

3 1/2 கிலோ தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட் போன்களை இலங்கைக்கு கொண்டு வந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்ட அவர் 7.5 மில்லியன் ரூபா அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமைகளை தவறாக பயன்படுத்தியுள்ளதாக சபாநாயகரிடம் கடிதம் சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

கடத்தலில் ஈடுபட்டு கைதாகி விடுதலையான அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்றில் யாருக்கு வாக்களித்தார் ..?

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு எதிராக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வாக்களிக்களித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

துபாயிலிருந்து ஃப்ளை டுபாய் விமானத்தில் நேற்று (23) காலை இலங்கை வந்த போது, ​​ இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகளால் அவரை கைது செய்திருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர் 91 கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கைக்கு கொண்டு வந்த சட்டவிரோத பொருட்களின் மொத்த பெறுமதி 78.2 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சரக்குகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இதேவேளை இன்று விடுவிக்கப்பட்ட அவர் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு ஜனக ரத்நாயக்கவிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.