அநுரகுமார திஸாநாயக்க

அநுரகுமார திஸாநாயக்க

“எமது நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன. மனித சிந்தனைகள் சீரழிந்திருக்கின்றன.” – அநுரகுமார திஸாநாயக்க

“எமது நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன. மனித சிந்தனைகள் சீரழிந்திருக்கின்றன.” என நாடாளுமன்ற  உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கண்டி தொகுதி மகாநாடு நேற்று (13) கண்டியில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

அரசியலில், பொருளாதாரத்தில் மற்றும் மனித வாழ்க்கையில் மாத்திரம் நெருக்கடி இருப்பதில்லை. மக்களின் சிந்தனையிலும் அவ்வாறுதான் இருக்கிறது. நாம்  சரியாக அவதானித்தால் கடந்த பாராளுமன்றத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் யார் என்பது புலப்படும். குருணாகலில் ஜோன்ஸ்டன், கண்டியில் மஹிந்தானந்த, இரத்தினபுரியில் சொக்கா மல்லி, களுத்துறையில் ரோஹித அபேகுணவர்தன, அதைப் போலவே, கம்பஹாவில் பிரசன்ன ரணதுங்க போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர். பிரசன்ன ரணதுங்க கப்பம் வாங்கியமைக்காக நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டவர்.

மேலும், அநுராதபுரத்தில் எஸ்.எம்.சந்திரசேனவும் தெரிவு செய்யப்பட்டார். இவர்கள் பலவந்தமாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தவர்கள் அல்லர். நாட்டு மக்களின் வாக்குகளாலேயே இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். எனவே, பொருளாதாரத்தில் மாத்திரமா சீரழிவு  இருக்கிறது?

எமது நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன. மனித சிந்தனைகள் சீரழிந்திருக்கின்றன. எனவே, எம் கண்ணெதிரே இருப்பது ஓர் அழிவடைந்த தேசமாகும். நாம் ஒரு தீர்வுகட்டமான திருப்புமுனைக்கு வந்துள்ளோம். இந்த ஆட்சியாளர்களினால் இன்று நாட்டில் அரிசி, எரிபொருள் மற்றும் ஔடதங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு தோன்றியுள்ளது. கடன் செலுத்தமுடியாத நாடாக மாறியிருக்கிறோம். வாழ முடியாத ஒரு நாடாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது.

சட்டம் அமுலாக்கப்படாத, ஒழுக்கமில்லாத, போதைவஸ்துக்கள்  நிரம்பிய மற்றும் குற்றச் செயல்கள் மலிந்த ஒரு நாடே இன்றைய பெறுபேறு இருக்கிறது. இதே பயணப்பாதையில் சென்று நாம் செத்து மடியப் போகிறோமா? இல்லையென்றால் ஒன்றாக எழுச்சிபெற போகின்றோமா? மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

எம்மிடம் சுலபமான வழியும் இருக்கிறது. அதாவது, எவ்வித பிரச்சினையும் இன்றி எல்லோரும் இதே அழிவுப் பாதையில் சுடுகாட்டை நோக்கி பயணிக்கவும் முடியும். இல்லையென்றால், நாம் திடசங்கற்பத்துடன், ஒன்றாக எழுச்சி பெற வேண்டும். சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை நிராகரித்து நாம் எழுச்சி பெறுவோம் என்ற பிரேரணையை முன்வைக்கவே கண்டி நகரில் நாமனைவரும் திரண்டிருக்கிறோம்.

இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து இதைவிட எவ்வாறன பெலென்ஸ் சீட் கிடைக்கப்போகிறது. எந்த துறையில் நாம் வென்றிருக்கிறோம்; எந்த துறையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. எந்த துறையை பற்றிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்று எவராவது கூற முயுமா? இப்பொழுதும் நீங்கள் விழித்தெழாவிட்டால் இனி ஒருபோதுமே எழுச்சிபெற மாட்டீர்கள்.

“வடக்கில் ஒன்றையும் – தெற்கில் ஒன்றையும் – வெளிநாட்டில் இன்னொன்றையும் பேசித்திரிகிறார் ஜனாதிபதி ரணில்.” – அநுரகுமார திஸாநாயக்க

“வடக்கில் ஒன்றையும் – தெற்கில் ஒன்றையும் – வெளிநாட்டில் இன்னொன்றையும் பேசித்திரிகிறார் ஜனாதிபதி ரணில்.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சர்வதேச சமூகத்தை மாத்திரமல்ல இங்குள்ள அரசியல்வாதிகளையும், மக்களையும் ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு கனவு காண்கின்றது.  நீதிபதியை வெளியேற்றி நீதித்துறை சமூகத்தை வீதியில் விட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசு, இன, மதப் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வை வழங்கும்? இந்த அரசை இனியும் நம்புபவர்கள் படுமுட்டாள்கள்

தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அரசின் கனவு தவிடுபொடியாகி விடும். இங்குள்ள சில அரசியல்வாதிகள் கோமா நிலையில் இருந்தாலும் நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள்.

வடக்கு, கிழக்கு சென்று ஒன்றையும், தெற்கில் இன்னொன்றையும், வெளிநாடு சென்று மற்றொன்றையும் மாறி மாறி சொல்லித் திரியும் ஜனாதிபதி ரணில்  ரணில் விக்ரமசிங்கவுக்குப் பகிரங்கமாக ஒரு சவாலை விடுகின்றோம். அதாவது முடிந்தால் தேசிய ரீதியில் ஒரு தேர்தலை நடத்திக் காட்டுங்கள்” எனக் கூறியுள்ளார்.

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய வகையிலான புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும். ” – அநுரகுமார திஸாநாயக்க உறுதி !

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய வகையிலான புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும். ” என தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“அத்திபாரமும் உடைந்து விழுந்த நாட்டில்தான் நாம் வாழ்த்துகொண்டிருக்கின்றோம். எனவே, எமது ஆட்சியின்கீழ் இந்த அத்திபாரம் நிச்சயம் கட்டியெழுப்படும். புதிய அரசமைப்பு, சட்டத்தின் ஆட்சி, ஊழல், மோசடியற்ற ஆட்சி, சிறந்த அரச சேவை, இன ஐக்கியம், ஏற்புடைய வெளிவிவகாரக் கொள்கை ஆகியவற்றின் ஊடாக இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பம், வர்த்தகத்தால் உலகம் இணைந்துள்ளது. எனவே, தனித்துச் செயற்படும் வெளிவிவகாரக் கொள்கை இனியும் ஏற்புடையதாக அமையாது. எனவே, பலமானதொரு வெளிவிவகாரக் கொள்கை உருவாக்கப்படும். வளங்களை விற்று தரப்புகளை திருப்திப்படுத்தும் கொள்கையாக அது அமையாது.

ஊழல், மோசடியற்ற அரச சேவையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அனைத்து இன மக்களினதும் நீதியான உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய அரசமைப்பொன்று வேண்டும் எனவும் மக்கள் கோருகின்றனர். எனவே, மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். எமது எதிர்ப்பார்ப்பும் இதுவே.

மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள் ஊடாக அத்திபாரத்தை ஏற்படுத்திய பின்னர் பொருளாதாரக் கொள்கை, சுகாதாரக்கொள்கை பற்றிப் பேசலாம்.

அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தோல்வி கண்ட பொறிமுறையாக உள்ளது.” – என்றார்.

“அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழிந்து கொண்டிருக்கிறார் ஜனாதிபதி ரணில் “- அநுரகுமார திஸாநாயக்க

அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி ஒழிந்து கொண்டிருக்கிறார் என்று ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற காலத்திலிருந்து, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் மக்கள் மத்தியில் பொதுக்கூட்டமொன்றைக்கூட நடத்தி நாம் காணவில்லை.

 

மக்கள் ஆணையால் ஆட்சிக்கு வராத அவர், அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழிந்து கொண்டிருக்கிறார்.

 

இன்று வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால், ஜனாதிபதியோ நாட்டின் பொருளாதாரம் உயர்வடைவதாக குறிப்பிடுகிறார்.

 

மத்திய வங்கியின் அறிக்கையொன்று அண்மையில் வெளியானது. இதில், 68 வீதமான மக்கள் இரண்டு வேளை உணவினை மட்டுமே உற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்தாண்டு, கடனை திருப்பிச் செலுத்தியும் எரிபொருள், எரிவாயு இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இவ்வாண்டு 600 கோடி டொலர் கடனை திருப்பிச் செலுத்தப் போவதில்லை என்று கூறப்படுகிறது.

 

அரச சொத்துக்களை விற்பனை செய்து, அதன் ஊடாக கிடைக்கும் டொலரைக் காண்பித்து, இந்த நாடு முன்னேறி விட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு திவால் நிலைமைக்குச் சென்றமை தொடர்பாக ஆராயும் தெரிவுக்குழுவில் எதரிக்கட்சியினருக்கே தலைமை பதவி வேண்டும்.” – அநுரகுமார திஸாநாயக்க

நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றமை தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் பதவி, எதிர்க்கட்சியினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் இன்று ஆற்றிய உரையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு திவால் நிலைமைக்குச் சென்றமைக்கான பொறுப்பை தற்போதைய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த அரசாங்கமானது, மொட்டுக் கட்சியினரின் ஆதரவுடன்தான் இயங்கி வருகிறது. இந்த கட்சியின் செயலாளர்தான், நாடு திவால் நிலைமைக்குச் சென்றமை தொடர்பாக ஆராயும் தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்போது நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ தான், இந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர். அந்தக் கட்சியின் தலைவராக, முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் காணப்படுகிறார். நாடு திவாலானமைக்கான உண்மைகளைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமெனில், அதே தரப்பிடம் இந்த பொறுப்புக்களை ஒப்படைக்கக்கூடாது.

இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு, உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டுமெனில், எதிர்க்கட்சியிடம்தான் தெரிவுக்குழுவின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். பொருளாதாரக் குற்றம் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தத் தெரிவுக் குழுவின் அறிக்கையில் குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர்களுக்கு பதிலாக வேறு நபர்களின் பெயர்கள்தான் குறிப்பிடப்படும்.

எனவே, உண்மைகள் வெளியே வரவேண்டுமெனில், எதிர்க்கட்சியினருக்கு தெரிவுக்குழுவின் தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் பணம் இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டமும் காணப்படுகின்றது.” – அநுரகுமார திஸாநாயக்க

“இலங்கையில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் பணம் இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டமும் காணப்படுகின்றது.” என ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

இன்னொரு தரப்பினர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட கதிரையின் பாரத்தை சுமக்கும் அளவுக்கு எமது தலைவர்களின் மனதளவில் வலிமையானவர்கள் கிடையாது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாத, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி தாவ முடியாத, அமைச்சர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்திய, மனித உரிமையை வலுப்படுத்தக்கூடிய, சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு முழு உரிமையுடன் வாழக்கூடிய புதிய அரசியலமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டே ஆக வேண்டும்.

ஒரு நாடு வளமடைய வேண்டுமெனில் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.

ஆனால், இன்று எமது நாட்டிலோ பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் பணம் இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டமும் தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இப்படியாக ஒரு நாட்டினால் ஒருபோதும் முன்னேற முடியாது. நீதிமன்றக் கட்டமைப்புக்களை வலுப்படுத்த வேண்டும்.

நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இல்லாது போனால், மக்களின் உரிமைகள் மீறப்பட்டுவிடும்.  இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும்.

இன்று உலக நாடுகளாகட்டும், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களாகட்டும், அனைத்துமே இலங்கை தொடர்பாக அதிருப்தியையே வெளிப்படுத்தியுள்ளன.

சிங்கள- தமிழ்- முஸ்லிம். பரங்கியர் என அனைவரும் சமாதானமாக வாழ வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.

மொழி, மத உரிமை முழுமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாக மாற வேண்டும். மக்களிடத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்தாமல், எம்மால் ஒருபோதும் பொருளாதாரத்தையோ நாட்டையோ முன்னேற்ற முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

“நான் பதவி விலகப்போவதில்லை.”- ஜனாதிபதி கோட்டாபய உறுதி!

“கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் அரசியலே உண்டு” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நாடெங்கும் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில், போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அரச தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எனக்கு எதிராக உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளால் களமிறக்கப்பட்ட சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரைத் தோற்கடித்து 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆணையுடன் நான் ஆட்சிப்பீடம் ஏறினேன்.

தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது ஜனாதிபதி பதவிக்குரிய காலம் வரை நான் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன். நாடாளுமன்றத்திலும் எனக்கு எதிராக மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை கொண்டுவருவதற்குரிய பலம் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.

அன்று எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட இருவரும் (சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க) இன்று எனக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களின் கட்சிகளின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களுமே எனக்கு எதிராக வீதிகளில் பொங்குகின்றனர்.

‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் அரசியலே உண்டு என்பதை நாடாளுமன்றத்தில் இந்த வாரம் எதிரணியினர் நடத்திய போராட்டங்களும் பகிரங்கப்படுத்தியுள்ளன. எனவே, நாட்டில் எனக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் உண்மையில் மக்கள் போராட்டங்கள் அல்ல” – என்றார்.

“நாட்டை முன்னேற்ற நாம் தயாராக இருக்கிறோம்.” – அநுரகுமார திஸாநாயக்க

இலங்கையின் பொருளாதாரம் அழிவுகரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது, விலைகள் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியும் துறைமுகத்தில் சிக்கியுள்ளது .

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்க் கொண்டு, இலங்கை கடனை அடைக்க முடியுமா என்பது அனைவருக்கும் உள்ள கேள்வியாக உள்ளது.

மக்களின் முன்னேற்றத்துக்காக நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளை வழிநடத்த மக்கள் விடுதலை முன்னணி சக்தி தயாராக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

“சீனா தனக்கான அரசியல் தளம் ஒன்றை இலங்கையில் உருவாக்க முனைகிறது.” – ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“சீனா வியாபார நாடாக மாத்திரம் இலங்கையைப் பார்க்காது தமக்குத் தேவையான மையமாக  இலங்கையை கணித்துள்ள காரணத்தால் அவர்களுக்கு ஏற்ற அரசியல் தளம் ஒன்றை உருவாக்க நினைக்கின்றனர். ” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பாக பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு இன்று இலங்கையின் அரசியலைத் தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதேநேரம் அவர்கள் வெறுமனே வியாபார நாடாக மாத்திரம் இலங்கையைப் பார்க்காது தமக்குத் தேவையான மையமாக கணித்துள்ள காரணத்தால் அவர்களுக்கு ஏற்ற அரசியல் தளம் ஒன்றை உருவாக்க நினைக்கின்றனர்.

இலங்கை பெற்றுள்ள கடன் தொகையை மீளச் செலுத்த முடியாது.கடன் வாங்கிய நாடுகளிடம் மண்டியிடும் நிலைமை உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் நாடு பலவீனப்பட்டுக்கொண்டே செல்கின்றது.

சீனாவின் பொருளாதாரத் தலையீடு காரணமாக நாட்டின் வளங்களை இழக்கும் அளவுக்கு நாம் வந்துவிட்டோம் என்ற விமர்சனத்தை ஒரு தடவை சீனத் தூதுவர் எம்மைச் சந்தித்த வேளையில் முன்வைத்தேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது ஒன்றுதான், ‘இலங்கையில் முன்னெடுக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் நாம் முன்வைத்த திட்டங்கள் அல்ல. அனைத்துமே இலங்கை அரசு எம்மிடம் முன்வைத்த திட்டங்களே. அதற்கு உதவிகளை மட்டுமே நாம் செய்கின்றோம்’ என்றார்.

எனவே, சீனாவை மாத்திரம் திட்டுவது அர்த்தமற்றதாகும். அவர்களுக்கு இடமளித்த ஆட்சியாளர்களே பாரிய தவறைச் செய்துள்ளனர். அவர்களை மாற்ற வேண்டியதே அவசியம் எனக் கருதுகின்றேன். இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் சந்தை, உற்பத்தி என்பன இலங்கைக்கு வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவுடன் எமது பொருளாதார உறவு பலமடைந்தால் நாடு பாதுகாப்பாகவும் அதேபோல் ஆசியாவின் முக்கிய மையமாகவும் நாம் மாறலாம்.

இதேவேளை, மூவின மக்களும் ஒன்றிணைந்து, நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லும் அரசியல் தலைமையை உருவாக்கிக்கொண்டு நாடாக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதையே முதலில் சிந்திக்க வேண்டும்.

தனித் தலைவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. சகலரும் இணைந்தால் மட்டுமே நாடாக மீள முடியும்.” என தெரிவித்துள்ளார்

“காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை இலங்கை அரசு முன்னெடுத்தேயாக வேண்டும்.” – அனுரகுமார திஸாநாயக்க

“காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை இலங்கை அரசு முன்னெடுத்தேயாக வேண்டும்.” மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த விவகாரத்தை சர்வதேசத்தைத் திருப்திப்படுத்தும் செயற்பாடாகக் கருதாது எமது பிரஜைகள் மீதான அக்கறையில் உண்மைகளைக் கண்டறியும் பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டவுடன் 2009ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அதில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்து பல்வேறு விடயங்களைச்  சுட்டிக்காட்டியிருந்தது.

அத்தோடு போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதா?, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? போன்ற உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம்.

நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும், பொது ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் எனவும், சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு சகல மக்களுக்குமான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் நீண்டகாலமாக நாம் கோரி வருகின்றோம்.

தற்சமயம் நிறைவேற்றப்பட்டுள்ள ஜெனிவாத் தீர்மானத்தால் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என நம்ப முடியாது. அதேபோல் பொருளாதாரத் தடைகள் ஏற்படும் எனவும் கூறிவிட முடியாது.

ஒரு சிலர் அல்லது அரசு செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எங்கள் மத்தியில் உள்ளது.” என்றார்.