இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த ஆளுங்கட்சி திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வாறு இவ்விரு கட்சிகளும் இணைந்து போராடினால் அவர்களின் பின்னால் தேமுதிகவும் சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கள அரசை கண்டித்தும், அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் விஜயகாந்த் பேசியதாவது:
இலங்கைத்தமிழர் பிரச்சனையில் நமக்கு உணர்வு இருக்கிறது என்பதற்கு இந்த கூட்டமே சான்றாகும். இவ்வளவு பேர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருப்பது அதனை எடுத்துக் காட்டுகிறது. நம் மக்கள் இலங்கையில் தினம் தினம் செத்து மடிகிறார்கள். அதனால் நமக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல. இங்குள்ள கட்சிகள் இலங்கை பிரச்சனையில் நாடகமாடி வருகிறார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவோ, ‘ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்தம்’ என்று கூறுகிறார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜியும், சிதம்பரமும் தெரிவிக்கிறார்கள்.
பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு வந்தால்தானே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட முடியும். விடுதலைப்புலிகள் வைத்திருப்பது கேடயம்தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கிறது.
கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டுவிட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா? ஆகையால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டு அதன் பிறகே விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கீழே போட சொல்ல வேண்டும்.
அடுத்த நாட்டு பிரச்சனையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படியானால் இலங்கையுடன் இந்தியா எப்படி ஒப்பந்தம் போட்டது. மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று சொன்னதால்தான் இந்த பிரச்சனையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்களை பார்த்து தான் இப்போது மற்ற கட்சிகளும் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள். இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக ஒன்றிணைந்து போராடுவார்களா? அவ்வாறு இவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நானும் அவர்களின் பின்னால் வருவேன்.
வரும் 24 ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது நம்முடைய போராட்டம் அவர்களுடைய செவிக்கு எட்டும் வகையில் அமைய வேண்டும். இருந்தாலும், தேமுதிக தொண்டர்கள் அனைவரும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும். இந்த பிரச்சனையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். அதன் பின்னர் அவரது தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் அமெரிக்க தூதரகம் சென்று இலங்கையில் போரை நிறுத்த கோரி மனு அளித்தனர்.
VADIVELU
இராணுவம் வைத்திருப்பது? கத்தி
அவர்களின் குறி? பிரபாகரனும் கொலைப் புலியும்
புலியன் கேடயம்? வன்னி மக்கள்.
யப்பா விஜயகாந்…! ரொம்ப கரெக்டா சொன்னாப்பா.