வன்னி யிலிருந்து வரும் மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ, அங்கிருந்து வரும் மக்களை தங்கவைப்பதற்கான நவீன மாதிரிக் கிராமங்களை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் மெனிக் பார்ம் பகுதியில், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் கதிர்காமர் கிராமத்தைப் பார்வையிட்ட பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
மீள்குடியேற்ற, அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தேச நிர்மாண அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, வடமாகாண ஆளுநர் டிக்ஸன் தாலா உட்பட அரச அதிகாரிகளும் இவ்விஜயத்தின் போது பஷிலுடன் இணைந்துகொண்டனர். வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எம்.எஸ். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பஷில் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்; கிழக்கில் விடுதலைப்புலிகளை விரட்டியடித்து அங்கு யுத்தத்தால் இடம்பெயர்ந்த 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை, அவர்களது தாயக மண்ணில் மீளக் குடியமர்த்திய பணியை எமது ஜனாதிபதி தலைமையிலான அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியது. மக்களை மீளக் குடியமர்த்தியது மட்டுமல்லாமல், கடற்றொழில், விவசாயம், சுயதொழில், போன்றவற்றை அம்மக்கள் மேற்கொள்ளும் சூழலை ஏற்படுத்தியதுடன், அதற்கான உதவிகளையும் வழங்கியுள்ளோம்.
தாம் வாழ்ந்த பிரதேசத்தில் சிறிய வீடுகளாக இருந்தாலும், மக்கள் அதையே பெரிதும் விரும்புவர் என்பதை நாமறிவோம். இந்த நாட்டில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களிடமிருந்து மீட்டு, மீண்டும் அதே பிரதேசத்தில் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்தவே இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அப்பிரதேசங்களில் அகற்றப்பட்டதும், இம்மக்கள் மீண்டும் மீளக் குடியமர்த்தப்படுவர். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட மடு புண்ணிய தலம் உட்பட அப்பிரதேசம் இன்று பாரிய அபிவிருத்திகளை கண்டுவருகின்றது.
யாழ் மன்னார் வீதியில் சங்குப்பிட்டி பாலம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. மின்சாரம், குடிநீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. மனிதநேய நடவடிக்கைகள் ஒருபுறம் இடம்பெறும்போது, அதற்குச் சமாந்தரமாக, அபிவிருத்திகளும் இடம்பெறுவது இந்த ஜனாதிபதியின் ஆட்சியில் தான் என்பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். தற்போதைய இராணுவ நகர்வை குறைத்து மதிப்பிட்டு, போலியான பிரசாரங்களை வெளிநாட்டு சக்திகள் மேற்கொண்டு நச்சு விதைகளை விதைக்கின்ற போதும், அவற்றுக்கு எதிராக உண்மையை உள்ளபடி கூறி, மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள தலைவர் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்றார். இம் முகாமில் உள்ள மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்துகொண்ட பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் அதிகாரிகள் பாடசாலை மாணவர்களுக்கான சிற்றுண்டிகளையும் வழங்கினர்.
palli
ஜயோ தாங்கள் ஒன்னுமே செய்யவேண்டாம்.அவர்களை(வன்னியில் இருந்து வருபவர்களை) மனிதர்களாக அங்கீகரியுங்கள் போதும். பஸில் தாங்கள் வன்னிக்கு எதோ பூராடம் பார்க்க போனதுக்காக பாதுகாப்பு என்னும் பளயபல்லவியை பாடி பலதமிழர் (800மேல்) ராணுவ முகாமுக்கு அவர்களை சந்தோசபடுத்த அனுப்பியதாக வன்னிசெய்தியென ஊடகங்கள் சொல்லுகிறது. இதில் மாதிரி கிராமமோ மணாங்கட்டியாம். பட்ச்ஸா குடும்பம் இருக்கும் வரை தமிழர்க்கு வாழ்வல்ல சாவே நகரம்தான்.