முழு நாடும் ஆயுதமுனையில் ஆளப்படும் காலம் அண்மித்துக் கொண்டிருக்கிறது – எஸ்.பி.திஸாநாயக்க

sbdisanayakka.jpg
தென்னிலங்கையில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக்கொண்டு வடக்குக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுக்கப்போவதாக மெதமுலன ராஜபக்ஷ குடும்பம் தெரிவித்து வருகின்றது. முழு நாடும் ஆயுத முனையில் ஆளப்படும் காலம் அண்மித்துக் கொண்டிருக்கின்றதெனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் மத்திய மாகாண ஐக்கிய தேசியக் கட்சி முதலமைச்சர் வேட்பாளருமான எஸ்.பி.திஸாநாயக்கா நாட்டில் ஜனநாயகத்தைப்பாதுகாத்து நல்லாட்சியை மலரச் செய்ய வேண்டுமானால் அராஜகத்துக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

மகிந்த ராஜபக்ஷவின் யுத்த சிந்தனை மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பதாகவும் எஸ்.பி.திஸாநாயக்கா சுட்டிக்காட்டினார். பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மத்திய, வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு வழி வகுக்கும் தீர்ப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடக்கவிருக்கும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக எஸ்.பி.திஸாநாயக்கா இரண்டு மாகாணங்களதும் மக்களுக்கு பொது வேண்டுகோளொன்றை விடுக்கும் கடிதமொன்றை வாக்காளர்களுக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சொல்கிறார் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து கிழக்குப் போன்று வடக்கிலும் ஜனநாயகத்தைப் பெற்றுத்தரப்போவதாக. ஆனால், தம்மை விமர்சிக்கும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அழித்து தென்னிலங்கையில் ஜனநாயகத்தை புதைக்கும் முயற்சியல் தீவிரம் காட்டிவரும் மெதமுலன ராஜபக்ஷ குடும்பம், எவ்வாறு ஆயுதமேந்திய வடக்குக்கு ஜனநாயகத்தை பெற்றுக் கொடுக்கப் போகின்றது என்று கேட்கவிரும்புகின்றேன். நாட்டில் எந்தவொரு மூலையிலாவது ஜனநாயகமோ, நல்லாட்சியோ காணப்படுகின்றதா? இலங்கைக்கு அமெரிக்காவிடமிருந்தோ, இங்கிலாந்திடமோ இருந்துதான் ஜனநாயகத்தை கொண்டுவரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும் சந்திரிகா பண்டார நாயக்கா குமார துங்கவினால் முந்திய நிலைக்குத்தள்ளப்பட்டிருந்த பொருளாதாரத்தை மிகக் குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கட்டியெழுப்பினார். இன்றைய அரசு காட்டுவது போல் மத்திய வங்கி அறிக்கையால் பொருளாதாரம் வளர்ச்சிகாணவில்லை. பொருளாதார வளர்ச்சியை அன்று ஒவ்வொருகிராமத்து விவசாயியும் கூட நேரிடையாக அனுபவித்தனர். இன்று பொருளாதார வளர்ச்சியானது மத்திய வங்கி அறிக்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதையே காணக்கூடியதாகவுள்ளது.

அன்று பிரதமர் ரணில் முன் வைத்த  ‘மீண்டெழும் இலங்கை’  திட்டத்தின் மூலம் நாட்டுக்கு உலக நாடுகளிடமிருந்து பெருமளவிலான பொருளாதார உதவிகள் கிட்டின. அந்த உதவிகளை வைத்துக் கொண்டே மகிந்த ராஜபக்ஷ இன்று பொருமைபேசிக் கொண்டிருக்கிறார். வீராப்புக் காட்டிக் கொண்ருக்கின்றார். மகிந்த ஆட்சிக்கு வந்த பின்னர் இன்று வரையில் பொருளாதார உதவியென்று உலக நாடுகளெதுவும் ஒரு சதம் கூட வழங்கமுன்வர வில்லை. கடல்கோள் அனர்த்த நிவாரணத்துக்கு கிடைத்த வெளிநாட்டு உதவியை ஹெல்பிங் அம்பாந்தோட்டை வங்கிக் கணக்கிலிட்டுக் கொண்ட ஜனாதிபதி, இன்று ரணில் 2001 இல் நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொண்ட அனைத்து பொருளாதார உதவிகள், திட்டங்களை தெற்குக்கு மட்டும் என்ற கொள்கை அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றார்.

நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இந்தப் பேரழிவிலிருந்து மீட்சி பெற வேண்டுமானால், நாட்டில் ஜனநாயகம் மலர்ந்து நல்லாட்சி ஏற்படவேண்டுமானால் அதற்குரிய தீர்ப்பை மக்கள் தான் வழங்க வேண்டும். மத்திய மாகாணத்திலும், வடமேல் மாகாணத்திலும் பெப்ரவரி 14 ஆம் திகதி மக்கள் அளிக்கும் தீர்ப்புத்தான் முழுநாட்டையும் அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக வழங்கப்படக்கூடிய ஆணையாகும். அந்த ஆணையை வழங்குவதற்கு ஒவ்வொருவரும் உறுதிபூணவேண்டும். இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழந்துவிடாதீர்கள் என்று உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • palli
    palli

    இந்த கிண்டல்தானே வேண்டாம் எங்கிறது. இப்போ என்ன அன்புவழியிலா அரசு நடக்கிறது பல ரவுடிகளுடன் சிலதுகள் சேர்ந்து சில அரசியல்வாதிகளை இனங்கவைத்து ஆட்டம் போடும் அரசும், வில்லதனமே மூலதனமாக கொண்டு விடுதலை கேப்பவர்களும் உரசுபட மக்கள் இடையில் நசுங்கி சாவதும் நாட்டை விட்டு ஓடுவதும். முன்னாள் பிரதமரே நாட்டை விட்டு ஓடவேண்டிய சூழல். இதிலை எனிதான் ஆயுத கலாசாரமா?? சுனாமி வந்த பின் மழைவரும் கவனம் என சொல்வது போல்உள்ளது இவரது கட்டுரை.
    பல்லி.

    Reply
  • ashroffali
    ashroffali

    //மகிந்த ஆட்சிக்கு வந்த பின்னர் இன்று வரையில் பொருளாதார உதவியென்று உலக நாடுகளெதுவும் ஒரு சதம் கூட வழங்க முன்வரவில்லை//
    ஐரோப்பிய யூனியன் ஈரான் என பல்வேறு நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கும் போதெல்லாம் எஸ்.பி.திசாநாயக தூங்கிக் கொண்டிருந்தார் போலும்.

    இலங்கையை அபிவிருத்தி செய்வதாயின் சர்வாதிகார ஆட்சி முறைதான் சிறந்தது என்றும் தான் என்றைக்காவது ஜனாதிபதியானால் சர்வாதிகார ஆட்சிமுறையில் நாட்டை ஆளப் போவதாகவும் இப்போது பேசும் எஸ்.பி.திசாநாயக்கவுக்கு இலங்கையின் அரசாங்கம் தொடர்பில் விமர்சனம் செய்வதற்கான எந்தத் தகுதியும் இல்லை.

    சமுர்த்தி பயனாளிகளின் வைப்புத் தொகையை தனியார் வங்கியொன்றில் வைப்புச் செய்வதற்கு கையூட்டாக வாங்கிய பெருந்தொகைப் பணத்தில் ஹங்குரன்கெத்தவில் இலங்கையிலேயே மிகப் பெரிய ஆடம்பர மாளிகையை ஆயிரம் கோடிகள் அளவில் செலவிட்டு தனக்காக கட்டிக் கொண்ட இலங்கையின் முதலாம் தர ஊழல் பேர்வழிதான் இந்த எஸ்.பி. திசாநாயக்க. இப்போது அனைத்தும் மறந்து புது அவதாரம் எடுத்தவர் போல மக்களை முட்டாள்களாக்க முற்படுவதுதான் நகைப்புக்கிடமான விடயமாகும்.

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    ஆழிபேரலை செய்த கொடுமையை விட அதற்கு நிவாரணமாய் கிடத்த “சுனாமிநிதியை” சொந்த வங்கிகணக்கில் வைப்பிலிட்டது ஈனச்செயல்.

    Reply
  • ashroffali
    ashroffali

    //ஆழிபேரலை செய்த கொடுமையை விட அதற்கு நிவாரணமாய் கிடத்த “சுனாமிநிதியை” சொந்த வங்கிகணக்கில் வைப்பிலிட்டது ஈனச்செயல்.//

    ஆழிப் பேரலையின் போது இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக இருந்தார். அவரது தனிப்பட்ட நட்பின் காரணமாக அவருடைய பெயருக்கு பல நாடுகளிலிருந்தும் நிவாரண நடவடிக்கைகளுக்கான நிதி வந்து சேர்ந்திருந்தது. அதனைக் கொண்டே அவர் ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை நிதியத்தை ஆரம்பித்திருந்தார். இதிலுள்ள முக்கியமான விடயம் யாதெனில் அவர் ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை நிதியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே அவருக்கு தனிப்பட்ட நட்பு ரீதியில் கிடைத்த நிதியே அதற்காக பயன்படுத்தப்பட்டது. தவிர ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை நிதியத்தை ஆரம்பித்து அவர் நிதி திரட்டவில்லை. எனவே தனிப்பட்ட ரீதியில் நிதி கிடைத்த ஆரம்பத்தில் ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை நிதியத்திற்கென எதுவித வங்கிக் கணக்கும் இல்லாத காரணத்தினாலேயே அவர் தனக்குக் கிடைத்த நிதியை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்புச்செய்திருந்தார். மற்றபடி அங்கே ஊழல் அல்லது மோசடி செய்வதற்கான எண்ணமோ அதற்கான தேவையோ ஜனாதிபதி அவர்களைப் பொறுத்தவரை கிஞ்சித்தும் இருக்கவில்லை.

    அது சரி மாற்றுக் கருத்துத் தோழரே

    உங்கள் தலைவார் பிரபாகரனுக்கு வந்து சேர்ந்த ஆறாயிரம் கோடிகளுக்கும் அதிகமான ஆழிப் பேரலை நிதி எங்கே மாயமாய் மறைந்ததாம்? அது குறித்து சர்வதேச அமைப்புகள் கூட விளக்கம் கேட்டிருந்தனவே? சுட்டிக் காட்டியிருந்தனவே? அதைப்பற்றியும் நீர் கொஞ்சம் விளக்கியிருக்கலாமே? ஆழிப் பேரலை நிவாரண நிதியாக கிடைத்த பணத்தில் கிழக்கு மாகாணத்திற்கான உரிய பங்கு தரப்படாத காரணத்தை சுட்டிக்காட்டி இப்படியே தொடர்ந்து நடைபெற்றால் தானும் கருணா அம்மான் வழியைத் தொடரவேண்டி நேரிடும் என்று மன ஆதங்கத்தை வெளிக்காட்டியதன் காரணமாகவே புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் இடைவழியில் வைத்துக் கொல்லப்பட்டார். அதை நீர் மறந்து விட்டீரா? அல்லது தெரிந்தும் கமுக்கமாக இருந்து கொண்டு கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிய முற்படுகின்றீரா?

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “அங்கே ஊழல் அல்லது மோசடி செய்வதற்கான எண்ணமோ அதற்கான தேவையோ ஜனாதிபதி அவர்களைப் பொறுத்தவரை கிஞ்சித்தும் இருக்கவில்லை.”ashroffali
    இதற்காக ஜனாதிபதி சந்திரிக்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தார் என்பதும் உண்மை.

    Reply
  • ashroffali
    ashroffali

    சந்திரிக்கா என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை கொஞ்சம் விளக்கமாக தாருங்களேன். அதை விட்டு விட்டு மொட்டையாக சொன்னால் எப்படி?

    சந்திரிக்கா எந்த நடவடிக்ககையும் எடுக்கவில்லை என்பதும் நடவடிக்கை எடுப்பதற்கு அங்கே குற்றங்களேதும் இழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் முழு நாட்டுக்குமே தெரியுமே ?

    Reply