அரசியல் தீர்வுமட்டுமே இலங்கையின் இன மோதலுக்கு முடிவைத் தரும் – ஜப்பான்

kilinochchi-victory.jpgவிடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகர் கிளிநொச்சி வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இலங்கைக்கு அதிகளவு உதவிவழங்கும் நாடுகளில் ஒன்றான ஜப்பான், இனநெருக்கடியை அரசியல் தீர்வினால் மட்டுமே முடிவுக்கு கொண்டுவர முடியுமென்று நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. கிளிநொச்சியை கைப்பற்றிய இலங்கை இராணுவம் முல்லைத்தீவை நெருங்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இன நெருக்கடிக்கு உண்மையான தீர்வை அரசியல் முயற்சிகளூடாகவே யதார்த்தபூர்வமானதாக்க முடியும், என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு நேற்று தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்துக்கு பொறுப்பான இந்த அதிகாரி மேலும் கூறுகையில்; வடகிழக்கு பிராந்தியத்திற்கு உள்ளக சுயாட்சியை கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஜப்பான் ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கை நிகழ்வுகள் குறித்து ஜப்பான் இன்னமும் உத்தியோகபூர்வமான கருத்துகளை தெரிவிக்க வில்லையென்றும் தம்மை அடையாளம் காட்ட விரும்பாத அந்த அதிகாரி வேண்டுகோள் விடுத்தார். மோதல் மேலும் தொடருமென்று எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். சட்டரீதியற்ற தலைநகரை கைப்பற்றுவது ஒரு அடையாளரீதியான விடயமாகும். ஆனால், யுத்தரீதியான முக்கியத்துவம் மட்டுப்படுத்தப்பட்ட விடயம் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் கிழக்குப்பகுதி காட்டுக்குள் மோதல்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இலங்கைக்குக் கிடைக்கும் சர்வதேச உதவிகளில் சுமார் மூன்றில் இரண்டு பகுதியை ஜப்பானே வழங்குகின்றது. கடந்த மூன்று வருடங்களில் 4 தடவைகள் விசேட தூதுவரை மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட ஜப்பான் அனுப்பியிருந்தது.

Show More
Leave a Reply to anathi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • anathi
    anathi

    ஏ-9 பாதை திறப்போடு தமிழ் மக்கள் இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்கு மிக சந்தோசமாக வாழுவார்கள்.அதன் பிறகு சிங்களவனோடு வாழ முடியாது என திரும்ப சண்டை தொடங்குவார்கள்.அரசியல் தீர்வுக்கான குணங்கறிகளே தென்படவில்லை.மக்களும் களைத்துப் போய் கால் நீட்டி இருக்க காலம் பார்த்திருக்கிறார்கள்.அவர்களை குற்றம் சொல்லவில்லை.

    Reply