பிரபல சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி இலங்கையில் வடமராச்சியில் பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது அமெரிக்காவில் கிளரி கிளிங்டன் அமைச்சில் குடிவரவு பகுதியில் உத்தியோகப் பற்றற்ற ஆலோசகராக கடமை ஆற்றி வருகிறார். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், ஹ்யூஸ்டன், டெக்சாஸ் நகரில் விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டபோது, ஜார்ஜ் வில்லி அவர்களினால் ஆற்றப்பட்ட வரவேற்புரை. – தமிழில்: ந. சுசீந்திரன் –
._._._._._.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! இப் பெருநகருக்கு உங்கள் வரவு நல்வரவாகுக!. இங்கிருக்கும் ஓக் மரங்களையும் பிற பறவைகளைப் போல போலிக்குரல் எழுப்பும் பறவைகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் “இது இலங்கையோ?” என்று நீங்கள் இலகுவில் மயங்கிவிடலாம்.
நான் இலங்கையில் பிறந்தவன். என் தாயும் என் மனைவி சாந்தியின் தந்தையும் தாயும் மற்றும் எங்களது பாட்டன்கள் பாட்டிகள் யாவரும் அங்கேதான், என் அத் தாய்த்திரு நாட்டின் புனித மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நான் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து என் பத்தாவது வயதில்தான் கொழும்பு வந்தவன். என் மனைவி பதுளையைச் சேர்ந்தவள். அவள் தந்தை தியத்தலாவையில் மதிப்புமிக்கதொரு கப்டன் என்பதால் அவள் அங்கேயே வளர்ந்தவள். நான் யாழ்ப்பாணத்தின் வேப்பமரங்களின் இன்சுவை முகர்ந்தவன். கொழும்பில் பாடசாலை செல்லும் வழியில் செக்கச் சிவந்த ஜம்புப் பழம் தின்று அதன் சிவப்புக் கொட்டை விழுந்து என் சட்டை கறைபடிந்ததுண்டு. மரத்தில் பழுத்த பலாப்பழத்தை காக்கைகள் கொத்தித் திறந்துவிடுகையில் கவர்ந்திழுக்கும் நறுமணத்தை நன்றே தெரிந்தவன். வெசாக் திருநாளின் மிகைவர்ண அலங்காரப் பந்தல்கள் தோரணங்களைக் கண்டும் ஏழைகளுக்கு உணவிடும் அன்னசத்திரங்களில் கூச்சமின்றிச் சென்று உணவுண்டும் கோவில்களில் ஒலிக்கும் மந்திர உச்சாடனங்கள் தோத்திர பஜனைகள் கேட்டும் மல்லிகைப் பூக்களினதும் சந்தனக்குச்சிகளினதும் நறுமணங்களை அனுபவித்தும் சர்வ புனிதர்களின் தேவாலய மணியோசைகேட்டும் அங்கு நடைபெறும் திருப்பலிப் பூசையில் பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய ஹேரத் அவர்களுக்குத் திருப்பணி செய்துமிருகிக்கிறேன்.
ஆனால் 1975 இல் நான் இலங்கையை விட்டு வெளியேறிய நாளில் இருந்து வேதனையும் துன்பமும் கொடூரமுமே அங்கே மிஞ்சின. வழக்கமாக நன்செய் நிலங்களின் நெல்வயல்களுக்கு தன் புனித நீர் பாச்சிய வலிய ஜீவநதி மகாவலி கங்கையில் சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் செங்குருதியோடியது. என் முந்தையோர் வாழ்ந்து மடிந்த தாய் நிலம் சுவர்க்கத்தில் இருந்து நரகத்தின் அதல பாதாளத்தில் வீழ்வதை அமெரிக்க ஐக்கிய ராச்சியத்தில் இங்கிருந்தபடி கண்ணுற வேண்டியவனானேன். இதற்கு யாரை நோவதென்று எவரும் அறுதியிட்டுச் சொல்லமுடியாதுள்ளது. அன்றியும் நொந்து குற்றங்காண்பற்கான காலமும் என்றோ கடந்துவிட்டது.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நீங்களோ துட்ட காமினியின் பரம்பரை. என் மக்கள் எல்லாளன் பரம்பரை. கந்துல என்ற தன் யானையில் இருந்து துட்ட காமினி எவ்வாறு எல்லாளனுடன் சண்டையிட்டு அவனைக் கொன்றான் என்பதை எண்ணிப்பாருங்கள். முதன் முதலில் ஐக்கிய இலங்கையொன்றினை உருவாகியதற்காக நிச்சயமாக துட்ட காமினி இன்றும் நினைவுகூரப்படுகின்றான். ஆனால் அவன் வேறொன்றுக்குமாகவும் நினைவுகொள்ளப்படுகின்றான்.
எல்லாளனைத் தோற்கடித்து அவனைக் கொன்றபின் அந்தச் சிறப்புமிக்க எதிரி எல்லாளனை மதித்து நினைவுச் சின்னம் எழுப்பியவன் அவன். அதன் முன்னே நாட்டு மக்கள் அனைவரும் நின்று சிரந்தாழ்த்தி மதிப்பளிக்க வேண்டுமென்று சட்டம் பிறப்பித்தவன். அதன் மூலம் தான் பெருங்கண்ணியவான் மட்டுமல்ல சிறந்த அரசியல் சாணக்கியன் என்பதயும் நிரூபித்துக் காட்டினான். எல்லாளனைத் தோற்கடித்தபின் தமிழர்களையும் தானே ஆளவேண்டுமென்பதை அவன் தெளிந்தே வைத்திருந்தான்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, வாய்ப்பும் விதியும் மற்றும் உங்களது மாபெரும் அரசியல் ஆளுமையும் வரலாற்றில் ஒர் தனித்துவமான இடத்திற்கு உங்களைக் கொண்டு சென்றிருக்கின்றது. முன்னே பலபேர் முறியடிக்க முயன்று தோற்ற 25 ஆண்டுகால அரசியற் கிளர்ச்சியினை இறுதியில் அடக்கியவன் மகிந்த ராஜபக்ஷ என்ற பெயருடைய மாவீரன் என்று இனிவரும் எதிர்காலச் சிறார்கள் சரித்திர நூல்களில் தங்களது பாடம் படிப்பார்கள். 21 ஆம் நூற்றாண்டின் துட்ட காமினி என்று அவர்கள் உங்களைச் சொல்லக்கூடும். ஆனால் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே துட்டகாமினியின் அதே மேலாடையை நீங்கள் போர்த்திக்கொள்ள விரும்பினால் நீங்களும் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். அது டகோபாவாகவோ அல்லது வேறெந்தத் தூபிகளாகவோ அல்லாது நிறைவேற்றுச் சட்டவலுவுள்ள புதிய கொள்கையொன்றாக இருக்க வேண்டும். 58 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை மூட்டிய அதே தவறினை நீங்களும் செய்யவேண்டாம். பல்கலைக் கழகம் செல்ல நினைக்கும் தமிழ் இளைஞர்களை இனியும் தடுத்துவிட வேண்டாம். தமிழர்கள் தாம் இந்த நாட்டில் இரண்டாந்தரக் குடிமகனாக எண்ணிக்கொண்டிருக்க இடந்தர வேண்டாம். அவர்களது மத நம்பிக்கையினைப் புண்படுத்தாது அவர்களது மொழியினை மதித்து நடவுங்கள்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! தமிழர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்களுக்கு அவர்களது மொழி வழிபடும் தெய்வம். உலகில் அவ்வாறு தம் மொழியை வழிபடும் கலாசாரங்கள் மிகச் சிலவே. நீங்கள் ஒரு சட்டத்தரணியாகப் பயிற்றப்பட்டவர். உங்கள் ஆரம்பகாலத்தில் நீங்கள் ஒரு கடும் மனித உரிமைப் பாதுகாவலனாக கீர்த்தி பெற்றிருந்தீர்கள். இப்போது உங்களுக்குப் பேரும் புகழும் வந்துவிட்டது.
படைநடத்திச்சென்று சமராடி ரோமாபுரிக்குத் திரும்பிவரும் ஜூலிய சீசரைப் போல அதிகாரம் படைத்த மகாவீரனாகிவிட்டீர்கள். நீங்கள் கேட்பதை மறுப்பவர் இல்லை. சட்டக் கல்லூரியில் படித்தபோது நீங்களும் நானும் கற்றுக்கொண்ட சோல்பரி அரசியல் யாப்பின் நீக்கப்பட்ட சரத்துக்களை மீண்டும் அங்கீகரிக்குமாறு பாரளுமன்றத்திடம் கேளுங்கள். என் உதவி வேண்டுமானால் இங்கே குழுமியிருக்கும் அனேகரைப்போல் நானும் இலவசமாகவே அதனைச் செய்து தருவேன். தங்களுக்கென்றொரு இடமிருக்கின்றது என்று நீங்கள் உறுதிமொழி சொல்வீர்கள் என்று தமிழர்கள் ஏதிலிகளாக உங்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றனர். உங்களுக்கு அந்த இடம் இருக்கின்றது என்பதை அவர்களுக்கு நீங்கள் உறுதிசெய்யுங்கள். ஒரு பிரபாகரனைக் கொன்றீர்கள். அப்படி இன்னொருவன் வளர இடம்வைக்கக்கூடாது. வாளோடும் துப்பாக்கியோடும் இன்னொருவன் தோன்றுவதை முற்காத்துக் கொள்ள உங்களால் முடியாது. மனதாலும் மகத்தான அறிவாலும் மட்டுமே அதனைத் தடுக்க முடியும். புத்தரிடமிருந்து கற்றுக்கொண்ட கருணை, உண்மை, நீதி என்ற ஆயுதங்கள் மட்டுமே அதற்குத் தேவை. பகைமையைப் பகைமையால் ஒருபோதும் அழிக்கமுடியாது. அன்பினால் மட்டுமே பகமையை இல்லாதொழிக்கலாம் என்பது ஒரு புராதன நியதி.“ என்று தம்மபதத்தில் புத்தர் சொல்லியிருக்கின்றார்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நீங்கள் இந்த அழகிய மாநகரைவிட்டு இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்போது, நாளை தன் பாடசாலைக்குச் செல்லும் பத்துவயதுச் சிறுவனின் வெள்ளைச் சட்டையின் சிவப்புக்கறை ஜம்புப்பழத்தின் கொட்டையால் அன்றி வேறொன்றாலுமில்லை என்பதையும், காலையின் காக்கையொன்று அங்கே கொத்திக் கிழிக்கப்போவது பலாப்பழத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்பதையும் வேப்பமரத்தில் தொங்குவது நான் முகர்ந்த வேப்பம் பழங்களல்லாது வேறொன்றுமில்லை என்பதையும் எனக்குச் சத்தியம் செய்து தாருங்கள். மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!
எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!
நன்றி : இனி டென்மார்க்
மாயா
//எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்! – ஜார்ஜ் வில்லி //
பலரை சுவர்க்கத்துக்கு அனுப்பிய தேவதூதனிடம் இவர் ஆசையை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு போனால் அந்த பாக்கியம் இவருக்கு கிட்டலாம்.
//ஜார்ஜ் வில்லி இலங்கையில் வடமராச்சியில் பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவர்// என்பதால் ஏற்பட்ட வேதனையின் சுவரமாக இருந்ததோ?
சாந்தன்
இது இன்று..
….//எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்! – ஜார்ஜ் வில்லி //
பலரை சுவர்க்கத்துக்கு அனுப்பிய தேவதூதனிடம் இவர் ஆசையை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு போனால் அந்த பாக்கியம் இவருக்கு கிட்டலாம்…..//
ஆனால் அதே ஜோஜ் வில்லியின் கோரிக்கை பற்றி 8 நாட்களின் முன்னர் நீங்கள் வைத்த தலைகீழ் விளக்கம் கீழே. இப்போதாவது புரிந்ததையிட்டு மகிழ்ச்சியே!!
//…மாயா on October 19, 2010 2:30 pm
மேடையில் கதைப்பவர் என்ன தமிழீழம்தான் தீர்வென்றா சொல்லியிருக்கிறார். இல்லையே? உண்மையாக இனி செய்ய வேண்டியதை சொல்லியிருக்கிறார். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. முதுகெலும்புள்ள தமிழன். புலிகளைப் பொல பேச்சு வார்த்தைக்கு போய் பணம் வர பாதையை திற என்றோ இராணுவத்தை வெளியேற்று என்றோ சொல்லவில்லையே.
அன்று அமைதியாக இருந்தது போல மீண்டும் அமைதியை கொண்டு வாருங்கள் என்றுதானே சொல்கிறார். நீங்கள் போகும் போது நாடு பரடைசாக மாற வேண்டும் என்றுதானே சொல்கிறார். இதை உங்கள் பாதையில் விட்டு குதிரையை தட்டி விட்டு நிற்கிறீர்கள்.,,,……//
இரண்டும் ஒரே மாயாதான் என நினைக்கிறேன் இல்லையா?
ashroffali
இலங்கை என்றைக்கும் சொர்க்காபுரி தான். அதனை நரகாசுரர்கள் தான் ஆக்கிரமித்து நாசம் செய்கின்றார்கள். நரகாசுரன் சமன் ராஜபக்ஷ என்பது தான் இன்றைய யதார்த்தம். அந்த வகையில் கொஞ்சம் திருந்துங்கள் என்று ஜோர்ஜ் வில்லி அறிவுரை கூறியிருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் தீபாவளி வருகின்றது. நரகாசுரன் அழிந்த நாள் நெருங்கி வருகின்றது. ஆனால் இலங்கையின் நரகாசுரர்கள் அழியாது போனாலும் அதிகாரங்கள் பறிபோனால் கூடப் போதும். அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
thurai
சுவர்க்கம் என்பது, தனிமனிதனில், ஒரு குடும்பத்தில், ஒரு சமூகத்தில் அதன் பின்னரே தமிழினத்தில் காணக்கூடியது. மொழிக்கும், சிற்பிகள் செய்த சிலைகளிற்கும் (தெய்வங்கள்) கொடுக்கும் மரியாதையும், வணக்கங்கழும் தமிழனாகப் பிறந்தவர்களிர்கு கொடுக்கத்திர்யாதவர்கள் மிகுந்ததே ஈழ்த்தமிழினம் அதுவும் யாழ்மேலதிக்கம். இவர்கள் முதலில் தமிழனாகப் பிறந்தவர்களை மனிதனாக மதிக்கும் பண்பினைப் பழகியபின்பு சொர்க்கம் பற்ரி பேசுவது யாவருக்கும் நல்லது.
எல்லாளன் போரில் இறந்தான். தன் உயிரை தமிழர்களைக் காப்பற்கு அர்ப்பணித்தான். புலியின் தலைவன் என்ன செய்தான்? புலி இயக்கத்தைக் காக்கவும், தன் உயிரைக்காக்கவும் எத்தனை தமிழ் உயிர்களைப் பலிகொடுத்தான். இவற்ரையெல்லாம் தமிழீழ விடுதலையென்னும் போர்வையால் மூடிமறைத்தான்.
புலிகளை அழித்தது பூமியில் இலங்கை மண்ணையும், தமிழர்களையும் சூறையாடி, அழிதுக்கொண்டிருந்த ஓர் பலத்த சக்தியை இல்லாமல் ஆக்கியது போலவேயாகும். இனிமேல் சிங்கள தமிழ் மக்கள் தாங்கள் விட்ட தவ்றுகளை உணர்ந்து செயற்படுவ்தன் மூலமே சொர்க்கமும் நரகமும் இலங்கையில் தோன்றும். இராச்பக்சாவினால் அல்ல.– துரை
மாயா
சாந்தன் > அதே மாயாதான். அன்று என் கையிலிருந்த கத்தியால் குத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இன்று அதே கத்தி ஒரு சும்மா ஒரு மிரட்டலுக்கு தேவைப்பட்டது. முன்னது சீரியசானது. பின்னது சிலேடையானது. இவை நடக்கும் இடம் கருத்துகளைப் பொறுத்தது. உங்களுக்கு இப்போது சந்தோசம்தானே?
முன்னர் எனக்கு பேசியவரது பின்னணி தெரியாது. இப்போது தெரியும். வடமாரச்சியைச் சேர்ந்து பலர் முன்னர் நாங்கள் வடமாராச்சி என்பார்கள். அதாவது தாங்களும் பிரபாகரன் என்பது போல. இப்போது அதை நிறுத்தி விட்டார்கள். முன்னர் அண்ணனுக்கு எல்லாம் தெரியும் என்றார்கள். இப்போது அண்ணனை கவிழ்த்தவர்கள் புலம் பெயர் தமிழர்கள் என்கிறார்கள். இதுவும் நீங்கள் குறிப்பிடுவது போல ஒரு வகைதான். உங்களிடமும் சற்று மாறுதலை காண முடிகிறது. தொடருங்கள்………
Kumar
ஒலிப்பதிவை யூடியூபில் பார்த்துக் கேட்க முடிந்தது. அதை தமிழில் அழகாகத் தந்த சுசீந்திரனுக்கும்> இனி டென்மார்க் இணையத்திற்கும் அதை மீள்பிரசுரம் செய்தள்ள தேசம் இணையத்துக்கும் எனது நன்றிகள். மகிந்தவின் முன்னிலையில் அழுத்தம் திருத்தமாக வில்லி ஆற்றிய உரை ஒவ்வொரு தமிழ்மகனினதும் ஆதங்கமாகும்.
kumaran
நான் சொல்ல வந்தது……..
’’எனக்கு வால்மட்டுந்தான் தெரிகிறது. அது நரி’’
’’இல்லசார் முன்னால வந்து பாருங்க அது நரி இல்லை’’.
’’எனக்குத்தெரியிறது அவ்வளவுதான்.அதை வச்சுத்தான் சொல்லமுடியும்’’
”நீங்க முன்னால வந்து பாருங்க அப்ப தெரியும்’’
’’என்னால முன்னால வந்து பார்க்கமுடியாது அப்படியொரு தேவையுமில்லை’’
‘ அப்ப அதை நரி என்று சொல்லாதீங்க’’
’அதச்சொல்லுறதுக்கு நீ யார். என் கருத்துரிமை அப்படித்தான் சொல்லுவேன் எனக்கு அப்படித்தான் தெரியுது விரும்பினா அது நரி இல்லையென்று அது நிரூபிக்கட்டும்’’
‘ நாய் சார் அது ஏன் நரியில்லை என்று நிரூபிக்கணும் அது தன்பாட்டுக்கு கிடக்குது சார்’
‘என்னமோ… என்னைப்பொறுத்தவரையிலை அது நரி’’
‘முழுசாப்பாக்காம வாலை மட்டும் பாத்து ஏன் சார் இப்படிச்சொல்லுறீங்க ‘’
‘எனக்கு முழுசாப்பாக்கவேண்டிய அவசியமில்லை’
’அவசியமில்லாத விஷயத்திலை போய் ஏன் கருத்துச்சொல்லுறீங்க’
‘ ‘கருத்துச்சொல்லுறதை அவசியமில்லை என்கிறீங்களா’’
‘ ‘நான் அப்படிச்சொல்லவில்லையே’’.
‘ ‘அடப்பார்றா இவனை என்னை கருத்துச்சொல்லக்கூடாதாம்’’
‘ ‘நான் அப்படிச்சொல்லவில்லை ….ஒரு அவசியமில்லாதவிஷயத்தை முழுமையா தெரியாம…. ‘’
‘’அட ,இங்க பார்றா நான் இன்ன விஷயத்தில தான் கருத்துச்சொல்லலாம் சொல்லக்கூடாதென்று கூடக்கட்டுப்பாடு ..போடுறாங்கள்’’
‘நான் அப்படிச்சொல்லவில்லை’
‘அட எப்படி கருத்தை திணிக்கிறாங்கள்… பாத்தீங்களா?இது பாஸிஸம் பாஸிஸம்!’
‘அதுதானே’ ‘அதுதானே’ ‘அதுதானே’
பலகுரல்கள் பெருத்து ஒலிக்கத்தொடங்கின.
‘நான் அதைச்சொல்லவில்லை’
என்ற குரல் சிறுத்து அடங்கியது
palli
இவரது கருத்தை எத்தனையோ இலங்கை தமிழர் இலங்கையில் இருந்தே சொல்லி விட்டனர்; அதுக்கு முகம் கொடுக்காத அல்லது செவிசாய்க்காத சிங்கமா இந்த அமெரிக்க தமிழன் சொல்லுவதை கேக்க போகிறார், இது அவரது அரசியலுக்கு ஒரு அத்திவாரமாக இருக்கலாம்; அல்லது சுய விளம்பரமாக இருக்கலாம்; ஏன் உருத்திரகுமாரின் வெள்ளோட்டமாக கூட இருக்கலாம்;(உருத்திரகுமாரும் (புலி) கே பி யும்(சிங்கம்) இன்றுவரை நட்பாகவும் தொடர்புகளுடனும் இருப்பதாக இருவரது ரசிகர்களும் சொல்லுகிறார்கள். ஆக கூட்டி பெருக்கி பார்த்தால் இவரது ஆதங்கம் புஸ்வானம்தான்; பார்த்திபன் சுவிஸ் வானொலியில் முன்பு பேசியதை அவரது நினைவாக (23.10.2010 என நினைக்கிறேன்) போட்டார்கள் அதில் இவர் பேசியதை அவர் தனது கருத்தாக வைத்துள்ளார்; அதாவது மகிந்தா தமிழரை ஏமாற்றும் பட்சத்தில் தமிழர் முகமூடி கொள்ளையரிடம் சிக்க நேரிடலாம்; அதுவே மகிந்தாவின் அரசுக்கு ஒரு முள்ளாக அமையலாம் என்பது போல் அவரது அமைதியான பேச்சில் சொல்லியுள்ளார்; ஆகவே அதிகார நிலையில் உள்ள நீங்கள் தமிழ் சமூகத்துக்கு என்ன செய்வதாய் உத்தேசம்; துட்டகைமுனுவும் எல்லாளனும் மனிதர்கள் ஆனால் இப்போது சிங்கம்; புலி ;நரி ;கரடி குதிரையென ஒரு விலங்கு குகைக்குள் மக்கள் திண்டாடும்போது???
நந்தா
இப்பொழுது ஜார்ஜ் வில்லி ஒபாமாவுக்கு நெருங்கியவர். அவர் பிரபாகரனையும் எல்லாளனையும் ஒரே தராசில் போட முயற்சிக்கிறாரா என்பது தெரியவில்லை.
ஆயினும் அவர் ஒபாமாவுக்கு அமெரிக்காவின் “சண்டித்தனக்களை”நிறுத்தும்படியும், மூன்றாம் உலகநாடுகளில் ரீகன் காலத்து பயங்கரவாதங்களுக்கு முட்டுக் கொடுக்கும் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கைகளை நிறுத்தும்படியும் ஆலோசனை சொன்னால் நன்றாக இருந்திருக்கும்.
புலிகள் அமெரிக்க கப்பல் வரும் என்று அண்ணாந்து நின்றது எப்படி என்றும் ஏன் என்றும் அந்தப் அவர் திருவாய் மலராது விட்டதும், ராஜபக்ஷவுக்கு “அள்ளி” வீசியுள்ள அறிவுரைகளுக்கும் சம்பந்தம் இல்லையென்று சொல்லுகிறாரா அல்லது மீண்டும் புலிகளை உயிர்பிக்க அமெரிக்கா தயார் என்றும் சொல்லுகிறாரா?
மாயா
ashroffali, உங்களிடம் ஒருவரது தொடர்பு தேவை என கேட்டேன். அதை நீங்கள் தரவேயில்லை. அப்போது நீங்கள் அங்கே இருந்திர்கள். இப்போது நீங்கள் அங்கு இல்லை. எனக்கு அந்த தொடர்பு கிடைத்துவிட்டது. நல்ல மனிதர்கள் நரகாசுரர்கள் ஆவதற்கு உங்களைப் போன்றவர்களும் காரணம் என்பதை மறக்க வேண்டாம். வேதனையில் தேசத்துக்கு வந்த பொது அதை எழுதலாகாது என எண்ணினேன். இப்போது எழுதலாம் போல இருந்தது. பின்னைய காலங்களை மீட்டிப் பார்ப்பது அனைவருக்கும் உகந்தது. இது உங்களுக்கும் பொருந்தும்.
//ashroffali on October 28, 2010 8:03 am
இலங்கை என்றைக்கும் சொர்க்காபுரி தான். அதனை நரகாசுரர்கள் தான் ஆக்கிரமித்து நாசம் செய்கின்றார்கள். நரகாசுரன் சமன் ராஜபக்ஷ என்பது தான் இன்றைய யதார்த்தம். அந்த வகையில் கொஞ்சம் திருந்துங்கள் என்று ஜோர்ஜ் வில்லி அறிவுரை கூறியிருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் தீபாவளி வருகின்றது. நரகாசுரன் அழிந்த நாள் நெருங்கி வருகின்றது. ஆனால் இலங்கையின் நரகாசுரர்கள் அழியாது போனாலும் அதிகாரங்கள் பறிபோனால் கூடப் போதும். அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.//
ashroffali
மாயா நான் மறந்து விட்டேன். யாருடைய தொடர்பை நீங்கள் கேட்டிருந்தீர்கள்..? தேசம் நெற் வாயிலாகவா? அல்லது எனது தனிப்பட்ட ஈமெயில் மூலமாகவா?
அடுத்து நல்ல மனிதர்கள் நரகாசுரரர் ஆவதற்கு நான் ஒரு போதும் காரணமாக இருந்திருக்கவில்லை. என்னால் முடிந்த மட்டிலும் நான் இருந்த இடத்தில் இருந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்தேன். நரகாசுரர்களை நல்லவர்களாக்க முயற்சி செய்தேன். நான் என்னென்ன செய்திருக்கின்றேன் என்பது குறித்து பட்டியலிடும் சுய விளம்பர மோகத்தில் நான் இல்லை.
யுத்தத்தின் பின் நிச்சயமாக அரசியல் தீர்வு என்பதை நான் முற்றுமுழுதாக நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கையில் தான் ஒட்டியிருந்தேன். அதற்கான அடித்தளததைச் செப்பனிடுவதில் மறைமுகமாக நிறைய பங்காற்றியிருக்கின்றேன். ஆனால் அடித்தளத்தையே இடிக்க முற்பட்டபோது தான் இனியும் அங்கிருப்பது நேர்மை அல்ல என்று வெளியேறி வந்திருக்கின்றேன்.
எனவே நீங்கள் எனது பணிகளைப் பற்றி நன்றாக ஒருமுறை விசாரித்துப் பார்த்துவிட்டு குற்றங்களை முன் வைத்தால் நான் பதிலளிப்பேன்.
எனது தவறுகள் எனக்கும் தெரியும். அது குறித்த சுய விமர்சனத்தில் தான் இப்போதைக்கு இருக்கின்றேன். ஆனால் நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று நம்பிக்கை தான் அதற்கான காரணமாக இருந்தது.
மனச்சாட்சி இல்லாதவனாக இருந்தால் இப்போதும் அங்கு தான் ஒட்டிக் கொண்டிருந்திருப்பேன். நடக்கும் அநியாயங்களை கண்டும் காணாதவன் போலிருந்திருப்பேன். எனது கடின உழைப்பில் கட்டியெழுப்பப்பட்ட வசதியான வாழ்க்கையை ஒரு நொடியில் இழந்து அதிகாரங்களையெல்லாம் உதறியெறிந்து விட்டு வந்து இப்படி அல்லாடிக் கொண்டிருக்க மாட்டேன்.
niroshan
அஸ்ரப் அலி நீங்கள் முள்ளிவாய்க்காலில் இறுதிப்போர்க்காலத்தில் அங்கு அரசுடன் வேலை செய்தீர்கள். பக்கத்தில் இருந்தீர்கள். உங்களுக்கு அரசு செய்த பிழைகள் எல்லாம் நிச்சயம் தெரிந்திருக்கும். அவற்றை இங்கு பின்னூட்டமாகப் பதியலாமே.?? கடைசி நேரம் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் பற்றியும் குறிப்பிடத் தவறாதீர்கள்.
புலி அழிப்புக் காலத்தில் நடந்ததை மூடி மறைத்துவிட்டு (பாதுகாப்பு காரணமாக வெளிவிடமுடியாதுள்ளதென கூற வேண்டாம்.) இப்போது அரச எதிர்ப்பு கருத்தெழுதுவது தமிழ்பேசும் தமிழர் காதில் நீங்கள் வைக்கும் பூவரசம்பூ
மாயா
//ashroffali on October 28, 2010 12:25 pm
மாயா நான் மறந்து விட்டேன். யாருடைய தொடர்பை நீங்கள் கேட்டிருந்தீர்கள்..? தேசம் நெற் வாயிலாகவா? அல்லது எனது தனிப்பட்ட ஈமெயில் மூலமாகவா?//
தனிப்பட்ட மின் அஞ்சலுக்கு. எனக்கு அதுவரை எல்லோருக்கும் அனுப்புவது போல தகவல்களை வழங்கி வந்தீர்கள். ஒருமுறை எனக்கு ஒரு முக்கியமானவரது மின் அஞ்சல் தேவைப்பட்டது. அவரது மின்அஞ்சல் முகவரியை தர முடியுமா எனக் கேட்டிருந்தேன். அதன் பின்னர் நீங்கள் என்னோடு தொடர்பு கொள்ளவேயில்லை.இது யுத்தம் நடைபெறும் காலத்தில நடந்தது. அதே நபர் ஐரோப்பாவுக்கு வந்த போது நேரடியாக சந்தித்தேன். அந்தவகையில் உங்களது செயல் எனக்கு நன்மை செய்ததாகவே கருதுகிறேன். நேரடியாக கலந்துரையாட சந்தர்ப்பம் கிட்டியது. நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நான் கேட்கவில்லை. அது எனக்கு தேவையுமில்லை.
BC
ஜார்ஜ் வில்லி ஒரு தந்திரமான புலி. மகிந்தாவை பிடித்து தனது தலைவருக்கு சிலை வைத்தால் தமிழர்களை ஆண்ட அரசன் பிரபாகரன் என்று காலம் முழுவதும் சொல்லி கொள்ள வடமராச்சியை சேர்ந்தவர் விரும்புகிறார். மகஇகவும் தமிழ்நாட்டில் உள்ள புலி ஆதரவாளர்களை தன் பக்கம் எடுக்க வடமராச்சியை சேர்ந்த ஒரு தீவிர புலி ஆதரவாளரை கொண்டு தான் கட்டுரை எழுதியது.
குமார்,பிரபாகரனுக்கு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்பது உங்கள் ஆதங்கம்.அதை நீங்கள் ஒவ்வொரு தமிழ்மகனினதும் ஆதங்கமாக்க கூடாது.
மாயா
BC, தமிழ் செல்வனுக்கு பாரீசில் சிலை வைக்கப் போகிறார்கள். ஆனால் இவர்களால் பிரபாகரனுக்கு சிலை வைக்க முடியாது. அப்படி சிலை வைத்தால் கேபீயை விட மோசமான நிலைதான் அவர்கள் தள்ளப்படுவார்கள். ஜார்ஜ் வில்லி விரும்பினால் அவரது மாநிலத்தில் பிரபாகரனின் சிலையை வைக்கட்டும். சிலை வேண்டாம் பிரபாகரன் படத்தை வைத்து மாலைபோடட்டும் பார்க்கலாம்.
மாயா
இவர் என்னவோ இலங்கையை சுவர்க்கமாக்குங்கள் என்கிறார். அங்கு 1958ல் இருந்து பிரச்சனை. சரிதானப்பா; புலத்தில் அரசியல் தொடங்கி எவ்வளவு காலம்? 1983க்கு பிறகுதானே? இந்த தமிழர்களை இவரால் ஒற்றுமைப்படுத்த முடியுமா? உதாரணத்துக்கு இந்த செய்தி:-
பிரான்சில் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை – பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்களவைகளும் இணைந்து பிரான்சில் நிகழ்வொன்றை நடத்துவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக என்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவுமில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலுகத்திடம் அனுமதி பெறாத நிகழ்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கு பற்றும் நிகழ்வுகளாக நாம் பார்க்கமுடியாது. இதனால் நடைபெறுவதாகக் கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை.
இங்கு ஒரு விடயத்தை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றக்கூடும். இந் நிகழ்வுகளையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுகளாக நாம் கொள்ள முடியாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் அமைச்சரவையின் ஊடாகவே தீர்மானிக்கப்படும். நாம் இந்தவார இறுதிக்குள் அமைச்சரவையை அறிவிக்கவுள்ளோம். அதுவரையிலான இடைக்காலத்துக்கு பிரதமர் அலுவலகம்தான் இவ்விடயங்களைக் கவனித்து வருகிறது.
எமது அமைச்சரவை இயங்கத் தொடங்கியதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருபினர்களுக்காக செயற்பாட்டு நடைமுறையொன்றினை (code of conduct ) உருவாக்கவுள்ளோம். மக்களவை உட்பட ஏனைய பொது அமைப்புக்களோடு இணைந்து செயற்படும் விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் ஆராய்ந்து முடிவு செய்யவுள்ளோம் என பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Secretariat TGTE
palli
//BC, தமிழ் செல்வனுக்கு பாரீசில் சிலை வைக்கப் போகிறார்கள்//
இது என்ன புதுகதை; யார் வைக்க போகிறார்கள்? பிரான்ஸ்சா அல்லது அங்கு வாழும் புலிகளா?? அதுசரி அங்குதானே வருட கணக்கில் புலிகள் உள்ளே இருந்தனர்; பாலசந்திரன் என்பவர் புலிக்கு சேர்த்த பணம் யாவையும் கொண்டு சென்று விட்டதாக லங்காசிறியில் படித்தேன், நாடு கடந்த ஈழ கூட்டத்தை பாரிஸ்சில் இருந்து வரும் ஒரு தொல்லை பேசியே கெடுப்பதாக அதன் நிர்வாகிகள் சொல்லும் போது இந்த சிலையை யார்தான் எதுக்காக பாரிஸ்சில் திறக்கினம்; சிலவேளை சிலை திறந்தால் வரிசலுகை உண்டு என அங்கு சொல்லிவிட்டார்களா??
எனது ஆதங்கம் இவர் எதை சாதித்தார் என இவருக்கு சிலை? அப்படியானால் தியாகி திலீபனுக்கு ஏன் அப்படி ஒரு சிலை திறக்க யாரும் முன்வரவில்லை; இந்த சிலை திறக்கும் பணத்தில் நாலு கால்இல்லாத உறவுகளுக்கு கொடுத்து உதவினால் அவர் பெயரை சொல்லி அவர்கள் அவர் பெயரை சொல்லி நடப்பார்களே; சிலை வடிவில் யாரோ ஒருவர் தான் வாழ வீடுகட்ட முயற்ச்சிப்பதாகவே எனக்கு படுகிறது, யாராவது பாரிஸ் நண்பர்களே இதுக்கான விளக்கத்தை தரவேண்டும்;
palli
//மகிந்தவின் முன்னிலையில் அழுத்தம் திருத்தமாக வில்லி ஆற்றிய உரை ஒவ்வொரு தமிழ்மகனினதும் ஆதங்கமாகும்.//
இதை இப்படி சொல்லலாம் ஒவ்வொரு புலியின் எதிர்பார்ப்பு என,
மாயா
//மகிந்தவின் முன்னிலையில் அழுத்தம் திருத்தமாக வில்லி ஆற்றிய உரை ஒவ்வொரு தமிழ்மகனினதும் ஆதங்கமாகும்.//
//இதை இப்படி சொல்லலாம் ஒவ்வொரு புலியின் எதிர்பார்ப்பு என //
போங்கப்பா பகிடி விடாம இயாராவது ஒரு புலி பகிரங்கமாக சிலை வேண்டாம் பிரபாகரன் படத்தை வைத்து மாலை போடட்டும் பார்க்கலாம்.
மகிந்தவும் பிரபாகரனுக்கு சிலை வைக்க பயப்படுறாறாம். அவரும் துரோகியாக பயப்படுறார். மகிந்தவின் இன்றைய ரோல் மொடலே பிரபாகரன்தானே?
ashroffali
மாயா உங்கள் நிஜப் பெயர் என்னவென்று தெரியாமல் விழிக்கின்றேன். தயவு செய்து மீண்டுமொரு முறை எனது தனிப்பட்ட ஈமெயிலுக்கு மெயில் ஒன்றை அனுப்ப முடியுமா?
இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்ற கால கட்டங்களில் பெரும்பாலும் நான் யுத்தகளத்தின் பின் முனையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதன் காரணமாக எனது குடும்ப தேவைகளை கூட பூரணமாக நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது.
எனது மகளின் பாடசாலை வருடாந்தப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு தகப்பன் என்ற வகையில் மூன்று மாதங்கள் கழித்துத் தான் கையொப்பமிட்டுக் கொடுத்திருந்தேன். இது தான் எனது அன்றைய நிலை. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். தவறு ஏற்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளங்கள்.
thurai
//பிரான்சில் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை – பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன்//மாயா
இதிலும் பரிதாபம் என்னவெனில் ஜிரிவியில் இந்தச்செய்தியைச் சொல்லும் போது நாடுகடந்த தமிழீழ இணைப்பாளர் உருத்திரக்குமார் என்றே அறிமுகம் செய்தார்கள். அப்போ பிரதமர் பதவியை யார் கொடுத்தார்கள்? யார் பறித்தார்கள் ஜிரிவி விளக்கம் கொடுக்குமா?
//BC, தமிழ் செல்வனுக்கு பாரீசில் சிலை வைக்கப் போகிறார்கள். ஆனால் இவர்களால் //
உலகமே பயங்கரவாதிகள் என தீர்மானித்துள்ள ஒரு அமைப்பினைச் சேர்ந்தவரிற்கு, அந்த அமைப்பின் தடையை நீக்க முடியாதவர்கள் தடைசெய்யப்பட்ட நாட்டிலேயே சிலை வைப்பதோ, வைப்பதாக கூறுவதோ தாங்கள் பயங்கரவாதக் கூட்டம் தான் என்பதை சொல்லாம்ல் சொல்கின்றார்கள்.
//ஜார்ஜ் வில்லி ஒரு தந்திரமான புலி. மகிந்தாவை பிடித்து தனது தலைவருக்கு சிலை வைத்தால் தமிழர்களை ஆண்ட அரசன் பிரபாகரன் என்று காலம் முழுவதும் சொல்லி கொள்ள வடமராச்சியை சேர்ந்தவர் விரும்புகிறார்//பிசி
உயிருடன் இருக்கும்போது பிரபாகரனால் சிங்களவர்களிற்கும், தமிழர்களிர்கும் உயிரிழப்புகள் நேர்ந்தன. இப்போ சிஙளவ்ர்களிற்கு புலிகளால் அழிவில்லை. பிரபாகரனின் சிலையை வைப்பதன் மூலம் தமிழர்களே தமக்குள் அடிபட்டு அழிந்துபோவார்கள். தமிழனம் அழிந்தாலும் தங்கள் சுய புகழ் உலக்மெங்கும்பாடும் சமூகத்தினர்களிற்கு சிலை அவசியம் தேவைதான்.– துரை
மாயா
ashroffali, ஒருநாள் காலம் இடம் தந்தால் சந்திப்போம். அதுவரை நான் மாயமாக இருக்கவே ஆசைப்படுகிறேன். ஒரு சின்ன பிடி தருகிறேன். நான் (Mülhouse) மூல்கவுசென்னுமிடத்தில் வாழ்வதாக அதில் குறிப்பிட்டு : என் முகவரியையும் எழுதியிருந்தேன். இது (சுவிசுக்கும் பிரான்சுக்கும் இடையில் உள்ள ஒரு பகுதி)
// எனது மகளின் பாடசாலை வருடாந்தப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு தகப்பன் என்ற வகையில் மூன்று மாதங்கள் கழித்துத் தான் கையொப்பமிட்டுக் கொடுத்திருந்தேன். //
பெற்றோரில் யாராவது கையெழுத்திடலாமே? உங்கள் மனைவி கையெழுத்து போட மாட்டார்களா? சாதாரணமாக அதுதானே நடப்பது. தந்தைதான் கையெழுத்திட வேண்டுமா? அல்லது அப்படி ஒரு நிலையை உருவாக்கி வைத்துள்ளீர்களா? வீட்டுக்குள் உள்ளவர்களுக்கே சுதந்திரமாக நடந்து கொள்ள இடமளிக்காத நீங்கள் எப்படி : நாட்டு மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க பாடுபடுவீர்கள்?
palli
//அஷ்ரொவ் அலி,//
நேரம் கிடைக்கும்போது கடந்த காலத்தில் உங்களுடன் பல்லியின் வாதத்தை பாருங்கள். அன்று நாம் சொன்னதை இன்று தாங்கள் அனுபவத்துடன் சொல்லுகிறீர்கள். உங்கள் நிலைக்கு எம்மால் ஏதும் உதவ முடியுமா? முடியுமாயின் சொல்லவும்; உதவ முயற்சிக்கிறோம்;
நட்புடன் பல்லி,
ashroffali
மாயா நீங்கள் குறிப்பிடும் அந்த விபரங்களுடன் எனக்கு எந்த மெயிலும் வந்திருக்கவில்லை. உங்கள் மெயில் தவறாக வேறு ஈமெயிலுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்.
அடுத்தது மாயா.. என்னுடைய மகள் படித்த பாடசாலையில் ஆண்டிறுதிப் பெறுபேறுகளுக்கு பெற்றோர் இருவருமே தனித்தனியாக கையொப்பமிட வேண்டும் என்று கட்டுப்பாடு உண்டு. அதுதான். மற்றபடி நான் ஆணாதிக்க வாதியல்ல.
என் மனைவிக்கு சகல சுதந்திரங்களும் உண்டு. நான் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தபோதே அவர் ஒரு சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றியிருக்கின்றார். அதற்கு மேல் அப்போதே தமிழ் மக்களின் துயரங்கள் தொடர்பான தகவல்களை உலகுக்குக் கொண்டு வந்ததில் அவரது பங்களிப்பு எத்தகையது என்று ஜேடிஎஸ் முக்கியஸ்தர்களுக்கும் மற்றும் அல்ஜெசிரா ஊடக நிறுவனத்தினருக்கும் தெரியும்.
ashroffali
நட்புடன் பல்லிக்கு…
உங்கள் ஆதரவான பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. எனக்கும் அப்படியான ஆதரவு தேவைப்படும் நிலையில் தான் நானிருக்கின்றேன். நன்றி பல்லி..
பல்லி… நாம் கடந்த காலத்தில் பல தடவைகள் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளோம். அதெல்லாம் நமது மக்களின் வாழ்க்கை நலமாக அமைய வேண்டும் என்ற நன்னோக்கில் தான். அதே போல அன்றைக்கு நான் சொன்னது போல தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்க அரசாங்கம் முற்படும் பட்சத்தில் நியாயமான அதிகாரப் பகிர்வு மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ள முன்வராத பட்சத்தில் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்க மாட்டேன் என்று அன்று கூறியதற்கொப்பவே இன்றைக்கு நான் வெளியேறி வந்துள்ளேன்.
அன்றைய காலகட்டத்தில் ரணிலை விட மஹிந்த மேலானவர் என்ற காரணத்தால் தான் அவருடன் இருந்தேன். இப்போதைய நிலையில் மஹிந்தவும் ரணிலும் பொன்சேக்காவும் ஒன்றுதான் என்று கண்ட பின் அனைத்தையும் துறந்து வெளியேறி வந்துள்ளேன். எனது இழப்புக்கள் குறித்து வருத்தப்படவில்லை. தமிழ் மக்கள் அனுபவித்து வரும் இழப்புகளைப் பொறுத்த மட்டில் நான் அடைந்திருக்கும் இழப்பு வெகு சொற்பமே.
சாந்தன்
//….தொடர்ந்தும் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்க மாட்டேன் என்று அன்று கூறியதற்கொப்பவே இன்றைக்கு நான் வெளியேறி வந்துள்ளேன்…..//
நீங்கள் சிம்பிளாக வெளியே வந்து விட்டீர்கள். ஆனால் உங்கள் மனிதநேய மக்கள் நேய நிலைப்பாட்டால் பரலோகம் போன குடும்பங்களுக்கு என்ன பதில்?
இது இந்தியன் ஆமியின் செயலுக்கு இந்தியா சொன்ன விளக்கம் போல் இருக்கிறது.
It was a diplomatic mistake எனச் சொன்னார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கோ அது ஒரு Disaster.
நீங்கள் ஒட்டிக்கொண்டிருந்தபோது மகிந்தாவுக்கு நல்லதாக இருந்தது ஆனால் ஓடிவந்ததால் அவருக்கு இழப்பேதும் இல்லை. நீங்களாவது இந்தியா வந்துவிட்டீர்கள். ஆனால் முள்ளிவாய்க்கால் மக்களின் நிலை? அல்லாவுக்கே வெளிச்சம்!
BC
மாயா தந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திகளை உத்தியோகபூர்வ நிகழ்வுகள், அமைச்சரவை ,அமைச்சரவை ஆராய்வு, ஒரு பிரதமர் அவருக்கு ஒரு பிரதமர் அலுவலகம் என்று எல்லாம் வாசிக்கும் போது வடிவேலு, கவுண்டாமணி, செந்தில் எல்லாம் மூலைக்குள் போய்விடுகிறார்கள்.
thurai
//ஆனால் முள்ளிவாய்க்கால் மக்களின் நிலை? அல்லாவுக்கே வெளிச்சம்!//சாந்தன்
முள்ளிவாய்க்காலில் தமிழரை புலிகள் இராணுவத்திற்குப் பலி கொடுத்தார்கள். அவற்ரையெல்லாம் உலகிற்குக் காட்டி புலிகளை காப்பாற்ர முயன்றார்கள். இவையெல்லாம் சாதாரண மக்களிற்கே வெளிச்சம். இதற்கேன் அல்லாவையும், ஜேசுவையும், முருகனையும்.– துரை
mohamed nisthar
எனது நண்பர் ஒருவர் கனடாவில் இருந்து யுடியூப் பதிவொன்றை அனுப்பி இதைப் பாரும் நல்லாய் கொடுத்துள்ளார். நீர் என்ன நினைக்கின்றிர் என்ற கேள்வியும் முன்வைத்தார். நான் சென்னேன் உணர்ச்சிவசமான பேச்சு, ஆனால் காரணகாரிய அடிப்படையிலோ அல்லது தத்துவார்த்த ரீதியிலோ அமையாத பேச்சு என்றேன். அவருக்கு பிடிக்கவில்லை. ஜோர்ஜ் வில்லியின் உரையை கேட்டபோது என் நினைவுக்கு வந்த விடயம், லண்டன் புறநகர் பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு முன் வெள்ளிக்கிழமை மதிய தொழுகை நேரத்தில் அல்பேனிய/கொஸோவோ நாட்டு இளம் பெண்கள் கையில் பால்குடி பிள்ளைகளுடன் நின்று “அஸ்ஸலாமு அலைக்கும், பிறதர்” என்று பிச்சைக்காக கை நீட்டுவர். யாரும் பிச்சை போடுவதில்லை. பள்ளிவாயினுள் பிரச்சாரம் நடக்கமுன், இமாம்(குருக்கள்) அந்த கையேந்துவோர் தொடர்பாக உங்கள் கருணை இன்னும் பத்து பிச்சைக்காரர்களை இந்த வீதிகளிலே உருவாக்கமல் இருக்கட்டும் என்பார்.
இந்த வழக்கறிஞர் இலங்கை சிங்களவருக்கு மட்டும் உரியதென்று எப்படி தீர்மானித்தார். நமது நாட்டில் நாம் வாழ ஏன் யாரிடமும் கையேந்த வேண்டும். இலங்கையன் என்ற உணர்வுடன் அமெரிக்கக மாதிரியில், எல்லாடரும் சேர்ந்து வாழ, முன்னேறிச் செல்ல ஆலோசனை கூறியிருக்கலாமே.
T Sothilingam
விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவைகள். இதனால் மட்டுமே பல பிரச்சினைகளையும் தவறுகளையும் திருத்திக்கொள்வதும் அந்த சமூகப்பிரச்சனையில் அல்லது அரசியல்பிரச்சினையில் மேல் நோக்கி பயணிக்கும் நடைமுறையாகவும் இருக்க வேண்டும். தனிய ஆளை ஆள் குற்றம் காணுவதற்காக முன்வைப்பதல்ல. இதைவிட இந்த விமர்சனங்களை முன்வைக்கும்போது சுய விமர்சனமே சிறந்தது என்பது எனது கருத்தாகும். அதைவிட நீங்கள் ஆரம்பிக்கும் விமர்சனங்களுக்கு உங்கள் முகம் தெரியாதவர்களும் அவர்களின் அரசியல் சமூக நிலைப்பாடுகள் தெரியாமலுமே அவர்கள் உங்கள் விமர்சனங்களுக்கு பதிலையும் கருத்தையும் முன்வைப்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
பொது சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் எப்போதும் விமர்சனத்தை எதிர்பார்த்தும் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் பக்குவமும் சுய விமர்சனத்திற்கும் தயாராகவும் இருக்க வேண்டும்
Jeyarajah
பல வருடங்களுக்குமுன் மரம் பழுத்தால் வெளவால் தானாய் வருமென்று அரசியல் கூட்டங்களில் முழங்கி கேள்விப்பட்டதுண்டு. இப்போ இத்தனை வருடத்திற்குப் பின்பும் உயர்ந்த பதவியில் இருந்து கொண்டும் அதே பிலாப்பழம் காகம் கொத்தியது நறுமணம் வீசியது ஞாபகம் வருது ஞாபகம் வருது பாணியில் இவர்களும் சொன்னால் மொத்தத்தில் பழம். பறவைகள் கதைகள்தான் ஞாபகம் வருகிறது.
சாந்தன்
//…நான் சென்னேன் உணர்ச்சிவசமான பேச்சு, ஆனால் காரணகாரிய அடிப்படையிலோ அல்லது தத்துவார்த்த ரீதியிலோ அமையாத பேச்சு என்றேன். …// நிஸ்தார்,
நீங்கள் எதை வைத்து அப்பேச்சு உணர்ச்சி வசமான பேச்சு என்கிறீர்கள். எவ்வாறான தத்துவார்த்த/காரன காரியங்களை இப்பேச்சுக்கொண்டிருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
//…அந்த கையேந்துவோர் தொடர்பாக உங்கள் கருணை இன்னும் பத்து பிச்சைக்காரர்களை இந்த வீதிகளிலே உருவாக்கமல் இருக்கட்டும் என்பார்….//
எனக்கு இந்த இமாம்களின் பேச்சு சிறிலங்கா அமைச்சர்கள்/அரச அதிபர்கள் பொங்கல் தீபாவளி கிறிஸ்மஸ் போன்றவற்ருக்கு தினகரனில் கொடுக்கும் அறிக்கைகளை நினைவுக்குக் கொண்டுவரும். ஒவ்வொருவரிடமும் திகதி மாறுமே அன்றி பொருள் மாறாது. அவர்களின் செயற்பாடுகளும் மாறாது.
//….இந்த வழக்கறிஞர் இலங்கை சிங்களவருக்கு மட்டும் உரியதென்று எப்படி தீர்மானித்தார்….//
அந்தளவுக்கு ஸ்ரீலங்கா அரசுகளின் நடத்தை அமைந்திருக்கிறது!
//….நமது நாட்டில் நாம் வாழ ஏன் யாரிடமும் கையேந்த வேண்டும்….///
இதை நீங்கள் ஸ்ரீலங்கா அரசிடம் அல்லவா கேட்கவேண்டும்?
//… இலங்கையன் என்ற உணர்வுடன் அமெரிக்கக மாதிரியில், எல்லாடரும் சேர்ந்து வாழ, முன்னேறிச் செல்ல ஆலோசனை கூறியிருக்கலாமே….//
அவர் கடைசியாகச் சொன்ன வசனம் அதேதான். தான் ஆலோசனையை இலவசமாக வழங்கத்தயாராய் இருப்பதாகச் சொன்னாரே? கவனிக்கவில்லைப்ப்போலும்! ஒருவேளை நீங்கள் உனர்ச்சிவசப்பட்டு விட்டீர்கள் போல் இருக்கிறது!
chandran .raja
தமிழ்மக்களின் பழைமைவாத சிந்தனை முற்றுமுழுதாக அழித்தொழிக்க படவில்லை. அது ஒருசகாப்தற்குள் ஒழிக்கவும் முடியாது. இதன் ஒருவகை பிரதிகளையே “நாடுகடந்த தமிழீழம்” “தமிழ்தேசியக் கூட்டமைப்பு” களாக கண்டு கொண்டிருக்கிறோம். ஜோர்ச் வில்லியின் “தமுக்கு” புலிகள் அடித்த மேளங்களின் ஒருவகை ஒலியே!. இந்த வகை ஒலிவகைகளை கேட்டு பழக்கக் பட்ட மிருகங்களே இலங்கையில் இருக்கக் கூடிய டக்கிளஸ் மகிந்தா போன்றவர்கள். இன்று இலங்கைக்கு தேவையானது. “இலங்கை தொழிலாளர்வர்க்க கட்சியே!”. இதுஉலக தொழிலாளவர்க்க கட்சியின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். இதுவே இலங்கை பாட்டாளிமக்களை விடுதலை செய்யக் கூடியது. இதுவே! மலைய மக்கள் பெண்னடிமைத்தனம் சாதியொடுக்கு முறை போன்ற இழிவான வாழ்க்கையில் இருந்து மீட்டொடுத்து இந்த உலகத்திலேயே சொர்க்கத்தை காட்ட வல்லது. ஆகவே…இலங்கை தொழிலாளர்களே! ஒரு முனையில் ஐக்கியப் படுங்கள்.இந்திய உலகத் தொழிலாளர்களிடம் உங்கள் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதுவே உங்கள் சுகந்திரப் பாதை. இதற்கு முன்னால் எந்த சீனப்பெரும் சுவரும் கிடையாது.
மாயா
>>இலங்கையன் என்ற உணர்வுடன் அமெரிக்க மாதிரியில், எல்லாடரும் சேர்ந்து வாழ, முன்னேறிச் செல்ல ஆலோசனை கூறியிருக்கலாமே….
மாயா
//அவர் கடைசியாகச் சொன்ன வசனம் அதேதான். தான் ஆலோசனையை இலவசமாக வழங்கத்தயாராய் இருப்பதாகச் சொன்னாரே? கவனிக்கவில்லைப்ப்போலும்! ஒருவேளை நீங்கள் உனர்ச்சிவசப்பட்டு விட்டீர்கள் போல் இருக்கிறது! – சாந்தன் //
நீலன் தீருச்செல்வத்துக்கு நடந்ததை எண்ணிப் பார்க்கிறேன்.