“கே.பி அரசாங்கத்தால் நடத்தப்படும் முறை ஏற்றுக்கொள்ள முடியாதது” தவிகூ தலைவர் வீ ஆனந்தசங்கரி

a_sangary.jpgவிடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள மன்னிப்பும். அவரை நடத்தி வருகின்ற முறையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வின் முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இடம்பெயர்ந்த மக்களும், விடுதலைப் புலி போராளிகளும் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் பரிவு காட்டி வருகின்றது. 10500 இளைஞர்கள் இன்னமும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எமது பிள்ளைகளான அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தவறு” எனக் குறிப்பிட்ட அவர் அரசாங்கம் கே.பியிலும், அவரது ஆதரவாளர்களிலும் தங்கியிருப்பது குறித்தும் எச்சரிக்கை செய்தார்.

 கே.பி இலங்கையின் அபிவிருத்திக்காக முதலீடு செய்யப்போவதாக கூறப்படும் பணம் சட்டவிரோதமாகவும், பாவ காரியங்களூடாகவும் சேர்க்கப்பட்டவையாகும். அப்பணத்தை அபிவிருத்திக்கு பயன்படுத்துவதன் மூலம் மேற்படி பாவத்தில் அரசாங்கமும் பங்கு கொள்ளக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் மக்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும்,  இராணுவத்தினர் மத்தியில் வாழும் அம்மக்கள் சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த நிலையிலுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் 10,000 பேரையும் விடுவிக்க வேண்டும் – நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் ஆனந்தசங்கரி சாட்சியம்

தடுத்து வைக்கப் பட்டுப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேரையும் விடுவித்து அவர்களை சமூகமயப்படுத்த வேண்டுமென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

முன்னாள் ஜே. வி. பி. உறுப்பினர்களைப் புனர்வாழ்வளித்து விடுவித்ததைப்போல், புலி உறுப்பினர்களையும், விடுவிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், குழுவொன்றை அமைத்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றார்.

அத்துடன் வடக்கில் மக்களின் சுதந்திரமான இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்து வதற்காக அங்கு சிவில் நிர் வாகத்தை முழுமையாக ஏற் படுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் பகிரங்க அமர்வில் ஆனந்தசங்கரி நேற்று சாட்சியமளித்தார். குழுவின் தலைவர் – முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற விசாரணையில் சுமார் 45 நிமிடம் சாட்சியமளித்த கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, குழுவின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

“தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பேரும் எமது அப்பாவி பிள்ளைகள். அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்களே தவிர எந்தக் குற்றமும் அறியாதவர்கள். அவர்கள் உடலால் சரணடைந்திருந்தாலும் அவர்கள் உணர்வால் சரணடையவில்லை. அவர்கள் அப்பாவிகள். அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைத்தால், அவர்கள் சமூகமயப் படுத்துவார்கள். யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில் எமது மக்கள் சுதந்திரமாக அவர்களின் சொந்த மண்ணில் வாழ வேண்டும். இது எமது நாடு. எமது மண். நாம் இந்த நாட்டையே நேசிக்றோம். நான் இந்த நாட்டையே பிரதிநிதித்துவப் படுத்துகிறேன்.

வடக்கில் முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படாத வரை நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எமது பிரச்சினை 50 வருடம் பழைமை வாய்ந்தது. இன்னமும் தீர்வு காணப்படவில்லை” என்று குறிப்பிட்ட ஆனந்த சங்கரி பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட தொகை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ், சிங்கள மொழிகளைப் பாடசாலை மட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றதுடன் ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதற்காக இந்தியாவிலிருந்து ஆசிரியர்களைத் தருவிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த எஸ். எல். குணசேகர, “புலிகள் இயக்கத்திற்கும் ஜே. வி. பி. யினருக்கும் வேறுபாடு கிடையாது. இவர்களும் வன்முறையில் ஈடுபட்டார்கள். ஆனால், இரு அமைப்புக்களின் ஒழுங்கு நடைமுறையே மாறுபட்டிருந்தது” என்று சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply to shangar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    //கே.பி இலங்கையின் அபிவிருத்திக்காக முதலீடு செய்யப்போவதாக கூறப்படும் பணம் சட்டவிரோதமாகவும், பாவ காரியங்களுடாகவும் சேர்க்கப்பட்டவையாகும்.//
    இருக்கட்டுமே ஏதோ மக்களுக்கு கொடுப்பதாக சொல்லுகிறார் கொடுத்தால் மகிழ்ச்சிதானே; உங்களை போல் எல்லோரும் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பது சரியா?? அதுசரி உங்களுக்கு விருதுடன் ஒரு பண முடிச்சும் தந்தார்களாமே; அதை தாங்கள் மக்களுக்கா அல்லது புலத்தில் வாழும் உங்க மகள் மக்களுக்கு கொடுத்தியளா?? கே பி கெட்டவர், உங்களை விட பரவாயில்லை ;

    //கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் மக்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும், இராணுவத்தினர் மத்தியில் வாழும் அம்மக்கள் சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த நிலையிலுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.//
    இதெல்லாம் கடித சமாசாரம் இல்லை நிர்வாக சம்பந்தபட்டது;

    //தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பேரும் எமது அப்பாவி பிள்ளைகள்.//
    முல்லைதீவில் பள்ளி பிள்ளைகள் ராணுவதாக்குதலில் மடிந்தபோது அவர்கள் புலி பிள்ளைகள் என சர்வதேசத்துக்கு கடிதம் எழுதி சான்றிதழ் கொடுத்த சங்கரியா இது?

    Reply
  • shangar
    shangar

    சங்கரி புலிகளுக்கு எதிரானவர்தான் பாவம் புலிகளுக்கு எதிராக கடிதம் எழுதப்போய் அது அரசுக்கு ஆதரவாக பயன்படுத்தப்படும் என்பதை அறியமுடியாத யதார்த்தம் புரியாத அரசியல்வாதி. இருந்தாலும் கசப்பான உண்மைகளையும் சொல்லக்கூடியவர். பிரபாகரன் உயிரோடு இருக்கும்போதே தம்பி நீயும் அழிந்து மக்களையும் அழிக்கப் போகிறீர் என துணிந்து யதார்த்தத்தை சொன்ன அரசியல்வாதி. தமிழ் மக்களிடம் புலிகள் வாங்கிய பணம் தமிழ்மக்களுக்கே மீண்டும் செலவு செய்யப்படப் போகிறது.அதை அவர் ஏன் எதிர்க்கின்றார். அவருக்கு அரசியலில் விளங்காமல் போன விடயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் ஆணைக்குழுவில் பல நல்ல விடயங்களையும் ( வன்னியில் இராணுவ முகாம்கள் அவசியமே இல்லை) கூறியுள்ளார். இப்போதாவது அரசை புரிந்து கொண்டாரே.

    Reply