இலங்கையில் சீனர்கள்; இந்தியாவுக்கு ஆபத்து: ஜெயலலிதா

1jaya.jpgஇலங்கையில் சீனர்கள் குவிக்கப்படுகின்றனர்.  இதனால் இந்தியாவுக்கு ஆபத்து எதிர்நோக்கியிருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று எச்சரித்துள்ளார் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

 நெடுஞ்சாலைப் பணிகளையும், ரயில்வே பணிகளையும் மேற்கொள்வதற்காக, சிறைக்கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் சீனத்தில் இருந்து வந்துள்ளது குறித்து இந்திய அரசு விழிப்போடு இருக்க வேண்டும்.

 இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க இந்தியா ரூ.1,000 கோடி அனுமதித்துள்ளது.  ஆனால் இந்த மறு சீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது.  இதிலிருந்து,  இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப் பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.  

 இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை.  இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.  தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.

 1962 ஆம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவ மனப்பான்மையுடன் சீனாவோடு அபரிமிதமாக உறவாடிக் கொண்டிருந்த போதுகூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது.  குறுகிய நோக்குப் பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம்.

அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அண்மையில் ராஜபட்ச இந்தியாவிற்கு வந்த போது, இந்த பிரச்சினையை இந்தியா உறுதியுடன் முன் வைத்திருக்க வேண்டும்.     

இலங்கைத் தமிழர்களுக்கு ஆபத்து

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கெனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது.  27 ஆண்டு கால இனப் போர் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.   பெரும்பாலான ஆண்கள் இந்த இனப் போரில் உயிரிழந்துள்ளனர்.  விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக்கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும். 

இந்தப் பிரச்சினையில் காலதாமதமின்றி இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும்;  கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Show More
Leave a Reply to BC Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • john
    john

    /இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில் இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும் உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. /

    /வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால் இந்தியாவிற்கு ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை./

    முதலில் தனக்குத் தகவல் கிடைத்துள்ளது எனக் கூறும் ஜெயலலிதா பிறகேன்… ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால்… என்ற சந்தேகக் கண்ணோட்டம் விடுகிறார் முன்பின் முரணாக.
    ஆனாலும் இந்தியா என்ற நாட்டுப்பற்று இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இந்தியாவின் எதிர்காலம் என்பதெல்லாத்திற்கும் பிறகுதான் இலங்கைப் பிரச்சனை பற்றி கதைப்பார் என்பதைத் தெளிவாகக் காட்டிப் போட்டார்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஜெயலலிதாவின் அரசியல் கருனாநிதியை திட்டித் தீர்கிறதும் அவரை பதிவியில் இருந்து இறக்கி அந்த இடத்தில் தான் அமர்ந்து கொள்வதற்குமான அரசியல். எதுவும் உப்புசப்பில்லாதது.
    எவ்வளவு? பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் கதைக்க வேண்டிய கதைகளை சதாரணமாக அள்ளி வீசுகிறா. துவேஷ உணர்வுகள் எப்படி வளர்த்தெடுக்கப் படுகிறது பாருங்கள். புதுப்படம் திரையிட்டால் கிடாய் வெட்டுவதும் கட்டவுட்டுக்களு பால் அபிஷேகம் செய்கிறதாய் இருக்கிற அப்பாவிகள் இனி இதைக் கேட்டு…?.

    Reply
  • BC
    BC

    இவாவுக்கு யாரோ ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள் போல, இப்போ கட்டவுட்டுக்களு பால் அபிஷேகம் செய்கிறவர்களை கவரவேண்டும் என்றால் தமிழ்நாட்டில் குவிந்துள்ள பிரச்சனைகளை பிரச்சனைகளை தவிர்த்து இப்படி எதாவது பேசினால் தான் எடுபடும் என்று. புலம் பெயர்ந்த எங்கள் ஆட்களிடம் தமிழ்தாய் என்று பெயர் எடுத்தவர் அல்லவா!

    Reply