இலங்கை அரசின் ‘வடக்கின் வசந்தம்’ திட்டம் பற்றிய விவரணம் வெளிவந்துள்ளது. வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய புள்ளி விபரங்களுடன் இது வெளியாகி உள்ளது. (முழுமையாகப் பார்வையிட http://www.np.gov.lk/pdf/development.pdf ) ‘கிழக்கின் உதயம்’ திட்டம் அறிவிக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. தற்போது 180 நாள் மட்டுப்படுத்தப்பட்ட ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும் உள்நாட்டு யுத்தத்திற்கான காரணிகள் நீக்கப்படவில்லை என்பதை உலக வங்கி ஒக்ரோபர் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இனமுரண்பாட்டுக்கு தீர்வு காணாதவரை நீண்டகால உறுதித்தன்மையை தக்க வைக்கவோ மூலதனத்தை கவரவோ முடியாது என உலக வங்கி அறிக்கை தெரிவித்து இருந்தது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதே ஏற்புடைய செயன்முறையாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அரிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும் உலக வங்கி அறிக்கை இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் குற்றச்சாட்டுக்களை திருப்திப்படுத்துகின்ற தீர்வை முன் வைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி இருந்தது.
ஆனால் அடுத்த தேர்தல் முடியும் வரை அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமில்லை என ஆளும் கட்சி அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் அரசியல் தீர்வை பின்னடிக்கலாம் அல்லது கைவிடலாம் என்றளவில் அரசின் தற்போதைய நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் நம்புகின்றன. ஆனாலும் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கின்ற அளவுக்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் பலமான நிலையில் இல்லை. இதனால் அந்த அபிவிருத்தியில் பங்கெடுப்பதற்கு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணியில் நின்ற உள்ளுராட்சி உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர். இந்த இணைவு எதிர்காலத்தில் இவ்வாறான பல இணைவுகள் ஏற்படப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவித்துள்ளது.
இவ்வாறான இணைவுகள் தமிழ் மக்களின் தனித்துவ அரசியலை தவிர்க்க முடியாமல் பலவீனப்படுத்தப் போகின்றது. இதைத் தடுக்கின்ற அல்லது மட்டுமப்படுத்துகின்ற அரசியல் பலம் காலத்திற்குக் காலம் தோண்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் வரையான தமிழ் தேசியத் தலைமைகளாலேயே அழிக்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் இத்தலைமைகள் தங்கள் போராட்டத்தினூடாக தமிழ் மக்களுக்கு வாழ்வுக்குப் பதிலாக அழிவையே வழங்கி உள்ளனர். தமிழ் தேசியத் தலைமைகளிடம் உள்ள அரசியல் வறட்சி அவர்களை தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தி உள்ளது. அதனை மிகத்திட்டமிட்ட முறையில் பயன்படுத்திக் கொள்ளும் அரசு தமிழ் தேசியத் தலைமைகளுக்கு மாற்றீடாக தனது தலைமையை முன்வைக்கின்றது.
வன்னி முகாம் மக்களை சென்று பார்ப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக அவர்கள் போராடவும் இல்லை. அவர்களில் சிலர் பல மாதங்களின் பின்னர் தற்போது தான் இலங்கைக்கே சென்றுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல கொழும்பு தமிழ் கட்சிகள் கூட அனுமதிக்கப்படவில்லை. ஆளும் அரசு தான் மட்டுமே அந்த மக்களில் அக்கறைகொண்டுள்ளதான தோற்றப்பாட்டை உருவாக்குகின்றது. தனக்குள்ள அனைத்து வழங்களையும் பயன்படுத்தி அதனை நிறுவ முற்பட்டுள்ளது. மே 18 வரை அரசியல் வன்முறைமூலம் தனது அரசியல் ஆதிக்கத்தை நிறுவிய அரசு தற்போது தமிழ் மக்கள் மீது கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவ முற்பட்டுள்ளது. வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டம் கூட தெற்கில் உள்ள அமைச்சர்களின் தலைமையிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 13 பேர் கொண்ட யாழ் அபிவிருத்தியில் மலையக அமைச்சர் ஒருவரே தமிழராக உள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய அடிப்படை ஜனநாயக விழுமியங்களையே இல்லாதொழித்த நிலையில் அரசு தனது கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு எவ்வித தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.
சினிமாப் படங்களில் எல்லாம் நடந்து முடிந்தபின் பொலிஸ் ஜீப் அல்லது கார் வருவது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மார்க்சிய அறிஞர்களும் வெளியே தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர். மே 18 வரை மௌனம் காத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மார்க்ஸிய அறிஞர்களும் வே பிரபாகரன் எரிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடத்தில் புல்லும் முளைத்தபின் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்’ என்ற தங்கள் அறிவியல் விலாசத்தை எடுத்துவிடுகின்றனர்.
மிகப் பெரும் அவலத்தைக் கடந்து வந்த மக்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக செல் தாக்குதல்களுக்குள்ளும் குண்டுவெடிப்புகளுக்குள்ளும் வாழ்ந்த மக்களுக்கும் வழங்குவதற்கு தமிழ் தேசியத் தலைமைகளிடம் எதுவும் இல்லை. மீண்டும் குண்டுகள் வெடிக்கும் என்று எச்சரிப்பதைத் தவிர. ஓரிரு குண்டுவெடிப்புகளைச் செய்து தங்கள் தேசியத் தலைமையைக் காப்பாற்றுவதன் மூலம் தங்கள் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு சில புலம்பெயர் சக்திகள் முனைகின்றன. இது ஏற்படுத்தப் போகும் அரசியல் விளைவு பற்றிய அக்கறையிலும் பார்க்க தங்கள் இருப்பை உறுதிப்படுத்தி தங்கள் பொருளாதார நலன்களைப் பேணிக் கொள்வதில் அவர்கள் மிகுந்த அக்கறையாக உள்ளனர். மாவீரர் தினத்தை குறிக்கும் வைகயில் ஓரிரு குண்டுவெடிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான அழுத்தங்களை புலம்பெயர் தமிழ் தேசிய ஆதரவு சக்திகள் வழங்கிவருவதை உணர முடிகிறது.
தமிழ் தேசியத்தின் பலம் இலங்கை அரசின் நேரடியான ஒடுக்குமுறையை வைத்தே கட்டமைக்கப்பட்டது. தமிழ் தேசியம் பலம்பெறுவதற்கு தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட வேண்டும், தமிழ் பெண்கள் நூற்றுக் கணக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இரத்தமும் சதையும் இல்லாமல் தமிழ் தேசியத்தால் நின்று பிடிக்க இயலாது. இதனையே மே 18க்குப் பின் காணக் கூடியதாக உள்ளது.
இலங்கை அரசு மேற்கொள்கின்ற நுண் அரசியலை மறைமுகமான இனச்சுத்திகரிப்பை கண்டுகொள்ளவோ எதிர்கொள்ளவோ தமிழ்த் தேசியம் தவறிவிட்டது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் ‘வடக்கின் வசந்தம்’ பாலம் கட்டினால் ‘தமிழ் தேசியம்’ குண்டு வைத்து தகர்க்கும் என்பதுதான். அந்த மக்களுக்கு தோளோடு தோள் கொடுக்காமல் ஒப்புக்கு மாரடிக்கும் போராட்டங்களும், ஆபத்தில் மக்களுக்கு உதவாத கோசங்களும் அரசியல் வறட்சியின் வெளிப்பாடாகவே உள்ளது. ஊரில் சொல்வார்கள் ‘பத்துப் பிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக் காட்டினாள்’ என்று அது மாதிரியான நிலையிலேயே புலத்துப் போராட்டங்கள் அமைகின்றன.
lamba
இலங்கை அரசு திட்டமிட்டு புலிகளை அழித்தத போல திட்டமிட்டு வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்கிறார்கள் என்றே எனக்கு தெரிகிறது இனிமேல் எக்காரணம் கொண்டும் புலிகளே புலிகள் போன்ற அமைப்போ தமிழர் போராட்ட அமைப்பாக உருவாக முடியாது உருவாவது என்றாலும் 200 வருடங்களுக்கு பின்னர்தான் என இந்திய மத்திய மந்திரி கூறியது ஞாபகம் இருக்கலாம்.
அரசு திட்டமிட்டு எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறது புலம்பெயர் மக்களும் ஒத்தழைப்பு வழங்குவதே சரியானது
mohan
இலங்கையில் என்றுமே எதிர்ப்பு அரசியலே தமிழர்கள் நடாத்தி வந்துள்ளனர் இனிமேலாவது அரசுடன் இணக்கப்பாட்டை வளர்த்து நம்பிக்கை வளர்த்து தமது பிரதேச அதிகாரப் பகிர்வுகளைப் பெற முயற்ச்சிக்க வேண்டும்.