வவுனியா கம்யூனிஸ்ட் பிரமுகர் கே. பத்மநாதனின் நினைவு தினக் கூட்டம் வவுனியாவில் நடைபெற்ற போது அரசியலமைப்பு விவகார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டியூ குணசேகர ஆற்றிய உரை.
தோழர் பத்மநாதனுக்கு மரியாதை செலுத்தவும் அவரைக் கெளரவிக்கவும் அவருக்கு நன்றி தெரிவிக்கவுமாக நினைவுச் சொற்பொழிவை ஆற்றும் பணி எனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் எனக்கு விடுத்த அன்பான அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.
தோழர் பத்மநாதன் 2005, ஜுலை 13ம் திகதி காலமானார். வன்னியில் அப்போது நிலவிய நிலைமை காரணமாக, எம்மைப் பிரிந்து சென்ற தலைவருக்கு உரிய மரியாதையுடனும் கெளரவத்துடனும் நன்றியறிதலுடனும் அப்போது எம்மால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. அவரது குடும்பத்தினர் இந்த நினைவுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்ற காரணத்தினால் நான்காவது சிரார்த்த தினமான ஜுலை 13ம் திகதி இதனை நடத்துவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அவரது நான்காவது சிரார்த்த தினமும் அவரது கட்சியின் 66 வது ஆண்டு விழாவும் ஒரே சமயத்தில் வருவதால் நான் அவர்களுடன் இதற்குச் சம்மதித்தேன். தோழர் பத்மநாதன் வன்னியில் புகழ்பூத்த பிரமுகர், தனது மக்களுக்கு அர்ப்பணிப்புடன், கடமைப் பொறுப்புடன், துணிவுடன் அயராது பணிபுரிந்தவர். எனவே அவருக்கு வேறு எந்த அறிமுகமும் தேவையில்லை. பாரம்பரிய சுதேச மருத்துவத் தலைமுறையைச் சேர்ந்த அவர் விவசாயிகள் இயக்கம், கூட்டுறவு இயக்கம், அரசியலில் இடதுசாரி இயக்கம் ஆகியவற்றின் தலைவராக விளங்கியவர்.
அவருடைய சமூக, அரசியல் சமயச் செயற்பாடுகள் வன்னி மக்கள் மத்தியில் பிரசித்தமானவை. எனவே அவை பற்றி நான் இங்கு அதிகமாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும் கூட, இளம் தலைமுறையினரின் நலன் கருதி அவரது செயற்பாடுகளில் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
1927 ஆம் ஆண்டு அவர் பிறந்த வேளையில் பிரித்தானிய காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட நாடாக இலங்கை விளங்கிற்று. எமது நாட்டின் முழுமையான சுதந்திரத்துக்கான போராட்டம் குழவிப் பருவத்தில் இருந்தது. அப்போது எமது நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களுக்காகவே உரத்த குரல்கள் எழுப்பப்பட்டனவேயன்றி முழுமையான சுதந்திரத்துக்காக அல்ல.
ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் தேச விமோசனப் போராட்டத்துக்கான யுகத்துக்குக் கட்டியங்கூறிய 1917 ஆம் ஆண்டின் மகத்தான அக்டோபர் சோசலிசப் புரட்சி பற்றிய செய்தியை வெளியுலகுக்குக் கொண்டு வந்த முதலாவது இலங்கையர் பொன்னம்பலம் அருணாச்சலம்.
இந்தப் பின்புலத்திலேயே யாழ்ப்பாண மாண வர் காங்கிரசும் பின்னர் ஹண்டி பேரின்ப நாயகம் தலைமையில் இளைஞர் காங்கிரசும் 1924 ஆம் ஆண்டு தீவிரமான வேலைத்திட்டங்களுடன் செயல்பட்டன. 1931 ஆம் ஆண்டில் அகில இலங்கை இளைஞர் காங்கிரசும் 1933 ஆம் ஆண்டில் சூரிய மலர் இயக்கமும் முழுமையான சுதந்திரத்துக்கான போராட்டத்தில் மேலும் முன்னேற்றமான நிகழ்வுகளாகின.
1935 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜக் கட்சியும் 1943 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவானமை அந்த இயக்கத்தின் உறுதியான சித்தாந்தவியல் திசைவழிகளைக் கொண்ட விரிவுபடுத்தல்களேயாகும்.
ரீ.துரைசிங்கம், ஏ.வைத்தியலிங்கம், பொன். கந்தையா, எஸ். ஜெயசிங்கம், வ. பொன்னம் பலம், எம். கார்த்திகேசன், எஸ். பி. நடராஜா, ஐ. ஆர். அரியரத்னம் போன்ற பெரும் அறிவாற்றல்மிக்க இடதுசாரித் தலைவர்களை வட பகுதி உருவாக்கியிருந்தது. அவர்கள் இடதுசாரி இயக்கத்தைக் கணிசமான அளவுக்குச் செழுமைப்படுத்தினர்.
முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர்களான கே. சி. நித்தியானந்தன், செல்லப்பா குமாரசாமி, பொன் குமாரசாமி, எஸ். செல்லையா, கே. நவ ரட்ணம், போன்றவர்கள் வடக்கில் உருவாகி இடதுசாரி இயக்கத்துடன் ஒன்றித்துச் செயல்பட்னர். வெவ்வேறு காலகட்டங்களில், வட பகுதியைப் பிரதிநிதித்துவம் செய்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்த ஒரே இடதுசாரிக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிதான்.
இடதுசாரி இயக்கத்தின் இந்தப் பின்புலத்தில் தான் வ. பொன்னம்பலம், எம். கார்த்திகேசன் ஆகியோர் மூலமாக தோழர் பத்மநாதன் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
1949 ஆம் ஆண்டின் மகத்தான சீனப் புரட்சியும் 1945 முதல் 1975 வரையில் வியத்நாம் மக்கள் நடத்திய சுதந்திரப் போராட்டமும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கமும் 1952 ஆம் ஆண்டில் எமது கட்சியில் இணைந்து கொண்ட பத்மநாதன் போன்ற இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உந்து சக்திகளாக விளங்கின.
அவர் ஸ்ரீ.ல.சு.க -ல.ச.ச.க- கம்யூனிஸ்ட் கட்சிகளது ஐக்கிய முன்னணி தலைமையில் 1970 ஆம் ஆண்டு வவுனியாவில் போட்டியிட்டார். மாஸ்கோவில் அவர் தனது அரசியல் கல்வியை மேம்படுத்திக் கொண்டார். 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வட மாகாணத்தில் ஹெக்டர் கொப்பேகடுவ ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெறுவதில் தோழர் பத்மநாதன் முக்கிய பங்கினை வகித்தார்.
அப்போது பதவியில் இருந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, குமார் பொன்னம்பலம் ஆகியோரைத் தோல்வி காணச் செய்து யாழ், வன்னி மாவட்டங்களில் சமூக வேறுபாடின்றி அவருக்கு ஆகக் கூடுதலான வாக்குகளை அளித்திருந்தனர்.
அரசியல் கட்சிகள் மத்தியில் அரசியல், சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும் கூட அடிப்படையிலேயே தேசிய ஐக்கியம் நிலவிய காலம் இது. மக்கள் மட்டத்தில் தேசிய ஐக்கி யமும் சமூக ஒற்றுமையும் உச்ச கட்டத்தில் இருந்தன. இந்த ஒற்றுமையை 1983 ஆம் ஆண்டின் ஆடிக்கலவரம் சிதறடித்துவிட்டது. 26 ஆண்டுகாலம் நீடித்திருந்த தொடர்ச்சியான யுத்தத்துக்குப் பின்னர் இன்று நாம் சந்திக்கின்றோம்.
30 ஆண்டுகளுக்கு மேலாகப் பயங்கரவாதம் நிலவியது. இந்தக் காலப்பகுதியில் நடந்தவற்றைப் பற்றி பெரும் மகிழ்ச்சியடைய முடியாது. அதற்குப் பின்னர் நடந்தவை யாவும் விலைமதிக்க வொண்ணாத உயிர்களின் இழப்பு, சொத்துக்களின் அழிவு, பொருளாதாரச் சீரழிவு, மக்களின் தொடர்ச்சியான துயரம், கலாசாரச் சீர்குலைவு, வன்முறைக் கலாசார ஆளுமையின் தோற்றம், நல்லாட்சி வீழ்ச்சி கண்டமை, தேசிய ஒற்றுமையும் ஒருங்கிணைவும் முழுமையாக வீழ்ச்சி கண்டமை, பாதாள உலகத்தின் தோற்றம் ஆகிய எல்லாமே இதன் உற்பவிப்புக்களும் துணை உற்பவிப்புக்களுமே ஆகும்.
எந்தவொரு சமூகத்தினதும் மறைந்துவிட்ட தலைவர்களுக்கோ அல்லது எமது தேசத்தின் கதிப்போக்கிற்கு வழிகாட்டியவர்களுக்கோ நான் கெளரவம் அளிக்காதவனாக இருக்க விரும்பவில்லை. இப்போது புண்ணை ஆற்றவும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தவுமான காலம். துரதிருஷ்டவசமான சம்பவங்களை மீண்டும் கிளற நான் விரும்பவில்லை.
ஆனால் வரலாற்று உண்மைகள் உள்ளன. இவற்றை நாம் மறந்துவிட முடியாது. அழிவிலிருந்து மீண்டும் புத்துயிர் பெற வேண்டுமானால் அவற்றில் இருந்து நாம் தேவையான படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது இன்றியமையாதது. வரலாற்றைக் கற்றுக்கொண்டிருப்பவன் என்ற வகையில் சுதந்திரத்துக்குப் பின்னரான காலத்துத் தலைவர்கள் நாட்டு நிர்மாணக் கடமையில் தவறிவிட்டனர் என்பேன்.
எமது கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில் தேசிய இனப் பிரச்சினையை அதன் ஆரம்ப காலத்திலிருந்தே நாம் இனங்கண்டோம். உண்மையில் எமது நாட்டின் சமகால அரசியலுக்கு பிராந்திய சுயாட்சிக் கருத்தமைப்பை எமது கட்சியே அறிமுகப்படுத்தியது. சமூக, பொருளாதார, கலாசார எதார்த்தங்கள், சர்வதேச அனுபவங்கள் ஆகியவற்றின் விஞ்ஞானபூர்வப் பகுப்பாய்வை அது அடிப்படையாகக் கொண்டது.
சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த முதலாளித்துவக் கட்சிகள் இந்த எதார்த்தங்களை உணரத் தவறின. அற்பமான, குறுகிய அரசியல் நலன்களால் ஈர்க்கப்பட்டன. இலங்கை என்ற தேசத்தை, நாட்டு நிர்மாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தமது வரலாற்றுக் கடமைப் பொறுப்பைக் கைகழுவின.
வட பகுதியில் (தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகிய இரண்டினதும்) தமிழ்த் தலைவர்களைப் பொறுத்த வரையிலும் இதுவே உண்மை. அரசியலில் அவர்கள் பழமைவாத, பிற்போக்கான பங்கை வகித்தனர், தமது குறுகிய வர்க்க நலன்களை முதன்மைப்படுத்தினர். அவர்கள் பிற்போக்கான, பழமைவாத அரசி யல் நிலைப்பாடுகளுடன் தம்மை இனங்காட்டிக் கொண்டார்கள்.
இதனால்தான், பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பது, நெற் காணிச் சட்டம், தேசியமயமாக்கக் கருத்திட்டங்கள் குடியுரிமை, முற்போக்கான அரசியல், சமூகச் சீர்திருத்தங்கள், ஆகியவற்றை எதிர்த்தனர். இயல்பாகவே அவர்கள் முற்போக்குச் சக்திகளிடமிருந்து தம்மைத்தாமே தனிமைப் படுத்திக் கொண்டனர்.
தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தவறியமை 1980 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்களின் அரசியல் தலைமையில் முதலாளித்துவ த்திலிருந்து சிறு முதலாளித்துவத்துக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது. துரதிர்ஷ்டவசமாக வலதுசாரி சிறு முதலாளித்துவம் தலைமைப் பொறுப்பை ஏற்றது. அது, அதிதீவிர தேசியவாதம், குறுகிய தேசிய இனவெறி ஆகியவற்றின் அடிப்படையில் வன்முறை, பயங்கரவாதம், பிரிவினை ஆகிய பாதையில் பிரவேசித்தது.
தேசிய ஒற்றுமை, ஜனநாயகப்பாதை, ஐக்கிய இலங்கையின் கட்டமைப்புக்குள் அரசியல் தீர்வு காண்பது ஆகியவற்றைத் தேர்ந்த இடது சாரி சிறு முதலாளித்துவக் கட்சிகள் ஓரங்கட்ட ப்பட்டன, ஒழிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. மக்கள் மட்டத்திலும் முற்போக்குச் சக்திகள் மட்டத்திலும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பாலம் தகர்ந்தது.
ஆரம்பத்திலிருந்தே தேசிய சிறுபான்மை யினங்களின் குறிக்கோள்களுக்காகவும் தேசிய ஒற்றுமைக்காகவும் 13 வது திருத்தத்தின் நடை முறைப்படுத்தலுக்காகவும் போராடிய இடது சாரி இயக்கத்தைச் சேர்ந்த நாம் கூட விட்டு வைக்கப்படவில்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்த, பல்வேறு மட்டங்களில் இருந்த எமது 49 தலைவர்கள் ம.வி.மு. வினாலும் எல்.ரீ.ரீ. இயக்கத்தினாலும் கொல்லப்பட்டனர்.
கடந்த 30 ஆண்டுகளில் தெற்கிலும் வடக்கிலும் உள்ள இடதுசாரி இயக்கம் மற்றும் முற்போக்குச் சக்திகளின் செலவில் தெற்கிலேயே குறுகிய தேசிய இனவெறியும் வடக்கிலே தமிழ் தேசிய இனவெறியும் செழிப்புற்றன. இதன் காரண மாக நடுநிலை, ஒற்றுமை, ஐக்கியம் ஆகிய உணர்வை நாடு இழந்து விட்டது.
எமது கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பயங்கர வாதத்தையோ அல்லது வன்முறையையோ ஒருபோதும் ஏற்றதில்லை. அதுபோலவே, எமது கட்சியின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல் வதற்காகக் காடைத்தனத்தையோ, துன்புறுத்தல் செய்வதையோ கடைப்பிடித்ததும் இல்லை. எமது கரங்கள் இரத்தக் கறை படிந்தவையல்ல.
எமது கட்சி எப்போதுமே நாட்டுப் பற்றுள் ளதாகவே இருந்துள்ளது. அதேசமயத்தில் அது சர்வதேசியத் தன்மையைக் கொண்டது. யாவ ற்றுக்கும் மேலாக நாம் மனித உயிர்களாக இருப்பதால் நாட்டுப்பற்றும் சர்வதேசியமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே.
நாம் எமது நாட்டில் சோலிசத்தை அறிமுகப் படுத்தினோம். அதுபோலவே, எமது நாட்டுக் காக சோசலிச நாடுகளையும் அறிமுகப்படு த்தினோம். நிலப்பிரபுத்துவத்தின் பிதுரார்ஜிதமான சாதி அமைப்புக்கு எதிராக வடக்கிலும் தெற் கிலும் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கம் யூனிஸ்ட்டுகளே. மக்களின் மனங்களில் இரு ந்து கட்டுக்கதைகளையும் பொய் நம்பிக்கை களையும் நீக்கி அவர்களுக்கு அறிவுக் கண் ணைத் திறந்து வைத்தோம்.
இந்தப் பின்னணியில்தான், தனது தத்துவார்த்த ஆதாரத்தளம் மற்றும் நடைமுறை அனுவ பம் ஆகியவற்றைக்கொண்டு தேசிய இனப் பிரச்சினைகளில் மெளனமாகவும் அதேசமயம் துணிவாகவும் கோட்பாட்டு ரீதியான நிலைமை ப்பாட்டை எடுத்த தோழர் பத்மநாதனின் பங்களிப்பை நான் மதிப்பீடு செய்ய விரும்புகின்றேன். அவரைப் பொறுத்தவரையில், தேசிய ஒற்றுமை, சமூக இணக்கப்பாடு, மக்களின் நல ன்களில் பேரார்வம், ஒரு சோசலிச இலங்கை க்கான தொலைநோக்கு ஆகியவனவே நிர்ணயமான காரணிகளாக விளங்கின.
இப்போது யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. தேசிய ஒற்றுமைக்கும் பாரபட்சத்துக்கும் அநீதிக்கும் முடிவு கட்டுவதற்கும் சமத்துவம், சமூக நீதி, சமூக அபிவிருத்தி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கும் போராடுவதற்கான மற்றுமொரு சந்தர்ப்பத்தை வரலாறு எமக்கு வழங்கியுள்ளது.
இன்று வடமாகாணத்தின் மொத்தத் தேசிய உற்பத்தி 2.9 சதவீதமே. அதேசமயம் மேல் மாகாணத்தின் வீதம் ஏறக்குறைய 50 சதவீதம். யுத்த வலயத்துக்கு அணித்தாயுள்ள வட மத்திய மாகாணம், ஊவா மாகாணம் ஆகிய ஒவ்வொன்றும் கூட மொத்தத் தேசிய உற்பத்தியில் 4 சதவீதமே.
யுத்தத்தின் விளைவுகள் வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரம் மட்டுப்பட்டிருக்கவில்லை. இதனால் தான் வடக்கு, கிழக்கின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ஆகக்கூடுதலான முன்னுரிமையைக் கொடுக்கின்றோம்.
இடம்யெர்ந்துள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு முடிந்த அளவு துரிதமாகத் தீர்வுகாணப்பட வேண்டும். சிவில் நிர்வாகம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டி யிருக்கின்றது. அடிமட்டத்திலுள்ள நிறுவகங்க ளுக்குத் தமது சொந்தத் தலைவர்களைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளன.
இந்தப் பூர்வாங்க நடவடிக்கைகள் நிலை யான அரசியல் தீர்வுக்கான எமது தேடலுக்கு வாய்ப்பளிக்கும் இசைவான சூழ்நிலையை உருவாக்கும் என நம்புகின்றேன். பரஸ்பர நம்பிக்கையைப் பொறுத்த வரையில் சிங்கள, தமிழ் சமூகங்களுக்கு இடையே பெரும் இடை வெளி இருப்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இந்த இடைவெளியை மக்கள் மட்டத்தில் நாம் போக்க வேண்டும். பரஸ்பர அச்சம், அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியன ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.
நிலையான அரசியல் தீர்வின் மூலமே இந்த நம்பிக்கையை உறுதியாகக் கட்டியெழுப்ப முடி யும். தெற்கிலும் வடக்கிலும் உள்ள இடதுசாரி சக்திகளது நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாம் விரும்புகின்ற தேசிய ஒற்றுமையை உறுதி செய்ய முடியும் என்பது எனது திட நம்பி க்கை. பயங்கரவாதமும் யுத்தமும் இடது சாரி இயக்கத்தைப் பலவீனப்படுத்திவிட்டன. வடக்கிலே இடதுசாரி இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். சர்வதேச அரங்கில் ஏற்பட்டுவரும் ஆழமான மாற்றங்கள் பற்றியும் உங்களுக்கு எடுத்துக்கூற இது ஒரு சந்தர்ப்பம்.
இருபதாண்டுகளுக்கு முன்னால் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு (அதாவது சோசலிச கிழக்கு ஜெர்மனி வீழ்ச்சியடைந்தபோது), சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்தவுடன் உலகம் முழுவதிலுமுள்ள முதலாளித்துவத் தலைவர்கள் சோசலிசத்தின் முடிவு பற்றி ஹேஷ்யம் கூறினார்கள்.
சீனாவும் இந்தியாவும் உலகப் பொருளாதார வல்லரசுகளாக தோற்றம் பெற்றதுடன் நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாக உலகம் மாற்றமடைந்து வருகின்றது. உலகப் பொருளாதார மையம் ஆசியக் கண்டத்துக்கு மாறி வருகின்றது.
உலக நிதி நெருக்கடி மோசமடைந்து வருவதுடன் முதலாளித்துவத்தின் கொத்தளங்களான அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் ஆட்டங்கண்டுவிட்டன. லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட எழுச்சி சுமார் 13 இடதுசாரி மற்றும் இடதுசாரி ஆதரவுக் கட்சிகளை அதிகாரத்துக்குக் கொண்டு வந்திருப்பதால் அமெரிக்கக் கண்டத்தில் சக்திகளின் சமநிலை மாற்றமடைந்திருக்கின்றது.
புதிய பொருளாதாரக் கேந்திரங்களாக லத்தீன் அமெரிக்காவில் பிரேசிலும், ஆபிரிக்கக் கண்ட த்தில் தென்னாபிரிக்காவும், ஈரோ ஆசியாவில் சீனாவும் இந்தியாவும் இணைந்து ரஷ்யாவும் உலகப் பொருளாதார வல்லமையில் சம நிலையை முற்றாக மாற்றியமைத்துள்ளன.
டொலரின் பெறுமதி பலவீனமாடைந்துள்ளது. உலகின் வெளிநாட்டு நாணயமாற்று ஒதுக்கங்களில் 75 சதவீதம் வளர்முக நாடுகளுக்கு உரியவை. உலகின் வெளிநாட்டு நாணமாற்று ஒதுக்கங்களில் மூன்றில் ஒரு பங்கை சீனா தன் வசம் வைத்திருக்கின்றது.
இலங்கை தொடர்பான விடயங்கள் பற்றி ஐ. நா. மனித உரிமைக் குழுவிலும் சர்வதேச நாணய நிதியத்திலும் நடைபெற்ற கூட்டங்க ளில் மேலைநாட்டு வல்லரசுகள் தாம் விரும்பியபடி செயல்பட முடியாது என்பதில் இந்த மாற்றங்கள் பிரதிபலித்தன. உலக நிகழ்வுப் போக்குக்களின் புதிய எதார்த்தங்கள் இவை தான்.
இடதுசாரி இயக்கம் புத்துயிர் பெற்றுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் தேர்தல்கள் மூலம் அதிகாரத்துக்கு வந்துள்ளன. இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் சமீபத்தில் பின்னடைவைக் கண்ட போதிலும் கூட சித்தாந்த ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் ஏற்றப்போக்கில் உள்ளது. இன்று கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் ஒருமைப்பாட்டின் உலகமயமாக்கம் விளங்குகின்றது.
மக்கள் விடுதலை முன்னணி சிங்களக் குறுகிய தேசிய இன வெறி மற்றும் இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற அலைகளில் வேகமா கச் சவாரி செய்தது. இந்த இயல் நிகழ்வு இப்போது இறக்கப்போக்கில் உள்ளது. மார்க்சி யமும் குறுகிய தேசிய இன வெறியும் எண் ணெயும் நீரும் போன்றவை. அவை ஒருபோதும் கலக்க முடியாது. ம.வி.முவில் காணப்படும் உள் முரண்பாடுகள் பிளவுகளுக்கு வழிவிட்டன. அதுபோலவே தான் ஜாதிக ஹெல உறுமயவும்.
தோழர் கே. பத்மநாதன் 50 ஆண்டுகளுக்கு மேலாகக் கடமைப் பொறுப்புடனும் அர்ப்ப ணிப்போடும் உயர்த்திப் பிடித்த செம்பதாகையை மேலும் உயர்த்திப் பிடிப்பதே அவரை நினைவுகூர்வதற்கான ஒரே மார்க்கமாகும்.
அவர் ஒன்பது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார். அவர்கள் இன்று வன்னி மக்களின் அன்பையும் ஆதரவையும் வென்றுள்ளனர். சமூகச் செயற்பாட்டின் பல்வேறு துறைகளில் புகழ்பூத்த பிரமுகர்களாக விளங்குகின்றனர். அவர்கள் தமது வழிகளில் நாட்டிற்குத் தமது பங்குப் பணியைச் செலுத்தி வருகின்றனர்.
தோழர் பத்மநாதனின் நான்காவது சிரார்த்த தின சமயத்தில் அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் 66 வது ஆண்டு விழா வேளையில் ஆழ்ந்த மரியாதை, கெளரவம், நன்றியறிதலுடன் அவரின் நினைவாகத் தலை வணங்கி அஞ்சலி செலுத்துகின்றேன்.
T Sothilingam
நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மக்களை நேசித்தவனுக்கு மக்களை நேசிக்கும் மனிதனால் கொடுக்கப்பட்ட மரியாதையும் தமிழ் -சிங்கள சமூகத்திற்கு தெரிவிக்கும் சரியான செய்தியும் நன்றி தோழர் குணசேகரா அவர்களே
சாந்தன்
தோழர் பத்மநாதனுக்கு அஞ்சலி செலுத்துவதை நான் குறைகூறவில்லை. அதற்கு நன்றி சொல்கிறேன்.
ஆனால் குணசேகரா என்ன சொல்ல வருகிறார் என்றுதான் புரியவில்லை. முதலாளித்துவம் சரிகிறது என்கிறார்..சீனா உயர்கிறதென்கிறார். தென்னமெரிக்காவில் இடது சாரி நிலை என்கிறார். ஆனால் கியூபா ஸ்ரீலங்காவின் கொலைகளுக்கு ஆதரவாக வாக்களித்ததை விட்டுவிட்டார். தமிழ்க்கட்சிகள் பிற்போக்கு என்கிறார். ஆனால் தான் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவந்த கட்சிகளுடன் கூட்டு வைத்ததைப்பற்றி ஒன்றும் சொல்கிறாரில்லை. டொலர் விழுகிறது என்கிறார்…அனால் அமெரிக்காவே டொலரின் நானய மாற்று வீதத்தை குறைவாகவே வைத்திருக்க முயற்சி செய்கிறது என்பதனை சொல்ல மறுக்கிறார்.
இக்கட்டுரையை படித்த எனக்கு பந்திக்கு பந்தி முரண்பாடுதான் தெரிகிறது!
2005 ஜூலை யில் வன்னியில் நிலமை சரியில்லையாம் அதனால் நினைவஞ்சலி வைக்கவில்லையாம். அப்படி என்னதான் 2005 வன்னியில் சரியில்லாமல் இருந்தது இப்போது நன்றாக இருக்கிறது. தேனும் பாலும் ஓடுகிறதா? இல்லை மக்கள் சோசலிசத்தை வெற்றி பெற வைத்துள்ளனரா? என்னதான் சொல்கிறார் இவர்? ஒருவேளை சீனப்புரட்சியில் (கலாச்சாரப் புரட்சி) லட்சக்கனக்கான மக்கள் கொல்லப்பட்டது, ரஷ்யப் புரட்சிமுடிவுற்று சைபீரிய சிறைகள் நிரப்பப்பட்டது, செச்னியாவை சின்னாபின்னமாக்கியது போல இப்போது ஒற்றுமை காண்கிறாரோ? தயவுசெய்து பதில் சொல்வாரா?
chandran.raja
//2005 யூலையில் வன்னியில் நிலைமை சரியில்லையாம்………………….
தயவு செய்து பதில் சொல்வாரா?// சாந்தன்.
சாந்தன் நீண்டகால நித்திரையில் விழித்தெழுந்தவர்கள் மாதிரியல்லவா கேள்வி கேட்கிறார். வன்னியில் மே மாதம் 19 ம்திகதி வரை தமிழ்மக்களின் வாழ்வுக்கு ஏகபோக உரிமை கொண்டாடியவர்கள் யார்? கோவில்ஐயருக்கும் கல்விமகான்களுக்கும் துரோகி பட்டம் கொடுத்து பொட்டிட்டு ஜமலோகம் அனுப்பிவைத்தவர்கள் யார்? இலங்கையரசின் கூப்பன் அரிசியையும் மருந்தையும் வாங்கிகொண்டு ஏழை இராணுவவீரர்களை சுட்டுக்கொண்டவர் யார் சாந்தன்?
சீன ரஸ்சியப் புரட்சிகளின் வெற்றி தோல்விகளைப் பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் உலகத்தொழிலாளரும் பாட்டாளிகளுமே அதற்கு பொறுப்பெடுகிற கம்யூனிஸ்ட்டுகளுமே! விடுதலை என்ற பெயரில் பழைமைவாதிகளுக்கு கொலையை மூலதனமாகக் கொண்டவர்களுக்கும் எந்த பதிலும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. காரணம் அவர்கள் புரியமறுப்பதில் அடம்பிடிப்பதே. விமானக் குண்டுவீச்சும் இடபெயர்வுகளும் பங்கர்களும் மரணங்களும் இல்லாதிருப்பது தற்போதைக்கு வரப்பிரசாதமாகத் தெரியவில்லையா? பாலும் தேனுமா ஓடவேண்டுமென எதிர்பார்கிறீர்கள்? தமிழ்மக்களில் உங்களுக்கு உள்ள விசுவாசமே தனிரகமானது.
சாந்தன்
“…சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ச அரசியல் தீர்வு காண்பதில் விருப்பமில்லாதவராக இருக்கிறார். தமிழ் இன அழிப்பு தான் தீர்வாக இருக்கும் என்று அவர் கருதுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்…’
சந்திரன், நீங்கள் ‘..சீன ரஸ்சியப் புரட்சிகளின் வெற்றி தோல்விகளைப் பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் உலகத்தொழிலாளரும் பாட்டாளிகளுமே அதற்கு பொறுப்பெடுகிற கம்யூனிஸ்ட்டுகளுமே!..’ எனச்சொல்லி இருந்தீர்கள். ஸ்ரீலங்காவுக்கும் அது பொருந்துமா என அறிய ஒரு கம்யூனிஸ்ட்டின் இன்றைய ஸ்ரேற்மன்றை கொடுத்தேன்! குணசேகராவின் கருத்துகள் பொருந்துமாயின் இதுவும் பொருந்தும் தானே?
chandran.raja
சரி. அப்படித்தான் இருந்தாலும் சிந்தித்து செயல் ஆற்றுவதற்கு கலந்துரையாடுவதற்கு திரும்பதிரும்ப பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிறைய நேரம் காலமும் இருக்கிறது. காலமும் நேரம் போதாது போது கருதுபவர்கள் உடனடியாக பலனை எதிர்பார்பவர்களை மக்களின்நலன் கருதி பொறுமை காக்கும்படி சொல்லுங்கள். இந்த வார்த்தை கடந்தகாலத்தில் நாம்பட்ட துன்பகரமான அனுபவத்தில்லிருந்து வந்தவை.பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு இடுப்புகச்சையும் பறிகொடுத்த கதையாக இருக்கக்கூடாது.
palli
இது என்ன புது குழப்பம்; தடக்குபட்டு விழுந்ததால் அரசியல் பேசும் பல்லியும் சாந்தனுமே அமெரிக்காவின் பொருளாதாரத்தை பற்றியும் சீனாவின் பாதுகாப்பு பற்றியும் பேசும் போது; மிக நீண்ட கால அரசியல் அவதானியாக செயல்பட்ட சேகர இப்படி பேசுவதில் தவறென்ன இருக்கு; ஆனாலும் சாந்தன் நீங்க ரெம்பதான் காமடி செய்யிறீங்க; மகிந்தா மட்டும்மா அரசியல் தீர்வுக்கு கல் எறிந்தார், நம்ம புலிகள் என்ன அரசியல் தீர்வுக்கு தவம் கிடந்தனரா? கருனாவின் ஆயுதத்தை வேண்ட சொல்லவே பல லட்ச்சம் பணம் செலவு செய்து ஜெனிபாவையே அசிங்கபடுத்திய பெருமை புலிகளின் சரித்திரத்தில் ஒரு தரித்திர கல் அல்லவா? பெருபாண்மை தமிழரின் ஆதரவுடன் எதிர்கட்ச்சியில் அமர்ந்த அமிர்தலிங்கம்(கூட்டணி) இன்னிசை குழு கண்கட்டி வித்தையாக வாலிப பசங்கள உசுப்பேத்தி காட்டுக்கு அனுப்பியது எந்த அரசியல் யாப்பில் அடங்கும், திம்பு என்னாச்சு, டெல்லி உயர்மட்ட பிச்சாசுகளின் சந்திப்பு என்னாச்சு, நேற்று வந்த மகிந்தாவை நாக்கு முக்கா பாடுவதை விட்டு எம்மவர் எமக்கு (மக்களுக்கு) செய்த துரோகதனத்தை நினைவுபடுத்தி இனியாவது மக்களுக்காக்க ஒரு தீர்வுவர பிள்ளை பிடிகாரரும்; அடங்காத அரசியல் அப்புகாத்துகளும் அருகில் இருந்து நல்லது நடக்க பிராத்தனை செய்வதே சிறந்தது; இது சாந்தனுக்கு மட்டுமல்ல பல்லிக்கும்தான்;
சாந்தன்
பல்லி,
நீங்கள் நான் சொல்லாத விடயங்களை என் தலையில் சுமத்துகிறீர்கள். உங்கள் வாதப்படி மிக நீண்ட கால அரசியல் அவதானியாக செயல்பட்ட குணசேகரா இப்படி பேசுவதில் தவறென்ன இருக்கு என்கிறீர்கள். நீண்ட கால அவதானி ஏன் பந்திக்கு பந்தி முரணாகி குழப்புகிறார் என சொல்லுங்கள். …. யாழ் ரிம்மர் மண்டபத்தில் மாபெரும் அக்டோபர் புரட்சி பற்றி ஒவ்வொரு அக்டோபர் 25ம் திகதியும் தோழர் சண்முகதாசன் பேச்சை வருடாவருடம் கேட்டே குழம்பியவன் தானே நான்!
மேலும் நானா சொன்னேன் மஹிந்தா பற்றி? இல்லையே நான் சொன்னேன் இந்திய கம்மியூனிஸ்ற் கட்சியின் செயலாலர் (மிக முக்கிய பதவி) மஹிந்தா பற்றிச் சொன்னதையே. அதுவும் சந்திரன்……….. /சீன ரஸ்சியப் புரட்சிகளின் வெற்றி தோல்விகளைப் பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் உலகத்தொழிலாளரும் பாட்டாளிகளுமே அதற்கு பொறுப்பெடுகிற கம்யூனிஸ்ட்டுகளுமே/ …. எனின், மஹிந்த பற்றி அக்காவலர்களின் இன்றைய காவலர்களின் காரியதரிசி சொவதையும் நாம் ஏற்கத்தானே வேண்டும். இல்லையா? இதில் நான் எங்கே, என்ன பகிடி விடுகிறேன்? அத்துடன் ஏன் அமிர்தலிங்கம் இன்னிசைக்குழுவில் ஸ்ராட் பண்ணூகிறீர்கள்? அதற்கும் முன்னரே ராமநாதன், அருணாச்சலம், பண்டா செல்வா…..என்பவர்கள் மறந்து விட்டதா?
palli
//அதற்கும் முன்னரே ராமநாதன், அருணாச்சலம், பண்டா செல்வா…..என்பவர்கள் மறந்து விட்டதா?//
என்ன சாந்தன் எடுத்து காட்டுக்கே பலரையும் இழுப்பதா, நான் சொன்னவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வேறுபாடு, இது பற்றி பேசத்தான் வேண்டுமா?? அப்படியாயின் பேசலாம்,
// இந்திய கம்மியூனிஸ்ற் கட்சியின் செயலாலர் (மிக முக்கிய பதவி):://
அது புலியை ஆதரிக்க முன்பு; கமினிஸ்ட் சிவப்பு சட்டை போடலாம் தப்பில்லை, ஆனால் ரத்த கறையை நியாயபடுத்த போராட்டம் நடத்தகூடாது, புலியை ஆதரித்த அந்த மினிஸ்ட் ஏன் உடுக்க துணியின்றி அவதிபடும் மண்டப முகாம் அகதி பற்றி பேசவில்லை, அது பற்றி உங்களுக்கும் கவலையில்லை, அவர்களுக்கும் வரவு இல்லை;
//நீங்கள் நான் சொல்லாத விடயங்களை என் தலையில் சுமத்துகிறீர்கள்.//
திரும்பவும் நேரம் கிடைக்கும்போது இருவரது(பல்லி சாந்தன்) பின்னோட்டங்களையும் படிக்கவும்;
//நீண்ட கால அவதானி ஏன் பந்திக்கு பந்தி முரணாகி குழப்புகிறார் என சொல்லுங்கள்//
முப்பது வருடமாய் தவமாய் தவமிருந்த நம்ம தெய்வங்களே குழப்பும்போது அவதானியாக இருந்தவர் எழுத்தில் குழப்பம் வருவது மன்னிக்க முடியாத குற்றமா?? குழப்பத்துக்கு காரணம் எமது சூழ்நிலைதான் அவரல்ல;
மாயா
தமிழர் தலைவர்களால் தமிழன் தலைக்கு ஆபத்து ஏற்பட்டதே தவிர, தமிழர்களுக்கு விமோசனம் ஏற்பட்டதில்லை. அப்படி யாரையாவது தெரிந்தால் சொல்லுங்கள்? என்னைப் பொறுத்தவரை ஒருவரும் இல்லை. எல்லோரும் சுயநலப் பேய்கள். தமிழனின் இந்நிலைக்கு காரணம் தமிழ் தலைவர்கள்தான். இப்ப புலத்திலும் சிலர், தமது அரசியலை வளர்க்க ஒரு கூட்டம் …………..இறங்கி இருக்கிறாங்க. சுழட்டி அடிக்கிறாங்க. சுழன்று இவங்க விழுவாங்க. அது என் கணிப்பு.
palli
மாயாவின் அனுபவத்தை பல்லியால் மறுக்க முடியவில்லை;
கேதீஸ்வரன்
முள்ளி வாய்க்காலை நோக்கி முதலாளித்துவமும் பயணம் செய்கிறது போல இருக்கிறது. முதலாளித்துவம் என்பது ஒரு அடங்காபிடாரிப்பேய். இது எந்த சட்ட திட்டங்களுக்கும் அடங்காது. இதற்கும் வெகு விரைவில் பிடரியில் கொத்து கொடுத்து மக்களை இதன் கோரப் பிடியில் இருந்து மீட்கவேண்டும்.
மக்களுக்கு நன்மை பயக்ககூடிய ஜனநாயகமான ஒன்று முதலாளித்துவத்துக்கு மாற்றீடாக வரவேண்டும். பாரிய வங்கிகள் எல்லாம் சாதாரண முதலீடாளர்களின் பணத்தில் சூதாட்டத்திற்கு ஒப்பான வழிகளில் முதலிட்டு முதலீடாளர்களை ஏமாற்றி முதலீட்டாளர்களை வங்குரோத்தாக்கி ஒருசிலரை மட்டும் கோடீஸ்வரர் ஆக்குகிறார்கள்.
பன்னாட்டு நிறுவனங்கள் பலகோடி லாபத்திற்கு மத்தியிலும் லட்சக்கனக்கானவரை வேலையில் இருந்து நீக்கிவருகின்றன. அமெரிக்க மக்கள் தமது வீடுகளை அடைவு வைத்து கடன் வாங்கி வாழ்ந்து வீடுகளையும் வேலையையும் இழந்து தவிக்கிற நிலவரம் மேலும் மோசமாக அதிகரிக்கவுள்ளது. ஜனநாயகம் என்பது நாம் பார்வையாளர்களாக இருந்து ரசிக்கின்ற ஒருவிளையாட்டு அல்ல. நாம் எல்லாரும் கலந்து கொள்கின்ற ஒரு விடயம்தான் ஜனநாயகம்.
கேதீஸ்வரன்
பிரபாகரன் ஆயுதம் ஏந்திய அமிர்தலிங்கம்
அமிர்தலிங்கம் ஆயுதம் ஏந்தாத பிரபாகரன்
கோட்பாடுகள் அற்ற அரசியல் வாதிகளுக்கும் ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் மக்களை கூட்டம் கூட்டமாக ஈர்ப்பதற்கு சிங்கள எதிர்ப்பே ஒரே வழி