விவாதத்தை முடித்து கொண்ட பாதுகாப்பு கவுன்சில்

06bankimoon.jpgஐ.நா.  இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது கடைசிக் கூட்டத்தை முடித்துக் கொண்டது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். அகதிகள் முகாமிலிருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போனது தொடர்பாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது தொடர்பாகவும் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் விளக்கம் தரவில்லை.

இலங்கைப் பிரச்சினை குறித்து பொதுவாகவே அவர் பேசினார்.

ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று விவாதித்தது. இலங்கையில் இடம்பெற்ற போரின் கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போய் இருப்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நேற்று கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு வந்த அமெரிக்க தூதர் ரோஸ்மேரி டிகார்லோ கூறுகையில், இது சாதாரண கூட்டம்தான். இந்தக் கூட்டத்தின் முடிவில் எந்தவிதமான அறிக்கையும் வெளியிடப்பட மாட்டாது. இலங்கை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எங்களுக்கு தெரிவிக்கவுள்ளனர், அவ்வளவுதான் என்றார்.

இக்கூட்டத்தில் இலங்கை தவிர வட கொரியா குறித்தும் உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதாம். கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தனது ஆலோசகர்களான விஜய் நம்பியார் மற்றும் கிம் வோன் சூ ஆகியோருடன் கலந்து கொண்டார். பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் மிஷல் மோன்டாஸும் அவருடன் சென்றார். நேற்றைய கூட்டத்தில் கூறப்பட்டபடி பான் கி மூன் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக விளக்கம் ஏதும் தரவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் தெரிவிக்கிறது.

மேலும் நேற்றைய கூட்டம்  ஒரு மேலெழுந்தவாரியான கூட்டம் என்றும், அதிகாரப்பூர்வ கூட்டம் இல்லை என்றும் ஐரோப்பிய கவுன்சில் வட்டாரத் தகவல்கள் கூறுவதாக இன்னர் சிட்டி பிரஸ் கூறியுள்ளது. பிற்பகல் 3.15 மணிக்கு கூட்ட அரங்குக்குள் போன பான் கி மூன், ஜப்பான் தூதர் டகாஷு, இலங்கை தூதர் ஆகியோருடன் மாலை 5 மணியளவில் வெளியில் வந்தார். பான் கி மூனிடம் செய்தியாளர்கள் அகதிகள்முகாமிலிருந்து காணாமல் போனவர்கள் குறித்து கேட்டபோது, போர் பாதித்த பகுதியில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர்கள் பிடித்து வைத்திருப்பது குறித்து நான் அதிபர் ராஜபக்சேவுடன் பேசியுள்ளேன். இலங்கை வெளியுறவு அமைச்சரிடமும் பேசியுள்ளேன் என்றார்.

அப்போது உடன் இருந்த இலங்கை தூதர், சம்பந்தப்பட்ட டாக்டர்களை சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு, இலங்கை சட்ட திட்டத்தின்படி அனுமதி தரப்படுகிறது என்றார். அகதிகள் முகாம்களிலிருந்து காணாமல் போன தமிழர்கள்  குறித்தோ, கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறித்தோ பான் கி மூன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

நேற்றைய கூட்டத்தோடு இனிமேல் இலங்கை  தொடர்பாக பாதுகாப்பு  கவுன்சிலில் விவாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு விட்டது.

Show More
Leave a Reply to msri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • msri
    msri

    ஐ.நா.சபை குறளிவித்ததை காட்டியுள்ளது!
    மனிதப் படுகொலைகள் காணாமல் போனோர்கள் பற்றி> செயலாளர் நாயகம் விள்கம் என்றனர்! பின்னர் அவருக்கே விளக்கமின்மையால்> விளக்கவில்லையென்றனர்! இக்கூட்டம்>சாதாரண கூட்டம்> மேலெழுந்வாரியான கூட்டம்> அதிகாரபூர்வமான கூட்டம்அல்ல என்கின்றனர்! இக்கூட்டத்தோடு இனிமேல் கூட்டமே இல்லை என்கின்றனர்! ஐ.நா. சபையும் தமிழ் மக்களுக்கு குறளி வித்தையே காட்டியுள்ளது!

    Reply