முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் கூட அங்கு நின்று படுகாயமடைந்தவர்களுக்கு அயராது சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மூன்றுமருத்துவர்களும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இவர்களுடன் முள்ளியவளையில் இருந்து வெளியேறி வவுனியா வந்து சேர்ந்த மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்திபன் வவுனியா இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அது தாக்கியழிக்கப்படும் வரையில் பணியாற்றிய மருத்துவ அத்தியட்சகர் சண்முகராஜாவும் அவரது குடும்பத்தினரும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களர் டாக்டர் வரதராஜா, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களர் டாக்டர் சத்தியமூர்த்தி உட்பட ஆறு மருத்துவர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறி இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு நேற்று சனிக்கிழமை வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது
நண்பன்
பலரது உயர் காத்த இவர்கள் உயிரோடு திரும்பியதில் மகிழ்வாயிருக்கிறது. அனைத்து அப்பாவி மக்களும் அது போல் திரும்பியிருந்தால் மனம் நெகிழ்ந்திருக்கும். உங்கள் பணி சிறப்பானது மட்டுமல்ல. அர்ப்பணிப்பானது. நன்றி வைத்திய பெருந்தகைகளே…..நன்றி.
ராபின் மெய்யன்
அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது என்ற நிலை தான் இப்போது உள்ளது. இந்தச் செய்தி சர்வதேச ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ளது.ஐசிர்சி எவ்வளவு முயன்றும் அவ்ர்களை தொடர்பு கொள்ள முடியாமலிருப்பதாகவும், அவர்களுடைய உயிர்கள் பறிக்கப் பட்டிருந்தால் அது ஒரு போர்க் குற்றம் என்றும் சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. நடுநிலையை விரும்பும் தேசம்நெற் மூன்று கடமை வீரர்களின் தியாகத்தைப் பாராட்ட வேண்டும்…..அவர்களுடைய உயிர் பாதுகாப்புக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்..
தாமிரா மீனாஷி
மூன்று மனித மாணிக்கங்களது அர்ப்பணிப்பை நினைத்துப் பார்க்கும் அதே வேளையில் சிட்னியில் பணவசதியால் “பெயர் பெற்ற” சில மருத்துவர்களையும் அவர்களது ஊதுகுழல் வானொலிகள் பரப்பும் பசப்புகளையும் சாதாரண அறிவு கொண்டவர்களால் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வன்னியிலிருந்து மக்கள் இடம் பெயர ஆரம்பித்த கால கட்டத்தில் அங்கே போய் சேவை செய்ய அனுமதி கேட்டு ஐ.நா. சபைக்கு அப்பிளிக்கேசன் போட்டுவிட்டு காத்திருப்பதாக கதை கட்டி விட்டார்கள். (காலப் போக்கில் அதை மறந்தே விட்டார்கள்). தமிழ் மக்களின் பேரவலத்திலும் கூட தமக்குப் பெயர் கிடைக்கும்படி பார்த்துக் கொள்வது தான் அவர்களது இலட்சியம்.. அவர்களது பொய்களையும், பசப்புகளையும் உண்மை என்று பிரசாரம் செய்துகொண்டு அவர்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக இன்னொரு கூட்டம் அலைகிறது.. ஒரு சில வைரங்களின் மத்தியில் இத்தகைய பதர்கள் பலர் நிறைந்திருக்கிறார்கள்….எமது இனத்தின் இன்றைய இழி நிலைக்கு இவர்களே முதற் காரணம்…
palli.
கண்டிப்பாக அவர்கள் சேவையே அவர்களை காப்பாற்றும்.