ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதுடன் அவரது வெற்றிக்கு உறுதுணையாகப் பாடுபட வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகமெங்கும் பரவலாக அறிவித்து வருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த நான்காண்டு பதவிக் காலத்தில் மலையகத்திற்குப் பெரும் சேவையாற்றி யுள்ளாரென்றும், எதிர்வரும் காலங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைச் செய்ய உறுதி பூண்டுள்ளா ரென்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, தொழிலாளர்கள், ஆசிரிய சமூகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஜனாதிபதியையே ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென அறிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் கல்வி பிரதியமைச்சருமான மு. சச்சிதானந்தன் தெரிவித்தார்.
இதற்கமைய மாகாணம் மாகாணமாகத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக அவர் கூறினார். மலையகத்தில் கல்விக் குறைபாடுகளை நிவர்த்திக்கவும், பொறுப்பாசிரியர்களாக உள்ளவர்களை நிரந்தர அதிபர்களாக நியமிக்கவும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சச்சிதானந்தன், கடந்த நான்காண்டுகளில் ஆசிரிய நியமனம், சிற்றூழியர் நியமனம் என்பன வழங்கப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மின்சார விநியோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, மலையகப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
சமூக, பொருளாதார, கல்வி பாதுகாப்பு போன்றவை உள்வாங்கப்பட்டு மலையகத்தை மேம்படுத்த ஜனாதிபதி உறுதிபூண்டுள்ளாரென்றும் அவர் கூறினார். இதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் இரு தினங்களுக்கு முன் கொட்டகலை சென்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் போது மலையகத்திற்குக் கூடுதல் அபிவிருத்திகளை மேற்கொள்வதாக பெசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இ. தொ. கா. பிரதியமைச்சர்களின் பிரேரணைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படு வதாகவும் அவர் கூறியதாக பிரதியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்தார்.