மலையகம்

மலையகம்

வன்முறை அரசியல் கலாசாரத்தை மலையகத்திலிருந்து அகற்றுவோம் – மனோகணேசன் எம்.பி.

Estate Workersவேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி நாளன்று மலையகத்தில் வன்முறை கலாசாரம் தலைவிரித்தாயிருக்கிறது. இரண்டு பெரும் மலையக அமைச்சர்களின் கட்சியினர் தலவாக்கலையில் மோதிக்கொண்டுள்ளார்கள். மக்கள் பிரதிநிதிகளே முன்னின்று வன்முறை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்கள். மணித்தியாலக்கணக்கில் போக்குவரத்தை ஸ்தம்பிதம் அடையச்செய்து, கல்வீச்சுக்களை நடத்தி, வர்த்தக நிலையங்களை மூடச்செய்து வாக்களித்த நமது மக்களையே பீதிக்குள்ளாக்கிய தலைவர்களை பார்த்து முழு நாடுமே கைகொட்டி சிரிக்கின்றது. இத்தகைய அரசியல்வாதிகளுடனேயா நாமும் அரசியல் செய்கின்றோம் என நாங்களும் வெட்கித் தலைகுனிகின்றோம். பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் இந்த வன்முறை பாண்பாட்டாளர்களுக்கு மலையக மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் எம்.பி. கோரியுள்ளார்.

தலவாக்கலை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மனோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இத்தகைய வன்முறை சம்பவங்களை எதிர்நோக்கிய படியால் தான் எமது கட்சியினருக்கு வாகன பேரணிகளையும் அரசியல் பிரசாரத்தையும் வேட்புமனு இறுதி தினத்தன்று நடத்தவேண்டாம் என நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம். நாம் எதிர்பார்த்தபடியே சட்டவிரோத ஆயுதங்களும் மதுவும் துணைவர வன்முறை நாடகம் அரங்கேறி இருக்கின்றது. 150 ஆண்டுகளாக உழைத்து, உழைத்து உருக்குலைந்து போயிருக்கும் அப்பாவி மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையை உயர்த்தி நிறுத்திட வக்கற்றவர்கள் வன்முறையை தூண்டுகின்றார்கள். வாக்களித்து உங்களை பதவிகளில் அமர்த்திய எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமலாவது இருந்தால் போதும் என மலையக வாக்காளர்கள் கையெடுத்து கும்பிடும் நிலைமை உருவாகியுள்ளது.

மத்திய மாகாணசபை கலைக்கப்பட்ட மறுதினம் காலை முதல் நுவரெலியா மாவட்டம் முழுக்க எமது கட்சியினரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. எமது சுவரொட்டிகளை தேடித்தேடி அவற்றின் மீது தமது சுவரொட்டிகளை மலையக மக்கள் முன்னணியினர் ஒட்டினார்கள். அதேபோல், ஹட்டன் வெலியோய தோட்டத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த எமது ஆதரவாளர்கள் மீது இ.தொ.கா.வைச்சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்கள். எனது கவனத்திற்கு இச்சம்பவங்கள் கொண்டுவரப்பட்டன. மலையக மக்களின் நன்மை கருதி பொறுமையுடனும் ஜனநாயக உணர்வுடனும் நடந்துகொள்ளும்படி எனது கட்சியினருக்கும் வேட்பாளர்களுக்கும் நான் கூறியிருக்கின்றேன். இன்று ஒரே அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஒரே அரசாங்க கூட்டணியில் போட்டியிடுகின்றவர்கள் தங்களுக்குள்ளே மோதிக்கொள்கின்றார்கள். இது தொடர்பிலே அரசாங்க தலைமையிடம் முறையீடு செய்யப்போவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றார்கள். எங்கே முறையிட்டு என்ன பயன்?

மலையக கட்சிகள், வட,கிழக்கு தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் தங்களுக்குள்ளே முட்டிமோதி நாசமாக வேண்டும் என்பதுதானே அரசாங்கத்தின் திட்டம். மலையக மக்கள் அப்பாவிகள்தான் பொறுமைசாலிகள்தான், ஆனால் முட்டாள்கள் அல்ல என்பது தேர்தல் முடிவுகளின் மூலம் நிரூபணமாகும்.