அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அமைச்சர் டக்ளஸ் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியல்ல – சபையில் அமைச்சர் தினேஷ் அறிவிப்பு

parliament.jpgஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி அல்லவென்று அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய அரசின் குற்றச்சாட்டுகளிலிருந்து அமைச்சர் தேவானந்தா விடுவிக்கப் பட்டுள்ளதால் அவரை தேடப்படும் குற்றவாளியெனக் கூற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போதே அமைச்சர் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். இந்தப் பிரேரணையில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. ஸ்ரீரங்கா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளியெனவும், அவ்வாறான சர்வதேச குற்றவாளியொருவருடன் ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளதாகவும் கூறினார். இந்தக் கூற்றை அமைச்சர் தினேஷ் குணவர்தன கடுமையாக எதிர்த்தார். அமைச்சர் டக்ளஸ் குற்றமற்ற நிரபராதி எனவும் அமைச்சர் கூறினார்.

அரசியலமைப்பு திருத்தத்தின்போது சிறுபான்மை சமூகங்களின் நலன் குறித்து சிந்திக்க வேண்டும் முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தல்

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வரும்போது சிறுபான்மைச் சமூகங்களின் நலன் குறித்து அதிகளவு சிந்தித்துச் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலமைப்புத் திருத்தம், தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் அரசு சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கம் அரசியலமைப்பைத் திருத்தும் யோசனையை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து அதற்கு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது தொடர்பாக கேட்டபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் விளக்கமளித்த ஹஸன் அலி கூறியதாவது;

அரசாங்கம் அதன் சொந்த நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியிலிறங்கியுள்ளது. இவ்வாறான சுயநல நோக்கத்தின் பிரதிபலன் சிறுபான்மை மக்களுக்குப் பாதகமான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

இது தொடர்பிலான அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கைகளைப்பொறுத்தே எமது கட்சி எந்தத் தீர்மானத்துக்கும் வர முடியும். அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுவிட்டால் மாத்திரம் அரசியலமைப்பை மாற்றிவிட முடியாது. அரசியலமைப்புத் திருத்தத்துக்கான யோசனைகளை அது தயாரித்து பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசியலமைப்புத் திருத்தமோ, தீர்வுத்திட்டமோ, எதுவாக இருப்பினும் அவற்றை நிறைவேற்றுவதற்கு முன்னர் அரசின் யோசனைகள் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டறிய வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அவர்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக அவை அமைய வேண்டும்.அரசியலமைப்புத் திருத்தம் தீர்வு விடயங்கள் தொடர்பில் ஆளுந்தரப்பிலுள்ள சிறுபான்மைத் தலைவர்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய முக்கியத்துவத்தையும் இங்கு நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். வெறும் கை தூக்கிகளாக அவர்களால் செயற்பட முடியாது. தமது சமூகங்களுக்குத் துரோகமிழைக்கப்படக்கூடிய முடிவுகளுக்கு அவர்கள் துணைபோய்விடக்கூடாது.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசு அதன் யோசனைகளை முன்வைத்த பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை ஆராய்ந்த பின்னரே அடுத்த நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி தெரிவித்தார்.

பொது இடங்களில் முத்தமிட்ட 200 ஜோடிகளை பொலிஸார் கைது

பகிரங்கமாக முத்தமிடுவதால் சங்கடமான நிலைமை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்ட புகார்களையடுத்தே பொலிஸார் இளம் ஜோடிகளை கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

மாத்தறை,குருநாகல் மாவட்டங்களில் கடந்த இருவாரங்களில் சுமார் 200 ஜோடிகளை தடுத்து வைத்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்குத் தெரிவித்திருக்கிறார்.பொது இடங்களில் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டதற்காக அவர்களை நாம் தடுத்து வைத்தோம்.வழமையாக பெற்றோருக்கு அறிவித்துவிட்டு அவர்களை விடுவித்து வருகிறோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செவதில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஹோட்டல்களில் அந்தரங்கமாக இருப்பதற்கு அவர்களிடம் பணவசதி இல்லாததால் கடற்கரைகளில் இளம் ஜோடிகள் அந்நியோன்யமாக இருப்பதாக மாத்தறை வாசியொருவர் கூறியுள்ளார்.தலைநகர் கொழும்பின் கடற்கரைகளில் குடைக்கு கீழ் இருக்கும் ஜோடிகள் அடிக்கடி சுற்றிவளைக்கப்படுவதுண்டு.

வங்கக் கடலில் தாழமுக்கம்: புயல் சின்னமாக மாறும் அபாயம் – பலத்த காற்றுடன் மழை பெய்யும்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள சிறிய தாழமுக்கம் காரணமாக புயல் சின்னம் உருவாகும் அபாயம் உள்ளபோதும் எவ்வகையிலும் இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்படமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள இத்தாழமுக்கம் காரணமாக தமிழ் நாட்டுக்கே அதிகளவு மழை பெய்யும். இலங்கைக்கு தென் மேற்கு பருவ பெயர்ச்சி மழையுடன் காற்று சற்று வேகமாக வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

குறிப்பாக தென் மாகாணம், சப்பிரகமுவ மாகாணம், மத்திய, மேல் மாகாணங்களுக்கு அதிகளவு மழை வீழ்ச்சி ஏற்படும். நேற்றும், இன்று காலை வேளைகளிலும் வீசிய கடும் காற்றின் வேகம் இன்று மாலை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் எனவும் அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இதேவேளை வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்:- கேரளாவிலும், தமிழகத்தின் கேரளாவையொட்டியுள்ள பகுதிகளிலும் தென் மேற்குப் பருவ மழை வலுத்துள்ளது. கர்நாடகத்திலும் மழை தொடங்கி பெய்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டது. இதனால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

இரவு 9.30 முதல் மு.ப. 9.30 வரை பயன்படுத்தினால் சலுகை – சட்டவிரோத மின்பாவனைக்கு கடும் தண்டனை

9chnpika.jpgஅதிக பயன்பாடு குறைந்த நேரங்களில் மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைக் கட்டணம் வழங்கவும் மின்சாரப் பட்டியலை முழுமையாக ஒரு மாதத்துள் செலுத்துபவர்களுக்கும் சலுகை வழங்கவும் மின்சார சபை தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அதிக மின்பாவனை குறைந்த நேரங்களான இரவு 9.30 மணி முதல் காலை 9.30 மணி வரையிலான காலப் பகுதியில் மின்பாவனையை மேற்கொள் ளுமாறு தொழிற்சாலைகளிடமும் கோரவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். மின்சக்தி அமைச்சில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் சுமார் 4 மில்லியன் பேர் மின்சார சபைக்கு வாடிக்கையாள ர்களாகவுள்ளனர். ஒரு கோடி மக்கள் மின்சாரத்தை பாவிக்கின்றனர். சாதாரணமாக வீட்டுப் பாவனைகள் இரவு 8.30க்குப் பின்னர் மின் பாவனை குறைவடைகின்றன. குறிப்பிட்ட மின்பாவனை குறைவான காலப் பகுதிக்குள் நீர் வழங்கல் சபை நீர்வழங்கலுக்காக மின்சாரத்தை பயன்படுத்துமேயானால் அவர்களுக்கும் மின் கட்டணத்தில் சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தொழிற்சாலைகளில் அதிக பயன்பாடு நேரங்களில் மின்சாரத்தைப் பாவிப்பார்களேயானால் மின் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் கூடுதலாக மின் பாவனையை மேற்கொள்ளும் தேசிய நீர் விநியோக சபை, ஹோட்டல்கள் மற்றும் குளிர்சாதனம் போன்ற வகைகளுக்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படு கின்றது. இவை அதிக பயன்பாடு நேரங் களில் மின்சாரப் பாவனையை தவிர்த்து அதிக பாவனையற்ற நேரங்களில் பயன் படுத்துமாறும் இலங்கை மின்சார சபை அறிவுறுத்தவும் உள்ளது. 2012ம் ஆண்டில் நாட்டில் உள்ள சகல வீட்டுப் பாவனையாளருக்கும் மின்சாரத்தை வழங்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மின்சார பட்டியலிலுள்ள கட்டணத்தை 2 1/2 மாதத்துக்குப் பின்பே பாவனையாளர்கள் செலுத்துகின்றனர். ஒரு மாதத்துக்குள் பட்டியலிலுள்ள தொகையை முற்றாக செலுத்துபவருக்கும் சலுகையொன்றை வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து 4.5 மில்லியன் ரூபா தண்டப் பணமாக அறவிடப் பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் வித்தியாகொடை தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் சட்டவிரோத மின் பாவனையாளர்கள் கண்டு பிடிக்கப் பட்டனர். சட்டவிரோத மின் பாவனையாளர்களை கண்டறிந்து தண்டப் பணம் அறவிடும் திட்டம் எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஜூன் (1)ம் திகதி ஜூன் (3) திகதி வரை காலப் பகுதியிலேயே மின்சார சபையின் திடீர் சோதனைக் குழுவொன்று மேற்கொண்ட நட வடிக்கையின் பேரிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டன. பொலிஸாரின் அனுசரணையுடன் சம்பந்தப்பட்டோருக்கு, எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டே உடனுக்கு உடன் தண்டப் பணம் செலுத்தக்கூடிய வகையில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அவர் மேலும் தகவல் தருகையில் :- கிளிநொச்சியிலிருந்து சுன்னாகம் வரை செல்லக்கூடிய மின்சாரத் திட்டமொன்று அடுத்த மாதம் அமுல்படுத்துவதற்கு வெளிநாட்டு நன்கொடை நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத் திடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடன் அட்டை பாவனைமுறை தொடர்பில் சட்டத் திருத்தம் – மோசடியைத் தடுக்க திட்டம்

கடன் அட்டை (கிரடிட் காட்) மோசடிகளைத் தடுப்பதற்கு காத்திரமான செயற்திட்டமொன்றினை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதற்கிணங்க கடன் அட்டைப் பாவனைமுறை தொடர்பில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதுடன் அவ்விபரங்களை வர்த்தமானியில் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர்; கடனட்டை மோசடிகளைத் தடுக்கும் ஒரு அம்சமாக கடனட்டை சேவை வழங்குநர்கள் தமது விபரங்களை மத்திய வங்கியில் பதிவது கண்டிப்பானதாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே ஏழு உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்து

man-raja.jpgஇந்தியா வுக்கும் இலங்கைக்குமிடையே பொருளாதாரம், சமூகத்துறை, நீதித்துறை, மகளிர் விவகாரம், மின்சாரம், போக்குவரத்து ஆகிய துறைகளுடன் சம்பந்தப்பட்ட ஏழு உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்திடப்பட்டன.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் நேற்று (09) மாலை ஹைதராபாத்திலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பின் போதே மேற்படி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

சிறுகைத்தொழில் தொடர்பாக ஏற்கனவே இருந்துவந்த உடன்படிக்கையை புதுப்பிக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை முதலில் கைச்சாத்தானது.

இலங்கை வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகளை பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் நீதித்துறை உதவிகள் தொடர்பான உடன்படிக்கை ஆகியவற்றில் இலங்கை யின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்தியாவின் உள் துறை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஸ்ரீ. ஜீ. கே. பிள்ளையும் கைச்சாத்திட்டனர்.

மகளிர் வர்த்தக நிலையம் மற்றும் சமூக ஆய்வு நிலையம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இரு நாடுகளுக்கு மிடையிலான கலாசார பரிமாற்றம் தொடர்பான உடன்படிக்கை, மற்றும் இந்தோ – லங்கா மின்சார கட்டமைப்பு தொடர்பான சாத்திய ஆய்வு உடன்படிக்கை ஆகியவற்றில் இலங்கையின் சார்பில் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் இந்தியாவின் சார்பில் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவும் கைச்சாத் திட்டனர்.

மன்னாரில் இருந்து மடு வரையிலான ரயில் பாதைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ரயில்வே பொது முகாமையாளர் பி. பி. விஜேசேகரவும் இந்தியாவின் சார்பில் ரயில்வே பாதை முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீமோஹன் திவாரியும் கைச்சாத்திட்டனர்.

17வது திருத்தச் சட்டத்தை மீண்டும். திருத்தி அமுல்படுத்த வேண்டும்

2001ம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 17வது திருத்தச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு அவை அமுல்படுத்தப்பட வேண்டு மென்ற தீர்மானமொன்று நேற்று முன்தினம் (08) மத்திய மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்தை மத்திய மாகாண சபை மத்திய அரசுக்கு பிரேரணையாக முன்வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மத்திய மாகாண சபையின் 5வது சபைக் கூட்டம் நேற்று முன்தினம் பள்ளேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபையின் சபைக் கூட்ட மண்டபத்தில் பிரதித் தலைவர் டப்ளியூ. எம். யசமான தலைமையில் இடம்பெற்றது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். இராஜரட்ணத்தினால் கடந்த 18ம் திகதி சபைக்கு முன் வைக்கப்பட்ட குறித்த பிரேரணை நேற்று முன்தினம் சபை கலந்துரையாடலுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இப்பிரேரணைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினர் ஆதரவு வழங்கினர்.

அரசின் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் மலையக மக்கள் சார்ந்த சரத்து முன்வைப்பு

அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு திருத்தத்தில் மலையக மக்கள் சார்ந்த சரத்தொன்றையும் முன்வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துக்கள், ஆலோசனைகள் திரட்டப்பட்டு ஒரு பொதுவான கோவையாக கருத்துக்கள் இதில் முன்வைக்கப்படவுள்ளன. தேர்தல் மாற்றம், உள்ளூராட்சித் துறை சீர்த்திருத்தம் உள்ளிட்ட மலையக மக்கள் சார்ந்த முக்கிய பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்படுமென இதற்கென நியமிக்கப்பட்டுள்ள விதந்துரைக் குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.பிடி. தேவராஜ் தெரிவித்தார்.

மேற்படி சகல அமைப்புகளுடனும் தனித்தனியாகக் கலந்துரையாடிய பின் அனைத்து அமைப்புக்களையும் ஒன்றாக கூட்டி அதனூடான பொதுக் கருத்தே அரசியலமைப்புக்கான சரத்தாக முன்வைக்கப்படுமென குறிப்பிட்ட அவர், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கென கடந்த வாரங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மனோகணேசன் தலைமையிலான கட்சி, திகாம்பரம் எம்.பி. தலைமையிலான கட்சி மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களுடனும் பேச்சு நடத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், ஏனைய அமைப்புக்களுடனும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமுதாய ஆலோசனைக் குழு என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மேற்படி குழுவில் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ் தலைவராகவும் தொழிலதிபர் தெ.ஈஸ்வரன், குமார் நடேசன் ஆகியோரும் அங்கத்தவர்களாக உள்ளனர்.

அரசியலமைப்பு திருத்தத்தில் தேர்தல் மாற்றம், உள்ளூராட்சித் துறை மாற்றம் உள்ளிட்ட மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சார்ந்த விடயங்களும் ஆலோசனைகளாக முன்வைக்கப் படவுள்ளன.

இது தொடர்பில் பல அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்களின் ஆலோசனைகள் அறிக்கைகளாகக் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கூட்டமைப்பு-அரசு பேச்சு தொடர்ந்து இடம்பெறும். செய்தியாளர் மாநாட்டில் இரா.சம்பந்தன்

Sambanthan_R_TNAதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், இணைந்து செயற்படவும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் இணக்கம் கண்டுள்ளதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் அடுத்த கட்டப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ரசாங்கம், இடம்பெயர்ந்து மீள்குடியேறும் மக்களுக்கு இன்னும் பணிகளை ஆற்ற முடியுமென்றும் அதற்காக உலக நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொடுக்கத் தயாரென்றும் கூறிய சம்பந்தன் எம்.பி. அதற்காக சர்வதேச நாடுகளுக்கு நேரடியாகச் சென்று கோரிக்கை விடுக்கவும் தயார் எனத் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற குழு அறையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அண்மையில் வன்னிக்கு விஜயம் செய்து, 28 கிராமங்களில் மீள்குடியேறிய மக்களின் நிலவரங்களைக் கூட்டமைப்பினர் நேரில் அவதானித்து ஆராயந்துள்ளனர். இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையொன்றை நேற்றுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த சம்பந்தன் எம்.பி. செய்தியாளர் மாநாட்டிலும் அதனை வெளியிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் அரசாங்கத்திற்குத் தார்மீக ரீதியாகவும் சட்டரீதியாகவும் கடப்பாடு உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர் வடக்கில் தமது விஜயத்தின்போது நேரில் தெரிந்து கொண்ட குறைபாடுகளை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ட்டமைப்பினர் அண்மையில் ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பு தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. சந்திப்பைத் தொடர இணக்கம் கண்டிருப்பதாகவும் கூட்டமாக அல்லாமல் சிறிய சிறிய குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தையைத் தொடரவுள்ளதாகவும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதை இருதரப்பும் ஏற்றுக் கொண்டதாகக் கூறிய சம்பந்தன் எம்.பி, “ஜனாதிபதியை நாம் சந்திக்கச் சென்ற போது, புலிப் பயங்கரவாதிகள் கேட்டதை என்னிடம் கேட்காதீர்கள் என்றார். நாம் அதனைக் கேட்க வரவில்லை என்று கூறினேன். நாம் அரசாங்கத்தைக் குறைகூறவில்லை. அரசாங்கம் மக்களுக்குப் பணியாற்றி இருக்கிறது. இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது.

கடந்த காலங்களில் அரசுடன் இணைந்து பணியாற்றும் சூழல் ஏற்படவில்லை. அரசுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தவில்லை என்று கூறுவது தவறு. அழைத்த அத்தனைப் பேச்சுவார்த்தைக்கும் சென்றிருக்கிறோம். இனி மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் இணைந்து செயற்படுவோம்” என்றும் தெரிவித்தார்.

“உதவி வழங்கும் நாடுகளுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?” என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த சம்பந்தன், ‘இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். சொந்தத் தொழிலுடன் சுகபோகமாக வாழ்ந்த மக்கள் இன்று வெறுங்கையுடன் நிற்கிறார்கள். அவர்களை மீளவும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வருவதற்குப் பெருந்தொகைப் பணம் அவசியமாகிறது. எனவே, உதவியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நிதியைப் பெற்றுக் கொடுக்கும் அதேநேரம் அது உரிய முறையில் செலவிடப்படுகிறதா என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.