அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சிறைச்சாலைகளிலுள்ள 32,555 கைதிகளில் 4,381 பேர் பாடசாலைக்குச் செல்லாதவர்கள்

handcuff.jpgஇலங் கையிலுள்ள சிறைச்சாலைகளில் 32 ஆயிரத்து 555 கைதிகளில் 4,381 பேர் ஒரு நாளாவது பாடசாலை செல்லாதவர்களாக இருப்பதுடன் 750 பேர் உயர் கல்வி பெற்றவர்களாகவும் அதில் 21 பேர் பட்டதாரிகள் என்றும் தெரியவருகிறது. சிறைச்சாலை ஆணையாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; வெலிக்கடை, போகம்பறை , மஹர, முதலான பிரதான சிறைச்சாலைகள் உட்பட ஏனைய அனைத்து சிறைச்சாலைகளுமாக 27 நிறுவனங்களில் 32,555 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுள் 1,014 பேர் பெண்களாவர். இவர்களில் 520 பேர் போதைப் பொருள், தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களாவர். அதிலும் இரு பெண்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபாசப்படம் எடுத்தவர் பிணையில் விடுவிப்பு

camara.jpgயுவதி ஒருவரை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட் படுத்தியதுடன், ஆபாசமாகப் படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிங்கள பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை மாத்தறை நீதிவான் ஏம்.ஏ.கே. பீரிஸ் 75 ஆயிரம் ரூபா சரீரப்பிணையிலும் 7500ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதித்தார்.

வெலிகம பே ஹோட்டலில் புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து சந்தேக நபர் யுவதியை மாத்தறை பஸ் நிலையத்தில் கைவிட்டுச் சென்றுள்ளார் என பொலிஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்தயுவதி தனது ஊரான தியகொடைக்குச் சென்று பெற்றோருக்கு விடயத்தைக் கூறி தியகொட பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

தியகொடை பொலிஸாரும் மாத்தறை பொலிஸாரும் இணைந்து இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டனர் சந்தேக நபரைக் கைதுசெய்தனர். சந்தேக நபர் வெள்ளிக்கிழமை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். மேல் விசாரணையை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் யுவதியை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி அதன் அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

வவுனியா வைத்தியசாலையின் தமிழ் டாக்டர்களுக்கு அனுப்பப்பட்ட அச்சுறுத்தல் கடிதம் குறித்து விசாரணை

வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 தமிழ் வைத்தியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் கடிதம் தொடர்பாக விசாரணைகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். அச்சுறுத்தல் கடிதங்கள் தனித்தனியே தமிழ் வைத்தியர்களுடைய முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறித்த கடிதப் பிரதிகள் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையில் பாதுகாப்பின்மை காரணமாக வவுனியாவிலிருந்து வெளியேறிய பெரும்பான்மை வைத்தியர்கள் அனைவரும் மீண்டும் கடமைக்குச் சமுகமளித்துள்ளனர் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது. இவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 60 பொலிசாரைக் கொண்ட குழு ஒன்று 24 மணி நேரமும் வைத்தியசாலை மேல் மாடியில் நிலைகொண்டுள்ளது. பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் தங்கும் விடுதிகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதான வாசல் உட்பட வைத்தியசாலை வளவிற்குள் செல்லும் சகல வழிகளிலும் பொலிஸார் கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜெனீவா சாசனத்துக்கு எதிராக இலங்கையில் போர் குற்றங்கள்; சர்வதேச சமூகம் மௌனம் -தமிழ் கூட்டமைப்பு விசனம்

ahathi.jpgயுத்தத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான கடுமையான பொருளாதார, உணவு, மருத்துவ தடைகள் ஜெனீவா சாசனத்தின் பிரகாரம் போர் குற்றங்கள் மாத்திரமன்றி தமிழ் மக்களுக்கு இனப்படுகொலையின் ஓரங்கமான கொள்கையுமாகும் என்று சுட்டிக்காட்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சர்வதேச சமூகத்தின் மௌனம் குறித்து ஏமாற்றத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தமிழ் கூட்டமைப்பின் பத்திரிகை அறிக்கை தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; விடுதலைப்புலிகளின் பகுதிகளில் தமிழ் மக்களும் பொதுமக்களின் உள்சார் கட்டமைப்பும் குறிப்பாக ஆஸ்பத்திரிகள் வேண்டுமென்றே படிமுறையாக ஆயுத படைகளினால் இலக்கு வைக்கப்படுகின்றன. நத்தார் / புதுவருடம்/ தைப்பொங்கல் பண்டிகை காலப்பகுதியான தற்போதைய காலகட்டத்தில் இந்த நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 17 இல் வட்டக்கச்சி பகுதியில் 4 முறை இலங்கை வான்படை நடத்திய தாக்குதலில் 5 மாத குழந்தை மற்றும் 25 வயது இளைஞர் கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் அகதிகளாயினர். டிசம்பர் 19 இல் முள்ளிவாய்க்கால் கிராமத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். அதேநாளில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் முல்லைத்தீவு பொதுமருத்துவமனை நாசமடைந்தது. மருத்துவப் பணியாளர் இருவரும் காயமடைந்தனர். டிசம்பர் 20 இல் படையினரின் எறிகணைத் தாக்குதலில் வட்டக்கச்சியில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் குடியிருப்புகள் நாசமடைந்தன. இதேநாளில் முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை இலக்கு வைத்து வான்படையினர் 8 குண்டுகளை வீச மீன்பிடி படகுகளும் தளபாடங்களும் அழிந்துபோயின.

டிசம்பர் 25 நத்தார் நாள் கிளிநொச்சி பொது மருத்துவமனையை இலக்கு வைத்து படைத்தரப்பு மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் பலர் உயிர் தப்பினர். டிசம்பர் 27 இல் வான்படையினர் இயக்கச்சி, இரணைமடு மற்றும் வட்டக்கச்சி பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் 24 வயது இளம் பெண் கொல்லப்பட்டார். 10 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். 18 வயது இளம்பெண் இரு கால்களையும் இழந்தார். டிசம்பர் 30 இல் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கிளிநொச்சி மருத்துவமனை கடும் சேதமடைந்தது.

டிசம்பர் 31 இல் படையினர் முல்லைத்தீவு பரந்தன் வீதியில் உள்ள முரசுமோட்டை பகுதியில் மக்கள் குடியிருப்புகளை இலக்குவைத்து நடத்திய தாக்குதலில் மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 16 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். கரைச்சி பகுதியில் அதே நாளில் இடம்பெயர்ந்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஜனவரி 1 இல் புதுவருடப் பிறப்பு நாளில் மீண்டும் முரசுமோட்டை மற்றும் கண்டாவளை பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.

ஜனவரி 2 இல் புதுக்குடியிருப்பு பகுதியில் படையினர் நடத்திய தாக்குதலில் இரு நோயாளர் காவு வாகனங்களும் 13 பொதுமக்களும் படுகாயமடைந்தனர். அதேநாளில் முரசுமோட்டை 3 ஆம் கட்டையில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். ஜனவரி 3 ஆம் நாள் வன்னி புளியம்பொக்கணை பகுதியில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் படுகாயமடைந்தனர். வன்னிப் பெருநிலப்பரப்பில் 3 இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்கள் உள்ளக அகதிகளாகி உள்ளனர்.

ஜெனீவா சாசனங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு இனப்படுகொலையை அரசு மேற்கொண்டு வருவது போர்க்குற்றமாகும். ஆனாலும், இது தொடர்பில் சர்வதேச சமூகம் தொடர் மௌனம் காத்து வருகிறது. மாறாக இலங்கைக்கு படைத்தரப்பு உதவிகளை வழங்கி வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி: 12 எம்.பிக்களும் இன்று ஆளும் தரப்பில் அமர்வு

parliamnet-1511.jpg
அரசாங்கத்தில் இணைந்து கொண்ட தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரும் இன்று (6) ஆளும் தரப்பு ஆசனங்களில் அமர உள்ளதாக கட்சி செயலாளர் நந்தன குணதிலக தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணி அண்மையில் அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது.

இதன்படி தமது கட்சி எம்.பிக்கள் அரச தரப்பில் அமர உள்ளதாக அவர் கூறினார். இதேவேளை தே.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரையும் ஆளும் தரப்பில் அமர வைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடையாது எனவும் சிலரை மட்டுமே ஆளும் தரப்பில் அமரவைக்க முடியும் எனவும் உதவி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நைல் இத்தவெல கூறினார். ஆளும் தரப்பில் 116 ஆசனங்களே உள்ளதெனவும் சிரேஷ்ட அடிப்படையில் உள்ளவர்கள் ஆளும் தரப்பில் உட்கார வைக்கப்படுவர் எனவும் கூறிய அவர் கூறினார்.

பொங்கல் பரிசாக யாழ். மாவட்டத்துக்கு 24 மணிநேர மின் விநியோகம்

power1.jpgயாழ். மாவட்டத்துக்கு பொங்கல் பரிசாக 24 மணித்தியால மின்சார விநியோகத்தை மின் சக்தி வள அமைச்சு வழங்கவுள்ளது. தற்போது சீன நிறுவனத்தினால் சுன்னாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “நோத்பவர்’ மின் உற்பத்தி நிலையம் தனது செயல்பாட்டை பூரணப்படுத்தியிருப்பதால் அடுத்த இருவாரங்களுக்குள் உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிறுவனம் தினமும் 35 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் திறன் கொண்டுள்ளதால், குடாநாடு முழுவதும் நாள் முழுவதும் தேவையான மின்சாரத்தை வழங்க முடியுமென யாழ். மாவட்ட மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது குடாநாட்டுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் கடந்த வருடத்துடன் முடிவடைவதால், புதிய சீன நிறுவனமே மின் உற்பத்தியை தொடரமுடியும். இதேவேளை வடபகுதிக்கு லக்ஸபான மின்சார பாதையை விஸ்தரிப்பதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக அரச கட்டுப்பாட்டுப் பகுதியாகவுள்ள மாங்குளம் வரையான விஸ்தரிப்பு வேலைகள் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ளன.

கிளிநொச்சி வீழ்ந்ததால் புலிகள் ஊடுருவாமல் தடுக்க நடவடிக்கை- தமிழக கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு

tamils-conference.jpgசென்னையில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் வர்த்தக மாநாட்டுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாலும் இலங்கையில் கிளிநொச்சி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் விடுதலைப் புலிகள் ஊடுருவி வருவதைத் தடுக்கவும் தமிழக கடல் பகுதியில் தீவிர ரோந்துப் பணியும் கண்காணிப்பு பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் மாநாட்டில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் வாழும் இந்திய தொழில் அதிபர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் தாக்குதல் நடத்தப்போவதாக சவூதி அரேபியாவில் இருந்து ஈமெயில் மூலம் தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். எங்கள் அடுத்த தாக்குதல் இந்த மாநாடு தான் என்று மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் தாக்குதல் நடத்திய “டெக்கான் முஜாகிதீன்’ தீவிரவாத இயக்கம் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளது. மிரட்டல் கடிதம் வந்தது பற்றி சென்னை சைபர் கிரைம் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் தொழில் மாநாட்டுக்கு வரலாறு காணாத வகையில் 5 அடுக்கு பாதுகாப்புப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் 2 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்படுகிறார்கள். மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பிரதமரும் ஜனாதிபதியும் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கவுள்ளனர்.

எனவே, ஆளுநர் மாளிகைக்கும் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்புப்போட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இப்போது இருந்தே சென்னை புறநகர் பகுதிகளில் பொலிஸார் தீவிர வாகன சோதனை நடத்துகிறார்கள். மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தியதால் தமிழக கடலோரப் பகுதியும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் கடல் வழியாக நுழையாமல் தடுக்கத் தமிழக கடலோரப் பகுதியில் தீவிர ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேல் மாகாண பொலிஸ் கணக்கெடுப்பு: 1657 பேர் புதிதாக பதிவு: போதிய ஆவணங்கள் இல்லாத 106பேர் கைது

colo-reg.jpgமேல் மாகாணத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பொலிஸ் கணக்கெடுப்புகளின் போது புதிதாக 1657 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.  இந்த கணக்கெடுப்பின் போது தனது வதிவை உறுதிப்படுத்த போதிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் போன சிங்களம், தமிழ், முஸ்லிம் மூவினங்களைச் சேர்ந்த 106 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

2003ம் ஆண்டிற்கு பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து மேல் மாகாணத்தில் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வதிபவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு நேற்று முன்தினம் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவு களில் நடத்தப்பட்ட இந்த பொலிஸ் கணக் கெடுப்பின் போது 29,244 பேர் மொத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

29,244 பேரில் 15,975 ஆண்களும், 13,269 பெண்களும் அடங்குவர். இதேவேளை, கடந்த பல மாதங்களுக்கு முன்னர் பொலிஸார் நடத்திய தேடுதலின் போது பதிவு செய்யப்பட்ட வர்களிலிருந்து 1657 பேர் மேலதிகமாக இம்முறை பதிந்துள்ளனர். இவற்றில் 929 ஆண்களும், 728 பெண்களும் அடங்குவர்.

இதேவேளை மேல் மாகாணத்தில் தற்காலிகமாவோ, நிரந்தரமாகவோ தங்கியிரு க்கும் காரணத்தையோ, அதனை உறுதி செய்யும் ஆவணங்களையோ உரிய முறையில் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் 106 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவர்களில் 67 தமிழர்களும், 36 சிங்களவர்களும், இரண்டு முஸ்லிம்களும் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் தீர்வுமட்டுமே இலங்கையின் இன மோதலுக்கு முடிவைத் தரும் – ஜப்பான்

kilinochchi-victory.jpgவிடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகர் கிளிநொச்சி வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இலங்கைக்கு அதிகளவு உதவிவழங்கும் நாடுகளில் ஒன்றான ஜப்பான், இனநெருக்கடியை அரசியல் தீர்வினால் மட்டுமே முடிவுக்கு கொண்டுவர முடியுமென்று நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. கிளிநொச்சியை கைப்பற்றிய இலங்கை இராணுவம் முல்லைத்தீவை நெருங்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இன நெருக்கடிக்கு உண்மையான தீர்வை அரசியல் முயற்சிகளூடாகவே யதார்த்தபூர்வமானதாக்க முடியும், என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு நேற்று தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்துக்கு பொறுப்பான இந்த அதிகாரி மேலும் கூறுகையில்; வடகிழக்கு பிராந்தியத்திற்கு உள்ளக சுயாட்சியை கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஜப்பான் ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கை நிகழ்வுகள் குறித்து ஜப்பான் இன்னமும் உத்தியோகபூர்வமான கருத்துகளை தெரிவிக்க வில்லையென்றும் தம்மை அடையாளம் காட்ட விரும்பாத அந்த அதிகாரி வேண்டுகோள் விடுத்தார். மோதல் மேலும் தொடருமென்று எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். சட்டரீதியற்ற தலைநகரை கைப்பற்றுவது ஒரு அடையாளரீதியான விடயமாகும். ஆனால், யுத்தரீதியான முக்கியத்துவம் மட்டுப்படுத்தப்பட்ட விடயம் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் கிழக்குப்பகுதி காட்டுக்குள் மோதல்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இலங்கைக்குக் கிடைக்கும் சர்வதேச உதவிகளில் சுமார் மூன்றில் இரண்டு பகுதியை ஜப்பானே வழங்குகின்றது. கடந்த மூன்று வருடங்களில் 4 தடவைகள் விசேட தூதுவரை மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட ஜப்பான் அனுப்பியிருந்தது.

பங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று பதவியேற்பு

haseena.jpgபங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று செவ்வாக்கிழமை பதவியேற்கவுள்ளார்.  தலைநகர் டாக்காவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

இவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். ஜனாதிபதி அய்ஜுத்தீன் அகமது பிரதமருக்கும் புதிய அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை பதவியேற்ற பின்னர் புதிய பிரதமராக ஹசீனாவைத் தேர்ந்தெடுத்தனர்.  பங்களாதேஷில் கடந்த மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி மொத்தம் உள்ள 300 இடங்களில் 259 இடங்களில் வென்று மூன்றில் இருமடங்கு பெரும்பான்மையைப் பெற்றது.

இந்தக் கூட்டணியில், முன்னாள் ஜனாதிபதி எச்.எம்.எர்ஷத் தலைமையிலான ஜாதியா கட்சி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. காலிதா ஷியா தலைமையிலான கூட்டணி கடும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தலில் குளறுபடி, மோசடி என்று தொடக்கத்தில் புகார் கூறி வந்தாலும் பின்னர் தமது கூட்டணியின் தோல்வியை ஒப்புக்கொண்டு புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார் காலிதா ஷியா . இருப்பினும் அவரது கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்கவில்லை.