“சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பி.பி.சி.தமிழோசை மற்றும் “சந்தேசிய’வில் ஒலிபரப்பான செய்திகள் முழுமையாகத் தணிக்கை செய்யப்பட்டது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதன்போது, லசந்த விக்கிரமதுங்கவின் கொலையைக் கண்டித்து ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா விடுத்த அறிக்கையின் பெரும் பகுதியும் தணிக்கை செய்யப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பி.பி.சி.தமிழோசையும் சிங்கள சேவையான சந்தேசியவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வரிசை மூலம் (எவ்.எம்.) ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக பி.பி.சி.யின் இவ்விரு ஒலிபரப்பிலும், இலங்கையின் யுத்தம் மற்றும் அரசியல் தொடர்பான செய்திகளில் பெரும்பாலானவை முழுமையாகத் தணிக்கை செய்யப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை, கல்கிசை பகுதியில் சிரேஷ்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தியும் தணிக்கை செய்யப்பட்டது.
இவரது கொலையைக் கண்டித்து அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா வெளியிட்ட அறிக்கையின் பெரும் பகுதியும் தணிக்கை செய்யப்பட்டது. அதுபோல் லசந்தவின் பத்திரிகைத்துறை நண்பர்கள், ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் கருத்துகளும் முற்றாகத் தணிக்கை செய்யப்பட்டன. இலங்கையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தணிக்கை எதுவும் அமுல்படுத்தப்படாத நிலையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பி.பி.சி.ஒலிபரப்புக்கு தணிக்கையை மேற்கொள்வது குறித்தும் பல்வேறு தரப்புகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை எம்.ரி.வி.நிறுவனம் மீதான தாக்குதல் தொடர்பாக தமிழோசை மற்றும் சந்தேசியவில் ஒலிபரப்பான செய்திகளும் தணிக்கை செய்யப்பட்டன.