அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ரீ.எம்.வீ.பி – புலிகள் மோதல், மூவர் பலி – திஹிலிவட்டையில் சம்பவம்

ak47.jpgஏறாவூர்,  திஹிலிவட்டை பிரதேசத்தில் ரி. எம். வி. பி.க்கும் புலிகள் இயக்கத்துக்குமிடையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற மோதல்களில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சந்திவெளி வாவிக்கு அப்பால் அமைந்துள்ள ரி. எம். வி. பி. அலுவலகத்தின் மீது புலிகள் இயக்க உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இந்த மோதல்களில் ரி. எம். வி. பி. உறுப்பினர் ஒருவரும், புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருசிவிலியன்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலங்களுடன் துப்பாக்கிகளையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ரீ. எம். வி. பி. தரப்பில் சந்திவெளியைச் சேர்ந்த 34 வயதுடைய எஸ். சீலன் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. ஏறாவூர் பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுப் பொலிஸாரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பளை, சோரன்பற்று பிரதேசங்களிலிருந்து 53 பேர் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்வு

civillians_.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் போர் நடவடிக்கை காரணமாக பளை, சோரன்பற்று மற்றும் வடமராட்சி கிழக்குப் பகுதியில் இருந்து 53 பேர் இடம்பெயர்ந்து நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர். யாழ்.வருகைதந்துள்ளவர்கள் அனைவரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பளை பகுதியில் இருந்து வந்தவர்கள் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டதால் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமராட்சி கிழக்கு பகுதியிலிருந்து கடல் வழியாக வள்ளங்களில் வந்த 33 பேரை கடற்படையினர் கைதுசெய்து பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர். இவர்களைத் தங்க வைப்பதற்குரிய நடவடிக்கையை மாவட்ட செயலகம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பளை மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் இருந்து வந்தவர்களில் நான்கு கைக்குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்வர்கள் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு இன்று

secretary_.jpg2009ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை தேசிய ரீதியாக மேற்கொள் ளப்படவுள்ள தாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கு புதிதாக வருகைதரும் பிள்ளை களை வரவேற்பது தொடர்பான வைபவங்கள் நாட்டின் அனைத்து ஆரம்பப் பிரிவு பாடசாலைகளிலும் இடம் பெறவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

சமயத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்ய ப்படுவதுடன், ஆரம்பக் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பெற்றோர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீள் குடியேற வழிவகுத்துள்ளது – அமைச்சர் அதாவுல்லா

a-9-road.jpgஏ-9  பாதை திறப்பானது யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளினால் விரப்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் சென்று குடியேற வழிவகுக்குமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அதாவுல்லா; “உண்மையே எப்போதும் வெற்றி பெறும்” என்பதைப் புலிகளின் தோல்வி நிரூபணமாக்கியுள்ளது எனவும் தெரிவித்தார். அமைச்சர் நமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-ஆணையிறவு மீட்பும் “ஏ-9” பாதை திறப்பும் வடக்கு மக்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி,

பொருளாதார முன்னேற்றம் என பல வகைகளிலும் அம் மக்களுக்கு நன்மை கிட்டும். மீதமுள்ள சிறு நிலப்பகுதியும் விரைவில் மீட்கப்பட்டு விடும். முழு நாட்டிலும் சுபீட்சம் ஏற்படும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள காத்திரமான முடிவுகளுக்கு அவருக்கு நன்றி கூற வேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் பெரும் அல்லல்களை சந்திக்க நேர்ந்து ள்ளது. “ஏ-9” பாதை திறப்பானது முஸ்லிம் மக்களும் தமது சொந்த இடங்களில் சென்று குடியேற வழிவகுக்கும். கிழக்கில் மூவின மக்களும் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இந் நிலை வடக்கிலும் வரவேண்டும்.  அதற்கு “ஏ- 9” வீதி திறப்பு சிறந்த ஆரம்பமாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கட்சிகளுக்கு முன்னுரிமை வேண்டாம் சமூக மேம்பாட்டை கவனத்தில் எடுங்கள்

Estate Workersமலை யக மக்கள் அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்காது சமூக மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் மத்தியமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.மு.சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.கா. வேட்பாளரான எஸ்.சிவஞானத்துக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு நேற்று சனிக்கிழமை மாத்தளை மாநகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;  சிறுபான்மை சமூகத்தினரான எமக்கு இந்நாட்டில் தனித்து ஆட்சி செய்யமுடியாது. ஆகையால், அவ்வப்போது பதவிக்கு வரும் அரசுகளுடன் இணைந்து செயல்பட்டே எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

அமரர் தொண்டமான் இதனடிப்படையிலேயே செயற்பட்டு மலையகத்திற்கு பல்வேறான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துள்ளார். அதனடிப்படையிலேயே நாமும் செயற்பட்டு வருகின்றோம். நாம் எமது அரசியல் பலத்தின் மூலம் மாத்திரமே அரசுக்கு அழுத்தம் கொடுத்து எமது தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்த அரசியல் பலத்தைக் கொண்டே தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துவருகிறோம்.

இதேபோல ஏனைய மாவட்டங்களிலும் அரசியல் பலத்தைப் பெறவேண்டும். பலமான அரசியல் சக்தியொன்றை உருவாக்குவோமானால் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக் கொள்ளமுடியும். ஒரு சில தோட்டங்கள் அரசியல் வாதிகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் கையளிப்பதற்கு திட்டமிட்டு காடாக்கப்பட்டு வருகிறது. மாதாந்தம் 25 நாட்கள் வேலை வழங்கவேண்டும். அல்லது அதற்கான வேதனம் வழங்கவேண்டும் என்று சட்டம் இருந்தும் அது அமுல்படுத்தப்படவில்லை.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து விடுபடவேண்டுமானால் மேலும் அரசியல் பலம் பெறவேண்டும். ஆகவே எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மத்தியமாகாணத்தில் போட்டியிடும் இ.தொ.கா. வேட்பாளரை வெற்றி பெறச் செய்து எமக்கு அரசியல் பலத்தை வழங்குவதற்கு மலையக மக்கள் முன்வரவேண்டும்.
 

முல்லைதீவை கைப்பற்ற 50 ஆயிரம் துருப்புக்கள். புலிகளின் சகல விநியோகப் பாதைகளும் துண்டிப்பு; – இராணுவத் தளபதி

kili-05.jpgமுல் லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும்நோக்குடன் ஒன்பது படைபிரிவுகளைச் சேர்ந்த ஐம்பது ஆயிரம் இராணுவ வீரர்கள் முன்னேறி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். புலிகளின் சகல விநியோக பாதைகளும்முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் படை நடவடிக் கைகளை படையினர் முன்னெடுத்துள்ளதுடன் பாரிய தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவ தாகவும் குறிப்பிட்டார். அத்துடன், இராணுவத்தின் 53, 55, 57, 58, 59வது படைப் பிரிவுகளும் முதலாவது இரண்டாவது முன்றாவது மற்றும் நான்காவது செயலணியினருமே முல்லைத்தீவை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முள்ளியவளைக்கு மேற்கு பகுதியை நோக்கி முன்னேறிய படையினர் சகல வசதிகளையும் கொண்ட புலிகளின் பாரிய பயிற்சி முகாம் ஒன்றையும் கோவில் காடு பகுதியிலுள்ள புலிகளின் முக்கிய கட்டளைத்தளம் ஒன்றையும் படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டார்.

இந்தப் பகுதியிலுள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை நோக்கி முன்னேறிய படையினர் அங்குள்ள பாரிய பயிற்சி முகாமைக்கைப்பற்றியுள்ளனர். 11 கொங்கிரீட் பதுங்கு குழிகளை கொண்ட இந்த பாரிய முகாமில் 75 அடி நீளமும் 50 அடி அகலமுமான பிரதான மண்டபம், 35 அடி நீலம் 20 அடி அகலமான பாரிய  கொங்கிரீட் பங்கர். 200 அடி நீளம் 100 அடி அகலமான சாப்பாட்டு அறை, 35 அடி நீளம் 25 அடி அகலமுமான சமையல் அறை மற்றும் 35 அடி நீளம் 30 அடி அகலமான காரியாலய கட்டிடம் ஒன்றும் அமையப் பெற்றுள்ளது.

மூன்று கொங்கிரீட் பங்கர்களுடனான கட்டளைத் தளம் ஒன்றையும் கோவில்காடு பகுதியில் கைப்பற்றி யுள்ளனர். இந்த முகாமின் உட்புறத்தில் பெருந்தொகை யான வாகனங்கள் நிறுத்த வசதியான தரிப்பிடம் என்றும் தொலைத்தொடர்பு பரிமாற்ற நிலையமொன் றும் அமையப்பெற்றுள்ளதாக பிரிகேடியர் குறிப்பிட்டார்.

ஐ.நா. தீர்மானத்தை இரு தரப்பும் நிராகரிப்பு இஸ்ரேல் தொடர்ந்து காஸா மீது தாக்குதல்

gaza_.jpgகாஸா வில் உடனடி யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற ஐ.நா.வின் அழைப்பை இரு தரப்பும் நிராகரித்திருக்கும் நிலையில் காஸாவில் பாலஸ்தீன அதிகாரசபை புதிதாக கால்தடம் பதிப்பதற்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களை வர வழைப்பதற்குமான திட்டமொன்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இராஜதந்திரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற பாத்தா பிரிவின் தலைமையின் கீழ் அதிகாரசபை மீண்டும் அங்கு திரும்புவதற்கு இடமளிப்பது திட்டத்தின் ஓரங்கமாகும். காஸாப்பகுதியிலிருந்து 18 மாதங்களுக்கு முன்னர் ஹமாஸ் அமைப்பால் பாத்தா அமைப்பு வெளியேற்றப்பட்டது. அத்துடன் காஸாவுக்குள் ஆயுதக் கடத்தலை நிறுத்துவதற்கு துருக்கி மற்றும் பிரான்ஸ் கண்காணிப்பாளர்களை எகிப்துக்கான ராபாகடவை, இஸ்ரேலுக்கான கிரெம் சாலொம் கடவை உள்ளடங்கலாக காஸாவின் தெற்கு முனையில் நிறுத்துவதும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

காஸாப் பிராந்தியத்தில் சர்வதேச அங்கீகாரத்துடனான அரசாங்கமாக அதிகார சபை இயங்கும். 2007 ஜூனின் பின்னர் காஸாவில் ஹமாஸ் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அப்பகுதியிலிருந்து போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்படும்.

எகிப்தின் சமாதான முயற்சியின் ஓரங்கமாக இத்திட்டம் ஆராயப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸியுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின் எகிப்திய ஜனாதிபதி முபாரக் இதனை அறிவித்திருக்கிறார். உடனடி யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் காஸா எகிப்து எல்லைப்பாதுகாப்பு தொடர்பாக பேச்சு வார்த்தை இடம் பெற வேண்டும் எனவும் கடவைகளை திறந்து விடவேண்டுமெனவும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக இணக்கப்பாடு இல்லாததால் எகிப்தின் முயற்சிகள் நிராகரிக்கப்பட்டு விடுமென இராஜதந்திரிகள் கூறுகின்றனர். எகிப்துடனான எல்லையில் அவதானிப்பாளர்களை அனுமதிப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியுள்ள ஹமாஸ் அமைப்பு ஆனால் சர்வதேச படையினர் பிரசன்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஹமாஸின் 3 தலைவர்கள் பேச்சு வார்த்தைக்காக எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்கு வந்துள்ளதையும் ஹமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.  ஆனால் எல்லைப்பகுதிகளிலுள்ள சுரங்கப்பாதைகளூடாக ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும் அவற்றை அழிக்க சர்வதேசப்படை அவசியமெனவும் இஸ்ரேல் வலியுறுத்துகிறது.

தமது எல்லைப்பகுதியில் சர்வதேசப் படையின் பிரசன்னத்தை எகிப்து விரும்பவில்லை. ஆயினும் 2005 இல் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென கெய்ரோ விரும்புகின்றது. அந்த உடன்படிக்கையின்பிரகாரம் நடமாட்டம், விநியோகம் என்பன ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் இடம் பெறும். ராபா கடவையூடாக மக்கள் போக்குவரத்து கேரம் சாலெம் கடவையூடாக வாகனங்களில் போக்குவரத்துக்கு அந்த உடன்படிக்கை வழிவகுத்திருந்தது. ஹமாஸ் அதிகாரத்திற்கு வந்ததையடுத்து அந்த உடன்படிக்கை செயலிழந்தது. ஐ.நா.வின் யுத்த நிறுத்த யோசனைக்கு பாதுகாப்பு சபை 140 அங்கீகாரமளித்திருந்தது. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் உடனடியாகவே ஐ.நா.வின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்கா ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் கடைசி நிமிடத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஜனாதிபதி புஷ்ஷிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினமும் நேற்றும் இஸ்ரேல் காஸா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது. தனது பிரஜைகளை பாதுகாப்பதற்கான உரிமை தொடர்பாக தீர்மானிப்பதற்கு வெளியார் செல்வாக்கு செலுத்த இஸ்ரேல் ஒரு போதும் இணங்கவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் ஈகுட் ஒல்மேர்ட் கூறியுள்ளார். இஸ்ரேல் மட்டும் தாக்குதல்களை நடத்தவில்லை. காஸாவிலிருந்தும் டோராட், பீர்சிபா போன்ற குடியேற்றப்பகுதிகளை நோக்கி ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றன.

அரசுக்கு எதிரான சர்வதேச சதி குறித்து ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும்

ranil-2912.jpgஅரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய நாடு எதுவென்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடனடியாக பகிரங்கப்படுத்தவேண்டும் எனவும் அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா.வில் முறையிட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டுமக்களை ஏமாற்றாமல் சதிகாரர்கள் யார் என்பது பற்றியும் எம்.ரி.வி. தீவைப்பு, லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாகவும் உண்மைகளை இன்று வெளியிடவேண்டுமெனவும் கேட்டிருக்கின்றார்.  சர்வதேசத்தின் மீது சுட்டுவிரல் நீட்டி அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்கமுயலும் கபட நாடகம் முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகிந்தாலை சாஞ்சி விகாரையில்  சனிக்கிழமை காலை இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் ஜானகபெரேராவின் மூன்று மாத நினைவு சமய நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை, யாழ்ப்பாணத்தில் ஊடகநிறுனத்தின் மீதான குண்டுத்தாக்குதல், தொப்பிகல மீட்கப்பட்டதன் பின்னர் ஆங்கில ஊடகவியலாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, வவுனியா அகதி முகாம் தீ வைக்கப்பட்டமை, பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை, எம்.ரி.வி. ஊடகநிறுவனம் தீவைக்கப்பட்டமை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை என்பனவற்றின் பின்னணியில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச சக்தியொன்றின் சதி காணப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்காற்றிய உரையின் போது குற்றச்சாட்டு சுமத்தியிருக்கின்றார்.

இக்குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஒரு நாட்டின் மீது பழிசுமத்தும் போது ஆழமாக ஆராய்ந்த பின்னரே அதனைச் செய்ய முடியும். நாட்டின் தலைவர் என்ற பொறுப்பைக்கொண்ட ஜனாதிபதி இக்குற்றச்சாட்டை சுமத்துவதான மிக உன்னிப்பாக நோக்கப்படவேண்டியதாகும். சர்வதேசத்தின் சதியென்று பொதுப்படையாகக் கூறிவிட்டு உலகத்தை ஏமாற்றி விடமுடியாது. முன்னே கூறப்பட்ட அனைத்துச் சம்பவங்களும் சர்வதேச சதியென்றால் அவற்றுடன் தொடர்புபட்ட நாடு எது என்பதை ஜனாதிபதி பகிரங்கமாகத் தெரிவிக்கவேண்டும். அதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிடாமலிருப்பது ஏன் எனக் கேட்கவிரும்புகின்றோம். தனது அரசியல் நலனுக்கும், அதிகார இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாமென ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் சுமத்திய ஜனாதிபதி ராஜபக்ஷ அநுராதபுரத்தில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி குழுவினரின் படுகொலைகள் தொடர்பில் அவ்வாறானதொரு குற்றச்சாட்டை சுமத்தவில்லை எனவே அதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது உறுதியாகியுள்ளது.

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆனையிறவை இழக்க நேரிட்டதாக ஜனாதிபதி தமதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். அக்காலப்பகுதியில் ஆட்சியிலிருந்த அரசில் அவரும் ஒரு பங்காளி என்பதை மறந்துவிடக்கூடாது. இம்முறை வன்னி இராணுவ நடவடிக்கையின் போது 2,500 படைவீரர்கள் பலியானதாகவும் 15 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதாகவும் அறிக்கையொன்று கூறுகிறது.

இவற்றை அரசு ஏன் நாட்டு மக்களுக்கு மறைக்கவேண்டுமெனக் கேட்கின்றோம். யுத்த வெற்றியின் பெருமை படையினருக்கும் நாட்டுமக்களுக்குமே உரியது. இதனை ஜனாதிபதி தமக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் நலன்களை பெற முயற்சிக்கின்றார் எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நாகர்கோயிலும் படை வசமானது

SL_Army_in_Killinochieவட மராட்சி கிழக்கில் நாகர்கோயில் பகுதியையும் கிளிநொச்சியில் வட்டக்கச்சி கிழக்குப் பகுதியையும் படையினர் தம்வசம் கொண்டு வந்துள்ளனர் என்று படைத்தரப்பு நேற்றுத் தெரிவித்தது. வட்டக்கச்சி மற்றும் இரணைமடுப் பகுதிகளில் கடும் மோதல்கள்  இடம்பெற்று வருகின்றன என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
 
 

12 தமிழ் இளைஞர்கள் நீர்கொழும்பில் கைது!

handcuff.jpgநீர் கொழும்பில் படையினர் நேற்று முன்தினம் மாலை நடத்திய தேடுதலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 12 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் சந்தேகத்துக்கு உரிய முறையில் நடமாடியதன் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.