அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல – கருணாநிதி அறிக்கை

karunanithi.jpgஇளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் முத்துக்குமாருக்கு நேற்று திமுக எம்.எல்.ஏ பாபு அஞ்சலி செலுத்த சென்றபோது அவர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இளைஞர் முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்தார் என்ற செய்தியைக் கேட்டதும் நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இதையடுத்து கழகப் பொருளாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் உரையாற்றும் போது தீக்குளித்து மாண்ட இளைஞரின் பிரிவுக்காக வருந்தி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவருடைய குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால் இன்று வந்துள்ள செய்திகளைப் பற்றிச் சிந்திக்கும் போது மறைந்த முத்துக்குமாருடைய குடும்பத்தார் அந்த நிவாரண நிதியை வாங்க மறுத்து விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது.

அது மாத்திரமல்லாமல் மறைந்த அந்த இளைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மலர் வளையத்தோடு அந்த இடத்திற்குச் சென்ற வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர் பாபு மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது என்பதையும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை மிக மலிவான விளம்பரத்திற்கு உள்ளாக்கி விடக்கூடும் என்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி ஹோட்டல் தாக்கப்பட்டது.

புதுச்சேரியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற ஹோட்டல் தாக்கி சூறையாடப்பட்டது. சென்னையில் இலங்கை வங்கியும், இலங்கை துணைத் தூதரகமும் சமீபத்தில் சிலரால் தாக்கப்பட்டன. இந்த நிலையில் புதுவையிலும் இலங்கையர்களுக்கு எதிரான தாக்குதல் பரவியுள்ளது. புதுச்சேரி காந்தி வீதி – படேல் சாலை சந்திப்பில் இலங்கையை சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற ஹோட்டல் உள்ளது. நேற்று நள்ளிரவு 8 வாலிபர்கள் 5 மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஹோட்டல் மீது அவர்கள் திடீரென்று சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள்.

அந்த சமயத்தில் அப்பகுதியில் ரோந்து போய்க் கொண்டிருந்த போலீஸ்காரர் செந்தில் குமார், ஊர்காவல் படை வீரர் நாராயணசாமி ஆகியோர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் போலீஸ்காரரும், ஊர் காவல் படைவீரரும் காயம் அடைந்தனர். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் விரட்டிச்சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபர் பூமியான் பேட்டையை சேர்ந்த செல்வம் (32) என்றும், அவர் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தொண்டர் என்றும் தெரிய வந்தது.

காயமடைந்தவர்களுக்கு உதவ வவுனியா ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்

redcrose2801.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் வந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் நிற்க அனுமதிக்கப்படாது நெளுக்குளம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு ஆறு அம்புலன்ஸ்களில் படுகாயமடைந்தவர்களும் ஐந்து பஸ்களில் சிறுசிறு காயமடைந்தவர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களுமென 226 பேர் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து 50 சிறுவர்கள் உட்பட 226 பேர் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆஸ்பத்திரியில் உதவிசெய்து பராமரிப்பதற்காக சேர்ந்து வந்த 139 பேரும், ஆஸ்பத்திரிக்குள் காயமடைந்தவர்களுடன் கூடச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் நேரடியாக நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

படுகாயமடைந்தவர்களில் அதிகமானவர்கள் கைகால்கள் முறிந்த நிலையிலும், அவயங்கள் பாதிக்கப்பட்டும் உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்

fonseka2.jpgஇராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று வன்னிப் பகுதிக்குச் சென்று மோதல் நடைபெறும் பிரதேசங்களை நேரில் பார்வையிட்டு,அங்கு இராணுவம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அவருடன் இராணுவ உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர் என இணையத்தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதில் மேலும்  தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயரும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யவும், இராணுவ நடவடிக்கைகள் மேற்பார்வையிடவும் பென்சேகா  வன்னிக்கு வந்ததார் என இராணுவத் தரப்பு தெரிவித்தது. சரத் பொன்சேகா இப்பயணத்தின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் 57, 58, 59 ஆவது படை அணிகளின் தளபதிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து போர் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார் என்றும் ஜனாதிபதியின் 48 மணிநேர போர் நிறுத்த அறிவிப்பு முடிவுக்கு வந்த பின்னர் முழுவீச்சில் தாக்குதலை நடத்த இராணுவம்திட்டமிட்டுள்ளது என்றும் அதுகுறித்த ஆலோசனைகளை வழங்கவே பொன்சேகா போர்முனைக்குச் சென்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் விரும்பினால் வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்: தமிழ் தேசிய கூட்டமைப்பு

tna.jpgஇலங்கையின் ஜனாதிபதி வடக்கே போர் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ள நிலையில், அவ்வாறு மக்கள் வெளியேற விரும்பினால், அதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரான இரா சம்பந்தர் தெரிவித்தார்.

எனினும், அப்பகுதியிலிருந்து வெளியேறுவது குறித்த முடிவை அங்கிருக்கும் மக்கள்தான் எடுக்க வேண்டும் என்றும் அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாததற்கு விடுதலைப் புலிகள் மட்டுமே காரணம் என்று கூறப்படுவது ஏற்க முடியாதது என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸும் இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோருகிறது

SL_Army_in_Killinochieசுய நிர்ணய உரிமைக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 27 வருடங்களாக நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மாபெரும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கைத் தீவில் தீவிரமடைந்து வரும் மனிதாபிமான அவலத்தையிட்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தனது தீவிர கவனத்தை கொள்கின்றது. வடக்கு வன்னிப்பிரதேசத்தில் நிகழ்ந்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான யுத்தத்தில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அகப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சுயநிர்ணய உரிமைக்காக போராடும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 27 வருடங்களாக நடந்து வரும் கடும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், மாபெரும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இந்தப் போரைக் கண்காணித்து வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்தப் போரானது ஒரு இனப் படுகொலைக்குரிய நிலையை அடைந்திருப்பதாகக் கூறியுள்ளது. பெரும் உதவிகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்காக போரில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரும் உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி மக்களுக்குரிய மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழி செய்ய வேண்டும்.

அதேநேரம், இரு பகுதியினரையும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி ஒரு நிலையான சமாதானத்திற்கு வழிவகுக்குமாறும் ஆபரிக்க தேசிய காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
 

இலங்கை அரசு அவகாசம்: தமிழக சட்டமன்றத்தில் விவாதம்

assembly.jpgஇலங்கையின் வடக்கே புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசங்களில் இருக்கும் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இலங்கை அரசு அறிவித்துள்ள 48 மணிநேர கால அவகாசம் குறித்து தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் வெள்ளியன்று விவாதிக்கப்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்து வந்ததன் விளைவாகவே இந்த அறிவிப்பு வந்துள்ளது என்றும், இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோதலில் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா பீட்டர் அல்ஃபோன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் சார்பாகப் பேசியவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பைத் தாங்கள் ஏற்கவில்லை என்று கூறினர். ஆளும் திமுக சார்பில் பேசிய நிதியமைச்சர் க.அன்பழகன், இலங்கை அரசின் அறிவிப்பை ஏற்று அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குள் செல்வதை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்து ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு கவலை

navaneetham-pilli.jpgஇலங்கையில் வடபகுதியில் இலங்கைப் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடக்கின்ற மோதல்களில் அகப்பட்டுள்ள சுமார் இரண்டரை லட்சம் மக்களின் நிலை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவியான நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். பல மாதங்களாக தொடரும் மோதல்களும், பல தடவைகள் ஏற்பட்ட இடப்பெயர்வுகளும், மடுமையான மழை மற்றும் வெள்ளமும் அங்கு மக்களுக்கு மிகுந்த ஆபத்தான நிலைமை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மோதல் பகுதிகளில் இருந்து தப்ப முற்படும் மக்கள் ஒன்றில் தடுக்கப்படுவதாகவோ அல்லது அவர்களது விருப்புக்கு மாறாக சிறப்பு மையங்களில் தடுத்து வைக்கப்படுவதாகவோ செய்திகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் மோதலில் ஈடுபடுகின்ற இருதரப்பினர் மீதும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ. நா. மனித உரிமைகள் ஆணையர், மோதலில் அகப்பட்டுள்ள மக்களின் நலன்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

அரசாங்கத்தின் அறிவிப்பை புலிகள் நிராகரிப்பு

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சிக்குண்டுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்குப் பாதுகாப்பான வழி அமைத்துக் கொடுக்கப்படும் எனக் குறிப்பிட்டு, அடுத்த 48 மணி நேரத்துக்குள் அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கும்படி புலிகள் இயக்கத்துக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை மாலையில் பகிரங்க அறிக்கை மூலம் விடுத்தகோரிக்கையைப் புலிகள் இயக்கம் அடியோடு நிராகரித்து விட்டது.

இந்த அறிவிப்பு உலகத்தை ஏமாற்றும் சூழ்ச்சி எனவும் புலிகள் விமர்சித்திருக்கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு “இரண்டு நாள் போர்நிறுத்தப் பிரகடனம்” என அர்த்தப்படுத்தப்படும் பின்னணியில், நேற்றும் அரசுப் படைகளின் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர்வரை கொல்லப்பட்டு அறுபதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்றும் புலிகள் குற்றம் சுமத்தினர்.

லஸந்தவின் கொலை: சந்தேகத்தில் ஒருவர் கைது

Lasantha_Wickramathunga“த சண்டே லீடர்” ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேநபர் ஒருவர் பொலிஸாரால் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்நபர் தெஹிவளை, அத்திடியப் பகுதியில் கைதுசெய்யப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.  இருப்பினும் சந்தேக நபர் குறித்த விவரங்களை பொலிஸார் இதுவரை வெளிவிடவில்லை.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். இம் மாதம் 8 ஆம் திகதி லஸந்த விக்கிரமதுங்க தெஹிவளையில் உள்ள சந்தேக நபர் கைதுசெய்யப்பட்ட அத்திடியப் பகுதியிலேயே படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.