அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஆறுமுகம் தொண்டமானும் சந்திரசேகரனும் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வுடன் போட்டியிடுவார்கள் – எஸ்.பி.திஸாநாயக்க

சுற்றுலாத் துறையும் ஏனைய ஏற்றுமதித்துறைகளும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதுடன் எமக்கு வருகின்ற அந்நியச் செலாவணியும் சகல வழிகளிலும் முடங்கிக் கிடக்கின்றன எனத் தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க, நாடு பொருளாதார சிக்கலில் மூழ்கித்தத்தளிக்கின்றது எனவும் கூறினார். இராகலை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர்; இந்த அரசிடம் முறையான அபிவிருத்தித்திட்டம் இன்மையாலும் நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்களின் சொகுசு வாழ்க்கையாலும் நாடு பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் கடன் வழங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றன. நாட்டை மீட்டெடுக்க முதற்கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அணிதிரண்டு வாக்களியுங்கள்.

மத்திய மாகாணசபையை கலைக்கும் வரை நான் போட்டியிடுவது அரசுக்கும் ஜனாதிபதிக்கும் தெரியாது. அறிந்திருந்தால் மாகாணசபையை கலைத்திருக்கமாட்டார்கள். நான் போட்டியிடுவதைத் தடுக்கப் பல வழிகளிலும் முயற்சித்தனர். முடியாது போனதால் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது பல சட்டவல்லுநர்களை அனுப்பி வைத்து என்னை அகற்ற முயற்சி செய்தனர் . ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இப்போது கண்டியில் முகாமிட்டு அரச பயணத்தில் அனைவருக்கும் உணவும் , பெண்களுக்கு சாறியும் , ஆண்களுக்கு சாரமும் , பாடசாலை உபகரணங்களும் வழங்கி வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர். இவை அனைத்தும் எனதும் ஐ.தே.க.வினதும் வெற்றியின் உறுதியைக் கண்டு கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு உள்ளது போன்றே தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் உரிமைகள் உண்டு. அரசியல் சாசனத்திலேயே உள்ளது. இங்குதான் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. அரசுக்கு எதிரானவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஊடகத்தை சேர்ந்தவர்களும் கொலை செய்யப்படுகின்றனர். மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதையே விரும்புகின்றோம். அனைவரையும் அரவணைத்தே தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

ஜனாதிபதியோடு தொண்டமானும் சந்திரசேகரனும் இணைந்துள்ளனர். இங்கு அவர்களுக்கு மரியாதை கிடையாது. அடிமட்டத்தில் தான் இவ்விருவரையும் நடத்துகின்றார். இரண்டரை வருடமாக மலையக மக்கள் படும் அவலத்திற்கு இவ்விருவரும் என்ன செய்தனர்? நான் இவ்விருவரையும் இத்தேர்தலில் எங்களுடன் இணைந்து போட்டியிடுமாறு அழைத்தேன். அதற்கு அவர்கள் இத்தேர்தலில் வரமுடியாது. பொதுத் தேர்தலுக்கு வருகின்றோம் என்கின்றனர். மக்களுக்கு சேவை செய்ய சௌமியமூர்த்தி தொண்டமான் ஒருவரால் தான் முடியும். ஆறுமுகனால் முடியாது.

இம்முறை திறமையான தமிழ் வேட்பாளர்களை நியமித்துள்ளோம். அவர்கள் வெற்றிபெற்று நல்ல சேவை செய்வார்கள். கண்டியில் 13 ஆசனமும் ஐ.தே.க. வசமாவது உறுதி. அதே போன்று நுவரெலியாவிலும் மாத்தளையிலும் எமது வேட்பாளர்கள் வெற்றிபெற்று மத்திய மாகாணசபையைக் கைப்பற்றுவோம். இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பேன். உலக நாடுகளிடமிருந்தும் உதவிகளை இம்மாகாணசபைக்குப் பெற முடியும். பெற்றுப் புதிய முயற்சிகளை ஏற்படுத்தி வேலைவாய்ப்பு, மின்சாரவசதி, பாடசாலை அபிவிருத்தி ,பாதை அபிவிருத்திகளை மேற்கொள்வோம்.

இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரேணுகா ஹேரத், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், வேட்பாளர்களான ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் செயலாளர் சதாசிவம் , ஜகத் சமரஹேவா, ரவீந்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.

சாலைப்பகுதித் தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதி மரணம்

வன்னியை விடுவிக்கும் நடவடிக்கையின் மிக முக்கிய இலக்கை அடைந்துள்ள படையினர் சாலைப்பகுதியில் நடத்திய தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதி உட்பட 4 பேரை நேற்று (பெப்:04) கொல்லப்பட்டதாக படைத் தரப்பு தெரிவிக்கின்றது.  நேற்று பிற்பகல் 1.45 மணிமுதல் 2.00 மணிவரை தாக்குதல் நடத்திய 55 வது படைப்பிரிவினர் சாலைப் பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளத்தை கைபற்றினர். இத் தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதியான வினாயகம் கொல்லப்பட்டுள்ளார்.

தொடர்பு சாதனங்களை ஒட்டுக்கேட்ட போது எல்ரிரிஈயினருக்கு இவர்கள் இறந்த உடல்களை தேடமுடியாமல் படையினரின்  தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்வாங்கியுள்ளதாக படையினரின் மின்னனுயியல் போர்யுக்தி பிரிவினர் தெரிவித்தனர்.

இதேவேளை பூநகரி கடற்புலிகளின் பொறுப்பாளர் காதர் எனும் பஹலவனும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என மேலும் கடற்புலிகளின் விசேட தளபதியான சின்னக்கன்னன் நேற்றுக் காலை 8.50 மணியளவில் நடந்த பிறிதொரு தாக்குதலில் இப்பகுதியில் வைத்து கொல்லப்பட்டுளார். இவர் கொல்லப்பட்ட பின் அவர்களின் சொந்தப்பானியில் லெப்டினன் கேனல் பதவி உயர்வும் வழங்கியுள்ளதாக படையினரின் மின்னனுயியல் போர்யுக்தி பிரிவினர் தெரிவித்தனர். இம்மோதல்களில் 8 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளதும் ஊர்ஜீதம் செய்துள்ளனர்.

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் புலிகளின் கடல் மூழ்கிப்படகு

dayata_kirula.jpgதேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று (பெப்:04) பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் திறந்து வைத்தார்.

இலங்கையின் வரலாறு அதன் கௌரவம் பற்றிய அறிவு, மஹிந்த சிந்தனையின் பிரகாரம் நாட்டில் ஏற்படுத்தியுள்ள அபிவிருத்தி மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டம் என்பன பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துவதாகும். கண்காட்சி எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறும் இதில் இராணுவத்தினால் அன்மைக்காலத்தில் வெற்றி கொண்ட ஆயுதங்கள் படைக்கலங்கள் என்பனவும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களும்  சிரந்தி ராஜபக்கக்ஷ அவர்களும்  எல்ரிரிஈ யினரிடமிருந்து கைபற்றிய கடல் மூழ்கிப்படகை பார்வையிடுவதைப் படத்தில் காணலாம்

800 மேற்பட்டோர் இன்று (05) இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை

wanni-civilans.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து  800 க்கு மேற்பட்டோர் இன்று (05) இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளான விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பிரதேசங்களுக்கு வந்துள்ளரென பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

வன்னிப்பகுதியிலுள்ள மக்கள் வவுனியாவுக்கு வரும்பட்சத்தில் சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். – அமீர் அலி

ameerali.jpgஅரச கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியிலுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவுக்கு வரும்பட்சத்தில் தேவையான நடவடிக்கையெடுக்கப்படும். இவர்களுக்கென இராமநாதன் சுதந்திரபுரம், அருணாச்சலம் விடுதலைபுரம் மற்றும் கதிர்காமர் எழுச்சிக்கிராமம் ஆகிய மீள் குடியேற்ற கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளது.  இக்கிராமங்கள் ஒவ்வொன்றிலும் 8000 வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் பாடசாலை, வீதி, குடிநீர் மற்றும் மின்சாரவசதி உட்பட சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.  தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அனர்த்த சேவைகள் அமைச்சர் அமீர் அலி பேசுகையில் கூறியதாவது;

அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதுடன் மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்படவுள்ளது. ஊடகங்கள் எண்ணிக்கையையே பார்க்கின்றது. அரசு தரமான தேவையை அம்மக்களுக்கு வழங்க காத்திருப்பதை மறந்துவிடுகின்றது. இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றது. நாம் மக்களுக்கு செய்யவேண்டியதை எந்தவித தாமதமுமின்றி உடனடியாக நிறைவேற்றுவோம். இதற்கு தன்னார்வ மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவவேண்டும். சகல மனிதாபிமான சேவைகளையும் அரசு உறுதியாக செய்ய காத்திருக்கிறது என்றார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 40 பேர் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

பொத்துவில் பிரதேச செயலகம் முன்பாக கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 40 பேர் மயக்கமடைந்த நிலையில், நேற்று புதன்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் பொத்துவில் காட்டுப் பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்றபோது கைது செய்யப்பட்ட 30 முஸ்லிம்கள் வழக்கு விசாரணை எதுவுமின்றி தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பொத்துவில் பிரதேச செயலகத்தின் முன் ஆரம்பித்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு, பகலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மயக்கமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 மாணவர்களும் அடங்குவர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர் உட்பட பலரிடம் கையளிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை இவர்கள் தொடர்பாக அதிகாரிகளோ அரசியல் வாதிகளோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உறவினர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

வன்னி மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கொழும்பில் அடையாள உண்ணாவிரதம்

வன்னியில் இன்னல்களை அனுபவித்துவரும் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றுக்கு சுதந்திர மாணவர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக சுதந்திர மாணவர் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“யுத்த அபாயத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்! எமக்குத் தேவை சமாதானம் மட்டுமே! மக்களை மக்களாக நடத்துங்கள்!’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதம் இடம் பெறவுள்ளது. இந்த உண்ணாவிரதம் பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடையவுள்ளது.

இலங்கைத் தமிழரை பாதுகாக்க முல்லைத்தீவுக்கு படகுப்பயணம் – தூத்துக்குடி சட்டத்தரணிகள் சங்கம் முடிவு

“இலங் கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 9 ஆம் திகதி படகு மூலம் முல்லைத்தீவு செல்வோம்’ என தூத்துக்கடி சட்டத்தரணிகள் சங்கம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் சட்டத்தரணிகள், மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைப் பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக தூத்துக்குடி சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் பிரபு தலைமையில் நடந்தது. தமிழகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு அளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரயில் மறியல் மற்றும் 7 ஆம் திகதி நடக்கும் கறுப்புக் கொடி பேரணியில் பங்கேற்பது. அதன் பிறகும் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் எதிர்வரும் 9 ஆம் திகதி தூத்துக்குடியில் இருந்து படகுகள் மூலம் முல்லைத்தீவு நோக்கி செல்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து சட்டத்தரணிகள் சங்க தலைவர் பிரபு கூறுகையில்; “இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது. இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகாயம் அடைந்துள்ள தமிழர்களை இந்தியா அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

வவுனியா ஆஸ்பத்திரி உணவக உரிமையாளர் கடத்தப்பட்டார்

வவுனியா பொது வைத்தியசாலை உணவக உரிமையாளர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத சிலரால் விசாரணைக்கெனக் கூறி கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  24 மணிநேரமும் வைத்தியசாலையின் உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வைத்தியசாலைக்குள் செல்பவர்கள் அடையாள அட்டைகள் உட்பட அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் ஆஸ்பத்திரி உணவக உரிமையாளர் கடத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று ஆஸ்பத்திரி உணவகம் திறக்கப்படாததால் வார்ட்களில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பெருமளவு நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தனது கணவன் கடத்தப்பட்டது தொடர்பாக மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பந்த் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

cennai.jpgதமிழகத்தில் நேற்று நடந்த பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று பந்த் அறிவிக்கப்பட்டது. 85 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடின. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதில் எந்த பாதிப்பும் இல்லை. விமான போக்குவரத்திலும் பாதிப்பில்லை. பள்ளிகள் திறந்திருந்தன. சென்னையில்  பெரும்பாலான இடங்களில் கடைகள் திறந்திருந்தது. புறநகரில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வேலூர், கோவை, ஓசூர், சிவகங்கை, மானாமதுரை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பழனி ஆகிய இடங்களில் பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டன.

தர்மபுரியில் எல்ஐசி அலுவலகம், டாஸ்மாக் அலுவலகம் தாக்கப்பட்டது, வேலூரில் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் அலுவலகம் மீது கல்வீசப்பட்டது. அதைத் தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

தமிழக பந்த் குறித்து  தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறியதாவது:

பந்த் காரணமாக தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. சில இடங்களில் கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. பஸ், ரயில், விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. கடலூரில் ஆட்டோ ரிக்ஷா போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கடைகள் பெருமளவில் திறந்திருந்தன.கோவை, விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடைகள் ஓரளவு அடைக்கப்பட்டிருந்தன. மற்ற மாவட்டங்களில் 80 சதவீத கடைகள் திறந்திருந்தன. தொழிற்சாலைகள் வழங்கம்போல இயங்கின. அரசு ஊழியர்கள் 99 சதவீதம் பேர் வருகை தந்திருந்தனர். இவ்வாறு ஸ்ரீபதி கூறினார்.

டிஜிபி ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டம் ஒழுங்கு பராமரிக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் செய்திருந்தனர்.

திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ உலகநாதன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், மாநிலத்தில் சில இடங்களில் கடைகள், பள்ளிகளை மூட வற்புறுத்தியவர்கள் மற்றும் பேருந்துகள் மீது கற்கள் வீசி சேதப்படுத்தியவர்கள் 99 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.