அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படையின் முக்கிய இரு தலைவர்கள் பலி – பாதுகாப்பு அமைச்சு தகவல்

புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படைப் பிரிவுத் தலைவர் அமுதாப் மற்றும் அதன் முன்னாள் தலைவர் கோபித் ஆகிய இருவரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களின்போது கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

படையினரின் தாக்குதலில் இவ்விருவரும் கொல்லப்பட்டதை புலிகளின் பிடியிலிருந்து தப்பி நேற்று இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்த பொதுமக்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். புலிகளிடம் தற்போது எஞ்சியுள்ள கனிஷ்ட மற்றும் நடுத்தர படைப் பிரிவுகளைச் சேர்ந்தோர் புலிகளின் படைப் பலத்தில் நம்பிக்கையிழந்துள்ளதோடு இராணுவத்தினரிடம் சரணடைவதற்கும் தஞ்சம் கோருவதற்கும் திட்டமிட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அமுதாபின் இடத்துக்கு கோபித் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு அடி உயர மாப்பிள்ளையை மணந்த ஐந்து அடி உயர பெண்

marriage.jpgஇரண்டு அடி உயரே ஆன 35 வயது இளைஞர், 5 அடி உயரம் கொண்ட பெண்ணை மணந்துள்ளார்.

இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பரப்புரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நேற்று  நடை பெற்றுள்ளது கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர் தேவதாஸ். இவர் ஒரு ஓவியர். வயது 35 . இவர் வழக்கமான ஆண்களின் உயரம் கொண்டவரல்ல இரண்டு அடி உயரமே கொண்டவர்.

இந்த இயற்கையின் முரண் காரணமாக திருமணமே நடைபெறாமல் இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் 30 வயதான சசிகலா என்ற பெண்ணை சந்தித்தார். இவர் பெண்களின் சராசரி உயரமான 5 அடி உயரம் கொண்டவர். உயரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும்,  இருவரது மனமும் சமன்பட்டது, காதல் மலர்ந்தது, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

தேவதாஸின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர். ஆனால் சசிகலாவின் பெற்றோருக்கு துளியும் இதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் தங்களது காதலில் உறுதியாக இருந்த தேவதாஸும், சசிகலாவும் கோழிக்கோடு மாவட்டம் பரப்புரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் வைத்து நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

ராமர் கோவில் கட்டுவோம்-ராமர் பாலத்தைக் காப்போம்: பாஜக தேர்தல் அறிக்கை

03-advani.jpgபாஜக தலைமையில் ஆட்சி அமைந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். ராமர் பாலத்தை பாதுகாப்போம், இடிக்க மாட்டோம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வகை செய்யும் அரசியல் சட்டம் 370வது பிரிவை ரத்து செய்வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. இதில் ராமர் கோவில் கட்டப்படும் என்பதை முக்கிய வாக்குறுதியாக பாஜக தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனது இந்துத்வா கொள்கைக்கு பாஜக புத்துயிர் கொடுத்துள்ளது.

மேலும் இன்று ராமர் நவமி என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் ராமர் கோவில் கட்டப்படும், ராமர் பாலம் பாதுகாக்கப்படும் என பாஜக உறுதியளித்துள்ளது.

இடம்பெயர்ந்தோர் நலன் கருதி இன்று முதல் தொலைபேசி வசதிகள் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

badurdeen.jpgவவுனியா விலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரின் நலன் கருதி இன்று முதல் தொலைபேசி வசதிகள் ஏற்பாடு செய்துகொடுக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வந்த பொதுமக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிவாரண உதவிகள் மற்றும் வசதிகள் தொடர்பாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின் பேரில் மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் தபால்,  தொலைத் தொடர்புகள் ஆகிய அமைச்சுக்கள் இணைந்து இத்தொலைபேசி இணைப்பு வசதிகளை செய்துகொடுக்கவுள்ளன.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் இந்த தொலைபேசியைப் பயன்படுத்தி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தங்களது உறவினர்களுடன் தொடர்புகொள்ள வசதிகள் செய்துகொடுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு நிவாரண நிலையங்களுக்கும் 2 தொலைபேசிகள் என்ற அடிப்படையில் வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள 15 நிவாரண நிலையங்களுக்கும் இன்று முதல் இத்தொலைபேசி இணைப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பாணமை காட்டுப்பகுதியில் 13 புலிகள் பலி : பாதுகாப்பு தரப்பு தகவல்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தை அண்மித்த பாணமை காட்டுப்பகுதியில் இன்று அதிகாலை அப்பகுதியில் விடுதலை புலிகளின் நடமாட்டம் குறித்து அவதானிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 13 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இரு விடுதலைப் புலி பெண் உறுப்பினர்களும், விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண வெடிபொருள் நிபுணரான பரமானந்தனும் உயிரிழந்த 13 பேரில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்மோதலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது விடுதலை புலிகளின் ஆயுதங்கள் பல மீட்கப்பட்டதாகவும், தாக்குதலின் போது விசேட அதிரடிப்படையினருக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லையெனவும் பாதுகாப்பு தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

யாழ். மாணவர்களுக்கு இந்தியா நூல்கள் கையளிப்பு

kganes.jpgஉள்ளூரில் இடம்பெயர்ந்துள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி புத்தகங்களும் பாடசாலை உபகரணங்களும் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே. கணேஸ் இவற்றை இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ ஆலோக் பிரசாத்திடமிருந்து பெற்றுக்கொண்டார். அப்பியாசக் கொப்பிகளுடன் எழுது கருவிகள் உள்ளிட்ட பல பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன. வரலாறு, இலக்கியம், கலாசாரம் என்பவற்றுடன் தொடர்புடைய புத்தகங்களும் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை; வீதி பாஸ்களும் ரத்தாகும்- அமைச்சர் டளஸ் எச்சரிக்கை

dalas_alahapperuma.jpgதனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த பஸ் வண்டிகள் மீது கல்லெறிந்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்றுத் தெரிவித்தார்.

இதேநேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பொது மக்களை அசெளகரியங்களுக்கு உள்ளாக்கிய தனியார் பஸ் வண்டிகளின் பாதை அனுமதிப் பத்திரமும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் ஊழியர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை தனியார் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல் குமாரகே குறிப்பிடுகையில்,

வேலை நிறுத்த நடவடிக்கையைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாகாண தனியார் போக்குவரத்து ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பஸ் ஊழியர்களின் ஒழுக்க விதிகள் சம்பந்தமான வேலைத் திட்டத்தை இடை நிறுத்துமாறு கோரி பஸ் ஊழியர்களில் சிறு தொகையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் பெரும்பாலான தனியார் பஸ் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபற்றவில்லை.

கடந்த 31 ஆம் திகதி காலை முதல் கொழும்பிலிருந்து காலி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, கண்டி, கதிர்காமம், பொலன்னறுவை, இரத்தினபுரி, பதுளை, சிலாபம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கான தனியார் பஸ் சேவை ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தம் நேற்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்றது. காலி, மாத்தறை, உட்பட பல பிரதேசங்களிலிருந்து தனியார் பஸ் வண்டிகள் நேற்று கொழும்புக்கான சேவையில் ஈடுபட்டன. 103 ஆம் இலக்க நாரஹென்பிட்டி மற்றும் களனி விகாரை, 135 ஆம் இலக்க கொஹுவல தனியார் பஸ் வண்டிகளும் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டன.

இதன் காரணமாக மாகாணத்தின் பல பிரதேசங்களில் நிலவும் நிலைமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு மூன்று முறை கோரிக்கை விடுத்த போதிலும் நேற்று நண்பகல் வரையும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஸ்டான்லி பெர்னாண்டோ கூறினார்.

இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் தேவை -ஐக்கிய ராஜ்ஜியம் கோரிக்கை

miliband.jpgஇலங்கை யில் நடக்கும் மோதல்களில் சிக்கியிருக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கிலான மனிதாபிமான போர்நிறுத்தம் ஒன்றை இலங்கை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமது கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்களை மோதல் நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் பலவந்தமாக பொதுமக்களை தமது படையணிகளில் சேர்க்கும் நடவடிக்கையையும் விடுதலைப்புலிகள் கைவிட வேண்டும் என்றும் மிலிபேண்ட் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதேசமயம், விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை காரணம் காட்டி, மோதல்களின் போது ஒரு ஜனநாயக அரசு எப்படி செயற்பட வேண்டும் என்கிற நியாயமான எதிர்பார்ப்பிலிருந்து இலங்கை அரசு தவறுவதை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பான ஐக்கிய ராஜ்ஜியத்தின் நிலைப்பாடு குறித்து, ஐக்கிய ராஜ்ஜிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கவலைகள் தொடர்பில் எழுத்துப்பூர்வமான பதில் அளித்த மிலிபேண்ட் அவர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மோதல்கள் நடக்கும் பகுதியில் இன்னமும் சிக்கியிருக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களை அங்குள்ள ஆபத்தான சூழலில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவருவது எப்படி என்பது தான் தற்போதுள்ள முக்கிய கவலை என்றும் அவர் கூறினார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்க அமெரிக்க தீர்மானம்

u-s-flag.jpgஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்க அமெரிக்க தீர்மானித்துள்ளது. இதனை ஐநா செயலாளர் பான்.கீ.மூன் வரவேற்றுள்ளார். அத்துடன் அமெரிக்காவுடன் வலுவான அடித்தளத்தை மனித உரிமை பேரவையில ஏற்படுத்த உள்ளது.

புஷ் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இணைவதில்லை எனத் தீர்மானித்திருந்தது. உலகில் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தாது, இஸ்ரேலில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மாத்திரம் விமர்சிக்கப்பட்டதால், புஷ் நிர்வாகம் அவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.

இந்த நிலையில் மனித உரிமை பேரவையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் நடவடிக்கையில் உதவியளிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூசிலாந்து பேரவையில் இருந்து விலகிய பின்னர், குறிப்பிடதக்க மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் அமெரிக்க குறிப்பிட்டுள்ளது.

புலிகள் மக்களை வெளியேற்ற மாட்டார்கள் : குமரன் பத்மநாதன் ஹோம்ஸிடம் தெரிவிப்பு

kp-jhooms.jpgதமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விடுதலைப்புலிகள் மக்களை செல்ல விடமாட்டார்கள் என புலிகளின் ச‌ர்வதேச‌ பிரதிநிதி குமரன் பத்மநாதன் ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோ‌‌ம்ஸிடம் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நோர்வேயின் அனுசரணையுடன் குமார் பத்மநாதன் ஜோன் ஹோம்ஸை சந்தித்து கலந்துரையாடியதாகவும் இதன் போது ஜோன் ஹோம்ஸ் முல்லைத்தீவில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்களை விடுவிக்குமாறு அவரிடம் கோரியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பையடுத்து ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி எச்.எம்.ஜி.எஸ்.பாலிக்காரவை ஜோன் ஹோம்ஸ் சந்தித்து முல்லைத்தீவில் மோதல்களில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பான விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.