![]()
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 48 மணிநேர தற்காலிக மோதல் தவிர்பை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூன் வரவேற்றுள்ளார். இது குறுகிய காலமாக இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். இந்த காலகட்டத்தில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை சுதந்திரமாக வெளியேறுவதற்கு புலிகள் இடமளிக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
புது மாத்தளன் வைத்தியசாலையில் இருந்து, மேலும் ஒரு தொகுதி காயமடைந்தவர்களும் நோயாளர்களும் புல்மோட்டைக்கு கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். கிறீன் ஓசன் கப்பல் மூலமாக காயமடைந்தவர்கள், நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 440 பேர் இன்று (13.04.2009) புல்மோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொனராகலை, புத்தல பிரதேசத்தில் நேற்றிரவு (12) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்படடவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகிரித்துள்ளது.புத்தல, மஹகொடயாய கிராமத்துக்குள் திடீரெனப் புகுந்த ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறு என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தும் தற்போது கொல்லப்பட்டோர் ஒன்பது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயலில் வேலை செய்து விட்டு தமது இருப்பிடங்களுக்குத் திருப்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.கொல்லப்பட்டவர்களில் 3 பெண்களும் 3 சிறுவர்களும் அடங்குவர். ஓரு வயோதிப பெண் காயமடைந்தார். இந்தத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக பாதுகாப்புத் தரப்புத் தெரிவித்தது.
புலிகள் ஊடுருவியுள்ள பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வரும் பொது மக்களை கண்ட இடத்தில் சுடுமாறு புலிகளின் தலைமைத்துவம் தங்களது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்கள் தப்பிச் செல்வதை தடுக்க புலிகளின் தலைமைத்துவம் இந்த உத்தரவை விடுத்துள்ளமைக்கான தகவல்கள் பாதுகாப்பு அமைச்சுக்கும், புலனாய்வு துறையினருக்கும் கிடைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.
தப்பிவரும் பொது மக்களின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் பாதுகாப்பு வலய எல்லையில் ஆயுதம் தாங்கிய புலிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகளின் கடுமையான துப்பாக்கிப் பிரயோகத்தி ற்கு மத்தியிலும் நேற்றைய தினம் மேலும் 270 பொது மக்கள் அம்பலவன்பொக்கணை பிரதேசத்தை நோக்கி வருகை தந்துள்ளனர்.
இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ள இவர்களுள் 86 ஆண்களும், 77 பெண்கள், 48 சிறுவர்கள் மற்றும் 59 சிறுமிகள் அடங்குவர். இவ்வாறு தப்பி வரும் போது புலிகளின் துப்பா க்கிச் சூட்டில் காயமடை ந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
67,280 பொது மக்கள் இதுவரை இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் செய்து கொடுத்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
நோர்வேயில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது . நேற்று ஞாயிற்றுக்கிழமை தூதரகத்தின் கதவுகள், சாளரங்களை அடித்து நொருக்கியதாக தூதரகம் தெரிவித்துள்ளது
ஓஸ்லோவிலும் கடந்த 5 நாட்களாக இலங்கை தூதரகம் முன் தமிழர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை இலங்கை பாதுகாப்பு வளையத்துக்குள் அந் நாட்டு ராணுவம் 300 கிரனைட்களை வீசி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய செய்தி வெளியானதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் கொதிப்படைந்தனர்.
பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாரை தள்ளிவிட்டுவிட்டு இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்த அவர்கள் ஜன்னல்கள் மற்றும் மேஜைகள், நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். அவர்களை போலீசார் உடனடியாக வெளியேற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல் – நோர்வே அரசு கண்டனம்
நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதையிட்டு நோர்வே அரசு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
நோர்வே ஒஸ்லோவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்கள் இலங்கைத் தூதரகத்தைத் தாக்கியிருப்பதையிட்டு நோர்வே அரசாங்கம் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
தூதரகத்துக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் கார் ஸ்டோறி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் நோர்வேயின் முயற்சியால் 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை போர் நிறுத்தம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நோர்வே அரசு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது – நோர்வை நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிருந்து சிறீலங்கா அரசாங்கம் நீக்கியது
இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து சிறீலங்கா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை சிறீலங்காவுக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது.
1. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமை
2. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு பாதுகாப்பை வழங்குமாறு சிறீலங்காவினால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதும் அதனை நோர்வேயின் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தியமை
3. நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர் செல்வராஜா பத்மநாதன் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஜக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜோன் ஹொல்ம்ஸ் ஆகிய இருவரும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தமை
ஆகிய உடனடிக் காரணங்களை முன் வைத்து நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து விலக்குவதாக அறிவித்துள்ளது.
சிறீலங்கா அரசாங்கம், தமிழீழ விதலைப் புலிகள், ஐ.நா மற்றும் ஏனைய நாடுகளுடனான தொடர்பாளராக நோர்வே செயற்பட்டு வந்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இத் தீர்மானத்தினால் நோர்வே தனது ஏற்பாட்டாளர் நிலை, தொடர்பாளர் நிலை மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலத்தில் நாட்டின் மிகப்பெரிய அலுமினியத் தாது சுரங்கத்தில் நக்ஸலைட் தீவிரவாதிகள் நேற்று நடத்தியத் தாக்குதலில், மத்திய தொழில்பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) காவலர்கள் 11 பேர் உயிரிழந்தனர். 4 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
கோரபுட் மாவட்டம் பஞ்ச்பட்மாலி என்ற இடத்தில் தேசிய அலுமினியம் கம்பெனிக்கு (நால்கோ) சொந்தமான பாக்ஸைட் சுரங்கம் உள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 370 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சுரங்கத்தில் நேற்று ஆயுதம் தாங்கிய நக்ஸலைட்டுகள் 100 பேர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது பணியில் இருந்து 80 தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்திய அவர்கள், பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டதாக காவல்துறை தலைவர் எம்.எம். ப்ரராஜ் தெரிவித்தார்.
சுமார் 10 மணி நேரம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நீடித்தது. இன்று அதிகாலையில் தீவிரவாதிகள் அனைவரும் சுரங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டு தப்பியோடி விட்டதாகவும், இந்த மோதலில் சிஐஎஸ்எஃப் காவலர்கள் 11 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்ஸலைட்டுகள் 4 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார்.
புத்தள – மொனராகல வீதியில் அமைந்துள்ள மஹாகொடயாய பிரதேசத்தில் ஐந்து கிராமவாசிகள் இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட ஐந்துபேரும் வயலில் வேலை செய்து வருபவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடுமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களை வெளியில் உள்ள தமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பதற்கு நேற்று (12) முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள சுமார் 65 ஆயிரம் பொதுமக்கள் வவுனியா நிவாரண கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களினால் இவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்-சிங்கள புத்தாண்டை தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த ஒழுங்குகளை மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு மேற்கொண்டுள்ளது. சகல நிவாரணக் கிராமங்களிலும் விசேட வரவேற்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு நண்பர்கள் உறவினர்களினரிடையே புதுவருட பரிசில்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் என்பன பரிமாறவும் இதனூடாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை பண்டிகையை முன்னிட்டு மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சும் இராணுவமும் இணைந்து அங்குள்ள சிறுவர்களுக்கு பரிசில்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என்பவற்றை அன்பளிப்புச் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத் கூறினார்.
பல வருடங்களாக புலிகளின் பிடியில் இன்னல்களுக்கு மத்தியில் புதுவருட பண்டிகையை கொண்டாடிய மக்கள் இம்முறை முதற்தடவையாக தமது உறவினர்களுடன் நிம்மதியாக பண்டிகை கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு பண்டிகைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது தொடர்ந்தும் வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கும் வகையில் விசேட அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டம் கட்டமாக சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அதுவரை மக்கள் பொறுமைகாக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, அம்பலவான்பொக்கனை பிரதேசத்தில் உள்ள படையினர் மீது தாக்குதல் நடத்த முயன்ற புலிகளை இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அந்தப் பிரதேசத்தில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த கடைசி அகழிகளையும் கைப்பற்றியுள்ளனர். புலிகளை இலக்கு வைத்து படையினர் நடத்திய கடுமையான பதில் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
பாதுகாப்பு நிலைகள் மீது புலிகள் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் முயற்சிகள் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. அம்பலவான்பொக்கனை பிரதேசத்திலிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
கடுமையான மழைக்கு மத்தியிலும் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பொதுமக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ள அதேசமயம் புதுக்குடியிருப்பின் மேற்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளில் கடுமையான தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மிதிவெடிகள் – 150, அதிசக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகள் – 14, கைக்குண்டுகள் – 150, வெடிமருந்துகள், குண்டுகள் – 08, கனரக ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகையான உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 34 இலங்கை மீனவர்களை இந்திய அரசு விடுதலை செய்துள்ளதாக மீன்பிடித் திணைக்களம் நேற்று தெரிவித்தது. இவர்கள் நேற்று முன்தினம் இந்திய கடற்படையினரால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
34 மீனவர்களும் 7 படகுகளும் கடற் படையினரிடம் கையளிக்கப்பட்டதாக கடற் படைப் பேச்சாளர் கப்டன் மகேஷ் கருணாரத்ன தெரிவித்தார். மேற்படி மீனவர்கள் நீர்கொழும்பு, தெவிநுவர போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சுமார் 108 மீனவர்களை விடுதலை செய்ய இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மீன்பிடித் திணைக்களம் கூறியது.
ஏனைய 74 பேரும் விரைவில் நாடு திரும்புவர் எனவும் அதற்கான ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது. இவர்கள் தெவிநுவர, திருகோணமலை, தங்கல்ல, கோட்டகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமாக இந்திய கடல் எல்லைக்குள் வந்த படகொன்றை மடக்கிய கடலோர காவல் படையினர் அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் இருந்த 5 பேரும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என்றும், தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த படகும் அதில் இருந்த 5 மீனவர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டு காசிமேடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.