அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று நியமனம்

president_teachesr.jpgநாடு முழுவதிலுமுள்ள அரசாங்கப் பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகத் தெரிவு செய்யப்பட்டோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நியமனக் கடிதங்களைக் கையளித்தார். இது தொடர்பான வைபவம் இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.

வடக்கு,  கிழக்கு மற்றும் மலையகம் உட்பட நாடு முழுவதிலுமுள்ள அரச பாடசாலைகளுக்கு 1500 பட்டதாரிகளை நியமிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக இன்று 959பேருக்கு நியமனம் வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற பட்டதாரிகளுக்கே இந்நியமனம் வழங்கப்படுகின்றது. ஏனையோருக்கான நியமனம் விரைவில் வழங்கப்படும்.  ஜனாதிபதியின் பணிபுரைக்கு அமைய கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவின் வழிகாட்டலுடனும் பிரதியமைச்சர் சச்சிதானந்தனின் ஒத்துழைப்புடனும் இந்நியமனம் வழங்கப்படுவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பெண் ஜனனி போட்டி

01-janani.jpgஐரோப்பிய நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழ்ப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார். அவருக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. லண்டனில் வசித்து வருபவர் ஜனனி ஜனநாயகம். இலங்கையைச் சேர்ந்தவர். தமிழ்ப் பெண்ணான ஜனனி ஜனநாயகத்தின் குடும்பத்தினர் நீண்ட காலத்திற்கு முன்பு அகதிகளாக இங்கிலாந்து  சென்றனர். தற்போது அந்த நாட்டில் வசித்து வருகின்றனர்.

ஜனனி ஜனநாயகம் தற்போது ஐரோப்பிய நாடாளுமன்ற எம்.பி தேர்தலில் போட்டியிடுகிறார். எதிர்வரும் வியாழக்கிழமை இந்தத் தேர்தல்  நடைபெறுகிறது. லண்டனிலிருந்து எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இங்கிலாந்தின் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுடன் சில சுயேச்சைகளும் களம் கண்டுள்ளனர். லண்டனிலிருந்து ஜனனி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

இவர்களுடன் புலம் பெயர் தமிழர்களின் பேராதரவுடன் ஜனனி போட்டியிடுகிறார். ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஜனனி அவர்கள் வெற்றிபெற பிரித்தானிய தமிழர் பேரவை தமது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்துள்ளது. அதேபோல பாரீஸில் இன்னொரு தமிழர் போட்டியிடுகிறார். இவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஜனனி ஜனநாயகம் வெற்றி பெற்று எம்.பி ஆனால், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் எம்.பியான முதல் தமிழர்  என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அழுத்தங்கள் காரணமாகவே விசாரணைக்கு நவநீதம் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்

profrajiwawijesinha.jpgஐக்கிய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை புலம்பெயர் மக்கள் மற்றும் சில நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவே இலங்கைக்கு எதிராக யுத்த குற்ற விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றார் என இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரிமை அமைச்சின் செயலாளரும் அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். ஆனால் பல நாடுகள் எமது நிலைப்பாட்டை புரிந்து கொண்டுள்ளன. ஜெனிவாவில் இடம்பெற்ற மனித உரிமை பேரவையின் அமர்வில் அதிகமான நாடுகள் எமக்கு ஆதரவளித்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “ஐ.நாவின் மனித உரிமை விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறி வருகின்றார். தனக்கு கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பிலேயே இவ்வாறு யுத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரி வருகின்றார்.

ஆனால் சில நாடுகள் மற்றும் புலம்பெயர் மக்களின் அழுத்தம் காரணமாகவே இவ்வாறு கோரிக்கை விடுக்கின்றார். இதேவேளை யுத்த குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று நவநீதம் பிள்ளையின் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கூறினால் உடனே நவநீதம் பிள்ளை கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அண்மையில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விசேட பிரேரணையில் நாங்கள் வெற்றிபெற்றோம். ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதுவர் தயான் ஜயதிலக்க உள்ளிட்ட பலர் இவ்விடயத்தில் பாரிய சேவையாற்றியுள்ளனர். ஆனால் இலங்கை விவகாரம் தொடர்பில் எப்போதும் பிரேரணை கொண்டுவரப்பட முடியும். 48 உறுப்பு நாடுகளில் 16 நாடுகள் கையெழுத்திட்டால் மனித உரிமை பேரவையின் வழமையான அமர்வுகளில் இலங்கை தொடர்பில் விசேட பிரேரணையை கொண்டுவர முடியும். ஆனால் எவ்வாறான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும் நாங்கள் அவற்றைத் தோற்கடிப்போம்.” இவ்வாறு அவர் கூறினார். 

ராஜபக்ஷ சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம் : கொழும்பு பல்கலைக்கழகம் திட்டம்

mahinda-0000.jpgகொழும்புப் பல்கலைக்கழகம் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவிக்கத் திட்டமிட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புப் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோருக்கே இவ்வாறு டாக்டர் பட்டம் அளிக்கப்படவுள்ளது. கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஷானிக்கா ஹிம்புரேகம விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் நாட்டின் நன்மதிப்பைப் பாதுகாக்கவும், இனங்களுக்கு இடையில் நல்லுணர்வை ஏற்படுத்தவும் ராஜபக்ஷ சகோதரர்கள் முழு மூச்சுடன் செயற்பட்டதாகவும், அதற்கு நன்றி பாராட்டும் வகையிலேயே அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பட்டமளிப்பு நடைபெறும் தினம் குறித்து இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

த.தே.கூட்டமைப்பினர் நாடு திரும்ப அறிவுறுத்தல் – இரா.சம்மந்தர்

sampanthan.jpgஇலங் கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியிருப்பதாகவும், அவர்கள் தங்களது ஜனநாயக கடமைகளை மேற்கொள்ளும் விதமாகவும், தம்மை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் தேவைகளை கவனிக்கும் முகமாகவும் விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்கிற கோரிக்கைகள் பலதரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இதில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு மாதம் முதல் ஒரு வருட காலம் வரை வெளிநாடுகளில் தங்கியுள்ளனர் என்றும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையடுத்து அவர்கள் நாடு திரும்ப வேண்டியது மிகவும் முக்கியமானதாக கருதப்படுவதாகவும் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவர்களை நாடு திரும்ப வலியுறுத்தும் வகையில் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நாடாளுமன்ற குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர்களை விரைவில் தங்களது பணிகளை முடித்து கொண்டு நாடு திரும்பும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தர் தெரிவித்தார்.

தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அச்சுறுத்தல் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்றும், எனினும் தற்போது வெளிநாட்டில் இருக்கும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடு திரும்புமாறு கேட்டுள்ளதாகவும் சமபந்தர் அவர்கள் கூறுகிறார்.

மன்னார் – மதவாச்சி பாதையும் நிர்மாணம்

sri-lankan-road.jpgதலை மன்னாரையும் மன்னார் பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் மூன்று கிலோ மீட்டர் நீளமான பாதையொன்றை நிர்மாணிக்க நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நான்கு நிரைகளை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த பாதையில் 157.10 மீட்டர் நீளமான பாலமொன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு கூறியது.

ஜப்பான் அரசின் 190 கோடி ரூபா உதவியுடன் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரையும் மன்னார் நிலப்பரப்பையும் தொடர்புபடுத்தும் தள்ளாடி பாலமும் பிரதான பாதையும் புலி பயங்கரவாதிகளால் கடந்த காலத்தில் நாசமாக்கப்பட்டது. மன்னார் மாவட்டம் புலிகளின் பிடியில் இருந்து முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து மன்னார் மாவட்டத்தை புனரமைக்கவும் பாதைகளை செப்பனிடவும் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, கடந்த வருட பிற்பகுதி முதல் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டன. மன்னார் – மதவாச்சி பாதையும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாதை தலைமன்னாருக்கான பாதையுடன் இணைக்கப்பட உள்ளது.

தள்ளாடி பாலத்துடன் கூடிய புதிய பாதை நிர்மாணிக்கும் பணிகள் 75 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் தலைமன்னாருக்கான பாதை திறந்து வைக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கூறியது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுடனும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு வசந்தம் ஜனாதிபதி செயலணி தலைவருமான பசில் ராஜபக்ஷவின் ஆலோசனையுடனும் மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, வடக்கு வசந்தம் திட்டத்துடன் இணைந்ததாக மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் யோதவெவ அபிவிருத்தி, வாவிகளை புனரமைத்தல், நெடுஞ்சாலைகள் அமைத்தல், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், அமைத்தல் குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளுதல் என்பனவும் அடங்குவதாக அறிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் உள்நாட்டில் தான் நடைபெறும்

rohitabogallaagama.jpgஇலங்கை அரச படையினர் மீது தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை இலங்கைக்குள்ளேயே இருக்கக்கூடிய நீதிமன்றங்கள் தான் விசாரிக்குமே தவிர அவை சர்வதேச அமைப்புகளினால் விசாரிக்க இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

அரச படையினர் மீதான குற்றச்சாட்டுகள் இலங்கை நீதிமன்றங்களால் மட்டுமே விசாரிக்கப்பட அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறுகிறார் அதேநேரம் நெடுங்காலமாக யுத்தத்தால் பீடிக்கப்பட்டிருந்த நாட்டை அதிலிருந்து வெளிக்கொண்டுவந்து, தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இயன்ற காரியங்கள் அனைத்திலும் இலங்கை அரசாங்கம் ஈடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

டெங்கை வளர்க்கும் சுற்றுசூழல்; இன்று முதல் வழக்கு

mosquito_preventionss.jpgடெங்கு நுளம்புகளை உருவாக்கும் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக இன்று (1) முதல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அபராதமும் தண்டனையும் விதிக்கப்படவுள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சு கூறியது.

இது தொடர்பான சட்ட மூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின் பிரகாரம் டெங்கு நுளம்புகளை உருவாக்கும் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் நபர்கள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள் என்பவற்றிடமிருந்து ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதமும் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 21 பாடசாலைகளுக்கு 3 தினங்கள் விடுமுறை

students1.jpgபடையி னரின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவத்தின் நிமித்தம் இன்று முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரையும் கொழும்பில் 21 பாடசாலைகள் மூடப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார அறிவித்துள்ளார்.

இன்று முதல் மூன்றாம் திகதி வரையும் மூடப்படுகின்ற பாடசாலைகளின் பெயர் விபரம் வருமாறு, ரோயல் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி, மஹாநாம கல்லூரி, யசோதரா மகளிர் வித்தியாலயம், போல் ஹென்கொட மஹாமாத்ய வித்தியாலயம், கொழும்பு தெற்கு டட்லி சேனநாயக்க வித்தியாலயம், லும்பினி கல்லூரி, மாளிகாவத்தை பாரன் ஜயதிலக்க வித்தியாலயம், மருதானை அசோகா வித்தியாலயம், கொம்பனித்தெரு புனித ரோசரி சிங்கள வித்தியாலயம், கொம்பெனித்தெரு புனித ரொசரி தமிழ் வித்தியாலயம், கொம்பனித்தெரு ரி. பி. ஜாயாக் கல்லூரி, கொம்பனித்தெரு அல் இக்பால் கல்லூரி, இசிப்பத்தான கல்லூரி, பொரல்ல சுசமயவர்தன வித்தியாலயம், பொரல்ல பண்டாரநாயக்கா வித்தியாலயம், வாழைத்தோட்டம் அல்- ஹிக்மா கல்லூரி, பத்தரமுல்லை சிறிமபோதி வித்தியாலயம், மாலபே ராகுல வித்தியாலயம் ஆகியனவே மூடப்படுகின்ற பாடசாலைகளாகும்.

நாளொன்றுக்கு 5மில். லீற்றர் நீரைப் பெறல்: விசேட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு

rizad_baduradeen1.jpgநாளொன் றுக்கு 5 மில்லியன் லீற்றர் நீரைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் விசேட நீர் விநியோகத் திட்டமொன்று நேற்று வவுனியா நீவாரணக் கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

யுனிசெப் நிறுவனமும், மீள்குடியேற்ற அமைச்சும் இணைந்து 400 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளன. வவுனியா மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து பெறப்படும் நீரே நன்கு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்கள் குடிப்பதற்கு ஏதுவானதாக விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் ரிஷாட் கூறினார்.

மல்வத்து ஓயாவிலிருந்து நாளொன்றுக்கு விநியோகிக்கப்படும் 5 மில்லியன் லீற்றர் நீரை வவுனியாவிலுள்ள நான்கு நிவாரணக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தமது அன்றாடத் தேவைகளுக்காகப் பெற்றுக் கொள்ள முடியும். நாளடைவில் இந்நீர்த்தேக்கத்திலிருந்து விநியோகிக்கப்படும் நீரின் அளவை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போர் அன்றாடம் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு போதுமான அளவு நீர்வசதி இல்லாமை இதுவரையில் பெரும் குறைபாடாக நிலவி வந்தது. அக்குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டே இத்திட்டத்தை அமுல் செய்திருப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்துக்கு மேலதிகமாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நான்கு நிவாரணக் கிராமங்களுக்கும் 150 நிலக்கீழ் குழாய்கள் மூலம் நீர் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.