அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச தொலைபேசி இணைப்பு

mobile-phone.jpgஇலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக கையடக்கத் தொலைபேசி இணைப்புகளை வழங்கும் திட்டம் ஒன்றை தேசிய விமான சேவையான மிஹின் லங்கா விமான சேவையின் கீழ் உள்ள ஸ்ரீ லங்கன் ஹொலிடேஸ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
 
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் அன்றாட தொலைத் தொடர்பு தேவைகளுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்தே இந்த இலவச இணைப்பு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு டயலொக் தொலைபேசி நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.

விண்ணில் பாய்ந்தது ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள்

230909ossaan.jpgகடல் ஆய்வு, கடற்பகுதியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தல், தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கான ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் – இஸ்ரோ நேற்று விண்ணில் செலுத்தியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி – சி 14 செலுத்து வாகனம் (ராக்கெட்) ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளையும், 6 சிறியரக (நானோ) செயற்கைக்கோள்களையும் தாங்கிக் கொண்டு, சரியாக நேற்று நண்பகல் 11.53 மணிக்கு விண் வட்டப்பாதையை நோக்கி பாய்ந்தது.

ஜூவாலையைக் கக்கிக் கொண்டு விண்ணில் பயணித்த பி.எஸ்.எல்.வி. திட்டமிட்டபடி விண்வட்ட நீள் பாதையில் எட்டியதும் ஒவ்வொரு செயற்கைக் கோள்களாக புவிச் சுழற்சிப் பாதையில் துல்லியமாகச் செலுத்தியது. செயற்கைகோள்கள் அனைத்தும் திட்டமிட்டபடி செலுத்தப்பட்டதும் இஸ்ரோ தலைவர் டாக்டர் ஜி. மாதவன் நாயர் உட்பட ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளை வடிவமைத்த விஞ்ஞானிகள் குழுவினர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்தியா பல ஆண்டுகளுக்கு முன் செலுத்திய ஓஷன்சாட்-1 செயற்கைக்கோளின் செயல்பாட்டுப் பயன்களைத் தொடரவும், புதிய பயன்பாடுகளுக்காகவும் 960 கிலோ எடை கொண்ட ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது. 720 கி.மீ. எஸ்.எஸ்.ஓ விண்வட்டப்பாதையில் இந்த செயற்கைக் கோள் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மின் நிலைய நிர்மாணத்தில் விபத்து- 20 பேர் பலி, பலருக்கு காயம்

240909ind.jpgஇந்தியா வின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் 178 மீட்டர் உயரமான ராட்சத புகைபோக்கியொன்று சரிந்து விழுந்ததில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

கோர்பா மாவட்டத்தில் பாரத் அலுமினியம் நிறுவனத்துக்காக மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அங்கு திடீரென்று அந்த புகைபோக்கி சரிந்து விழுந்ததில் மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரத் அலுமினியம் நிறுவனத்துக்காக, சீன நிறுவனம் ஒன்று மின் நிலையம் அமைக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் இன்னொரு தனியார் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தது. அந்தத் தனியார் நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று கூறி, அந்த நிறுவன அதிகாரி ஒருவரை ஊழியர்கள் சிலர் அடித்துக் கொன்றுவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  இந்தச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

50 ஆயிரம் ரவைகள், 8 கிலோ சி-4 விசுவமடுவில் படையினரால் மீட்பு

பல்வேறு வகையான ஐம்பதாயிரம் ரவைகள், எட்டு கிலோ எடையுள்ள சி-4 அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை விசுவ மடுவிலிருந்து பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, சி-4 அதிசக்தி வாய்ந்து வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ஏழு சிரட்டைகளையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படையினர் நடத்திய பாரிய தேடுதல்களில் எம்.பி.எம்.ஜி ரவைகள் 13,500, ரி-56 ரக ரவைகள் 26,250, .22 மி.மீ ரவைகள் 10,600, 15 அடி உயரமான பாரிய கூடாரங்கள் – 14, அன்டனாக்கள்-03, மோட்டார் குண்டுகள், தொலைத் தொடர்புக் கருவிகளுக்கு பயன் படுத்தப்படும் பற்றரிபெட்டிகள்-03, வெடிக்கவைக்கும் கருவிகள்-245 மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர்.

சுதந்திரபுரம் மற்றும் உப்புக்குளம் பகுதிகளில் இராணுவத்தின் எட்டாவது அதிர டிப் படையினர் நடத்திய தேடுதல்களில் 60. மி.மீ. மோட்டார் குண்டு-13, மிதி வெடிகள்-10, கிரனேட்-15, கிளேமோர் குண்டு கள்-02, 8 கிலோ எடையுள்ள சி-4 ரக வெடி மருந்துகள், சி.டி.எம்.ஏ. தொலைபேசி 01, வெடிமருந்துகள் நிறப்பப்பட்ட ஒலி பெருக்கி மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் புழுதி புயல்

23-sydney.jpgஆஸ்தி ரேலியாவின் கிழக்குப் பகுதியில் திடீரென வீசிய புழுதிப் புயலால் சிட்னி நகரமே சிவப்பு நிறமாக மாறிப் போனது. இந்த திடீர் செம்புழுதியால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மூச்சுத் திணறல் உள்ளிட்டவை ஏற்படலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததால் வெளியில் வந்தவர்கள் அனைவரும் முகமூடிகளை அணிந்து நடமாடினர்.

சிட்னி விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து  நிறுத்தப்பட்டது. மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் எதிரில் வருவது தெரியாத வகையில் புழுதி அடர்த்தியாக இருந்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

செவ்வாய் கிரகம் போல சிட்னி நகரமே மாறிப் போயிருந்தது. இதை பலர் வெளியில் வந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். பலர் வியப்புக்குள்ளாகினர். பலருக்கோ பீதியாகி விட்டது. புரோக்கன் ஹில் நகரிலிருந்து தொடங்கிய இந்த புழுதிப் புயல் கிழக்கு ஆஸ்திரேலியா  முழுவதும் படிப்படியாக வீசி நகரங்களை செம்மையாக்கி விட்டது.

புழுதிப் புயல் வீசியபோது, மணிக்கு 60 மைல் வேகத்தி்ல் பலத்த காற்றும் வீசியது. இந்த புழுதிப் புயல் காரணமாக 50 லட்சம் டன் தூசி சிட்னி உள்ளிட்ட பகுதிக்குள் வந்து சேர்ந்து விட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மணிக்கு 75 ஆயிரம் டன் அளவுக்கு அடர்த்தியான தூசி சிட்னி நகரை மூடியது. இந்தப் புயல் பின்னர் பசிபிக் கடலில் போய் முடிந்தது.

ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு அனுபவம் இதுவரை ஏற்பட்டதில்லை என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

கிழக்கில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த சில குடும்பங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இலங்கையின் வடக்கே வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு மீள் குடியேற்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சில குடும்பங்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயம் இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாமிலுள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

இவர்களைப் பிரதேச செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று உறவினர்களிடம் நேரடியாக ஒப்படைத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.அதிகாரிகளின் தகவல்களின்படி கட்டம் கட்டமாக இக்குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது

த‌மிழக ‌மீனவ‌ர்களை ‌விடு‌‌வி‌க்க கோ‌ரி ராமே‌ஸ்வர‌த்த‌ி‌ல் நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம்

22-jayalalitha.jpgஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு‌ள்ள 21 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை 25ஆ‌ம் தே‌தி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறு‌கிறது. இது தொட‌ர்பாக அ‌க்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி கடந்த மாதம் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மீண்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித் தொழிலை செய்ய ஆரம்பித்தனர்.

ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். 16.9.2009 அன்று ராமேஸ்வரம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, வலைகளை அறுத்து, அவர்களுடைய படகுகளை சேதப்படுத்தி மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி எறிந்ததோடு மட்டுமல்லாமல் 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்று உள்ளனர்.

தமிழக மீனவர்களை ஈவு இரக்கமின்றி துன்புறுத்துவது, துப்பாக்கியால் சுடுவது, சிறை பிடிப்பது ஆகியவற்றை இலங்கை அரசு வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறது. இது போன்ற துயரச் சம்பவம் நடைபெறும் ஒவ்வொரு முறையும் இலங்கை அரசைக் கண்டித்து அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.

தமிழக மீனவர்களை வாழவிடாமல் தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டு இருக்கும் இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க மத்திய அரசு மூலமாக தி.மு.க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி மாலை 3 மணி அளவில் ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலர் டி.ஜெயக்குமார் தலைமையிலும், மீனவர் பிரிவு செயலர் கே.கே.கலைமணி, ராமநாதபுரம் மாவட்ட செயலர் வ.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

கண்டி பொலிஸ் பிரிவில் பகிரங்க பிடியாணையுடன் 2500 பேர்

நீதிமன்றங்கள் மூலம் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 2500 பேர் கண்டி பொலிஸ் பிரிவுக்குள் இருப்பதாகக் கண்டி பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரஞ்சித் கஸ்தூரிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை காலம் குறிக்கப்பட்டபிடி ஆணை தொடர்பில் 800 பேரும் குறித்த பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குள் இருப்பதாகவும் அண்மையில் கண்டி பொலிஸ் நிலையத்தினால் மேற் கொண்ட விசேட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனை முன்னிட்டு இவர்களைக் கைது செய்யும் முகமாக தற்போது விசேட நடவடிக்கைகளில் கண்டி பொலிஸார் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். கண்டி, கட்டுகஸ்தோட்ட, பேராதனை பிரதேசங்களிலே கணிசமான தொகையினர் ஒளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

புலிகளின் பணமும், சர்வதேச வலையமைப்பும் இலங்கைக்கு எதிரான பயன்பாட்டில் 2வது சவாலையும் முறியடிக்கும் முயற்சியில் அரசு

240909gl.jpgபயங்கர வாதத்தை முற்றுமுழுதாக ஒழிக்கும் முதலாவது சவாலுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்த எமது அரசாங்கம் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தோற்கடிக்கும் இரண்டாவது சவாலை முகம்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் புலிகளின் அச்சுறுத்தல் முற்று முழுதாக ஒழிக்கப்பட்ட போதும் 29 வருடங்களாக புலிகள் திரட்டிய பெருமளவு பணம் இன்னும் காணப்படுகிறது.  இது தவிர புலிகளின் சர்வதேச தொடர்பாடல் வலையமைப்பும் இன்னும் ஒழிக்கப்படவில்லை.  இதனால் எமது நாட்டுக்கு எதிரான சர்வதேச அச்சுறுத்தல் தொடர்ந்து காணப்படுகிறது.

புலிகளின் அழுத்தம் காரணமாக அமெரிக்க செனட் சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தை முன்னெடுத்த ஜனாதிபதி அடங்கலான இராணுவ தளபதிகள் அனைவரையும் சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இந்த சர்வதேச சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புலிகள் முழுமையாக ஒழிக்கப்பட்ட போதும் புலிகளின் அச்சுறுத்தல் முழுமையாக ஓயவில்லை. புலிகளின் பணமும் சர்வதேச வலையமைப்பும் இலங்கைக்கு எதிராக பயன் படுத்தப்படுகிறது.

சர்வதேச ரீதியான சவால்களை முகம் கொடுக்கத்தான் தயாராக இருப்பதாகவும் யுத்த நீதிமன்றத்தின் முன்செல்ல நேரிட்டால் அனைவர் சார்பாகவும் தான் செல்வதாகவும் சட்டத்தரணிகளுடான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புலிகளை ஒழித்ததால் பெற்ற சுதந்திரத்தை முழு நாடும் இன்று அனுபவிக்கிறது. பெற்ற வெற்றியை தொடர்ந்து பாதுகாப்பதற்காக இந்த அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே தென்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது. சகல தரப்பினரும் ஒன்றுபட்டு பெற்ற வெற்றியை பாதுகாக்க வேண்டும்.

யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவு பணம் இன்று நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. சகல துறைகளி லும் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டு வருகிறது. வெளிநாட்டு வீதிகளின் தரத்திற்கு அம் பாந்தோட்டையிலுள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஆஸ்பத்திரிகள் என்பனவும் சிறந்த நிலையில் உள்ளன.

யுத்தம் முடிவடைந்துள்ளதால் முன்னரை விட அதிகமாக அபிவிருத்தி பணிகள் இடம்பெறும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். பின்தங்கிய பகுதிகள் யாவும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

வடமேல் மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு. முன்னணி 2/3 பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் 3/4 க்கு நேருக்கமான வாக்குகளை பெற்றது. அதனைவிட கூடுதல் பெரும்பான்மையுடன் தென்மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதே எமது நோக்கமாகும்.

இறுதியாக நடைபெறும் தென்மாகாண சபைத் தேர்தல் ஏனைய இரு பிரதான தேர்தல்களுக்கும் சிறந்த அடித்தளமாக இருக்கும். யுத்தம் முடிவடைந்துள்ளதால் பெருமளவு வெளிநாட்டவர்கள் இலங்கை யில் முதலீடு செய்து வருவதோடு வெளி நாட்டு பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

இதனால், தொழில்வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. பிரான்ஸிலுள்ள பல முக்கிய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன என்றார்.

இங்கு உரையாற்றிய தெஹிவளை- கல்கிஸ்ஸ மாநகர சபை பிரதி மேயரும் தெஹிவளை சு.க. அமைப்பாளருமான தனசிரி அமரசேகர கூறியதாவது,

நான் பெலியத்தை பிரதேசத்தில் பிராச ரப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி யால் நியமிக்கப்பட்டுள்ளேன். அம்பாந் தோட்டை மாவட்டத்தில் ஐ.ம.சு.மன்னணி மகத்தான வெற்றியீட்டும். தென் மாகாணத்தில் நாம் 85 வீத வாக்குகளை பெறுவோம் தென் பகுதி மக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர். இப்பகுதிகளில் பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐ.தே.க. வுக்கு தென்பகுதி மக்கள் இம் முறை நல்ல பாடம் புகட்டுவர். ஐ.தே.க. வின் ஓரிரு கூட்டங்களே நடைபெறுகின் றன. ஐ.தே.க. கூட்டங்களில் பங்குகொள்ள எவரும் முன்வருவதில்லை என்றார்.

யாழ். பாஷையூரில் ஐஸ் தொழிற்சாலை

யாழ்.குடா நாட்டுக் கடற்தொழிலாளர்களின் வேண்டுகோளுங்கிணங்க, குருநகர், பர்ஷையூரில் ஐஸ் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.

இத்தொழிற்சாலையை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான சந்திப்பொன்று செவ்வாயன்று அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் நடந்தது குடாநாட்டில் பிடிக்கப்படும் மீன்களைப் பதப்படுத்துவதன் மூலம் வெளிமாவட்டங்களுக்கு மீன்களைக் கொண்டு செல்லும் கடற்தொழிலாளர்கள் அதிக நன்மையடைவார்களென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதேவேளை ஐஸ் உற்பத்தித் தொழிற்சாலையைக் குடா நாட்டில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மிகவிரைவில் மேற் கொள்ளப்பட வேண்டுமென இச்சந்திப்பில் கலந்து கொண்ட கடற்தொழிற்துறை அமைச்சின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பா ளர் தர்மலிங்கத்திற்குப் அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.