அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இராணுவ அதிகாரியொருவர் ஓய்வுபெற்ற ஆறு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க இராணுவ சட்டத்தில் இடம் – கெஹெலிய

sarath.jpgசரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பதா அல்லது சாதாரண நீதிமன்றத்தில் விசாரிப்பதா என்பது குறித்து இராணுவ சட்டப் பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்ற பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

பொன்சேகாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலத்தை இராணுவ சட்டப் பிரிவினர் பரிசீலித்து அதனை சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி அது பெறப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தின் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே சரத் பொன்சேகா இராணுவப் பொலிஸாரால் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எந்த ஒரு இராணுவ அதிகாரியோ அல்லது வீரரோ சேவையின் போது இராணுவ சட்டங்களை மீறினால் அவர் ஓய்வு பெற்று ஆறு மாத காலத்திற்குள் அவர் மீது இராணுவம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இராணுவ சட்டத்தின் 57 பிரிவு தெளிவாக கூறுவதாக தெரிவித்த அமைச்சர், அந்த சட்டவிதி விதிமுறைகளுக்கு அமைவாகவே பொன்சேகா இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் நடைபெற்றது.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் :-

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்தபோது இராணுவ விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே பொன்சேகா கைதுசெய்யப்பட்டார். பாதுகாப்பு சபையானது ஒரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் உச்சமட்ட சபையாகும். முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி தலைமை வகிக்கும் இந்த பாதுகாப்பு சபையில் இராணுவ தளபதியாக இருந்தபோது பொன்சேகா பாதுகாப்பு சபையின் முன்னணி அங்கத்தவராக இருந்தவர். பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருந்தபோது அரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளுடனும் அவர் தொடர்பு வைத்ததுடன் முக்கிய இரகசிய விடயங்களை பரிமாறிக்கொண்டிருந்திருக்கலாம்.

பாதுகாப்பு சபை உறுப்பினர் என்ற ரீதியில் இது அவர் செய்யக் கூடாத ஒன்றாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சரத் பொன்சேகாவுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புகள் உள்ளனவா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் :-சரத் பொன்சேகா சேவையில் இருந்தபோது அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்துள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுதவிர மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விசாரணைகள் முடிவுற்ற பின்னர் அது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெளிநாடுகளுடனான தொடர்புகள் தொடர்பில் விசாரணைகளுக்குப் பின்னரே எதுவும் கூறமுடியும் என்றும் குறிப்பிட்டார். சரத் பொன்சேகாவுடன் மேலும் பல இராணுவ மற்றும் சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர். இரகசிய பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுத் தேர்தல் ஏப்ரல் 8ஆம் திகதி

parliament.jpgபாராளு மன்றம் நேற்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் இம்மாதம் 19ம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அடுத்த பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி கூடுகிறது.

ஒட்டிசுட்டான் பிரதேச செயலகம் இன்று முதல் பழைய இடத்தில்

ஒட்டிசுட்டான், பிரதேச செயலகம் இன்று முதல் பழைய இடத்தில் இயங்குமென முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

இதுவரைகாலமும் திருமுருகண்டியில் இந்த அலுவலகம் இயங்கி வந்தது.  ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரதேச செயலகத்தை பழைய இடத்தில் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

96 தமிழ் கைதிகள் விடுதலை

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 96 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 115 பேர் புனர்வாழ்வு அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி நீதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த பல தமிழ் கைதிகள் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இதுவரை 431 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர் சுமார் 200 கைதிகளே எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.

‘தேசத்திற்கு மகுடம்’ இன்று நள்ளிரவுடன் முடிவு

deyatakirula_logo.jpgகண்டி பள்ளேகலவில் 04 ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த ‘தெயடகிருள’ தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது.

கொழும்பு நகருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சி 60 ஏக்கர் காணிப் பரப்பில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 1000 கண்காட்சிக் கூடங்களை கொண்டுள்ளது.

இ.தொ.கா சார்பில் 9 வேட்பாளர்கள்

பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஒன்பது வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதாக காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில் ஒன்பது இடங்கள் தமக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் கூறினார். இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்கள் முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன் ஆகியோர் போட்டி யிடுகின்றனர்.

இதன்படி காங்கிரஸ¤க்கு நுவரெலியா மாவட்டத்தில் மூன்று இடங்களும் பதுளையில் இரண்டு இடங்களும் மாத்தளை, இரத்தினபுரி, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஓர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சிவலிங்கம் கூறினார்.

இலங்கை நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது.

parliament.jpgஇலங்கையின் 6 வது நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் கலைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு  வெளிவருமெனவும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் லூசியன் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு 10 நாட்களுக்குள் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தினம் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 அல்லது 7 வாரங்களுக்குள் பொதுத்தேர்தல் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாக இருப்பதால், பெரும்பாலும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் தேர்தல் வாக்கெடுப்புகள் இடம்பெறும்.
இலங்கையின் 6 வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர் தெரிவு கடந்த 2004 ம் ஆண்டு ஏப்ரல் 2 ம் திகதி இடம்பெற்ற அதேவேளை, முதலாவது நாடாளுமன்ற அமர்வு அதே மாதத்தின் 22 ம் திகதி இடம்பெற்றது.

ஊடகவியலாளர் ஈவா ரணவீர காலமானார்!

eva_ranaweera.jpgபிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஈவா ரணவீர இன்று காலமானார். மரணிக்கும்போது இவருக்கு வயது 85.  கம்பஹ புனித சிலுவைக் கல்லூரியில் ஆரம்பக் கல்வி பயின்ற இவர் ஒரு பட்டதாரியாவார்.

அரச மொழி திணைக்களத்தில் முதல் நியமனம் பெற்ற இவர் லங்கா தீப பத்திரிகையின் வனிதா வித்தி சஞ்சிகையின் ஆசிரியையாக 10 வருட காலம் சேவையாற்றியதுடன் மகளிர் குரல் என்ற பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக 20 வருட காலம் பொதுப்பணியாற்றியுள்ளார்.

இவர் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பல நூல்களை எழுதி விருதுகளும் பெற்றுள்ளார்.

இவரது பூதவுடல் பொரல்ல ஜயரத்ன மலர்ச் சாலையில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 11 ஆம் திகதி பிற்பகல் 5:00 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு பலத்த பாதுகாப்பு – பிரசாத் சமரசிங்க தகவல்

prasard.jpgஇராணுவப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் சென்று சந்திக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். அத்துடன் அவருக்குத் தேவையான வைத்திய வசதிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இது பற்றி அவர் மேலும் தகவல் தருகையில்,

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஒருவர் தொடர்ந்து ஆறு மாத காலத்துக்கு இராணுவச் சட்டங்களை மதித்து நடக்கவேண்டியது அவசியமாகும் என்றும் கூறினார்.

நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டி!

nr.jpgஜனாதிபதி யின் மகன் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளர். இது தொடர்பான விண்ணப்பத்தை அவர் பொதுஜன ஐக்கிய முன்னணி செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளதாக ‘இளைஞருக்கு நாளை’ என்ற அமைப்பின் ஊடகச் செயலாளர் அசேல திஸாநாயக்க தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷ தமது 16 வயதிலிருந்தே பொதுநல சேவைகளில் ஆர்வம் காட்டிவந்துள்ளார். ‘இளைஞருக்கு நாளை’ என்ற அமைப்பின் ஊடக அவர் இளைஞர் சமுகத்துக்கு பெரும் சேவையாற்றியுள்ளார்.