அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

போர்க்குற்ற விசாரணைக்கு ஐ.நா. மீண்டும் வலியுறுத்தல் தேசியமட்ட விசாரணையில் நம்பிக்கை இல்லை; நவநீதம்பிள்ளை

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுயாதீனமான சர்வதேசமட்ட விசாரணைக்கு ஐ.நா. மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறது.அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த தேசியமட்ட விசாரணைகள் இதுவரை உரிய இலக்குகளை எட்டவில்லை என்பதில் தனது அலுவலகம் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அளித்த உறுதிமொழிக்கு அமைவாக விடயங்கள் இடம்பெறுவது குறித்து பான் கீ மூன் தீவிர உறுதிப்பாட்டுடன் இருப்பதாகவும் நவநீதம்பிள்ளை கூறியதாக பி.பி.சி. செய்திச்சேவை தெரிவித்தது.ஜெனீவாவில் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவை அண்மையில் தான் சந்தித்ததையும் நவநீதம்பிள்ளை உறுதிப்படுத்தியுள்ளார்.

“தேர்தல் முடிவுறும் வரை ஒவ்வொருவரும் காத்திருந்ததாகத் தென்படுகிறது. ஆதலால் அதனை நான் அவருக்கு ஞாபகப்படுத்தியிருந்தேன் என்றும் நவநீதம்பிள்ளை தெரிவித்திருக்கிறார்.”மனித உரிமைகளுக்கான தனித்துவமான அமைச்சு அலுவலகத்தை இலங்கை கொண்டுள்ளது. மனித உரிமைகள் விவகார அமைச்சர் தனது அரசாங்கத்துடன் பேச வேண்டும் என்ற பொறுப்பு இருப்பதாகத் தான் நினைத்தேன். மோதலுக்குப் பின்னரான உரிமைகள்,வன்முறைகள் பற்றி மட்டுமல்லாமல் தேர்தலுக்குப் பின்னரான உரிமைகளுடன் தொடர்புடைய வன்முறைகள் பற்றிப் பேசவேண்டிய பொறுப்பு இருப்பதாக நான் கருதினேன்” என்றும் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்ற விவகாரத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உரிய முறையில் தீர்வு காணப்படவில்லை என்பது தொடர்பாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும் நவநீதம்பிள்ளை மற்றொரு நாட்டின் உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கங்கள் நடவடிக்கையெடுப்பதற்கு இதுவொரு முக்கியமானதொன்று என்று கூறியுள்ளார்.

போர்க்குற்றங்களை நிராகரித்திருக்கும் அரசாங்கம் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இடமளிக்கப் போவதில்லையெனக் கூறியுள்ளது.

அந்த மாதிரியான விசாரணைக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விசாரணைக்கான காரணம் எதுவும் இல்லை எனவும் கூறியிருந்தார். அதேவேளை, சர்வதேச விசாரணையில்தான் சாட்சியமளிப்பார் என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

சரத் பொன்சேகாவை விடுவிக்க பெளத்த பீடாதிபதிகள் கோரிக்கை

sarath.jpgஇலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரணி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமாகிய சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு நாட்டில் உள்ள நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன ஆகிய பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்திருக்கின்றார்கள்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக வரும் 18 ஆம் திகதி கண்டியில் மாநாடு ஒன்றிற்கு நான்கு பௌத்த பீடாதிபதிகளும் அழைப்பு விடுத்திருக்கும் நிலையிலேயே சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னின்று செயற்பட்ட சரத் பொன்சேகாவுக்கும்,  ஜனாதிபதிக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடானது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கின்றது என்பதையும் பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசம்: விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசத்தில் புலிகளால் முன்னர் புதைத்து வைக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப் பட்டுள்ளன.

புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் நடவடிக்கையின் போது புலிகளின் பிராந்திய தளபதியாக இருந்த 34 வயதுடைய மோகன் என்றழைக்கப்படும் மகேந்திரராஜா வழங்கிய தகவலுக்கிணங்க விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள், கைக்குண்டுகள், ஸ்னைப்பர் ரக ஆயுதங்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிடப்பட்ட புலி முக்கியஸ்தர் கொழும்பில் புலனாய்வு பொலிஸாரின் விசாரணையில் தொடர்ந்தும் இருக்கிறார். நாவற்காடு வைத்தியசாலையில் கடமையாற்றிய சிங்கள வைத்தியரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இவருக்கு தொடர்பிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத் துள்ளது.

மாத்தளை: சத்துணவு நஞ்சாகிய விவகாரம்: பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது

சத்துணவு நஞ்சாகி 10 வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடைந்தது தொடர்பாக பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை, பலாபக்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் சத்துணவு உட்கொண்ட மாணவர்களில் தனஞ்சனி கமகே என்ற 10 வயது மாணவி மரணமடைந்தார். மேலும், 129 மாணவர்கள் சுகவீனமடைந்து மாத்தளை ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டனர்.

கொந்தராத்துக்காரரால் பாடசாலை மாணவர்களுக்கென வழங்கப்பட்ட சத்துணவு நஞ்சாகியதாலேயே இந்த சம்பவம் நடத்திருக்கிறதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே கொந்தராத்துக்காரர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஏனையவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர்களையும் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென மாத்தளை ஆஸ்பத்திரி அத்தியட்சகர் டாக்டர் கே. டபிள்யூ. எஸ். குமாரவன்ச தெரிவித்தார். எவருக்கும் உயிராபத்தில்லை யெனவும் அவர் கூறினார்.

மேற்படி பாடசாலை உட்பட தொம்பவெல மற்றும் கவட்டயாமுன பாடசாலைகளில் கல்வி கற்கும் கீழ் பிரிவு மாணவர்களே மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

போஷாக்கு உணவாக வழங்கப்பட்ட நூடில்ஸ் முட்டை, சொதி என்பனவுடன் மாணவர்களின் வாந்தி மற்றும் மலம் என்பன மேலதிக ஆய்வுகளுக்காக உடனடியாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி கே. டப். எஸ். குமாரவன்ஸ மேலும் தெரிவிக்கின்றார். இது சம்பந்தமான பொலிஸ் விசாரணை மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலக் அபேசிரிவர்தனவின் பணிப்புரையின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜயம்பதா பண்டார மேற்கொண்டுள்ளார்.

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு: கண்டி மேயர் அலுவிகார பதவியிலிருந்து நீக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிப் பொறுப்பிலுள்ள கண்டி மாநகர சபையின் மேயர் எல். பி. அலுவிகாரவை பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக அப்பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

மேயர் எல். பி. அலுவிகார தொடர்பாகக் கிடைத்த பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் பின்னரே அவரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கத் தீர்மானித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்தும் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று, இதற்கு முன்னர் உடபலாத்த பிரதேச சபைத் தலைவர் – பாத்ததும்பர நகர சபைத் தலைவர், கங்க வட்ட கோறளை பிரதேச சபைத் தலைவர்களும் இவ்வாறான மோசடிக் குற்றச் சாட்டுக்களின் பேரில் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. என்றும் முதமலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தார்.

இந்திய திஹிணி வலையமைப்பில் இணைய இலங்கை வங்கி திட்டம் – ‘டாடா’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

இந்தியாவில் உள்ள சகல வங்கிகளினதும் ஏ.ரி.எம். (திஹிணி) வலையமைப்புடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பாக ‘டாடா’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வங்கியின் தலைவர் கூறினார். இந்தியாவில் உள்ள பத் தாயிரத்திற்கும் அதிகமான ஏ.ரி.எம். வலையமைப்புகளுடன் இலங்கை வங்கி இணைந்துகொள்வதன் மூலம், இலங்கையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எந்தவொரு வங்கியின் ஏ.ரி.எம். இயந்திரத்திலும் பணத்தை மீளப்பெற முடியும் என கலாநிதி காமினி விக்கிரமசிங்க கூறினார்.

இந்தியாவின் சென்னை மாநகரத்தில் மட்டுமே தற்போது இலங்கை வங்கியின் கிளை இயங்கி வருகிறது. அதனால் இலங்கை வங்கியின் ஏ.ரி.எம். அட்டைகளைப் பயன்படுத்தி சென்னையில் மட்டுமே பணத்தை மீளப்பெற முடிகிறது.

இலங்கை மாணவருக்கான பிரிட்டன் விசா புதிய நடைமுறை – மார்ச் முதல் அமுல்

london.jpgஇலங்கை மாணவர்கள் பிரிட்டன் விசாவுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அவை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வருமெனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் நதீசா எபசிங்க தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இப்புதிய நடைமுறைகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வருகின்ற போதிலும் ஏற்கனவே விசாவைப் பெற்றுள்ள இலங்கை மாணவர்களைப் பாதிக்காது. மாணவர்களின் கல்வித் திட்டங்களின் அளவே அவர்கள் வேலை செய்யும் நேரத்தைக் கட்டுப்படுத்தவுள்ளது. இதன்படி 6 மாதங்களுக்கு குறைந்த கால கல்வியை கற்கும் மாணவர்களுக்குத் தொழில்புரியும் அனுமதி மறுக்கப்படும். அத்துடன்,பட்டப்படிப்பு அல்லது அடிப்படை மட்டக்கல்வியை பயிலாதவர்களுக்கும் அவர்களுக்குரிய தகுதியை அடையாதவரை பிரிட்டனில் வேலை செய்வதற்கான அனுமதி மறுக்கப்படும்.

மாணவர்கள் பொறுப்பேற்றல் மற்றும் பல்கலைக்கழக அனுமதியூடாக சர்வதேச மாணவர்களை அழைக்கும்போது புதிய நடைமுறைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. உயர் நம்பிக்கை அனுசரணை (ஸ்பொன்சர்) திட்டமொன்றை பிரிட்டன் அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதுடன், அத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்த உயர் நம்பிக்கை அனுசரணை(ஸ்பொன்சர்) மூலம் தேசிய தரம் வாய்ந்த கற்கை நெறி வழங்கப்படுவதுடன், பட்டப்படிப்பிற்கு குறைந்த தரத்திற்கு வேலையிடங்களும் வழங்கப்படும்.

புதிய நடைமுறையின்படி ஆங்கில மொழி தரத்தை உயர்த்தவும் ஆங்கில மொழி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுசரணை (ஸ்பொன்சர்) வழங்கவும் பட்டப்படிப்பை முழுநேரம் மேற்கொள்பவர்களின் தொகையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இவற்றுக்கான தற்போதைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மாணவர்களை ஊக்குவிக்கவும் பொருளாதார குடிவரவினைத் துரிதப்படுத்தவும் திட்டங்கள் பிரிட்டன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த மாற்றங்கள் விசா வழங்க முன்னர் மாணவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக கல்லூரிகள் அனுமதி வழங்குதல் குறித்து கடந்த மார்ச்சில் ஆரம்பித்த மாணவர் முறைமையினைப் பரிசோதிக்கும் அடிப்படையிலானவை.

குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை – மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் மார்க்

சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்கின்றவர்கள் மீது பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் கிராமத்திலுள்ள ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க்; இக்கிராமத்தின் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டப்பட்டு காணாமற்போயுள்ளது.

இதையடுத்து இக்கிராமத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பொறுமை கார்த்தது போன்று பொதுமக்கள் தொடர்ந்து பொறுமை காக்க வேண்டும். இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸார் தம்மாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்றார்.

இதேவேளை, ஆரையம்பதி சிகரம் கிராமத்திலுள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு காணாமற்போன விடயம் தொடர்பாக மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேர்திவத்த தெரிவித்தார்.

கடந்த 10.02.2010 புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரையில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது விடயத்தில் இன்னும் சில சந்தேகநபர்களை கைது செய்யவேண்டியுள்ளதாகவும் அச்சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்னியிலுள்ள அரச வங்கி ஆவணங்களை இழந்தோருக்கு நிவாரணம் – மத்திய வங்கி ஆளுநர் நடவடிக்கை.

ajith-sri_lanka.jpgவன்னி யிலுள்ள அரச வங்கிகளில் பணமாகவும் நகையாகவும் சொத்துக்களை வைப்புச் செய்து அதுதொடர்பான ஆவணங்களை இழந்தவர்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

வன்னியில் இயங்கிய இலங்கை வங்கி மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் கிளைகளில் வன்னிமக்கள் தமது பணத்தினை வைப்புச் செய்திருந்ததுடன் தமது நகைகளை அடைவுவைத்து கடனும் பெற்றிருந்தனர்.

ஆயினும் வன்னியில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக வங்கிகள் சேதமடைந்ததுடன் பெருமளவு ஆவணங்களும் அழிவடைந்துள்ளன. தமது வைப்பு தொடர்பான ஆவணங்களை கைவசம் வைத்திருக்கும் பொதுமக்களுக்கு உடனடியாகவே அவர்களது வைப்புக்களை அல்லது அதன் பெறுமதியை மீளப்பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன் தமது ஆவணங்களை தொலைத்தவர்கள் தொடர்பாக மத்திய வங்கி தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன் விரைவில் ஓர் சாதகமான அறிவிப்பினை விடுக்கும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார

அத். பொருட்களின் விலைக் கட்டுப்பாடு; தேவைகள்;

மாவட்டங்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைக்கட்டுப்பாடு மற்றும் உணவுத் தேவைகள், உணவுப் பாதுகாப்பு குறித்து விசேட கூட்டமொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ங்களிலுமுள்ள மாவட்ட செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நிதி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங் களினதும் உணவுத் தேவை மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட் களின் தொகை அத்துடன் உணவுப் பாதுகாப்பு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமான இக்கூட்டம் நேற்றும் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள சனத் தொகைக்கு ஏற்றவாறு உண வைக் கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பாகவும், மேலதிக உணவை பற்றாக்குறை நிலவும் மாவட்ட த்திற்கு பகிர்ந்தளிப்பது குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.