இலங்கை அரசாங்கம் கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்திருப்பதற்கு மத்தியில் இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான விடயங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு விசேட நிபுணர்கள் குழுவை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும், அக்குழுவினை தாமதமின்றி நியமிக்கப் போவதாகவும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா. வில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவித்திருக்கிறார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு நிபுணர்கள் குழுவை நியமிப்பதற்கான உரிமை தமக்கிருப்பதாக மேலும் அவர் கூறியுள்ளார். அதே நேரம் இந்த நடவடிக்கை பொருத்தமற்றதும் அவசியமில்லாததொன்று என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம்மாத முற்பகுதியில் கூறியிருந்தார்.
பான் கீ மூன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் உத்தேச நிபுணர் குழுவானது இலங்கையின் இறைமையைப் பாதிக்காது என்றும் தெரிவித்தார். கடந்த மே மாதம் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பான் கீ மூனும் கூட்டாக அறிக்கை விடுத்திருந்தனர். அந்த அறிக்கையை அடியொற்றியே உத்தேச நிபுணர் குழு அமைக்கப்படும் ஏற்பாடு என்றும் மாதாந்தம் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டின்போது பான் கீ மூன் தெரிவித்ததாக ஐ.நா. செய்திச்சேவை நிலையம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
நிபுணர் குழுவை அமைக்கும் நடவடிக்கையானது அழைக்கப்படாததும் பொருத்தமற்றதுமான நடவடிக்கையென ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இந்த நிபுணர் குழுவை அமைப்பதை நிறுத்துவதற்கான முயற்சியாக பல நாடுகளிடம் இலங்கை ஆதரவை கோரியிருந்தது. கடந்த வாரம் அணிசேரா நாடுகள் அமையத்தின் ஒத்துழைப்பு பிரிவின் தலைவரும் ஐ.நா. விற்கான நிரந்தர பிரதிநிதியுமான கே.அப்டலாடிஸ், பான் கீ மூனுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். “தனிப்பட்ட நாடுகளை இலக்குவைத்துச் செயற்படுவதை அணிசேரா அமையம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் இந்த நடவடிக்கை அணிசேரா அமையத்தினதும் ஐ.நா. வினதும் சாசனங்களுக்கு முரணானது எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை, நியூயோர்க்கில் ஊடகங்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் பான் கீ மூன், சர்வதேச மனிதாபிமான மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பாக பரிகாரம் காண்பதற்காக பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவது தொடர்பான அம்சத்தை கூட்டறிக்கை உள்ளடக்கியுள்ளதெனக் கூறியுள்ளார்.
நான் அமைக்கும் குழுவானது தரம், முக்கியமான விடயங்கள் என்பவை தொடர்பாக எனக்கு ஆலோசனை வழங்கும். சர்வதேச ரீதியாகப் பெற்றுக்கொண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான வழிகாட்டலை கொண்டதாக இது விளங்கும். இந்தக் குழுவானது எனக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கும் என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.
அதேசமயம், நிபுணர்கள் குழுவின் நோக்கத்தின் தன்மை குறித்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தன்மை அணிசேரா அமையத்தின் கடிதத்தில் காணப்படுவதாகவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.”ஐ.நா. வின் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் எனக்குள்ள அதிகார எல்லைக்குள் அந்த அமைப்பை ஸ்தாபிப்பதென்ற தீர்மானத்தை நான் கொண்டுள்ளேன். இந்த அமைப்பானது இலங்கையின் இறைமையை எந்த வழியிலும் பாதிக்காது எனவும் கூறியுள்ளார்.
நிபுணர் குழு அவசியமற்றது உறுதியான நிலைப்பாட்டில் கொழும்பு
இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உறுதியாகத் தெரிவித்திருக்கும் நிலையில், அத்தகையதொரு குழு அவசியமில்லையெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பான தனதுநிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அறிவித்திருக்கிறது.
ஐ.நா. செயலாளர் நாயகம் தற்போது தெரிவித்திருக்கும் விடயங்கள் குறித்து தான் அறிந்திருக்கவில்லை எனவும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொண்டிருக்கும் நிலைப்பாடு மாற்றமடையாதென்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
நிபுணர் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பரிசீலனை செய்து வருவதாக ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹண கொழும்புக்கு அறிவித்திருந்தார். அந்த நிலைப்பாட்டை மட்டுமே நாம் அறிவோம் என்று சமரசிங்க மேலும் கூறியுள்ளார். இலங்கை மற்றும் அணிசேரா அமையம் ஆகியன தெரிவித்திருக்கும் ஆட்சேபனைகளின் மத்தியில் நிபுணர் குழுவை அமைப்பதை தான் முன்னெடுக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.