அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

குர்ஆனின் படத்துடன் விளம்பரம்; முஸ்லிம்கள் கடும் ஆட்சேபம்

தமிழ்ப் பத்திரிகையொன்றில் திருக்குர்ஆனின் பெரிய அளவிலான படத்துடன் ஒரு கிண்ணத்தையும் பிரசுரித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதை முஸ்லிம்கள் கடுமையாக ஆட்சேபிக்கின்றனரென ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

பள்ளிவாசலுக்குச் செல்லும் அனைவரும் பிரார்த்திக்குமாறும், “அல்லாஹ்வே உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள்” என்றும் ஏக வல்ல அல்லாஹ்வையும் அவனுடைய அருள்மறையாம் குர்ஆனையும் மிகவும் நிந்தனை செய்யும் வண்ணம் இவ்வரசியல் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டு ள்ளதை முஸ்லிம் இயக்கங்களும், உலமாக்களும், பொதுமக்களும் எம் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

அல்லாஹ்வையும் புனித குர்ஆனை சம்பந்தப்படுத்தி ஒரு தேர்தல் சின்னத்தைப் பிரசுரித்துள்ளமை இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். முஸ்லிம்கள் இந்நாட்டின் வந்தேறு குடிகள் என முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்திய சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரும் இவ்விளம்பரம் முஸ்லிம்களின் உள்ளங்களை ஆழ புண்படுத்தியுள்ளது.

சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு நாடு பூராவும் சுற்றித்திரிந்து முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்விடுத்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நிச்சயம் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். அடுத்து ஏகவல்ல அல்லாஹுத்த ஆலாவையும், அவனது அருள்மறையையும் மிகவும் கீழ்த்தரமான அரசியல் விளம்பரத்துக்குப் பாவித்ததையிட்டு பொன் சேகாவின் கட்சியும், அதன் பிரதான பங்காளியான ஜே.வி.பியும் முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும்.

புத்தபிரானின் உருவச் சிலைக்குக் கீழே நிர்வாணமான ஒரு பெண்மணியை வரைந்து பெளத்த மக்களை சீற்றமடையச் செய்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ள இத்தருணத்தில் முஸ்லிம்களையும் இவ்விதம் விசனத்துக்குள்ளாக்கும் முறையில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மதங்களை நேசிக்கும் யாவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

மதங்களையும், அவற்றைப் பின்பற்று வோரையும் இவ்விதம் அவமானப்படுத்தி களங்கம் விளைவிக்கின்ற இச்செயற் பாடுகளின் பின்னணியில் மேற்கந்திய சதிகாரக் கும்பல்கள் சியோனிஸ சக்திகள் ஒழிந்திருப்பது முஸ்லிம் உலகுக்கு ஒரு புதிய விடயமல்ல. இந்த யூத சியோ னிஸத்தின் உள்நாட்டு முகவர்களான ஐ.தே.கவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் வாக்களிக்கக் கோரிய சரத் பொன் சேகாவின் இந்த மதவிரோத செயற் பாடுகளுக்கு எதிராக அறிக்கை விடுவார்களா? என முஸ்லிம்கள் கேட்க விரும்பு கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் இராணுவ உயர் அதிகாரிகள் குழு இலங்கை வருகை

bd.jpgபங்களா தேஷ் இராணுவத்தின் எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழு இலங்கை வந்துள்ளது. இந்த உயர் மட்டக் குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இரு இராணுவங்களுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இலங்கை இராணுவம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ள நிலையில் இரு நாடுகளும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. பங்களாதேஷைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் முஹம்மட் இஹ்திஸாம் உல் ஹக் மற்றும் மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக் ஆகியோர் வன்னி இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் முடிவில் பங்களாதேஷ் இராணுவ குழுவினர் இலங்கை இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினர். இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரும் கலந்துகொண்டார். இராணுவத் தளபதியுடனான சந்திப்பை அடுத்து இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தியத்தலாவ இராணுவ அகடமி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம், முல்லைத்தீவு மற்றும் வன்னி பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

மேஜர் ஜெனரல் இஹ்திஸாம் உல் ஹக், மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக், பிரிகேடி யர் ஜெனரல் ரித்வான் அல் மஹ் மூத், லெப்டினன்ட் கேர்ணல் முஹ ம்மத் அஸதுல்லாஹ் மின்ஹாசுல் அலம், லெப்டினன்ட் கேர்ணல் எம். தெளபீக்குல் ஹஸன் சித்தீக், மேஜர் ஏ. எஸ். எம். பஹவுத்தீன், மேஜர் எம். டி. நஸ்ருல் இஸ்லாம் கான் மற்றும் மேஜர் சகாவத் ஹொஸைன் செளத்ரி ஆகியோரே இலங்கை வந்துள்ளனர்.

விசாரணையின்றி சிறைகளில் இருந்தோரில் 461 பேர் விடுதலை – மேலும் 200 பேரை விடுவிக்க நடவடிக்கை

நீண்டகாலமாக வழக்குகள் விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட் டிருந்தவர்களுள் இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு முன்னாள் பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார். சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துரித விசாரணைகளை அடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை விடுவிப்பது தொடர்பில் பதினொரு சட்டத்தரணி களை விசேடமாக நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைதிகளின் கோவைகள் தனித்தனியே ஆராயப்பட்டு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 200 பேரின் கோவைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் இவர்களுள் வழக்குகள் பதிவு செய்ய அவசிய மில்லாதவர்கள் விடுவிக்கப்படுவார் களென்றும் முன்னாள் பிரதியமைச்சர் கூறினார்.

எம். ரி.வி./ எம்.பீ.சி. அலுவலகம் மீது தாக்குதல்; பணியாளர்கள் சிலர் காயம்

கொழும்பு, ப்ரேப்ரூக் பிளேஸிலுள்ள எம்.ரி.வி./எம்.பீ.சி. அலுவலகம் திங்கட்கிழமை பட்டப்பகலில் இனந்தெரியாத கும்பலொன்றினால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்தில் அந்த ஊடக நிறுவனத்தின் பணியாளர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.

திங்கட்கிழமை  பிற்பகல் 3.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக எம்.பீ.சி. எவ்.எம். முகாமையாளரான சுரங்க சேனாநாயக்க தெரிவித்தார்.பஸ்ஸொன்றிலும் முச்சக்கர வண்டியொன்றிலும் வந்தவர்களினாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹாராஜா நிறுவனத்தின் தலைமை அலுவகமும் எம்.ரி.வி./எம்.பீ.சி. ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவுமே கொழும்பு, ப்ரேப்ரூக் பிளேஸில் அமைந்துள்ளது. மாலை 3.45 மணியளவில் பஸ்ஸொன்றிலும் முச்சக்கர வண்டியிலும் வந்த கும்பலொன்று அந்த நிறுவனக் கட்டிடத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதுபோல் பாசாங்கு செய்துவிட்டு திடீரென கற்கள், போத்தல்கள், பொள்ளுகள் போன்றவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தி பிரதான நுழைவாயிலூடாக உள்ளே நுழைய முற்பட்டுள்ளனர்.

இந்த குண்டர்குழு நடத்திய தாக்குதலில் மஹாராஜா நிறுவனத்தின் தலைமை அலுவலகம், எம்.ரி.வி./எம்.பீ.சி. ஊடக நிறுவன செய்திப் பிரிவு இணைந்திருக்கும் கட்டிடத்திற்கும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதேநேரம், குண்டர் குழு தாக்குதல் நடத்தும் சத்தம் கேட்டதுமே அருகிலுள்ள அனைத்து பொலிஸ் நிறுவனங்களுக்கும் அறிவித்தும் பொலிஸார் எவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லையென சுரங்க சேனாநாயக்க கூறினார். குண்டர்கள் நடத்திய தாக்குதலில் கட்டிடத்திற்கும் வாகனங்களுக்கும் மட்டுமல்லாது பாதுகாப்பு கமராக்கள் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அறிவித்தும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வராததால், சம்பவத்தின் பாரதூரத்தை உணர்ந்தும் தற்காப்பின் பொருட்டும் எம்.ரி.வி./எம்.பீ.சி. நிறுவன பணியாளர்களும் பாதுகாப்பு ஊழியர்களும் குண்டர் குழுவினர் மீது திருப்பித் தாக்குதல் நடத்தியதாகவும் சுரங்க சேனாநாயக்க கூறினார்.

குண்டர்கள் தாக்குதல் நடத்திய கற்கள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தியே பதில் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் குண்டர்கள் பின்வாங்கிவிட்டதாகவும் கூறிய எவ்.எம். முகாமையாளர் சேனாநாயக்க, அதன் பின்னரே பொலிஸார் அங்கு வந்ததாகவும் தெரிவித்தார். குண்டர்கள் நடத்திய தாக்குதலில் தங்களது நிறுவனப் பணியாளர்கள் சிலர் காயமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் எம்.ரி.வி/எம்.பீ.சி. ஊகட நிறுவன பணிகளுக்கு எந்தத் தடங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டதுடன், சம்பவத்தை அடுத்து அந்த நிறுவனத்தை சுற்றி பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

முல்லைத்தீவில் மீள்குடியேறிய மக்களுக்காக 3700 வீடுகள் – 2 ஆயிரம் வீடுகளை புனரமைக்கவும் திட்டம்

house.jpgமுல் லைத்தீவு மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்போருக்காக 3700 வீடுகளை புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி செல்வராஜா தெரிவித்தார். இதேவேளை மோதல்களின் போது சேதமடைந்த 2 ஆயிரம் வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவும் இடம்பெயர்ந்தோருக்கு பல்வேறு உதவி களைச் செய்யவுமென முன்வந்த தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் 15க்கு ஜனாதிபதி செயலணி அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் யுஎன். ஹெபிட்டாட், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், நர்ட் ஆகிய தன்னார்வு நிறுவனங்களே வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளன.

தலிபான்களை ஒழிக்க பாகிஸ்தான் அரசு இலங்கையை பின்பற்ற வேண்டும்! பழங்குடித் தலைவர் செய்யத் அலாம் மசூட் கோரிக்கை

mehsud.jpgபாகிஸ் தானில்  பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் தலிபான்களை ஒழிக்க இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் பின்பற்றவேண்டும் என பாகிஸ்தான் பழங்குடி மக்களின் தலைவா செய்யத் அலாம் மசூட் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பழங்குடியினரின் முக்கிய பாதுகாப்புக் கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பாகிஸ்தானின் வடமேற்கு நகரான பேஷவாரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பாகிஸ்தானுக்கு உதவி வழங்கும் குழுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்படும் பிரதேச மக்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பாகிஸ்தான் இராணுவத்தினர் தலிபான்களின் வலையமைப்புக்களை தகர்த்தெறியும் வகையில் புதிய தாக்குதல்களை நடத்தவேண்டும் எனவும் பழங்குடிகளின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

அனோமா பொன்சேகாவிடம் புலனாய்வு பிரிவு விசாரணை ஜே.வி.பி. – எம்.பி. அநுரகுமாரவுக்கு கடிதம்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விசாரணை நடத்தினர்.  மாலை 4 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்று விசாரணையை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்தனர்.  இச் செய்தி அச்சுக்குப் போகும் வரை  விசாரணை தொடர்ந்து இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, ஜே.வி.பி. எம்.பி அநுரகுமார திஸாநாயக்கா நாளை செவ்வாய்க்கிழமையும் மறுதினம் புதன்கிழமையும் விசாரிக்கப்படவிருக்கின்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை புலனாய்வுப் பிரிவினர் அனோமா பொன்சேகாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது கணவர் ஜெனரல் சரத் பொன்சேகா சம்பந்தமாக விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக தெரிவித்து சனிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து விசாரிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் அன்றைய தினம் தான் கொழும்பில் இருக்க மாட்டேன் எனவும் பிறிதொரு தினத்தில் வைத்துக் கொள்ளுமாறும் அனோமா பொன்சேகா தெரிவித்ததையடுத்து அந்த விசாரணையை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்த புலனாய்வுப் பொலிஸார் இணக்கம் தெரிவித்தனர்.

அதன்படி நேற்று மாலை விசாரணை இடம்பெறவிருந்தது.  இந்த விசாரணையை தாம் எப்போதோ எதிர்பார்த்திருந்ததாகவும் இவ்வளவு காலம் தாழ்த்தப்பட்டு விசாரிக்கப்படுவதுதான் புதுமை எனவும் அனோமா பொன்சேகா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

சனல் 4 சர்வதேச தொலைக்காட்சி அலைவரிசைக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவின் கடிதம் அனுப்பியது தொடர்பாகவா விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்டபோது பதிலளித்த அனோமா எனது கணவருக்கு சனல் 4 உடன் எந்தத் தொடர்பும் கிடையாது எனவும் அமைச்சர் டலஸ் அழகப் பெரும மாத்திரமன்றி முழு அரசுமே ஜெனரலுக்கு எதிராகத்தானே பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

அநுரகுமார மீதான விசாரணை

இதேவேளை,  ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்காவிடம் விசாரணையொன்றை நடத்துவதற்காக புலனாய்வுப் பொலிஸ் பிரிவுக்கு 23 ஆம் திகதி சமுகமளிக்குமாறு அவருக்கு கடிதமொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இக்கடிதம் கிடைத்து 12 மணித்தியாலத்தில் இன்னொரு கடிதம் அதே இரகசியப் பொலிஸ் பிரிவிலிருந்து அவருக்குக் கிடைத்தது. அதில் 24 ஆம் திகதி புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தது. முன்னைய விசாரணைதான் நேரம் மாற்றப்பட்டதாகக் கருதி புலனாய்வுப் பிரிவிடம் விசாரித்தபோது அப்படியில்லை அவரிடம் இரண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க மட்டுமல்ல ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்த எதிரணி அரசியல் தலைவர்கள், ஆதரவாளர்கள், ஓய்வுபெற்ற படைவீரர்கள், புத்திஜீவிகள் என அனைவருமே விசாரிக்கப்படுவர். நாளை எம்மையும் சி.ஐ.டி.யினர் கைது செய்து விசாரிக்கலாம். அதற்கு எந்த நேரமும் முகம் கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்று ஜனநாயக தேசிய முன்னணி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் தமிழர்களுக்கு எந்தவொரு அநீதியும் இடம்பெறவில்லை என்கிறார் புத்திரசிகாமணி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமிழ் மக்களுக்கு எத்தகைய அநீதியும் இடம்பெறவில்லை. 1983 யுகம் மீண்டும் உருவாகாது என்பது உறுதியென பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார். மலையகத் தலைவர்களாகிய நாம் இருட்டில் செய்த தவறை வெளிச்சத்தில் ஒரு போதும் செய்யப் போவதில்லையென தெரிவித்த பிரதியமைச்சர், ஐ. நா. வில் தமிழில் உரையாற்றி தமிழினத்துக்கே கெளரவம் சேர்த்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மலையக மக்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

நுவரெலியா குதிரைப் பந்தயத்திடலில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இப் பிரசாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் மேலும் உரையாற்றுகையில்:- நான் பிரதி மேயராக பதவி வகித்த போதே 83 கலவரம் வெடித்தது. நுவரெலியா நகரம் தீப்பற்றியெரிந்தது. எனது செயலாளர் உட்பட பலர் அதற்குப் பலியாகினர். தற்போது நாட்டில் அத்தகைய அச்சம் இல்லை. ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியுள்ளார்.

நான் ஒரு தமிழனாக அன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதியாகவே தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறேன். நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதிக்கு வெற்றி பெற்றுக் கொடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் யாப்பை மாற்றியமைக்க 2/3 பெரும்பான்மையை தாருங்கள் – திருமலை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர்

வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவென சட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுவது அவசியம் என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று திருமலையில் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் சமத்துவத்திற்கும், துரித அபிவிருத்திக்கும் தடையாக இருக்கும் அரசியல் யாப்பை மாற்றியமைத்து நாட்டுக்குப் பொருத்தமான அரசியல் யாப்பை அறிமுகப்படுத்துவதற்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோருகின்றோம் என்றும் பிரதமர் கூறினார்.

பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாவட்ட மட்டத்தில் நடாத்தும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று திருமலை விளையாட்டரங்கில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்கா தொடந்தும் உரையாற்றுகையில்,

அதனால் இப்படியான அரச சார் பற்ற நிறுவனங்களின் செயற்பா டுகளைக் கட்டுப்படுத்துவது அவசி யம் இதற்காக சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அதே நேரம் கிராமங்களின் அபிவிருத்தியைக் கிராமத்தவர்களின் யோசனைபடி மேற்கொள்ளுவதற்காக மக்கள் சபை (ஜனசபா) முறையை அறிமுகப்படுத்தவிருக்கின்றோம்.  அத்தோடு கிராம மன்ற முறையும் (கண்சபா) மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இவை நாட்டின் துரித அபிவிருத்திக்குப் பெரிதும் உதவும்.

சிறு கட்சிகளின் தயவில் தங்கி நிற்கும் அரசு எமக்கு அவசிய மற்றது. அது எமது துரித அபிவிருத்தி பயணத்தைத் தாமதப்படுத்த முடியும். நிபந்தனைகளின் கீழ் செயற்பட நேரிடும். இதனை மக்கள் உணர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

எமது துரித அபிவிருத்தியை மேற்கு நாடுகளைப் போன்று இயந் திரப்படுத்த நாம் விரும்பவில்லை. மாறாக ஒழுக்கத்தை மதித்து நடக்கும் நற்பண்புகள் நிறைந்த சமு தாயத்தை கட்டியெழுப்பும் வகை யில் அதனை மேற்கொள்ள நட வடிக்கை எடுத்திருக்கின்றோம்.

ஐ.தே.க.வின் திருமலை மாவட்ட முன்னாள் எம். பி.யும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம். ஏ. எம். மஃரூப் (சின்ன மஃரூப்) இக்கூட்டத்தில் நன்றியுரையாற்றினார்.

சகல வேட்பாளர்களுக்கும் விசேட அடையாள அட்டைகள் – தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

election_cast_ballots.jpgசகல வேட்பாளர்களுக்கும் விசேட அடையாள அட்டை வழங்குவதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக தேர்தல் ஆணை யாளர் டபிள்யு. பி. சுமணசிரி தெரிவித்தார். தேர்தலில் 7696 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.

இவர்களுக்கு அந்தந்த பிரதேச மாவட்ட செயலகங்களினூடாக விசேட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதோடு, சகல வேட்பாளர்களின் விபரங்களும் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வேட்பாளர்களுக்கு வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்குச் செல்வதற்காகவும் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவும் வசதியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராயும் முக்கிய கூட்டமொன்று நேற்று முன்தினம் (20) தேர்தல் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள், உதவித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.