அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

உள்ளூராட்சி தேர்தல் முறை மாற்றம் திருத்த யோசனைகள் முன்வைக்கும்போது சாதக, பாதகங்களை எடுத்துரைப்போம்

muthusivalingam.jpgஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான திருத்த யோசனைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது அதன் சாதக, பாதக நிலைகளை எடுத்துரைப்பதாக பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

எனினும், அதற்கு முன்னதாக நடைபெறும் கலந்துரையாடலிலும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள எண்ணியுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் இன்னும் ஓரிரு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடலை நடத்தி கருத்துக்களை அறியுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வத்தளையில் 1 1/2 வயது குழந்தை மாயம்; தீவிர விசாரணை

வத்தளை பள்ளியாவத்தையைச் சேர்ந்த தம்பதியினரின் காணாம ற்போன ஒன்றரை வயது குழந்தை தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளைமுன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சித்தும் சத்கார எனும் இந்த குழந்தை தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த வேளை கடந்த 04 ஆம் திகதி காணாமற் போயுள்ளது. தாயும் தந்தையும் வேலைக்குப் போகும் நிலையில் குறித்த குழந்தை பாட்டியுடன் வீட்டிலிருப்பது வழக்கம். அன்றைய தினம் வீட்டு முன்றலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமற் போயுள்ளது. இவர்களது வீட்டுக்கு முன்னால் 20 அடி ஆழமான களனி கங்கை ஆறு காணப்படுகிறது.

குழந்தை திட்டமிட்டு யாரானேனும் கடத்தப்பட்டுள்ளதா அல்லது களனி அவற்றில் விழுந்து காணாமற் போயுள்ளதா என்ற சந்தேகம் பொலிஸாருக்கு எழுந்துள்ளது. கடற் படையினரின் ஒத்துழைப்புடன் களனியாற்றில் தேடுதல் நடத்தப்பட்டு வரும் அதேவேளை பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குழந்தை கடத்தல்; மூன்று பெண்கள் சந்தேகத்தில் கைது

kalaniya.jpgகளனி விஹாரையில் வைத்து 2 1/2 வயது குழந்தையை கடத்திச் சென்றவர் என சந்தேகிக்கப்படும் வயோதிபப் பெண்ணின் உறவினர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

குழந்தையை கடத்திய இப்பெண்ணுக்கு இம்மூவரும் ஒத்துழைப்பு வழங்கிய குற்றச் சாட்டின் பேரிலேயே பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டோர் அவரின் மகளும் இரண்டு பேத்திமாரும் ஆவர்.

முதன்முறையாக நேற்று சிவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் ஜெனரல் பொன்சேகா

sarath_.jpgமுன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா முதல் தடவையாக நேற்று புதன்கிழமை சிவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதுடன் வன்முறைகளைத் தூண்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள பொன்சேகா வெவ்வேறான இராணுவ நீதிமன்ற விசாரணைகளையும் எதிர்கொண்டுள்ளார்.பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக அவர் கருத்துகளைத் தெரிவித்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பொன்சேகா நேற்று கொழும்பு பிரதம நீதிவான் சம்பா ராஜரட்ண முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த வருடம் சரணடைந்த தமிழ் புலிகளைக் கொல்லுமாறு ஜனாதிபதியின் இளைய சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாகப் பத்திரிகையொன்றுக்குப் பேட்டியளித்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டைப் பொலிஸ் விசாரணையாளர்கள் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளனர். பத்திரிகை தன்னை தவறாக மேற்கோள் காட்டியிருந்ததாக பொன்சேகா கூறுகிறார்.  இந்த மனு மீதான விசாரணை மே 26 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பார்வதியம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார் : சிவாஜிலிங்கம்

parwathy.jpgமலேசியா விலிருந்து கொழும்பை வந்தடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் நேற்று யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தார். இவரை முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அம்புலன்ஸ் வண்டி மூலம் நேற்றுக்காலை கொழும்பிலிருந்து அழைத்துச் செனறார்.

மத்திய மாகாண அமைச்சராக அனுஷியா பதவிப்பிரமாணம்

மத்திய மாகாண தமிழ்க் கல்வி, இந்துக் கலாசார கைத்தொழில் அமைச்சராக அனுஷியா சிவராஜா நேற்று புதன்கிழமை மத்திய மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இவ்வைபவத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டார்.

அனுஷியா சிவராஜா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி சங்க உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான அண்ணாமலையின் புதல்வியாவார். இவரது கணவர் சிவராஜா நுவரெலியா மாநகர சபைப் பிரதி மேயராக கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

வே.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றம் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து மத்திய மாகாண அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அத்துடன் நேற்று புதன்கிழமை மத்திய மாகாண விவசாய அமைச்சராக நிமல் பியதிஸ்ஸவும் சுகாதார அமைச்சராக சுனில் அமரதுங்கவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

பிரிட்டனின் புதிய பிரதமர் டேவிட் கேமரன்

britton-1.jpgபிரிட்டனின் புதிய பிரதமாராக செவ்வாய்க்கிழமை பதவியேற்ற கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமரன் புதிய கூட்டணி அமைச்சரவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கன்சர்வேடிவ் கட்சி தலைமையில் கூட்டணி அரசில் சேரும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் நிக் க்ளெக் துணைப்பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சியின் ஜார்ஜ் ஒஸ்போர்ன் நிதி அமைச்சராகவும், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த வில்லியம் ஹேக் வெளியூறவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பெரும்பாலான அறிவிக்கப்பட்ட அமைச்சுப் பதவிகள் கன்சர்வேடிவ் கட்சி தலைவர்களுக்கே கிடைத்துள்ளன.

லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு துணைப்பிரதமர் உட்பட ஐந்து கெபினட் இடங்கள் கிடைக்கும் என்று தெரியவருகிறது 

கடற்கொள்ளையர் விடுவித்த 20 இலங்கையர்களுடன் இலங்கை அதிகாரிகள் சந்திப்பு.

somali_pirates.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பின்னர்  நேற்று விடுவிக்கப்பட்ட 20 இலங்கையர்களும் ஓமானிலுள்ள இலங்கை அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களுக்கான அனைத்து வசதிகளும் அந்நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தினால் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.

கடந்த மார்ச் 23ஆம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த இக் கப்பலில் 20 இலங்கையர்கள் உட்பட 22பேர் பயணித்திருந்தனர்.

கடற்கொள்ளையர்களால் கேட்கப்பட்டிருந்த பணம் கொடுக்கப்பட்டதை அடுத்து கப்பலையும் கப்பலில் இருந்தவர்களையும் கடற்கொள்ளையர்கள் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ வெற்றி வாரம் : நியாயம் இல்லை – ஜயலத் ஜயவர்தன

dr-jayalat.jpg“ஆயிரக் கணக்கான மக்கள் நிவாரண கிராமங்களில் சுதந்திரம் இன்றித் தவித்துக்கொண்டிருக்க, மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இராணுவ வெற்றியை கோலாகலமாகக் கொண்டாடுகிறது. ஓர் இனம் அந்நியப்படுத்தப்பட்டிருக்கையில் நாட்டின் வெற்றி எனக் கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்?” என ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்..  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாட்டுக்குச் சுதந்திரம், விடுதலை கிடைத்து விட்டதாக அரசாங்கம் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் முழு நாட்டுக்குமான விடுதலை என எவ்வாறு கூற முடியும்?  தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்” என்றார்.

கொழும்பில் போக்குவரத்து நடைமுறையில் மாற்றம்!

gall-face.jpgதேசிய படைவீரர் வாரத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகளின் போது போக்குவரத்து நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த பொலிஸ் போக்குவரத்து பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து ஹில்டன் ஹோட்டல் வரையான காலி முகத்திடல் வீதி, யுத்த வெற்றிக் கொண்டாட்ட ஒத்திகைகளுக்காக நாளை முதல் காலை 6 மணியிலிருந்து  பிற்பகல் 2 மணி வரையில் மூடப்படவுள்ளது.

இதேவேளை, பஸ் வண்டிகளும் கனரக வாகனங்களும் கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியினூடாக கொம்பனித் தெருவுக்கு வந்து அங்கிருந்து கோட்டைக்கும் புறக்கோட்டைக்கும் செல்ல முடியும். இந்த நடைமுறை நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் பின்பற்றப்படும் என்று பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.