::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்ற தேர்தலை புறக்கணியுங்கள்

india-election.jpgஇலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரவிக்கும் முகமாக பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழக மக்களிடம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது குறித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலர்களில் ஒருவரான கார்த்திக் கூறுகையில்;

இலங்கையில் நடக்கும் போரில் கொல்லப்படும் தமிழ் மக்களை காப்பாற்றக் கோரி கடந்த 5 மாதங்களாக நாம் போராட்டங்களை நடத்தி வருகின்றோம். இலங்கையில் நடக்கும் போரில் இலங்கை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் உதவி செய்து வருகின்றது. இதற்கு சாட்சியாக அங்கு நடக்கும் போரில் காயமடைந்த 125 இந்திய இராணுவ வீரர்கள் நந்தம்பாக்கத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே, இலங்கையில் நடக்கும் போரில் இந்திய அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை. இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகின்றோம் என்ற பெயரில் சில கட்சிகள் போராடி வருகின்றன. இவை வாக்குக் கட்சிகள் தான். வாக்குகளுக்காக வேஷம் போடுகின்றனர்.

எனவே, இலங்கைத் தமிழர்களுக்காக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதாவிடம் மக்கள் சக்தி உள்ளது: ராமதாஸ்

india-election.jpgதிரு வண்ணாமலை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் குருவை ஆதரித்து பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், நான் 30 ஆண்டுகள் மருத்துவராக இருந்து நோயாளிகளின் நாடி பிடித்து சிகிச்சை அளித்தவன். தற்போது அரசியலில் நாடி நரம்பை பிடித்து பார்ப்பவன். அதை வைத்துதான் சொல்கிறேன். தமிழகத்தில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

1998ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றோம். அப்போது எங்களை டெல்லிக்கு அழைத்து சென்று ஒரு அமைச்சர் பதவியை வாங்கி கொடுத்தார்கள். அதன் பிறகு திமுகவுடன் கூட்டணி வைத்து 8 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். 2001ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலில் 22 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றோம். அதன்பிறகு திமுகவுடன் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். 13 இடங்களில் குழி பறித்து விட்டார்கள்.

கூட்டணி என்றால் அதிமுகவுடன் வைப்பதுதான் இயற்கையான கூட்டணி. அதிமுகவினர் எதிர் அணியில் இருந்தாலும் நம்மை முகமலர்ச்சியோடு பார்பார்கள். திமுகவினர் நம்மோடு கூட்டணியில் இருந்தாலும் சிடு சிடு என்றுதான் பார்ப்பார்கள். அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு மக்கள் சக்தியே காரணம். இந்த மக்கள் சக்தி ஜெயலலிதாவிடமே உள்ளது என்றார்.

இலங்கை பிரச்சினை குறித்த டிவிடிக்கள் காவற்துறை தடையை மீறி விநியோகம்

dvd_.jpgதூத்துக் குடியில்  காவற்துறை தடையை மீறி பெரியார் தி.க.வினர் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு ஆதரவான டிவிடிகளை விநியோகித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள், இயக்குநர் சீமானின் பேச்சுக்கள்,  முத்துக்குமரனின் இறுதி நிமிடங்கள் மற்றும் தமிழர்களுக்கு ஆதரவான கவிதைகள் கொண்ட டிவி டியை தயாரித்து, அதனை வெளியிடப் போவதாக அறிவித்தது. இதனை வெளியிட காவல்துறை அனுமதிக்கவில்லை. இருப்பினும் அதனை மக்கள் மத்தியில் எப்படியாவது சேர்த்துவிடும் முயற்சியில் பெரியார் கழக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் அந்த டிவிடியின் ஒரு இலட்சத்திற்கும் மேற் பட்ட பிரதிகளை ஏற்கனவே தமிழகம் முழுவதும் வியோகித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உளவுத்துறையினர் மற்றும்  காவற்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் அந்த குறிப்பிட்ட டிவிடிகள் இரகசியமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் கூடும் பகுதிகள், மார்க்கெட், டீக்கடைகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வந்து இந்த குறிப்பிட்ட டிவிடிகளை யாரும் அறியாதவகையில் பைக்குகள் மீதும், கார்கள் மீதும், உடமைகள் மீதும் போட்டு விட்டு செல்கின்றனர். தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த டிவிடிகள் காவற்துறை தடையை மீறி விநியோகிக்கபட்டு வருவதால் தூத்துக்குடி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

dvd_.jpg

ஈஸ்டர் திருநாளில் போர் நிறுத்தம் ஏற்படட்டும்: ஜெயலலிதா

jaya.jpgஅன்பும்,  இரக்கமும் உயிர்த்தெழட்டும் என்று, ஜெயலலிதா தனது ஈஸ்டர் திருநாள் வாழ்த்தில் கூறி இருக்கிறார். அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

அன்பின் வடிவமாம் இயேசு பெருமான், சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்த திருநாள் ஈஸ்டர் பண்டிகை என்னும் பெயரால் உலகு எங்கும் கொண்டாடப்படும் இந்த வேளையில், கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில், அன்பு உயிர்த்தெழட்டும், உயிர் இரக்கம் உயிர்த்தெழட்டும், அமைதி தவிழட்டும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படட்டும், அகிலம் முழுவதும் ஆனந்தம் தாண்டவமாடட்டும் என பிரார்த்திப்போம். எனது அன்புக்குரிய கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்காக உண்மையான தமிழ் இன உணர்வாளர்கள் ஒருங்கிணைப்பு: விஜய டி.ராஜேந்தர்

images-t-rajendran.jpgதிமுக, அதிமுக அணியினர் இலங்கை தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதால், உண்மையான தமிழ் இன உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கப் போவதாக லட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவை. இதனைத் தோலுரித்துக் காட்டுவதே எங்கள் கடமை. உண்மையான தமிழ் இன உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கிற முயற்சியில் ஈடுபடப் போகிறோம். அப்படி அமைகிற அமைப்புகளோடு சேர்ந்து குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம்.

கள்ளக்குறிச்சி, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, இராமநாதபுரம், சிவகங்கை, மத்திய சென்னை உள்ளிட்ட சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவோம்.

விஜயகாந்த் அந்தத் தொகுதியில் அவரது மைத்துனரை நிறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் பிரச்னையாகட்டும், தேர்தல் கூட்ட ணி குறித்த பிரச்னையாகட்டும் அவரைப் போல் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியவர்கள் இல்லை. பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ளயிருப்பதால் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறேன். அமையும் சூழலைப் பொறுத்து தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறினார்.

ஈழமக்களை காக்க இந்தியா முன்வரவேண்டும்: புதிய தமிழகம்

election_ballot_cast.jpgபாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து நாளை (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழர்களை காப்பாற்ற கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியி கிருஷ்ணசாமி,

பக்கத்து நாடான இலங்கையில் தமிழ் இனம் கூண்டோடு அழிக்கப்பட்டு வருகிறது. 3 லட்சம் தமிழர்கள் 20 கி.மீ. சதுர பரப்பளவிற்குள் முடக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு குடிக்க தண்ணீர், சாப்பாடு மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாமல் துன்பப்பட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை பட்டிக்குள் அடைப்பது போல குறிப்பிட்ட ஒரு எல்லை பகுதிக்குள் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தி, அவர்களை குண்டு வீசி கொலை செய்து வருகின்றனர்.

இலங்கையில் கொல்லப்படும் தமிழ் மக்களுக்காக உலக நாடுகள் குரல் கொடுத்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இலங்கையில் கொல்லப்படும் தமிழ் மக்களை காக்க இந்தியா முன்வரவேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி செய்யவேண்டும். இலங்கை தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

எங்களுடன் உள்ள கட்சிகள் மற்றும் எங்களுக்கு ஒத்துழைப்பவர்களுடன் இணைந்து இலங்கை தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படும். இது குறித்து நாளை அறிவிக்கப்படும்.பாராளுமன்ற தேர்தலில், புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து 13 ந் தேதி(திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்றார்.

கடத்தலை தொடரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள்

caption.jpgஅமெரிக்க கடற்படை கப்பல்களுக்கும், அமெரிக்கர் ஒருவரை பணயமாக பிடித்து வைத்துள்ள சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையிலான இழுபறிகள் தொடருகின்ற நிலையில், ஏடன் வளைகுடாவில் மேலும் இரு சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

16 அமெரிக்க சிப்பந்திகளுடனான அமெரிக்க இழுவைப் படகு ஒன்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக மரிடைம் அமைப்பு கூறுகின்றது. பிறிதொரு சம்பவத்தில், கடற்கொள்ளையர்கள்,  இருபத்தாறாயிரம் தொன்கள் எடையுள்ள கடற்கலன் ஒன்றின் மீது சுட்டதாக கூறப்படுகின்றது.

அந்த கப்பலின் தலைமை மாலுமியின் அறையை நோக்கி அவர்கள் கைக்குண்டை ஏவியதாகவும், ஆனாலும், அது வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கப்பல் சிப்பந்திகள் கடற்கொள்ளையர்களை தண்ணீர் குழாய்கள் மூலம் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் – தேமுதிகவிலும் ஒருவர் மாற்றப்பட்டார்

jaya.jpgதிருவள்ளூர் (தனி), பெரம்பலூர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மீது புகார்கள் வந்ததால் இந்த முடிவை ஜெயலலிதா எடுத்ததாக தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 9ம் தேதி வெளியிட்டார். இதையடுத்து, தேர்தல் பணிகளை அதிமுக வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சில வேட்பாளர்கள் மீது கட்சித் தலைமைக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் மூலம் விசாரிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில்  திருவள்ளூர் (தனி) மற்றும் பெரம்பலூர் தொகுதிகளின் வேட்பாளர்களை ஜெயலலிதா அதிரடியாக நேற்று மாற்றினார். அதனால், 2 வேட்பாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

earth_indo.jpg
இந்தோனேஷியாவில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.

இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா தீவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குனாங் சிடொலி பகுதியில் நேற்று காலை 8.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.சுமார் 20 அடி ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.

இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர்.எனினும் இதனால் ஏற்பட்ட சேதவிபரம் உடனடியாக தெரியவில்லை.

ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு ஒத்திவைப்பு

protest_afp.jpgதாய்லாந்தில் நேற்று சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009   தொடங்குவதாக இருந்த இந்தியா – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரில் நேற்று தொடங்குவதாக இருந்தது. இதில் பங்கேற்பத்ற்காக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சார்பாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் ஏற்கனவே தாய்லாந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தாய்லாந்தில் பிரதமர் அபிசித் விஜ்ஜாஜிவாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அவர் பதவி விலகும்படி வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009   மாநாடு நடைபெறவிருந்த இடத்துக்கு முன்பு திரண்ட ஆயிரத்துக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள், மாநாட்டு அரங்கத்தின் கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினர். இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாடு ரத்து செய்யப்படுவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.