::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

படுகொலைகளை மறைக்க பிரபாகரனை சுற்றிவளைத்துவிட்டதாக பொய்ப்பிரச்சாரம்: பழ.நெடுமாறன்

neduma2.jpgசிங்கள ராணுவத்தின் வெறித்தாக்குதலில்  2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் கறுப்புக்கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக  இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில், ‘’இலங்கையில் வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்த வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பணயக் கைதிகளாக முன்னிறுத்தி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து கொத்துக்குண்டுகளை சிங்கள இராணுவம் வீசி வருகின்றது. 2 ஆம் உலகப் போருக்குப் பிறகு ஒரே நாளில் இவ்வளவு பெருந்தொகையான மக்கள் எந்த நாட்டிலும் படுகொலை செய்யப்பட்டதில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தம் செய்புமாறு விடுத்த வேண்டுகோளை கொஞ்சமும் மதிக்காமல் சிங்கள் அரசு தமிழர்களை அடியோடு அழிக்க முயல்கின்றது.

2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களைப் படுகொலை செய்ததை மறைக்கவும்  திசை திருப்பவும்  பிரபாகரன் இருப்பிடத்தை சுற்றி வளைத்து விட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றது.

25 ஆண்டு காலத்திற்கு மேலாக மக்கள் துணையுடன் போராடி வரும் விடுதலைப் புலிகள் தங்கள் போராட்டத்தை வெற்றிகரமாக தொடர்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.

இந்த மனிதப் பேரழிவைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்வராததைக்  கண்டிக்கும் வகையிலும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு வணக்கம் செலுத்துகின்ற வகையிலும் எதிர்வரும் ஏப்ரல் 24 ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 4மணி முதல் 6 மணிவரை தமிழகம் எங்கும் கறுப்புக்கொடி ஊர்வலங்களை நடத்துமாறும் சரியாக 6 மணிக்கு அனைவரும் ஒன்று கூடி அமைதி வணக்கம் செலுத்துமாறும் வேண்டிக்கொள்கின்றேன்.

அமைதி வணக்கம் செலுத்தும் வேளையில் சகலப் போக்குவரத்தையும் நிறுத்தி அவரவர்கள் இருந்த இடத்தில் இருந்தும் வீடுகளில் இருப்போர் வீட்டுக்குள்ளேயும் ஐந்து நிமிட நேரம் வணக்கம் செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மிருக வெறிகொண்டு ராணுவம் தாக்குகிறது:கருணாநிதி தைரியமான முடிவெடுக்காதது வேதனை அளிக்கிறது: ஜெயலலிதா.

jayalalitha.jpgஇலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ‘’இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் இலங்கை ராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது. தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை ராணுவம் விரட்டி அடித்துக் கொள்கிறது.

அங்கே தமிழ் இனமே அழிந்து கொண்டிருப்பதாக கவலை தரும் செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற இனப் படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதி தெளிவான முடிவை, தைரியமாக எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். பல நாடுகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் கருணாநிதி உடனடி நடவடிக்கை எதையும் எடுக்காமல், நிமிடத்திற்கு ஒரு பேச்சு பேசிக் கொண்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் தந்தி கொடுப்பதுதான் கருணாநிதிக்கு தெரிந்த ஒரே தீர்வு போலும்.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த நிமிடத்தில் நமது ஒரே முழக்கம். அதற்கு அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதை இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். அதற்கு தமிழக முதலமைச்சரின் பங்கு என்ன என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி.

இந்த நேரத்திலாவது கருணாநிதி ஒரு முதலமைச்சராக செயல்பட்டு மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். எஞ்சியுள்ள தமிழர்களை காப்பாற்ற முன்வர வேண்டும். இல்லையெனில் வரலாறு எப்படி அவரை மன்னிக்கும்? ’’என ஜெயலலிதா கூறியுள்ளார்.

பிரபாகரன் மீது தனிப்பட்ட வெறுப்பில்லை: பிரியங்கா

23-priyanka.jpgராஜீவ் காந்தி படுகொலைக்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அரசியல் ரீதியாக தண்டிக்க வேண்டும். அதேசமயம், அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும் இல்லை என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் பிரியங்கா காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.

சிஎன்என்: மக்கள் உங்களை இந்திரா காந்தியாக பார்க்கிறார்கள்..

பிரியங்கா: மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

சிஎன்என்: நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்..

பிரியங்கா: எப்போதும் பிரியங்காவாகவே இருக்க விரும்புகிறேன்.

சிஎன்என்: உங்களுக்குள் உங்கள் தந்தை ராஜீவ் காந்தியின் சாயல் இருப்பதாக நினைக்கிறீர்களா..

பிரியங்கா: அவர் எனது தந்தை. இந்திரா காந்தி எனது பாட்டி. அவர்களுடைய பாதிப்பு எனக்குள் இருக்கிறது. இருப்பினும் அவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு தனியான மனுஷியாக காணப்பட விரும்புகிறேன்.

சிஎன்என்:உங்களது குருவாக யாரை நினைக்கிறீர்கள்.

பிரியங்கா: எனது குடும்பத்தில், எனது தாயார் உள்பட மூன்று காந்தியுமே எனக்கு குருக்கள்தான்.

சிஎன்என்: உங்களது குடும்பத்தினரைத் தவிர வேறு யாரை உதாரண புருஷராக நினைக்கிறீர்கள்..

பிரியங்கா: மகாத்மா காந்தி.

சிஎன்என்: அதனால்தான் நளினியை மன்னிக்கும் மனப்பக்குவம் கிடைத்ததா..

பிரியங்கா: நளினியும், நானும் மனிதர்கள். மனித குலத்தின் இயல்பே, ஒருவரை ஒருவர் மன்னிப்பதுதான்.

சிஎன்என்: பிரபாகரன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

பிரியங்கா: இது ஒரு தனிப்பட்ட, அரசியல் பிரச்சினை. அதை நான் அரசியல் ரீதியாக அனுக விரும்புகிறேன். இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டார். எனவே அந்த கோணத்தில் பார்த்தால், பிரபாகரனை மன்னிக்க முடியாது. ஆனால் மனிதாபிமான கோணத்தில் பார்த்தால், அவர் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்புணர்ச்சியும் இல்லை. அவருக்கு எதிராக கோபமோ, துவேஷமோ இல்லை, நிச்சயமாக இல்லை.

சிஎன்என்: கருணாநிதி போன்ற காங்கிரஸ் கூட்டணித் தலைவர்கள், பிரபாகரனுக்கு ஆதரவாக பேசியுள்ளனரே..

பிரியங்கா: தான் பேசியதை கருணாநிதி வாபஸ் பெற்று விட்டாரே..

சிஎன்என்: கருணாநிதியின் பேச்சை சோனியா காந்தி உள்ளிட்ட குடும்பத்தினர் கண்டிக்க வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளாரே..

பிரியங்கா: இது அரசியல் பிரச்சினை. அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

சிஎன்என்: ராஜீவ் அரசியலுக்கு வந்ததை சோனியா விரும்பவி்லை. சோனியா அரசியலுக்கு வந்தபோது காங்கிரஸ் கட்சி ஸ்திரமற்ற நிலையில் இருந்தது. நீங்களும் அதேபோன்ற சூழலில்தான் அரசியலுக்கு வருவீர்களா..

பிரியங்கா: அப்படியெல்லாம் இல்லை. நான் சற்று வித்தியாசமான பெண். எனக்கு எப்போது வர வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் வருவேன் என்றார் பிரியங்கா.

இலங்கைக்கு இறுதி கெடு விதிக்க கருணாநிதி கோரிக்கை

karunanithi.jpgஇலங் கையில் போர் நிறுத்தம் செய்ய இறுதிக் கெடு விதிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி மறுபடியும் ஒரு தந்தி அனுப்பியுள்ளார். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாவிட்டால் அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் பிரதமர் உள்ளிட்டோருக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அடித்தார்.

இந்த நிலையில் இன்று இன்னொரு தந்தி அடித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…

இலங்கையில் போர் நிலைமை மிக கொடூரமாக உள்ளது. தமிழர்கள் மோசமான நிலையில் சிக்கி உள்ளனர். இது பெரும் கவலை அளிக்கிறது. ஐக்கிய நாட்டு சபையும்,அனைத்து நாடுகளும், இலங்கை அரசை உடனே போரை நிறுத்தும்படி வற்புறுத்தி உள்ளனர்.

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தும்படியும், நிரந்தர போர் நிறுத்தம் செய்யும்படியும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இலங்கை அரசுக்கு இறுதி கெடு விதிக்க வேண்டும். லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்: அத்வானி

advanil000.jpgமத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த கூட்டத்தில் அத்வானி பேசியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் கனவை மத்தியில் பா.ஜ. தலைமையில் ஆட்சி அமைந்தால் நிறைவேற்றுவோம்.

சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதாகக் கூறி ராமர் பாலத்தை இடிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சி செய்தது. சேது சமுத்திர திட்டத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியும் (அதிமுக) எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவில் இருந்து ரூ.7 லட்சம் கோடி கறுப்பு பணம் சுவிஸ் உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில் முடங்கியுள்ளது. பா.ஜ. ஆட்சி அமைந்தால் அந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ராமபிரானையே கற்பனை கதாபாத்திரம் என்று கூறி இந்துக்களை மத்திய அரசு இழிவுப்படுத்தியது. சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் இந்துக்கள் வழிபடும் ராமர் பாலத்தை இடிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மாற்றுவழியில் இந்த திட்டத்தை நிறைவேற்றவும் மறுக்கிறது. மத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால், சேது சமுத்திர திட்டத்தை இப்போது நிறைவேற்ற முடிவு செய்துள்ள வழியில் நிறைவேற்ற விடாமல் ரத்து செய்வோம் என்றார். 

புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜெ.ஜி. பலார்ட் மரணம்

jg.jpgஉலகப் புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜெ.ஜி. பலார்ட் தனது 78 ஆவது வயதில் மரணமானார். “கிராஷ்’ மற்றும் “த எம்பயர் ஒப்த சன்’ ஆகிய நாவல்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற பலார்ட், பல வருட காலமாக நோயுற்ற நிலையில் மரணமடைந்துள்ளார்.

பிரித்தானியாவில் மான்செஸ்டரிலுள்ள கலிகோ பிரின்டர்ஸ் நிறுவனத்தில் இரசாயனவியலாளராக கடமையாற்றிய பலார்ட்டின் தந்தை மேற்படி நிறுவனத்தின் சீனாவிலுள்ள துணை நிறுவனமான சீன பிரின்டிங் அன்ட் பினிஷிங் கம்பனியின் தலைவராகவும் முகாமைப் பணிப்பாளராகவும் பதவியுயர்வு பெற்று சீனாவுக்கு குடும்பத்துடன் சென்றபோது அங்கு பலார்ட் பிறந்தார்.

சீனாவின் சங்காய் நகரில் பிறந்து வளர்ந்த பலார்ட் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் (தனது 12 ஆவது வயதில்) சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. இதன்போது அவர் ஜப்பானிய சிறைச்சாலையில் 3 வருடங்களைக் கழித்தார்.

சீனாவிலுள்ள ஜப்பானிய சிறைச்சாலையில் கழித்த தனது இளமைப் பருவத்தை அடிப்படையாக வைத்தே “த எம்பயர் ஒப் த சன்’ நாவலை அவர் எழுதினார். பின்னர் பிரித்தானியா திரும்பிய பலார்ட், 1960ஆம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார்.

அவரது “த எம்பயர் ஒப் த சன்’ நாவலானது திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியானது. அத்திரைப்படத்தை பிரபல ஹொலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பையல்பேர்க் இயக்கியிருந்தார். அதே சமயம் கார் விபத்துகளின் போதான பாலியல் நாட்டங்கள் தொடர்பில் அவர் எழுதிய “கிராஷ்’ நாவலானது டேவிட் குரொனென்பேர்க் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது. பலார்ட் தனது வாழ்நாளில் 15 நாவல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி

20-karunanithi1.jpgநான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது இயக்கத்தில் இருக்கும் சிலர் பயங்கரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்வார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டால் நான் வருத்தமடைவேன் என்று கூறியிருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கருணாநிதி.

அப்போது அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை. தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.

விடுதலை இயக்கமாக உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், பின்னர் திசை மாறி இப்போது தீவிரவாத இயக்கமாகி விட்டது. ஆனால் இதை தேவையில்லாமல் மாற்றிக் காட்டி விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.

போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பெண்கள் நடத்தும் போராட்டம் தீவிரம் – 5 பேர் சுகவீனம்

20-fast.jpgஇலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஐந்து பெண்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கையில் படுகொலை செய்யப்படும் அப்பாவி தமிழர்களை காக்க கோரியும், அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகளுடன் பெண்கள் போராடி வருகின்றனர். பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த 13-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை வந்தனர்.

சென்னை கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கபப்ட்டிருந்த இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் போலீஸார் அனுமதி மறுக்கவே, மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 7வது நாளாக போராட்டம் நீடித்தது. அப்போது பல பெண்கள் சோர்வடைந்து மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு கவிதா (30), சித்ரா (40), சசிகலா (30) ஆகியோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்களைக் கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதுரை பழனியம்மாள், காஞ்சீபுரம் சசிகலா, ஜெயமணி, மேகனா, செல்வி ஆகியோரின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

இவர்களில் ஜெயமணி மயக்கமடைந்து விழவே, அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று 8வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வருகிறது.

இலங்கைத் தமிழர்களுக்காக இயன்றதை எல்லாம் கருணாநிதி செய்கிறார்:திருமா

thiruma_8-4.jpgஇலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு எதுவுமில்லை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:

தி.மு.க. அரசின் மீது எந்தக் குறையையும் சொல்ல முடியாது. அதனால்தான் ஈழப் பிரச்னையை எதிரணியினர் தேர்தல் பிரச்னை ஆக்குகின்றனர். ஈழத் தமிழர்களுக்காக 2 முறை ஆட்சியைப் பறி கொடுத்தவர் கருணாநிதி. அவரும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தனர். இந்தியாவிலுள்ள தலைவர்களையெல்லாம் அழைத்து மதுரையில் டெசோ மாநாடு நடத்தினார். இப்போது கூட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலிப் போராட்டம், பிரதமருடன் சந்திப்பு என இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.

திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் இணைந்த எங்கள் கூட்டணி இயற்கை கூட்டணி. கூட்டணிக் கட்சிகளில் உள்ள தலைவர்களை மதிக்கத் தெரிந்தவர் கருணாநிதி. உண்மையான தலைவர்கள் இல்லாத கட்சிகளும், விபத்தில், வன்முறையில், சாதி உணர்வுகளைத் தூண்டி தலைவர் ஆனவர்களும் உள்ள கூட்டணி, சந்தர்ப்பவாதக் கூட்டணி. நான் தவறானக் கூட்டணியில் உள்ளதாக ராமதாஸ் கூறுகிறார். ஆனால் அவர் உள்ள கூட்டணிதான் தமிழர்களுக்கு எதிரான கூட்டணி.